கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் நன்மைகள் என்ன? பக்க விளைவு வருமா?

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் நன்மைகள் என்ன? பக்க விளைவு வருமா?

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. வசதி படைத்தவர்கள் மீது தங்கப் பஸ்பம் பற்றிய கதை கட்டவிழ்த்து விடுவது மாதிரி, கர்ப்பிணிகள் மத்தியில் வலம் வரும் நம்பிக்கை இந்தக் குங்குமப்பூ..!. உண்மையில் குழந்தையின் நிறத்துக்கும் குங்குமப்பூவுக்கும் தொடர்பு இருக்கிறதா? குங்குமப்பூவால் மரபணுவையே மாற்ற முடியுமா? கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிடலாமா? அது நல்லதா? பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

 

குங்குமப்பூ என்றால் என்ன?

இந்தியாவில் காஷ்மீரில் விளையும் பயிர்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது குங்குமப்பூ. இதன் சிறப்புகளும், மருத்துவக் குணங்களும் ஏராளமானவை. மசாலாக்களின் ராஜா என்று செல்லமாக

அழைக்கப்படுகிறது. முகப்பூச்சுகள், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலிருந்து கர்ப்பிணிகளின் கருவைப் பாதுகாப்பது வரை இதன் பயன்பாடுகள் ஏராளம். இதற்கு ஜபரான், கூங், கேசர் ஆகிய பெயர்களும் உள்ளன.

 

குங்குமப்பூக்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?
உலகின் பல பகுதிகளில் குங்குமப்பூக்கள் கிடைத்தாலும் எல்லாவற்றையும் மக்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது கிடையாது. இந்தியாவில் இமய மலைப் பகுதியிலிருந்து குங்குமப்பூக்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இதே போல உலக அளவில் ஈரான், கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் குங்குமப்பூக்களுக்கு வரவேற்பு அதிகம்.

 

குங்குமப்பூவின் இயல்புகள்
இதன் சுவையும் மணமும் கவர்ந்து இழுக்கக்கூடியது. சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். கர்ப்பிணிகளுக்குக் குறிப்பாக இதன் மீது ஈர்ப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டதாக விளங்குகிறது. அழகு மட்டுமின்றி புற்றுநோய், முடி உதிர்வு உள்ளிட்ட பல சிக்கல்களுக்கும் ,நோய்களுக்கும் கூட இதைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் பிரச்சனையின் போது ஏற்படும் வலி குணமாக, இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றுக்கு எந்த வித மருத்துவ ஆதாரங்களும் இல்லை. இது ஏற்படுத்தும் மகிழ்ச்சியான உணர்வு நோயாளிகளுக்கு நோயிலிருந்து விடுதலை பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

 

மலைக்க வைக்கும் விலை
குங்குமப்பூவின் விலையைக் கேட்டால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஒரு கிராம் குங்குமப்பூவின் விலையே ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரும். ஏனென்றால் இதன் உற்பத்தி அப்படி. ஒரு குங்குமப்பூவில் வெறும் மூன்று

இதழ்கள்தான் இருக்கும். 1000 குங்குமப்பூக்களிலிருந்து 28 கிராம் அளவுக்குத்தான் எடுக்க முடியும். அதிகமெனக்கடலுடன் எடுத்தாலும் மிகக் குறைந்த அளவே குங்குமப்பூவே கிடைக்கிறது.

பாதுகாப்பு முறை
குங்குமப்பூவைக் குளிர்ச்சியான பகுதியில் பாதுகாக்க வேண்டும், அப்போதுதான் அதன் தன்மை மாறாமல், நீண்ட நாள் பலனளிக்கக் கூடியதாக இருக்கும். ஃபிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் ஆண்டுக்கணக்காகக் கூட இதனை வைத்துப் பயன்படுத்தலாம்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிடலாமா?
கர்ப்பிணிகள் குழந்தை சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் குடிப்பார்கள். பாரம்பரியமாக இந்த வழக்கமும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் குழந்தையின் நிறத்துக்கும் குங்குமப்பூவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மரபணுதான் குழந்தையின் நிறத்தைத் தீர்மானிக்கிறது

ஆனால், கர்ப்பிணிகளுக்குப் பல வகைகளில், இந்த குங்குமப்பூ மருத்துவ ரீதியாக உதவிக்கரமாக இருக்கிறது. பாலில் குங்குமப்பூவைப் போட்டுப் பருகினால், அதன் மணமும் சுவையும் கர்ப்பிணியின் வாந்தி எடுக்கும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் பசியையும் தூண்டுகிறது. இதனை ஐந்தாம் மாதத்தில் சாப்பிடத் தொடங்கலாம்.

