குழந்தைகளிடம் செல்போன் தரலாமா? ஆபத்துகள் என்னென்ன? எப்போது தரலாம்?

குழந்தைகளிடம் செல்போன் தரலாமா? ஆபத்துகள் என்னென்ன? எப்போது தரலாம்?

ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலேயே குழந்தைப் பருவம் தான் மிகவும் அழகானதாக இருக்க முடியும். எப்போதும் காரணமே இல்லாத ஆனந்தம், யார் மீதும் வெறுப்பை சுமக்காத மனோபாவம், மன்னிப்பு மற்றும் மறத்தல் போன்று பெரிய குணங்கள் எல்லாம் சர்வசாதாரணமாகக் குழந்தைகளுக்கு இயல்பாகவே வழிந்து வரும்! ஆட்டம் ஓட்டம் என்று பட்டாம்பூச்சிகளாய் துள்ளித்திரியும் குழந்தைகளாகத் தான் நாம் நம் சிறிய வயதில் இருந்தோம்! நம் தம்பி தங்கைகள் குழந்தைகளாக இருந்த போதும் இந்தக் காட்சிகளையே பார்த்து மகிழ்ச்சியடைந்தோம்!!

ஆனால் இன்று நம் குழந்தைகள் அப்படி இருக்கிறார்களா? பதிலைச் சொல்லவே பயமாக உள்ளது. இல்லவே இல்லை! அவர்கள் யார் முகத்தையும் சரியாக நிமிர்ந்து பார்ப்பது இல்லை. சிரிப்பதில்லை. எல்லோருடனும் கூடிப் பழகுவதில்லை. ஓடி விளையாடுவது இல்லை. குழந்தைகள் இயல்பாக செய்யும் பல விசயங்களை அவர்கள் செய்வதில்லை! இதற்குக் காரணம் என்ன? நவீன ஸ்மார்ட் போன் தான்!

இந்த ஸ்மார்ட் போன்களால் எத்தனையோ வகையான நல்ல விசயங்கள் நடக்கட்டும்! ஆனாலும் இது குழந்தைகளின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பெரிய அளவில் பாதிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

 

ஏன் குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகின்றார்கள்?

குழந்தைகள் செல்போனுக்கு அடிமையானதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அவை,

குழந்தைகளை கவனிக்கத் தெம்பு இல்லை

இன்று பெரும்பாலான தம்பதிகள் தனிக்குடித்தன வாழ்க்கை மேற்கொள்கின்றனர். இதனால் இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். அவர்கள் வேலையை முடித்து குழந்தையை டே-கேரிலிருந்து அழைத்து வருகின்றனர். வீடு வந்து சேரும்பொழுது அவர்கள் மிகவும் களைத்துப் போய் விடுகின்றனர். இதனால் அவர்களால் குழந்தையைக் கவனிக்க முடிவதில்லை. இதனால் குழந்தைகளின் கைகளில் செல்போனை திணித்து விட்டு, தாங்கள் நிம்மதியாக ஓய்வு எடுகின்றனர்.

வீட்டு வேலையில் மூழ்கிப் போகும் அம்மாக்கள்

இதுதவிர வீட்டில் தனியாகப் பல பெண்கள் குழந்தையை கவனித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு குழந்தையும் பராமரிக்கின்றனர். இவர்கள் தங்கள் வேலைகளைத் தொந்தரவில்லாமல் எடுத்துக்கொள்ள வழி தேடுகின்றனர். அதற்கு உபயமாக செல்போனைப் பயன்படுத்துகின்றனர். செல்போனை கொடுத்து குழந்தையை அமர்த்தி விட்டால் அது ஆடவும் செய்யாது அசையும் செய்யாது.

விளையாட ஆள் கிடையாது

இன்று நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது கிடையாது. வீட்டிலேயே அடைத்து வைத்துக் கொண்டு வெளியே அனுப்ப மறுக்கின்றனர். குழந்தைகள் ஓடித்திரிந்து விளையாட வேண்டிய பருவம் இது என்பதை அவர்கள் உணர வேண்டும். மற்ற குழந்தைகளோடு சேர வாய்ப்பு இல்லாத குழந்தைகளின் கவனம் தானாக செல்போன் பக்கம் திரும்பி விடுகிறது.

பெற்றோர்கள் செல்போனே கதி என்று இருப்பது

குழந்தைகள் எதைப் பார்க்கின்றார்களோ அதையே திருப்பி செய்யும் பழக்கம் கொண்டவர்கள். பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் செல்போனை தடவிக் கொண்டு இருப்பதைக் கவனிக்கும் குழந்தைகள் தாங்களும் அதையே திருப்பி செய்கின்றனர்.

