ஸ்டெம் செல்: பாதுகாப்பது எப்படி?  & நன்மைகள் என்ன?

ஸ்டெம் செல்: பாதுகாப்பது எப்படி? & நன்மைகள் என்ன?

ஸ்டெம் செல்லை வைத்து இந்த சிகிச்சை செய்யலாம், அந்த சிகிச்சை செய்யலாம் என்கிறார்களே? உண்மையில் அப்படிச் செய்ய முடியுமா? உடல் உறுப்பையே உருவாக்கிவிட முடியும் என்கிறார்களே? அதெல்லாம் உண்மையா? சாதாரண செல்லுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறதா? அதைப் பாதுகாக்க வங்கியெல்லாம் இருக்கிறதா? இதெல்லாம் உண்மையா என்ற சந்தேகம் இருக்கிறதா? அதைப்பற்றி விளக்குகிறது இந்த கட்டுரை…

 

ஸ்டெம் செல் என்றால் என்ன?

நம் உடல் முழுவதும் செற்களால் ஆனது. ஒரு செல் இரண்டு, நான்காகப் பிரிந்துதான் முழு உடலும் உருவாகியிருக்கிறது. இப்படி இருக்கும் செற்களில் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லுக்கும் தனித்தனி சிறப்புகளும் வேலையும் இருக்கிறது. உதாரணமாக மனித ரத்தத்தை l எடுத்துக்கொள்வோம். அதில், வெள்ளை அணுக்கள், தட்டை அணுக்கள், சிவப்பணுக்கள் என மூன்று வகையான செற்கள் இருப்பது தெரியுமல்லவா? இதில், சிவப்பணுவின் வேலை என்ன தெரியுமா? உடல் முழுவதும் நம் சுவாசம் மூலம் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வது. இதே போலத்தான் மற்ற செற்களுக்கும் தனித்தனி வேலைகள்.

இதுபோன்ற செற்களுள் ஒன்றுதான் ஸ்டெம் செல்லும். சாதாரணமாக உடலில் அடிபட்டு ஏற்படும் காயமோ, அல்லது தீ காயமோ குணமாவதற்கு இந்த ஸ்டெம் செற்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. உடலைப் பழைய நிலைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில், புண்பட்ட இடத்தை புதுப்புது செற்களை உருவாக்கி மீண்டும் புதுப்பிக்கின்றன. இந்த செற்கள் அனைத்து பகுதிகளிலும் காணப்படும்.

 

ஸ்டெம் செல்லில் எத்தனை வகைகள்?

உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகை ஸ்டெம் செல்கள் காணப்படுகின்றன. அதே போல ஒவ்வொன்றுக்கும் ஒரு வகை சிறப்பு இருக்கிறது. உதாரணமாக, ரத்தத்தில் ரத்த ஸ்டெம் செற்கள் உள்ளன. எலும்பு மஜ்ஜையில் மஜ்ஜை ஸ்டெம் செற்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் அந்தந்த உறுப்பை மட்டுமே உருவாக்கும் இயல்பு இருக்கிறது. விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், ரத்த ஸ்டெம் செற்களால், மஜ்ஜையை உருவாக்க முடியாது. மஜ்ஜை ஸ்டெம் செற்களால் ரத்தத்தை உருவாக்க முடியாது. இதே போலத் தான் மற்ற பகுதிகளில் உள்ள ஸ்டெம் செல்லுக்கும்..!

ஆனால், கருவில் உள்ள ஸ்டெம் செற்கள் உடலின் அனைத்து பாகங்களையும் உருவாக்கும் இயல்பு கொண்டவையாக இருக்கின்றன. இதுதான் மருத்துவத்துறையையே ஆச்சரியத்தில் வைத்திருக்கிறது. இந்த வகை ஸ்டெம் செற்கள் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் உருவாக்கும் இயல்பு கொண்டவை, தோல், திசு, மூளை, ரத்தம், மஜ்ஜை என அனைத்து வகை ஸ்டெம் செற்களையும் இவற்றால் உருவாக்க முடியும்.

