உங்கள் குழந்தை ஹைப்பர் ஆக்ட்டிவா? ஏடிஹெச்டி அறிகுறி & சிகிக்சை

உங்கள் குழந்தை ஹைப்பர் ஆக்ட்டிவா? ஏடிஹெச்டி அறிகுறி & சிகிக்சை

உங்கள் குழந்தைக்கு ஏடிஹெச்டி இருக்கலாம் என யாராவது சொல்லி கேட்டிருக்கிறீர்களா? உண்மையில் ஏடிஹெச்டி என்றால் என்ன? ஆது உயிரைக் குடிக்கும் கொடிய நோயா? எப்படி இதனைக் கண்டுபிடிப்பது? அதனால் என்ன ஆபத்து? அது ஆட்டிசம் மாதிரி மூளையைப் பாதிக்கக்கூடியதா?

இது குழந்தையின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும்? அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் என்றெல்லாம் யோசித்து குழம்பியிருக்கிறீர்களா? அப்படியென்றால் இதை முழுமையாகப் படியுங்கள் உங்களுக்கு நிச்சயமாக தெளிவைக் கொடுக்கும்.

ஏடிஹெச்டி என்றால் என்ன?

அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்பதன் சுருக்கமே ஏடிஹெச்டி (ADHD) என்று அழைக்கப்படுகிறது. வளரும் குழந்தைகள் ஒரு இடத்தில் நிலையாக இருக்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பது, சாப்பிடும்போது பாதியில் விட்டுவிட்டு வேறு வேலைக்கு ஓடுவது, அங்கும் அதை தொடர்ந்து செய்யாமல் அடுத்ததை நோக்கி ஓடுவது போன்ற குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி இருக்க வாய்ப்பு உள்ளது. இதை தமிழில், கவனக்குறைவு மற்றும் மிகுந்த செயல்பாடுக் குறைபாடு என்கிறார்கள்.

ஹைப்பர் ஆக்டிவிட்டி என்னும் மிகுந்த செயல்பாடு நல்லதுதானே? திறமையுடன் இருப்பார்களே? என்ற சந்தேகம் எழலாம். ஆனால், இந்தக் குறைபாட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், கவனக் குறைவு. எதிலுமே கவனம் இருக்காது. ஏடிஹெச்டி பாதிப்பு உள்ள குழந்தைகளால் தொடர்ந்து ஒரு வேலையைச் செய்ய முடியாது. மைதானத்தில் ஓடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.

இவர்களால் தொடர்ந்து ஓட முடியாது. சில நொடிகளிலேயே வேறு எதையாவது வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நிற்கத் தொடங்கி விடுவார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஏடிஹெச்டி குறைபாடுள்ள குழந்தைகளால் சாதாரண குழந்தைகளைப் போல எல்லா வேலையையும் செய்ய முடிந்தாலும், தொடர்ச்சியாக ஒரு வேலையைக் கூட செய்ய முடியாது.

ஏடிஹெச்டியை எப்படி கண்டுபிடிப்பது? அறிகுறிகள் என்ன?

துருதுருவென ஓடும், விளையாடும் குழந்தைகளைக் கண்டிருக்கிறீர்களா? சக வயது குழந்தைகளை விட அந்தக் குழந்தை அதிக திறமையுடன் இருப்பது போல தோன்றினாலும், தொடர்ச்சியாக ஒரு வேலையை அதனால் செய்ய முடியாது. இந்த அறிகுறி இருக்கும்பட்சத்தில், அக்குழந்தைக்கு ஏடிஹெச்டி இருக்கலாம். ஆனால், எல்லா துருதுரு குழந்தைக்கும் இது இருக்க வாய்ப்பில்லை.

தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது, படம் வரைய தொடங்கிய சில நிமிடங்களிலே திடீரென வேறு வேலைக்குப் போவது, இப்படியாக எந்த ஒரு வேலையையும் தொடர்ச்சியாக செய்ய முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி வாய்ப்பு கொஞ்சம் அதிகம்.