வயிற்றில் குழந்தை இருக்கும்போது கர்ப்பிணிகளால் அதிகம் சாப்பிட முடியாது. சாப்பிட்டாலும் வாந்தி வருவது போன்ற உணர்வே இருக்கும். இதனால் பெரும்பாலான கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துக் குறைபாடும், உடல் ஆற்றல் குன்றியும் காணப்படுகின்றனர். குங்குமப்பூ இந்த சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக இருக்கிறது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்
மன அழுத்தம்

கர்ப்பிணிகள், குழந்தை வளர்ச்சி குறித்த அச்சம், பிரசவம் குறித்த பயம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு வித மன அழுத்த உணர்விலேயே இருப்பார்கள். இதனால் குழந்தையின் வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படலாம். குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்தால், அது உடனே புத்துணர்ச்சி தந்து மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளிக்கிறது. மேலும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ‘மூட் ஸ்விங்’ எனப்படும் மன மாற்றத்தைச் சீராக்கி மன அமைதியைத் தருகிறது.

முகப்பொலிவு
கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக முகத்தில் மாற்றம் ஏற்படும். முதிர்ச்சியடைந்த கவலையான தோற்றத்தைத் தரும். இந்த நேரத்தில், குங்குமப்பூவைப் பாலில் கலந்து சாப்பிட்டால், முகப்பொலிவை அதிகரித்து, கர்ப்பிணிக்கு அழகான தோற்றத்தையும் நம்பிக்கையையும் தரும்.

ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்
குங்குமப்பூவில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளன. இது, செல்களில் உள்ள தேவையற்றப் பொருட்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

மறதி
மறதி நோய் ஏற்படாமல் தடுப்பதில் குங்குமப்பூவின் பங்கு முக்கியமானதாகப் பார்க்கப் படுகிறது. இது அல்ஸைமர் ( வயது காரணமாக வரும் மறதி நோய்) கூட வராமல் தடுக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

சொட்டைத் தலை
தலையில் முடி உதிர்ந்து சொட்டைத் தலையாக இருக்கிறது என வருத்தப்படுபவர்களுக்காகக் குங்குமப்பூ தைலம் கிடைக்கிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது நிற்பதுடன், வலுவடைகின்றன என்பதுதான் இதன் சிறப்பே!

ஜீரண சக்தி
கர்ப்ப காலத்தில் மற்ற நேரங்களை விட ஜீரணம் மெதுவாக நடக்கும். இதனால் இரைப்பையில் அசிடிட்டி பிரச்சனை ஏற்படும். இந்தப் பிரச்சனையைக் குணப்படுத்தும் இயல்பு குங்குமப்பூவுக்கு உண்டு. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி அதிகரித்து அசிடிட்டிப் பிரச்சனை நீங்கும்.

பசியைத் தூண்டுதல்
கர்ப்பிணிகளுக்கு ஜீரண சக்தி குறைவாக இருப்பதால், பசியும் சரி வர எடுக்காது. இதனால் வேளைக்குச் சாப்பிடாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாகக் குழந்தையும் பாதிக்கப்படும். குங்குமப்பூ ஜீரணத்தைத் துரிதப்படுத்துவதால் சரியான நேரத்தில் பசி எடுக்கிறது. இதனால், கர்ப்பிணிகளால் அதிகம் சாப்பிட முடிகிறது. குழந்தையின் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

முடி உதிர்தல்
கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக முடி அதிக அளவில் உதிரும். இதனால், ஏற்கெனவே இருக்கும் மனக் குழப்பமும், வேதனையும் மேலும் அதிகரிக்கும். கருவில் வளரும் குழந்தைக்கு இது ஆபத்தாகக் கூட ஆகலாம். குங்குமப்பூ முடி உதிர்தலைத் தடுக்கிறது.

அதிக குங்குமப்பூ உடலுக்கு ஆபத்தா?
அதிக குங்குமப்பூ உடலுக்கு ஆபத்தா என்றால் ஆபத்து என்பதுதான் மருத்துவர்களின் பதிலாக இருக்கிறது. சிலர், குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அதிகமாக குங்குமப்பூவை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் நாள் ஒன்றுக்கு பத்து கிராமுக்கு மேல் குங்குமப்பூவை எடுத்துக்கொண்டால் அது ஆபத்துதான். பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

குறிப்பாகக் கர்ப்பப் பை சுருக்கம், கருச்சிதைவு ஆகியவை இதனால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்துகளாகும். கர்ப்பப் பை சுருக்கம் ஏற்பட்டால் அடுத்த முறை கரு தரிக்க முடியாமல்கூட ஆகலாம்.