கரு ஸ்டெம் செற்களைவிட, மற்ற ஸ்டெம் செற்கள் முதிர்ந்த நிலையில் காணப்படுவதால், அவற்றில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து விடுகிறது. இதனால், மற்ற ஸ்டெம் செற்களால் பிற உறுப்புகளை உருவாக்க முடிவதில்லை.

 

கரு ஸ்டெம் செல் எங்கிருந்து கிடைக்கும்?

கரு ஸ்டெம் செல் என்பது, தாய்க்கும் கருவில் உள்ள சேய்க்கும் இடையேயான இணைப்பாகச் செயல்படுவது. கர்ப்பப்பையில் கரு உருவாவதிலிருந்து, உணவைக் கடத்தி உடலின் ஒவ்வொரு பாகமாக உருவாக உறுதுணையாக இருக்கும் ஸ்டெம் செல்லுக்குத்தான் கரு ஸ்டெம் செல் என்று பெயர்.

இது குழந்தையின் நஞ்சுக்கொடி (அல்லது தொப்புள் கொடி) பகுதியில் உள்ள ரத்தம் மற்றும் கெட்டியான பகுதியில் இவ்வகை ஸ்டெம் செற்கள் காணப்படும். இவற்றைச் சேமித்து வைப்பதன் மூலம் குழந்தையின் எதிர்கால பாதுகாப்புக்கு உதவ முடியும்.

 

ஸ்டெம் செல்லை எப்படிப் பாதுகாப்பது?

குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நஞ்சுக் கொடி இரத்தத்தையும், கொடியின் திசுக்களையும் சேமித்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் அக்குழந்தையைப் பல விதமான நோய்களிலிருந்து

காப்பாற்ற முடியும். ஏனென்றால், இந்த உயிரணுக்கள் பல விதமான தீவிர நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உடையவை.

ஸ்டெம் செல்லை பாதுகாப்பது என்றால், முன்கூட்டியே திட்டமிட வேண்டும். அதாவது குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே குளிர்ச்சியான கலனில் ஸ்டெம் செல்லை பத்திரப்படுத்த வேண்டும்.

அதாவது, குழந்தை பிறந்த பத்து நிமிடங்களில், தொப்புள்கொடி ரத்தமும், அதன் தொப்புள் கொடியில் மொத்தம் 25 செண்டிமீட்டர் அளவுக்குக் கடினமான பகுதியைத் தனியே பிரித்தெடுத்துப் பத்திரப்படுத்த வேண்டும். மிகுந்த குளிர்ச்சியான கலனை இதற்குப் பயன்படுத்த வேண்டும். அதைப் பாதுகாப்பதற்கென வங்கிகள் இருக்கின்றன.

 

(

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஸ்டெம் செல் வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் குறிப்பாகச் சென்னை போன்ற பெரு நகரங்களில் இவற்றின் செயல்பாடுகள் தற்போது அதிகரித்து வருகிறது. (Cordlife, LifeCell, CryoSave,Cryoviva, NovaCord) போன்றவை சில முன்னணி ஸ்டெம் செல் வங்கிகளாகும். இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் நாடு முழுவதும் தங்களது கிளைகளைப் பரப்பியுள்ளன. நாட்டின் அனைத்து முன்னணி நகரங்களிலும் இவற்றின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த வகை ஸ்டெம் செல் வங்கிகளில் குழந்தையின் ஸ்டெம் செல்களை சேகரிப்பது என்பது கொஞ்சம் செலவுடையதுதான். பெரும்பாலான நிறுவனங்கள், ஆண்டுக் கட்டணம் அல்லது மாதாந்திர தவணை திட்டம் என பல்வேறு சலுகைகளைப் பயனர்களுக்கு வழங்குகின்றன. சராசரியாக ஆண்டுக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாகப் பெறப்படுகிறது. இதனை மாதா மாதம் தவணையாகச் செலுத்தும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்லை பாதுகாக்க, இணையத்தில்கூட இந்நிறுவனங்களிடம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த தெளிவான முடிவைக் குழந்தை பிறப்பதற்கு முன்பே எடுப்பது சிறந்தது. ஏனென்றால், கடைசி நேரப் பரபரப்பைத் தவிர்க்க வேண்டும்.