நாம் கொடுக்கும் வேலையை அக்குழந்தையால் முழுமையாக செய்ய முடியாது. சிறு குழந்தைகளுக்கு மூளை பயிற்சிக்காகப் பல விளையாட்டு பொருட்கள் விற்கப்படுகின்றன. சிறு சிறு கட்டைகள்/பிளாக்கள் கொண்டு வீடு கட்டுவது போல ஒரு விளையாட்டுப் பொருள் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு ஏடிஹெச்டி குழந்தை ஒன்று வீடு கட்டத் தொடங்குகிறது என வைத்துக்கொள்வோம்.

முழுவதுமாக முடிக்காமல் பாதி நெருங்கும்போதே அது மறந்துவிடும். இதெல்லாம் பெரிதுபடுத்த வேண்டிய விஷயமில்லை. போகப் போக சரியாகி விடும் என சாதாரணமாக நினைத்து விடக்கூடாது.

சில குழந்தைகளுக்குச் சரியாகலாம். பல குழந்தைகளுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்காமலே போய்விடும். இதுபோன்ற கவனச் சிதறலுடன், அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபமாக கத்தும் குழந்தைகள், அதீத மறதி, எளிமையான சில விஷயத்தையே மறந்து விடுவது, ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, வேறு இடத்தில் தேடுவது, வைத்த உடனேயே மறந்துவிடுவது போன்றவை ஏடிஹெச்டி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். உங்களுக்கு லேசான சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.

எந்த வயதில் ஏடிஹெச்டி வரலாம்?

3 வயதில் இருந்து 12 வயது வரையில் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் செயல்பாட்டை விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொள்ளாமல், கூர்ந்து கவனித்தால் இக்குறைபாட்டைத் தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து விட முடியும்.

ஏடிஹெச்டி என்னக் காரணங்களால் ஏற்படும்?

ஏடிஹெச்டி குறைபாட்டுக்கு பல காரணங்கள் வதந்திகளைப் போல வலம் வந்தாலும், குறிப்பான காரணங்கள்தான் மருத்துவ ரீதியாக சொல்லப்படுகின்றன. அவற்றைக் குறித்துப் பார்க்கலாம்.

குறை பிரசவம்

கர்ப்ப காலத்தில், கருவில் முழுமையான வளர்ச்சியை எட்டாமலேயே முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எல்லா குறை பிரசவ குழந்தைகளுக்கும் இக்குறைபாடு இருக்குமா என்றால், நிச்சயமாக இருக்காது. ஏதோ ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மரபணு குறைபாடு:

ஏடிஹெச்டி குறைபாடு, மரபணு மூலம் தலைமுறை தாண்டி கடத்தப்படலாம். தாய் வழியிலோ, தந்தை வழியிலோ முன்னோர்கள் யாருக்காவது இக்குறைபாடு இருந்திருக்கலாம். அல்லது தாய், தந்தைக்குக் கூட இருந்திருக்கலாம். அவர்களிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சுற்றுசூழல் மாசுபாடு

வளிமண்டல மாசுக்களில் கலந்திருக்கும் ரசாயனங்களால், கரு வளர்வதில் பாதிப்பு ஏற்படும், குறிப்பாக காரியம் கலந்த காற்றை தாய் சுவாசித்தால், அது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும். கர்ப்பிணிகள் வசிக்கும் சூழல் குறித்துத் தெளிவாக அறிந்து வைத்திருப்பதன் மூலமே இதனை கண்டுபிடிக்க முடியும். இது தவிர, கர்ப்பிணி ஆரோக்கியமற்ற உணவை எடுத்துக்

கொள்வதாலும் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

கவனக்குறைவால் பாதிக்கப்படுதல்

மேற்குறிப்பிட்ட மூன்று காரணங்களும், நம்மால் தடுக்க இயலாத ஒன்று. ஆனால், கருவில் கவனக்குறைவால் ஏற்படும் ஏடிஹெச்டி குறைபாட்டை தடுக்க முடியும். குழந்தை கருவில் இருக்கும்போது தாய் புகைப் பிடிப்பது, மது அருந்துவது, தாய் தந்தை இடையேயான சண்டை சச்சரவு காரணமாக தாய் மன அழுத்தத்துக்கு தள்ளப்படுவது போன்ற காரணிகள் குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்.