பக்க விளைவுகள்

  • அளவுக்கு அதிகமாக குங்குமப்பூவை உட்கொண்டால், அது தரும் பக்கவிளைவுகள் அதி பயங்கரமானவை. ஆளையே கொல்லும் அளவுக்கு வினையாற்றும்.
  • நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் என்பது ஏற்புடைய அளவு. 10 கிராம் வரை சாப்பிடலாம். ஆனால், 12-20 கிராம் அளவுக்கு ஒரே நாளில் சாப்பிட்டால் உயிருக்கே பிரச்சனையாகி விட வாய்ப்பு உள்ளது.
  • பாலூட்டும் தாய்மார்கள் அதிக அளவில் குங்குமப்பூவை எடுத்துக்கொண்டால், தாய்ப்பாலே குழந்தைக்கு ஆபத்தாக முடியக்கூடிய வாய்ப்பு உள்ளது.
  • மூளையைத் தாக்கி, ‘அந்நியன்’ பட விக்ரம் போல பை போலார் டிஸ் ஆர்டரை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
  • அளவுக்கதிகமான குங்குமப்பூ, இதயத்தைப் பாதிக்கும். சீரான இதயத் துடிப்பை தாக்கி, அதை கெடுத்து இதயத்துக்கே ஆபத்தாகி விடும்.
  • 10 கிராம் அளவுக்கு மேல் குங்குமப்பூவைச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்துவிடும்.

குங்குமப்பூவை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
எந்த வடிவில் வேண்டுமானாலும் குங்குமப்பூவைச் சாப்பிடலாம், ஆனால் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பது முக்கியம். கர்ப்பிணிகளுக்குப் பல வகையான உணவுகளைச் சாப்பிடவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சாப்பிட்டால் வாந்தி வரும். சாப்பிடவில்லையே என்ற குறையும் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் விரும்பும் உணவுடன் ஓரிரு குங்குமப்பூ இதழ்களைப் போட்டுச் சாப்பிடலாம்.

வழக்கமாகத் தயாரிக்கும் பிரியாணி மாதிரிதான் இந்தக் குங்குமப்பூ பிரியாணியும். பிரியாணிக்குத் தேவையான மசாலா பொருட்கள், இறைச்சி, அரிசி உள்ளிட்டவற்றைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் குங்குமப்பூவின் இதழ் ஒன்றைப் போட்டுக் கரைத்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகப் போடும்போது இடையிடையே குங்குமப்பூ நீரையும் சில துளிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்பு வேக வைத்து எடுத்தால் குங்குமப்பூ பிரியாணி தயாராகிவிடும்.

இதே போலத்தான் புலாவ் தயாரிப்பும். அசைவ உணவை விரும்பாதவர்கள் வெஜிடபுள் பிரியாணி சாப்பிடலாம். சிக்கன் பிரியாணி தயாரிப்பில் பயன்படுத்தியதைப் போலவே இதிலும் குங்குமப்பூ நீரைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிகள் விரும்பும் ஒவ்வொரு உணவையும் இதேபோல குங்குமப்பூ சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். அதன் சுவையும் மணமும் அதிக ஈர்ப்புடன் உணவைச் சாப்பிடத் தூண்டும்.

குங்குமப்பூவில் கலப்படம் இருக்குமா?
ஒரு பூவிலிருந்து மூன்று இதழ்கள்தான் கிடைக்கும் என்று சொல்லியிருந்தோம் அல்லவா? அதனால் இதில் கலப்படம் செய்து விற்கப்படுவதும் அதிகம். சூடான நீரில், குங்குமப்பூவைப் போட்டால் அது கரையும். தண்ணீர் தங்கம் போல ஜொலிக்கக் கூடிய நிறத்திற்கு மாறும். அதிலிருந்து வரும் நறுமணம் ஒரு நாள் முழுவதும்கூட நீடிக்கும். போலியான குங்குமப்பூவில் இந்த அளவுக்கு நறுமணம் இருக்காது. தண்ணீரில் போட்டால் அதன் நிறம் முழுமையாக மாறாது.

கர்ப்ப காலத்தில் மருத்துவரைச் சந்திக்கும்போது, நீங்கள் குங்குமப்பூ சாப்பிடுபவராக இருந்தால், சாப்பிடும் முறை, அளவு, நேரம் உள்ளிட்டவற்றை மருத்துவருக்குத் தெளிவாக விளக்கிக் கூறி விட வேண்டும். அப்போதுதான் உடலில் ஏற்படும் மாறுதல்கள் எதாவது குங்குமப்பூவால் ஏற்பட்டதா என்பதை மருத்துவரால் கண்டுபிடித்து அதற்கேற்ற சிகிச்சையும் அறிவுரையும் வழங்க முடியும். குங்குமப்பூ சாப்பிடுங்கள். ஆனால் அளவாகச் சாப்பிடுங்கள். நலமாக வாழுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null