ஸ்டெம் செல்லைப் பாதுகாப்பதனால் என்ன பயன்?

  • ஸ்டெம் செல் மூலம் பல, உயிர்காக்கும் உயர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உடலில் இழந்த ஒரு உறுப்பை மீண்டும் வளர வைக்கவும் முடியும் என்பது ஸ்டெம் செல்லால் சாத்தியமான ஒரு மருத்துவ சாதனை.
  • தோலில் தீ காயமோ, அல்லது வேறு எதாவது காயமோ ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தில் ஸ்டெம் செல்லைச் செலுத்தும்போது, அது விரைந்து குணமாக உதவுகிறது. தவிர இந்த பாதிப்பால் சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் மீண்டும் பழைய நிலைக்கே வருமளவுக்கு வளர்ச்சியாக்கவும் உதவுகிறது.
  • ரத்த ஸ்டெம் செற்கள், தலசீமியா, ரத்த புற்று நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து குணமடைய உதவுகின்றன. இதுமட்டுமல்லாமல், மனிதனுக்கு என்னென்ன மாதிரியான நோய்கள் ஏற்படலாம். அதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும், தீர்வுகள் என்ன? என்பதைப்பற்றியெல்லாம் ஆய்வு நடத்தவும் உதவி புரிகின்றன.
  • பிறவிக் குறைபாடுகளையும் ஸ்டெம் செல் மூலம் சரி செய்யலாம் என்றால் நம்ப முடிகிறதா? கருவில் சில குழந்தைகள் உரிய வளர்ச்சியை எட்டாமல், ஏதேனும் குறைபாட்டுடன் பிறக்கும். காதுகேளாமையோ அல்லது கை கால் வளர்ச்சியோ பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த ஸ்டெம் செல் துணையுடன், மருத்துவர்கள் காதுகேளாமையைக் குணப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார்கள்.
  • சோதனை முயற்சியாக ஒரு காது கேளாத எலிக்கு, ஸ்டெம் செற்களைச் செலுத்தி, அதன் உறுப்புகளை வளர்ச்சி பெறச் செய்து, காது கேட்க வைத்திருக்கின்றனர். சோதனை முறையில் உள்ள இந்த முயற்சி, வெற்றிபெறும் பட்சத்தில் உலகின் கோடிக்கணக்கானோர் தங்களது காது கேட்கும் இயந்திரத்தைத் தூக்கி வீசிவிட்டு சுதந்திரமாக நடமாடுவார்கள் என்பது மட்டும் உறுதி. தவிர, கை கால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள் எனப் பலரின் சிகிச்சைகளுக்கும் ஸ்டெம் செற்கள் முக்கிய பங்காற்றும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ஸ்டெம்செல் தானம் பெற முடியுமா?

எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டவர்கள், அதே ரத்த பிரிவு உள்ளவர்களிடமிருந்து, எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செற்களை தானம் பெறலாம். ஆனால், அதனை எலும்பு மஜ்ஜைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற உடல் உறுப்புகள் வளர்ச்சியில் அவற்றால் பங்காற்ற முடியாது. ஆனால், இந்த வகையான மஜ்ஜை ஸ்டெம் செல்லை தானம் செய்தவர்களுக்கு அடுத்த ஒருவார காலத்திற்குத் தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். மீண்டும் ஸ்டெம் செற்கள் பழைய அளவுக்கு வளர்ச்சியை அடையும் வரை தானம் கொடுத்தவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கரு ஸ்டெம் செல் தானம்

குழந்தை பிறக்கும்போது, தொப்புள்கொடி ரத்தம் மிகுந்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான பெட்டகத்தில் அடைத்து ஏதேனும் ஒரு ஸ்டெம் செல் வங்கியிடம் கொடுக்கப்படும். அவர்கள் அதனை, தானம் கொடுக்க தகுதியானதா எனப்

பரிசோதித்துவிட்டு எடுத்துக்கொள்வார்கள். பாதுகாக்கப்பட்ட ஸ்டெம்செல்லை 24 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

ஸ்டெம் செல் பொருத்தம்

ரத்த தானத்தில் பிரிவு பார்ப்பது போல, இதில், இது HLA (Human Leukocyte Antigen) எனப்படும் ரத்த செல் புரத பொருத்தம் பார்க்கப்படும். பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் இந்த பொருத்தம் இருந்தால் மட்டுமே பெறுபவரின் உடல் ஏற்றுக்கொள்ளும்.

