குழந்தை கவிதைகள் : அம்மா பார்வையில் உருவான தமிழ் கவிதை தொகுப்பு!

குழந்தை கவிதைகள் : அம்மா பார்வையில் உருவான தமிழ் கவிதை தொகுப்பு!

‘குழந்தைகள்’ என்ற இந்தச் சொல்லைக் கேட்டாலே சிலிர்ப்பாக இருக்கும். இந்த உலகிலேயே எது அற்புதமான விஷயம்? சந்தோஷமான விஷயம்? என்று அடுக்கிக் கொண்டே போனால், அதற்கான பதில் குழந்தைகள் (Kulanthai) மட்டுமே. அவர்கள் இந்த உலகத்தில் பிறக்கும் போதே ஆயிரம் கோடி ஆனந்தங்களையும் பிறக்க வைக்கின்றனர். அவர்கள் உடலைச் சுருக்கி நெட்டி முறிப்பது, சிணுங்கி அழுவது, கை கால்களை உதைப்பது, குப்புற விழுவது, தலை தூக்குவது, உட்காருவது, நிற்பது, நடப்பது, பேசுவது, ஓடுவது என்று அவர்கள் எந்த விஷயங்களைச் செய்தாலும் அழகிற்குப் பஞ்சமே இருக்காது.

என்ன தவம் செய்தோமோ என்ற ரீதியில் தான் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு மைல்கற்களையும் பார்த்துப் பார்த்து, ரசித்துரசித்து பூரித்து மகிழ்வர். ஆகமொத்தம் இந்த வாழ்க்கையே ஒரு பூலோக சொர்க்கம் என்ற உணர்ச்சியைப் பெற்றோர்களுக்குத் தருவது குழந்தைகள் மட்டுமே!

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு தருணங்களையும் பெற்றோர்கள் மனதில் சித்திரங்களாகத் தீட்டி வைப்பர். நினைவு பெட்டகங்களாகப் போற்றிப் பாதுகாப்பர். எண்ணங்களில் சிற்பங்களாகச் செதுக்கிவைப்பர். சில பெற்றோர்கள் டைரியில் இந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் எழுதி வைப்பர். ஏனென்றால் இந்த நினைவுகளை எல்லாம் மீட்டெடுக்க எழுத்துக்களே சிறந்த வழியாக இருக்க முடியும்.

குழந்தைகள் கண்ணிமைக்கும் முன் வளர்ந்து பெரியவர்களாகி விடுகின்றனர். அவர்களின் மழலை மொழிகளையும், பருவத்தையும் மீட்டெடுக்க முடியாது. ஆனால் நினைவு கூர்ந்து கூர்ந்து ஆனந்தப்பட அவர்களை நினைத்து எழுதிய கவிதைகள் உதவும் இல்லையா? அந்த வகையில் இந்தப் பதிவில் குழந்தைகளுக்கான கவிதைகளைப் பார்ப்போம்……(Baby, Pen kulanthai kavithai list)

அம்மாவின் பார்வையில் உருவான தமிழ் கவிதைகள்:

இவை குழந்தை பற்றிய கவிதைகள் தான். ஆனால் அம்மாவின் பார்வையில் இருக்கும்! அம்மா, அப்பா, தாய்மை, பாசம், வலி, அன்பு, பெண் குழந்தை, ஆண் குழந்தை ஆகியவற்றை பற்றிய கவிதை பாடல்கள் இங்கே!

குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்ட பொழுது…

சாலையில்
கொஞ்சும் சிரிப்போடு,
மழலை முகத்தோடு,
எதிர்ப்படும் குழந்தையைக் கண்டு விட்டாலே,
என் மனம் பூபந்து போல துள்ளத் தொடங்கும்!
காரணம் நீ என் மனதில் வியாபித்துக் கொள்வாய்..
என்னுள் தோன்றாது உன்னைக் காண
என் மனம் பரபரவென்று துடிக்கும்…
மல்லிகை மொட்டுக்களைப் போன்ற
உந்தன் மேனியைத் தீண்ட
என் விரல்கள் தவம் கிடக்கும்…
என் மார்பில்
உன்னை அணைத்துத் தழுவியது போல
மனம் கற்பனையில் சிறகடிக்கும்…
தாயாவதற்கு முன்பே
தாய்மையை
என்னுள் சுரக்க வைக்கும்
என் முகம் அறியா குழந்தையே!
எங்கோ இருக்கும் உன்னை அம்மா அழைக்கிறேன்….
சீக்கிரம் வா என்னுள்….

கருவில் குழந்தையை சுமந்த போது…..(அழகிய குழந்தை கவிதை)

என் கருவறையில் உயிர் ஒன்று பூத்தது..
உயிரே! உனக்கு என் உடலையே முறுக்கிப் பிழிந்து
சத்துக்களை நீராகப் பாய்ச்சினேன்…
மெல்ல மெல்ல உன் கை கால்களை விரிக்கத் தொடங்கினாய்!
நான் மசக்கைகளையும் மறந்தேன்
மயக்கங்களையும் மறந்தேன்..
வீக்கங்களையும் மறந்தேன்
நீ என்னை உதைக்கும் நொடியிலேயே…

நிறை மாத கர்ப்பத்தில்…..தோன்றிய கவிதை!

