மாதுளை சாப்பிட்டால், மகத்தான பயன்கள்!

மாதுளை சாப்பிட்டால், மகத்தான பயன்கள்!

மாதுளை ஒரு நல்ல நிறம் உடைய சத்தான பழம். இந்தப் பழங்கள் இளஞ்சிவப்பு, அடர்த்தியான சிவப்பு போன்ற வண்ணங்களில் காணப்படுகின்றன. இதன் முத்துக்கள் வெண்மை மற்றும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இவையே பார்ப்பவரைத் தூண்டி, சாப்பிட வைத்து விடும். மாதுளையை உரித்து விதைகளை அப்படியே சாப்பிடலாம். அல்லது மாதுளையில் பழ ரசம் தயாரித்துச் சாப்பிடலாம். மாதுளையை எந்த வகையில் சாப்பிட்டாலும் சுவைக்குப் பஞ்சமே இருக்காது. இந்த மாதுளை பழங்களுக்கு ‘சைனீஸ் ஆப்பிள்’ என்ற செல்லப் பெயரும் உண்டு.

 

இந்த மாதுளை பழங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட பைடோ கெமிக்கல்ஸ் உள்ளன. மாதுளை, குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய அம்மாக்கள் உண்ண மிகவும் உகந்தது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாதுளையில் இன்னும் பல்வேறு விதமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. மேலும் பல நல்ல பலன்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 

மாதுளை பழங்களில் நிறைந்துள்ள ஆரோக்கிய பலன்கள் என்ன?

 

ஆன்ட்டி ஆக்சிடென்ட் கொண்டது

 

மாதுளை பழத்தின் நிறத்திற்கு பாலிபீனால்ஸ் காரணமாக உள்ளது. இந்தப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள ப்ரீ ராடிக்கல்ஸை அகற்றப் பெரிதும் துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள் சிதைவுறாமல் காப்பாற்றப்படுகின்றன.

 

நினைவாற்றலை மேம்படுத்துகின்றது

 

மாதுளம் பழத்தை உட்கொள்வதால் நினைவாற்றலும், கற்கும் திறனும் நல்ல வகையில் அதிகரிக்கின்றது. அதனால் குழந்தைகளுக்குப் போதிய அளவு மாதுளம் பழங்களைச் சாப்பிடக் கொடுப்பது நல்லது.

 

செரிமானம் சிறப்படையும்

 

மாதுளம் பழங்கள் குடலில் ஏற்பட்ட வீக்கங்களைக் குணப்படுத்த உதவுகின்றது. இதனால் செரிமானம் இலகுவாகின்றது. மாதுளம் பழங்களை தொடர்ச்சியாக உட்கொள்வதால் பெருங்குடல் புண் மற்றும் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் ஆறத்தொடங்கி நல்ல பலன் ஏற்படும்.

 

திசுக்களின் சிதைவைத் தடுக்கின்றது

 

மாதுளம் பழங்களில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் திசுக்கள் சிதைவுறாமல் இருக்க உதவுகின்றன. இவை உடலில் ஏற்பட்டுள்ள வீக்கங்ளைக் குணப்படுத்தத் துணைபுரிகிறது. இந்தப் பழங்கள் உடலில் ஏற்பட்ட ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அதனால் அனைத்து வயதினருமே இந்தப் பழத்தை உட்கொள்ளலாம்.

 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

 

மாதுளம் பழத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஃபைபர் போலேட் , விட்டமின் சி , விட்டமின் கே, பொட்டாசியம் முதலிய சத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு இந்தப் பழங்கள் ஏற்றது.

 

இரத்த அழுத்தம் குறையும்

 

மாதுளை பழம் உடலின் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றது. உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகள் உள்ளவர்கள் மாதுளம் பழங்களை உண்பதால் நல்ல பலனை அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதயம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது

 

மாதுளை முத்துக்களில் புனிசிக் ஆசிட் என்னும் சிறப்பு வாய்ந்த சத்து உள்ளது. இந்த சத்து இதய செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க இது வழி செய்கின்றது.

 

மார்பகப் புற்றுநோய் வராது

 

மாதுளை பழங்கள் தொடர்ந்து உட்கொள்வதால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. அதனால் பெண்கள் தங்கள் உணவில் மாதுளை பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

 

சருமத்திற்கு மாதுளம் பழங்கள் கொடுக்கும் நன்மைகள் என்ன?