தானம் அளிக்க என்ன நிபந்தனை?

தானம் அளிப்பவர்கள் மட்டுமல்ல, பெறுபவர்களும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தானமளிப்பவர்களுக்கு இரட்டை குழந்தைகள் கருவில் இருக்கும் தாய்மார்கள் ஸ்டெம் செல் தானம் அளிக்க முடியாது. ஏனென்றால், ஒரு குழந்தைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் இரண்டு குழந்தைக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். ஆகவே போதுமான ரத்தம் இருக்காது.

மேலும், கர்ப்பிணியின் சகோதரிகளுக்கோ தாய்க்கோ மரபணு குறைபாட்டால் ஏற்பட்ட நோய் ஏதேனும் இருப்பின் அவர்களும் ஸ்டெம்செல் தானம் செய்யக்கூடாது. ஏனென்றால், அது தானம் பெறுபவரை பாதிக்கக்கூடும். தாய்க்கு எந்த பாதிப்பும் அதனால் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் நோய் மரபணுக்கள் இதன் மூலம் கடத்தப்பட வாய்ப்புள்ளது. தானமளிக்க முன்வரும் தாய்மார்கள், 7வது மாதத்தில் அதுபற்றிய முடிவை எடுத்து, அதற்கேற்ற ஏற்பாடுகளைத் தெளிவாகச் செய்துவிட வேண்டும்.

மஜ்ஜை ஸ்டெம் செல் தானம்

எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம்செல்லை தானம் செய்யலாம். அதைச் சேகரித்துப் பாதுகாக்கும் வங்கிகளும் இருக்கின்றன. தானம் கொடுப்பவருக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, இடுப்பு எலும்பு பகுதியில் நீண்ட ஊசி செலுத்தப்பட்டு, அதன் மூலம் தேவையான அளவுக்கு ஸ்டெம் செற்கள் சேகரிக்கப்படும். கொடுப்பவரின் உடல்நிலை மற்றும் எடையைக் கருத்தில் கொண்டு, எடுக்கப்படும் மஜ்ஜையின் அளவும் மாறுபடும். எடுக்கப்பட்ட செற்கள் சுமார் ஒன்றரை மாதத்துக்குள் மீண்டும் வளர்ந்துவிடும்.

ரத்தத்திலிருந்து நேரடி தானம்

தினசரி ஊசி மூலம் எலும்பில் ஸ்டெம் செற்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதனை ரத்தத்தில் கலக்கச் செய்து அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுக்க இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதில், ஸ்டெம் செல் கொடுப்பவரின் உடலில், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நியோபோஜென் போன்றவற்றைச் செலுத்துவார்கள். குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு, அதன் எண்ணிக்கை அதிகரித்துவிடும். பின்னர், சாதாரணமாக ரத்த தானம் செய்யும் முறையைப் பின்பற்றி

ரத்தத்தை எடுப்பார்கள். பின்னர் அதிலிருந்து ஸ்டெம்செல்லை பிரித்து எடுத்துவிட்டு, மீண்டும் கொடுத்தவருக்கே ஏற்றுவார்கள். இதனால், பல தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். கால்சியம் குறைபாடும் ஏற்படும். இவையெல்லாம் சில நாட்களில் சரியாகிவிடும்.

தானம் பெறுவதும், கொடுப்பதும், முன்பே கூறியது போலப் புரத செல் பொருத்தம் பார்த்த பிறகே மேற்கொள்ளப்படும். இதனால், பாதிக்கப்பட்டவரின் உறவினருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஏனென்றால், ஸ்டெம் செல் விஷயத்தில் பெரும்பாலானவர்களுடைய ஸ்டெம் செற்கள் ஒத்துப் போகாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null