குழந்தை கருவில் இருக்கும்போது சிறு சிறு விபத்துகளில் தாய்க்கு அடிபட்டால்கூட அது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும். விபத்து என்றால் வாகன விபத்துதானே என நினைத்துவிட வேண்டாம். வழுக்கி விழுவது, தடுக்கி விழுவது கூட விபத்துதான். கர்ப்பிணியின் வயிற்றுப் பகுதியில் லேசான மோதல் கூட கருவில் உள்ள சிசுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம். அது ஏடிஹெச்டியையோ அல்லது வேறு ஏதாவது தீவிரமான நோயையோ ஏற்படுத்தி விடும்.

பிறந்த பிறகும்கூட இக்குறைபாடு ஏற்படலாம். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள உணவுகள், விளையாடும்போது கீழே விழுந்து தலையில் அடிபடுவது போன்ற காரணங்களாலும் ஏடிஹெச்டி ஏற்படும்.

ஏடிஹெச்டியில் எத்தனை வகை?

இன்அட்டெண்டிவ் ஏடிஹெச்டி: (Inattentive Type)

இந்த வகை ஏடிஹெச்டியை அன்றாட நடவடிக்கைகளில் தெரியும். ஒரு வேலையைத் தொடர்ந்து செய்ய விருப்பமில்லாமல், எதிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த வகை ஏடிஹெச்டி இருக்கலாம்.

ஹைப்பர் ஆக்டிவ் – இம்பல்சிவ் ஏடிஹெச்டி (Hyperactive-Impulsive Type)

குழந்தை ஓய்வின்றி இருப்பது, தொடர்சியாக பேசுவது, அமைதியாக விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வமில்லாமல் இருப்பது, ஒரு விஷயத்தில் அதீத ஆர்வத்துடன், சக வயது குழந்தைகளை விட அதிக திறமையுடன் இருப்பது. ஆனால் அதில் தொடர்ந்து ஆர்வமில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த வகை ஏடிஹெச்டி பாதிப்பு இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

காம்பினேசன் டைப் (Combination Type)

ஏடிஹெச்டியால் பாதிக்கப்படும் பெரும்பாலான குழந்தைகள், இந்த வகையால்தான் பாதிக்கப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட இரண்டு அறிகுறிகளும் தென்படும். விளையாட்டாக கவனிக்காமல் விட்டுவிடுவது, பின்னாளில் பெரும் சிக்கலைக் கொடுக்கும்.

ஏடிஹெச்டிக்கு என்ன சிகிச்சை?

இந்தக் குறைபாட்டுக்கு, மருந்துகள், மன பயிற்சி, செயல்வழி பயிற்சி என மூன்று விதமான சிகிச்சை முறை குழந்தைகளுக்கும், அவர்களை எப்படி பராமரிப்பது, எப்படி பயிற்றுவிப்பது, சமூகத்தில் அவர்களை இயல்பாக நடந்துகொள்ள வைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் பெற்றோருக்கும் அளிக்கப்படுகின்றன.

மருந்துகள்

மருந்துகள், குழந்தைகளை மனச்சிதறலில் இருந்து தடுத்து, அதன் கவனத்தை ஒரு இடத்தில் நிலை கொள்ள உதவுகிறது. ஆனால், மருந்துகளை மட்டுமே நம்பி ஒரு குழந்தையின் ஏடிஹெச்டி குறைபாட்டை சரி செய்ய முடியாது. பயிற்சிகள், தினசரி புதுப்புது விளையாட்டுகள் போன்றவற்றின் மூலமே இதனை குணப்படுத்த முடியும். ஆனால், இந்தச் செயல்களில் ஈடுபட வைக்க மருந்து தேவைப்படுகிறது.