மேடிட்ட வயிற்றை லட்சம் முறை தடவினேன்..
‘செல்லம்.. தங்கம்.. வைரம்.. அம்முகுட்டி.. பொம்முகுட்டி!’
என்று ஆயிரம் வார்த்தைகள் கொண்டு
உன்னைக் கொஞ்சி மகிழ்ந்தேன்…
உன் முகம் பார்க்க உருகினேன்…
உன் மொட்டு விழிகளைக் காணத் துடித்தேன்..
உன்னை இறுகித் தழுவ ஏங்கினேன்…
உன்னை முத்தமிடத் தவித்தேன்…
ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு, சில மணித் துளிகள்
எனக்கோ யுகங்கள்….!
உன் வருகை வரை..!

அப்பாவின் நிலை – குழந்தை கருவில் இருக்கும் போது….

அப்பாவான கர்வம் தலையில் ஏறும்…
ஆனால்,
என் மார்போ உன் பிஞ்சு கால் உதைக்கு ஏங்கும்..
கடைகடையாய் ஏறி இறங்குகிறேன்..
என் உள்ளங்கையளவு சட்டை வாங்க..
ச்…! என மனைவி முனகினால்…
அ..ம்மாடி! என அலறுகிறேன்..
அவள் பத்து மாதம் கர்ப்பிணி மட்டும் தான்..
நான் பத்து மாதம் தாயுமானவன்..

கவிதை – குழந்தை பிறந்த தினம்…(Tamil kavithaigal)

அப்பாவின் மனம்

குறுக்கும் நெடுக்கும் நடக்கிறேன்..
உட்கார்ந்து உட்கார்ந்து எழுகிறேன்…
வாய் வழி சுவாசிகிறேன்…
பச்சை தண்ணீர் எடுக்கவில்லை..
பிரசவம் எனக்கில்லை
ஆனால் வலி எனக்குத் தான்..
அவளுக்கு ஒரு உயிரைக் காக்கும் வலி….
எனக்கோ ஈருயிர்களைக் காக்கும் வலி…
கடைசியில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளி!

அப்பா அம்மாவின் நிலை…(Appa mother kavithai in Tamil)

குழந்தையின் முதல் அழுகை…

குழந்தை அழுகிறது…
எல்லோரும் மகிழ்ச்சியில் கூவுகிறார்கள்…
எங்களுக்கு மட்டும் அழும் சத்தம் கேட்கவில்லை..
எங்கள் நரம்புகளில்
வையலின் வாசித்த மாதிரி
சத்தம் கேட்டது….!

மனதை திருடும் குழந்தை..

ஒரு பொக்கை வாய் சிரிப்பு..
ஒரு கைகால் உதறல்..
ஒரு கிறீச் சத்தம்..
இதழ் கடையில் கசியும் எச்சில்…
இவ்வளவு மட்டுமே குட்டிக்குத் தேவை..
எங்களை அடிமையாக்க…

குழந்தை வளர்ச்சி அடையும் போது…(Kuzhandhai valarchi kavithaigal)

கண்களை உருட்டி எங்களைப் பார்த்தாய்..
கன்னம் உப்ப சிரித்தாய்…
குப்புற விழுந்தாய்…
தலை தூக்கி எங்களைத் தேடினாய்…
மயில் தோகை மாதிரி
கால் விரித்து அமர்ந்தாய்..
மெல்ல எழுந்தாய்.. விழுந்தாய்..
விழுந்தாய்.. எழுந்தாய்..
மந்திரங்கள் எப்படிப் பழகினாய்..
எங்கள் குறும்பே…
நடந்தே ஓடி விட்டாயே..
பட்டாம்பூச்சியாய் மாறி
வண்ணக் காற்றை வீசினாயே!

அம்மா அப்பாவின் உலகம்…கவிதை (Kavithai)

எங்களுக்கு
நீ பேசும்போது புதிதாகப் பிறக்கும் மொழியே
உலகில் சுவையான மொழி!
நீ காய்ச்சல் படுக்கும்போது குத்தும் ஊசியே
உலகில் கொடூரமான ஆயுதம்!

சளி சிந்திச் சிவந்த உன் மூக்கைப்
பார்க்கும் போது..
சிவப்பு நிறமே பிடிப்பதில்லை….
சாப்பிடும் போது நிலா காட்டுவோம்…
நிலா வேணும் என்பாய்..
வானிலிருந்து நிலாவைப்
பிய்த்து உனக்கு வட்டத் தட்டாய்
வைக்கவா? என்போம்…
வேணாம்… நிலாவுக்கு வலிக்கும்! என்பாய்…
உன் குழந்தை மனமே எங்கள் உலகம்…!

மேலே கொடுத்துள்ள குழந்தைகளுக்கான கவிதைகளையெல்லாம் வாசித்து ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இது போல உங்கள் குழந்தைகளிடம் ரசித்த விசயங்களோ அல்லது ஏற்பட்ட நிகழ்ச்சிகளையோ மறக்காமல் பதிவு செய்து வையுங்கள். ஒரு நாள் இதை உங்கள் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் பரிசாக தந்து மகிழலாம். Kulanthai kavithai list nalla irukka?!

இதையும் படிக்க : வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null