 

சருமத்தில் சுருக்கங்கள் வராது

மாதுளை பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது சருமத்தின்
மேம்பாட்டிற்கு உகந்த சத்தாகும். மேலும் இதில் ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சருமத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்க வழிவகை செய்கின்றன. அதனால் இளமையான தோற்றத்தில் இருக்க முடியும்.

 

சருமத்தில் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துகிறது

 

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் சருமத்தில் ஏற்பட்ட காயங்கள், கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகின்றன. மாதுளை பழ விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் எக்ஸிமா,சொரியாசிஸ் போன்ற பல்வேறு தோல் வியாதிகளைக் குணப்படுத்தத் தீர்வாக உள்ளது. இந்த மாதுளம் பழங்களானது சருமத்தின் சக்தியை அதிகரித்து, வெயில் தாக்கத்தில் இருந்து சருமத்தைக் காப்பாற்றவும் செய்கின்றன.

 

உடல் எடையைக் குறைக்க மாதுளை எவ்வாறு உதவுகின்றன?

 

  • மாதுளை முத்துக்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கப் பெரிதும் உதவுகிறது.
  • இதில் உள்ள பாலிபீனால் ( ஆன்டிஆக்சிடென்டின் வகை) உடல் எடையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
  • இந்த மாதுளை பழமானது பல்வேறு சர்க்கரை நிறைந்த பானங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக உள்ளது. சாதாரண சர்க்கரை உடலின் கலோரியை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் அந்த கலோரிகளால் எந்த நல்ல பலனும் கிடைப்பதில்லை. இதை உணர்ந்து கொண்டு நம் உணவில் சர்க்கரை நிறைந்த உணவுகளுக்கு மாற்றாக மாதுளம் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
  • பாலிபீனால் மற்றும் லினோலெனிக் ஆசிட் போன்ற கொழுப்பை எரிக்கும் பொருட்கள் மாதுளை பழங்களில் உள்ளன. மேலும் மாதுளை பழங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது.

 

கர்ப்பிணிகளுக்கு மாதுளம் பழங்கள் எப்படி உதவுகிறது?

 

விட்டமின்கள் மற்றும் மினரல்கள்

 

மாதுளம் பழங்களில் ஒரு சிறந்த சதவீத அளவிற்கு விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை என்ன சத்துக்கள் என்று அறிந்து கொள்ளலாம். அவை பொட்டாசியம் விட்டமின் சி, ஈ மற்றும் ஃபோலேட் என்பன. விட்டமின் சி, கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இரும்புச்சத்தைக் கிரகிக்க பெரிதும் உதவுகிறது. ஆக இந்த இரும்புச்சத்தானது தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான அதிக அளவு இரத்த உற்பத்திக்குத் துணைபுரிகின்றது.

 

பிரிஎக்லாம்சியா

 

கர்ப்ப காலத்தில் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும். கூடுதலாக நஞ்சுக்கொடியைச் சார்ந்த பிரச்சனைகளும் நிலவும். உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தமும் ஏற்பட்டு இருக்கும். இவ்வாறான உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருக்கின்ற சமயத்தில் சிறுநீரில் அதிக அளவு புரதம் வெளியேறும். கர்ப்பிணிப் பெண்ணின் கை, கால் மற்றும் பாதப் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். இவை அனைத்தும் பிரிஎக்லாம்சியா என்னும் பாதிப்பின் அறிகுறிகள். மாதுளையில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ ராடிக்கல்களின் தடை செய்கின்றன. நஞ்சுக்கொடி தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கின்றது. இந்த வகை பிரச்சனைக்கு மாதுளை நல்ல தீர்வாக உள்ளன.

 

இரத்த சோகை

 

மாதுளம் பழம் உடலின் இரத்த உற்பத்திக்கு உதவுகின்றன. இதனால் இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை சாப்பிடுவது உகந்தது.