மன பயிற்சி

ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட வைப்பது மற்றும் ஒரு பணியைச் செய்யும்போது ஏடிஹெச்டி குழந்தையை உற்சாகமூட்டுவதன் மூலமாக ஒரு வேலையை நிரந்தரமாக செய்ய வைக்க முடியும். உதாரணமாக, ஏடிஹெச்டி குழந்தையால் ஒரு செயலை தொடர்ந்து செய்ய முடியாது என்று கூறியிருந்தோமல்லவா? அப்படிப்பட்ட சூழலில், அக்குழந்தையை ஒரு செயலை செய்ய சொல்லி உற்சாகமூட்டலாம். அப்போது அதற்கு விருப்பப்பட்டு உற்சாகமாக அச்செயலில் தொடர்ந்து ஈடுபடும். ஏடிஹெச்டி குழந்தைகளைத் தியானத்தில் ஆழ்த்துவதென்பதெல்லாம் எளிதில் முடியாத காரியம். அதற்கு முன்பு மனதை ஒருநிலைப்படுத்த பல்வேறு பயிற்சிகளை அளித்த பிறகே தியானத்தில் ஈடுபட வைக்க முடியும்.

செயல்வழி பயிற்சி

ஏடிஹெச்டி குறைபாட்டில் உள்ள ஒரு குழந்தை செய்ய மறுக்கும் வேலையைத் தாமாகவே செய்ய வைப்பதற்காக இந்த முறையை பின்பற்றுகிறார்கள் ஏடிஹெச்டி நிபுணர்கள். அதாவது, தொடர்ந்து உற்சாகமூட்டிக்கொண்டே இருக்காமல், ஒரு வேலையைக் கொடுத்து தாமாகவே அக்குழந்தையை முடிக்க வைத்து, அதற்காக பரிசு ஒன்றை அளிப்பதன் மூலம், கவனத்தை ஈர்ப்பது. ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு, அப்படி சாப்பிட்டால் அடுத்த வேளை உணவின்போது அதற்குப் பிடித்தமான உணவை தருவதாகக் கூறினால், அக்குழந்தை அந்த எதிர்பார்ப்பிலேயே சாப்பிட்டு விடும். காலப்போக்கில் இது பழகியும் விடும். சாப்பிடும்போது மட்டுமின்றி மற்ற நேரத்திலும், பிற செயல்பாடுகளுக்கும் இதே முறையைப் பின்பற்றுவதன்மூலம் இக்குறைபாட்டை சரி செய்யலாம்.

பெற்றோருக்கு அளிக்கப்படும் பயிற்சி

ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சில பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதில் இப்படிப்பட்ட குழந்தைகளை எப்படி கையாளுவது, எப்படி சொல்லித்தருவது, அவர்களைச் சீராக்கும் முறை என்ன போன்றவை அந்தப் பயிற்சிகளில் அடங்கும்.

சமூகம் சார்ந்த பயிற்சி

சமூகம் சார்ந்த பயிற்சி என்பது வெளிஉலகில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியளிக்க வேண்டும். உதாரணமாக மரம் நடுவது, விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனை வரை அழைத்துச் செல்வது, சாலை விதிகளைக் கடைபிடிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை ஏடிஹெச்டி குழந்தைகளுக்கு அளிப்பதுடன் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதன் மூலம், மற்ற குழந்தைகளுக்கு நிகராக வளர்க்கலாம்.

ஏடிஹெச்டியை கண்டுபிடிக்காமல் விட்டால் என்ன ஆகும்?

குழந்தை பருவத்திலேயே, அதாவது மூன்று முதல் 12 வயதுக்குள்ளேயே இதைக் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையைக் கொடுக்காவிட்டால், வளர்ந்த பிறகும் இந்தப் பிரச்சனை அப்படியேதான் இருக்கும். இதனால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். உதாரணமாக ஒரு குழந்தை சிறு வயதிலேயே மிக திறமையான தடகள வீரராக இருக்கலாம். சக வயது குழந்தையைக் காட்டிலும் அதிக வேகமாக ஓடும் திறன் கொண்டிருக்கலாம். ஆனால், அக்குழந்தையால் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாததால் அத்துறையில் வெற்றி பெற முடியாது. இதே போல வெவ்வேறு விளையாட்டிலும், துறையிலும் ஆர்வம் காட்டினாலும், எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட்டாலும், ஏடிஹெச்டி குறைபாட்டால் ஏற்படும் கவனச்சிதறல் காரணமாக அதில் தொடர்ந்து கவனம் செலுத்தாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null