கண் கவரும் வீடியோக்கள் விதவிதமான கேம்ஸ்கள்

இன்று ஸ்மார்ட்போன்களில் கண்களைக் கவரும் பலவிதமாக வீடியோக்கள் மற்றும் லட்சக்கணக்கான கேம்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதைப் பார்க்கும் குழந்தைகள் மன ரீதியாகத் தூண்டப்படுகின்றனர்.அதனால் செல்போனுக்கு அடிமையாகின்றனர்.

பெற்றோர்களின் அறியாமை

சில பெற்றோர்கள் குழந்தைகள் அழத் தொடங்கினாலே செல்போனை கொடுத்து அமைதிப்படுத்த முயலுகின்றனர். சில பெற்றோர்களோ ஒருபடிக்கு மேலே போய் தங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை பெருமையாக மற்றவர்களிடம் சொல்கின்றனர். இதைப் பெற்றோர்களின் அறியாமை என்றுதானே சொல்லவேண்டும்!

 

செல்போன்களால் குழந்தைகளுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன?

இந்த ஸ்மார்ட் போன்கள் குழந்தைகளை எந்தெந்த வகையில் பாதிக்கின்றது என்று பெற்றோர்கள் அறிந்து விழிப்புணர்வு அடைய வேண்டும்! அதைப் பற்றிப் பார்க்கலாம்.

பேச்சாற்றல் வரத் தாமதமாகிறது

குழந்தைகள் கையில் செல்போன்களை எடுத்துக்கொண்டு எப்போதும் அதைப் பார்த்த வண்ணமே உள்ளனர். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேச முயல்வதே கிடையாது. இதனால் குழந்தைகளின் பேச்சு ஆற்றல் சரியான நேரத்தில் வராமல் தாமதம் ஏற்படுகிறது.

கண்களை பாதிக்கும்

செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் நேரடியாகக் குழந்தைகளின் கண்களைத் தாக்குகின்றன. கண்களில் உள்ள மாக்யுலா பகுதியைச் சிதைக்கிறது. தொடர்ச்சியாகக் குழந்தைகள் செல்போனை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது பார்வைக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுதலைவலியையும் உண்டாக்கும்.

மன அழுத்தம் ஏற்படுகிறது

அதிகமாக செல்போனில் படங்களைப் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது போன்ற செயல்களைச் செய்யும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகளுக்குக் காரணமே இல்லாமல் கோபம் வரும். எதற்கு எடுத்தாலும் குழந்தைகள் சிடுசிடு என்று எரிந்து விழுவார்கள்.

காரணமில்லாத அழுகை

எதற்கெடுத்தாலும் அடம் பிடித்து அழத் தொடங்குவார்கள். பிடிவாதம் அதிகமாகக் பிடிப்பார்கள். ஒரு பொருள் வேண்டும் என்றால் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். இந்த தவறான பழக்கங்களை வளர்ப்பதில் செல்போன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

மூளை வளர்ச்சி குறையும்

செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் குழந்தையின் மூளையைத் தாக்கும் தன்மை கொண்டன. இதனால் அவர்களின் மூளையின் வளர்ச்சி சிறப்பாக இருக்காது. அவர்கள் வளர்ந்த பிறகு மந்தமாகவும் வாய்ப்பு உள்ளது. ஞாபகமறதியும் கூடவே தொற்றிக்கொள்ளும்.

தூக்கம் கெடுகிறது

செல்போனை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை என்று ஆய்வு கூறுகின்றது. குழந்தைப் பருவத்தில் போதிய அளவு தூக்கம் இருந்தால் மட்டுமே உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தூக்கம் கெடுவதால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.

தனிமைப்படுதல்

ஒரு குழந்தை செல்போனுக்கு அடிமையாகி விட்டது என்றால் அது யாருடனும் அதிகமாகப் பழகாது. நாளடைவில் அந்த குழந்தை தனிமைப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி மற்ற மனிதர்களோடும், குழந்தைகளோடும் தொடர்பு கொள்ளாமல் குழந்தை வளர வளர, அது எதிர்காலத்தில் யாருடனும் ஒட்ட முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகும். எதிர்காலத்தில் படிப்பிலிருந்து வேலை வரை இந்தப்பழக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

கவனக் குறைவு

செல்போனில் மூழ்கிப்போன குழந்தைகளுக்குக் கவனக்குறைவும் மிகவும் அதிகமாகவே இருக்கும். மற்ற விசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை இருக்காது. ஒரு விசயத்தை இரண்டு மூன்று தடவை சொன்னால் மட்டுமே அவர்களால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.

கேட்கும் திறன் மேம்படாது

கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமானது கேட்கும் திறன். செவி வழியே குழந்தைகளால் பல நுண் அறிவுகளைப் பெற முடியும். ஆனால் குழந்தைகள் செல்போனே கதி என்று இருக்கும் போது யாருடைய குரல்களும் அவர்களின் காதுகளில் ஏறுவதே இல்லை. சில சமயம் கூப்பிட்டால் கூட காதில் ஏறாது. இதனால் ஒரு முக்கியமான கம்யூனிகேஷன் திறனை அவர்களால் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகிறது.