 

நார்ச்சத்து

 

மாதுளையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதனால் செரிமானம் சிறப்பான வகையில் ஏற்படுகிறது. ஆக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பே கிடையாது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

 

தசைப் பிடிப்பு

 

கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் தசைப் பிடிப்புகள் ஏற்படும். இந்த பிரச்சனையைச் சரிசெய்து கொள்ள மாதுளை சரியான தீர்வாக உள்ளது. மேலும் இந்தப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் காணப்படுகின்றது. இந்த சத்தானது உடல் தசைகளில் உள்ள திரவங்களைச் சமன்படுத்துகின்றது. அதனால் தசைப் பிடிப்பு பாதிப்பு இல்லாமல் போகும்.

 

போலிக் சத்து

 

கருவில் வளரும் குழந்தைகளுக்குப் போலிக் சக்து இன்றியமையாதது. இந்த சத்தானது குழந்தையில் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. இந்த சத்தானது கருவில் உள்ள குழந்தைக்கு போதிய அளவு கிடைத்தால் மட்டுமே குழந்தையின் மூளை சம்பந்தப்பட்ட செல்கள் சிறப்பாக வளரும். ஆக கர்ப்பிணிப் பெண்கள் இந்த சத்து நிறைந்த மாதுளையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இருக்கும் பெண்களும் இந்த போலிக் சத்து நிறைந்த மாதுளையை எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் கருச்சிதைவு அபாயமும் பெரிய அளவில் தவிர்க்கப் படுகிறது.

 

மாதுளையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

 

கர்ப்பகால நீரிழிவு நோய்ப் பாதிப்பு

 

கர்ப்பகால நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு ஆளான கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை உட்கொள்வது நல்லதல்ல. இதில் நிறைந்துள்ள இனிப்புச் சத்து நீரிழிவுசார்ந்த நோயை இன்னும் மோசமாக்கும். அதனால் இந்த நோய் அறிகுறி உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மாதுளை பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 

இரத்த அழுத்தம் குறைவாக உள்ள நபர்கள்

 

உடலின் இரத்த அழுத்தம் குறைவாக உள்ள நபர்கள் மாதுளம் பழங்களைச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் மாதுளை பழங்கள் உடலின் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டன. ஆக இந்த மாதிரியான நபர்கள் மாதுளையை உட்கொள்வதன் மூலம் மேலும் அவர்களின் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.

 

அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்போர்

 

ஏதாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்தால் அந்த மாதிரி நபர்கள் மாதுளையைத் தொடவே கூடாது. மாதுளம் பழம் இரத்த அழுத்த அளவுகளை நேரடியாகத் தாக்கும் தன்மை கொண்டன. ஆக அறுவை சிகிச்சைக்குக் குறைந்தது இரண்டு வாரத்துக்கு முன்னபே, அவர்கள் மாதுளையை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

மாதுளைபழங்கள் சாப்பிட சில குறிப்புகள்

கடைகளில் பாக்கெட் செய்து விற்கப்படும் மாதுளை பழச்சாறுகளை வாங்கி அருந்த வேண்டாம். இந்த வகை பாக்கெட் பழச்சாறுகளில் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். கூடுதலாகப் பழச்சாறு கெடாமல் இருக்கப் பதப்படுத்தப் பட்டிருக்கும். இவ்வாறு செய்வதால் மாதுளை பழங்களில் இயற்கையாக நிறைந்திருந்த விட்டமின் சி சத்து அழிக்கப்பட்டுவிடும். இதனால் எதிர்பார்த்த ஆரோக்கிய பலனை அடைய முடியாது. ஆக வீட்டிலேயே மாதுளம் பழங்களைக் கொண்டு சாறு தயாரித்து அருந்துவது ரொம்பவே நல்லது.

  • ஃபுரூட் சாலட் தயாரிக்கும் பொழுது மற்ற பழங்களுடன் சேர்த்து, மாதுளையை சாப்பிடலாம்.
  • தயிர் சாதத்தில் மாதுளை பழ முத்துக்களைத் தூவி உட்கொள்ளலாம்.

 

மாதுளையின் பல்வேறு மருத்துவ குணங்களையும், இந்த பழங்களை எந்த சமயத்தில் சாப்பிடக்கூடாது என்ற தகவல்களையும் பகிர்ந்தோம். மேலும் இந்த பழங்களை சாப்பிடுவதற்கு சில குறிப்புகளையும் விரிவாகவே தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம்.

 

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null