உடலின் இயக்கம் பாதிக்கும்

அதாவது வீட்டில் எப்படி கடிகாரம் உள்ளதோ அது போலவே மனித உடலிலும் ஒரு கண்ணுக்குத் தெரியாத கடிகாரம் இருக்கும். அந்த கடிகாரம் சரியாக இயங்கினால் மட்டுமே நாம் சரியான நேரத்தில் உறங்கவும் விழிக்கவும் முடியும். ஆனால் குழந்தைகளின் இந்த வகை உடல் இயக்கங்களை செல்போன் பெரிதளவில் பாதிக்கின்றது. அதனால் குழந்தையின் வளர்ச்சி கெட்டுப் போக வாய்ப்புள்ளது.

சூழலில் இருந்து அறிவை வளர்க்க முடியாது

கை அளவு செல்போனில் உலகமே அடங்கியுள்ளது என்பது உண்மைதான். அப்படிப்பட்ட செல்போனில் உலகத்தில் உள்ள எந்த விசயங்களைப் பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் குழந்தை ஓடித்திரிந்து சுயமாக பெரும் அறிவை, கடுகளவு கூட செல்போனால் தர முடியாது என்பது தான் நிதர்சனம்!

நல்ல தகவலை விட கெட்டது அதிகம்

செல்போன்களில் பல கெட்ட விசயங்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இது மாதிரியான விசயங்களை குழந்தைகள் பார்க்க நேருவது உகந்ததல்ல. இது அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கும்.

 

செல்போன்களில் இருந்து குழந்தைகளை மீட்பது எப்படி?

 • குழந்தைகளின் பார்வை படும்படி பெற்றோர்கள் செல்போனை நோண்டக்கூடாது.
 • குழந்தைகளைத் தனிமையில் விடக்கூடாது. இதனால் அவர்கள் பெரும் ஏக்கம் அடைகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளுடன் போதிய நேரத்தைச் செலவிட வேண்டும். அதனால் அவர்களின் கவனம் செல்போன் பக்கம் செல்லாது.
 • அக்கம்பக்கத்துக் குழந்தைகள் மற்றும் உறவினர் குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளை சேர்ந்து விளையாட விடுங்கள்.
 • அவர்கள் கொஞ்ச காலமே குழந்தைகளாக இருப்பர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு குழந்தை பருவத்தை அனுபவிக்கட்டும். எந்த வகையிலும் தடை போடாதீர்கள்.
 • அவர்களுக்கு நிறைய கதை சொல்லுங்கள். கதைகளின் மூலமே அவர்கள் உலகத்தின் பல கோணங்களை அறிந்து கொள்ள முடியும்.
 • வண்ணம் தீட்டுதல், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுதல், பொருட்களை வரிசையாக அடுக்கி வைத்தல் போன்ற பல்வேறு நல்ல பழக்கங்களின் மீது அவர்களின் கவனத்தைத் திருப்பப் பாருங்கள்.
 • உணவு சாப்பிடும் பொழுது கட்டாயமாக அவர்களுக்கு செல்போன் தர வேண்டாம். குடும்பமாக அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு உணவின் மீது அக்கறையும், மரியாதையும் ஏற்படும். செல்போன் மீது கவனம் போகாது.
 • பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்க வேண்டாம். மாறாகச் செல்லும் ஊரைப் பற்றிய பல்வேறு தகவல்களைப் பேசுங்கள்.
 • சற்று சிறிய குழந்தை என்றால் தினம் ஏதாவது நல்ல புத்தக்கத்திலிருந்து அரைப் பக்கம் வாசித்துக் காட்டுங்கள். சற்று வளர்ந்த குழந்தை என்றால் சொந்தமாகவே வாசிக்க தினமும் ஊக்கப்படுத்துங்கள்.
 • இதே போல சற்று வளர்ந்த குழந்தைகளிடம் எதாவது தலைப்பு தந்து காகிதத்தில் எழுத ஊக்கப்படுத்தலாம்.
 • அருகில் உள்ள பூங்கா, விளையாட்டு மைதானங்களுக்கு குழந்தைகளை அடிக்கடி அழைத்துச் செல்லலாம்.
 • பெரியவனானதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாம், இப்பொழுது வேண்டாம் என்பதை புரியாவையுங்கள்.

மொத்தத்தில் எல்லாமே பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. உங்கள் குழந்தைகளின் நன்மைக்காக அவர்களுக்கு செல்போன் தராதீர்கள். தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைத் ஒத்தது தான் செல்போன்களுக்கு அடிமையாவதும் என்பதை உணர்ந்து விழித்துக் கொள்ளுங்கள்! செல்போன்களில் இருந்து உங்கள் வீட்டுப் பிஞ்சுகளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null