1+ வயது குழந்தைகளுக்கான சிறந்த புரத உணவுகள்

1+ வயது குழந்தைகளுக்கான சிறந்த புரத உணவுகள்

அனைவரின் உடலுக்குமே புரதம் இன்றியமையாதது. குறிப்பாகக் குழந்தைகளின் வளர்ச்சியில் புரதத்தின் பங்கு அதிகமானது. குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகள் அனைத்தும் செரிமானமாகத் தொடங்கியதுமே புரதம் நிறைந்த உணவுகளைக் கொடுக்க தொடங்கலாம். அப்போதுதான் அதில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் முழுவதும் சென்று உடல் வளர்ச்சியைச் சீரானதாக ஆக்கும். புரதம் குறைவாக எடுத்துக்கொள்ளும் குழந்தைகளால் ஆக்டிவாக செயல்பட முடியாது.

 

அவர்களின் உடல், சராசரி வளர்ச்சியை விடக் குறைவானதாக இருக்கும். அது தவிர, கல்லீரல் பாதிப்பு, கால்கள் மற்றும் வயிறு பருத்துக் காணப்படுதல் போன்ற குறைபாடுகளும் ஏற்படும். அதனால் குழந்தைகளுக்குப் புரதம் அவசியம். 

  • 1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1300 கலோரிகளும், 16 கிராம் புரதமும் தினசரி தேவை. 
  • 4-6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1800 கலோரிகளும், 24 கிராம் புரதமும் தினசரி தேவை.
  •  7-14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2000 கலோரிகளும்,28 முதல் 45 கிராம் புரதமும் தினசரி தேவை. 

இதற்குக் கீழ் குறையும் பட்சத்தில், குழந்தைகளுக்குப் புரதச்சத்து குறைபாடு ஏற்படும்.

உடலில் புரதம் குறைவதை எப்படி கண்டுபிடிப்பது?

தலை முடி, நகம் மற்றும் தோல் ஆகியவற்றிற்குப் புரதம் மிகவும் அவசியமானது. உடலில் புரதச் சத்து குறைந்தால் தோல் சிவந்து போதல், நகம் உடைதல், அதிகப்படியான முடி உதிர்வு, அடிக்கடி பசி எடுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை வைத்து புரதக் குறைபாட்டைக் கண்டு பிடிக்கலாம்.

என்னென்ன உணவுகளில் புரதம் அதிகம் இருக்கிறது? எவையெல்லாம் குழந்தைக்குக் கொடுக்கலாம்? எவையெல்லாம் குழந்தைகளின் உடலுக்கு ஒவ்வாமையாக இருக்கும்? இது தவிர இன்னும் பல சந்தேகங்கள் பெற்றோருக்கு இருக்கலாம். இந்தச் சந்தேகங்களுக்கெல்லாம் தெளிவான விளக்கத்தை இக்கட்டுரையில் காணலாம். 

பால்

ஒரு கப் பாலில், 8 கிராம் புரதம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பால் குடிக்கலாம். ஆனால், குறிப்பாகக் குழந்தைகளுக்குத் தினசரி பால் கொடுக்க வேண்டியது அவசியம். வளரும் பருவத்தில், குழந்தைக்குத் தேவையான புரதம் பாலில் இருக்கிறது. பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பாலில்  கொழுப்பு மற்றும் புரத அளவுகள் மாறுபடலாம். முடிந்தால், பசு அல்லது எருமை மாடு வைத்திருக்கும் விவசாயியிடம் இருந்து நேரடியாக வாங்கப்பட்ட பாலை, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 

பால் குடிக்க மறுக்கும் குழந்தைகளுக்கு அதில் வேறு எதாவது சேர்த்துக் கொடுக்கலாம். முடிந்த வரை பாலை மட்டும் குடிக்க  தயார்ப்படுத்தினால் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலையின்றி இருக்கலாம்.

பழங்கள்

கிவி

கிவிப்  பழம் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் ஒன்று. இதை அப்படியே சாப்பிடக் கொடுக்காமல் ஜுஸ் ஆகக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி பருகுவார்கள்.

அத்திப் பழம்

ஜூஸ் ஆகவோ, அப்படியே சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் இதன் சுவை பிடிக்கும். உலர் திராட்சை போலவே உலர் அத்திப் பழங்களும் கிடைக்கின்றன. அவற்றையும் மற்ற உணவுகளுக்கிடையே சேர்த்துக் குழந்தைகளைச் சாப்பிட வைக்கலாம்.

நாவல் பழம்

நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று நாவல்பழம். இதன் சுவை குழந்தைகளால் விரும்பப்படா விட்டாலும், அதன் நிறம் சாப்பிடும்போது ஃபெண்டசி உணர்வைத் தரும். இதைச் சாப்பிடும்போது நாக்கும் அந்த நிறத்துக்கே மாறுவதால், மகிழ்ச்சியுடனே குழந்தைகள் சாப்பிடுவார்கள்.

பலாப் பழம்

பருவ காலகட்டத்தில் மட்டுமே கிடைக்கும் பலாப் பழத்திலும் புரதம் அதிகம் இருக்கிறது. குழந்தைகளுக்குப் பலாப் பழத்தைக் கொடுக்கும்போது அளவாகக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. அதில் சாப்பிடக்கூடிய பழப் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளைக் கவனமாக நீக்கிவிட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

கொய்யாப் பழம்

எளிமையான பழம் என்றால் அது கொய்யாதான். இதில் முழு இனிப்பு சுவை இருக்காது. அதன் விதைகள் துவர்ப்பது போல இருக்கும். இதனால் குழந்தைகள் விரும்பி உண்ணாமல் இருக்கலாம். அப்போது, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றுடன் தேன் / உப்பு என்று எதையாவது சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்

பருப்பு வகைகள்

நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு வகையான பருப்புகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். தினசரி உணவுடன் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றைச் சேர்க்க வேண்டும் . இட்லி, தோசை, சாம்பார் ஆகிய உணவுகளில், கூடுதல் பருப்பு சேர்த்து குழந்தைகளுக்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கலாம். 

முந்திரி

முந்திரிப் பருப்பை அப்படியே சாப்பிடவோ வேறு எதிலாவது சேர்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அதிக புரதம் இதில் இருக்கிறது.

பாதாம்

பாதாம் பருப்பிலும் புரதத்தின் அளவு அதிகம்தான். முந்திரிப் பருப்பைப் போலவே இதையும் சாப்பிடக் கொடுக்கலாம்.

வேர்க் கடலை

வேர்க் கடலை குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்று. இது  எளிதாகக் கிடைக்கக் கூடியதும், விலையும் மலிவானதும் ஆகும். வேக வைத்தோ அல்லது வறுத்தோ கொடுக்கலாம். அளவுக்கு அதிகமாக இதனைக் குழந்தைகள் சாப்பிட்டால், செரிமான பிரச்சனை வரும் வாய்ப்பும் இருக்கிறது. வேர்க் கடலையைக் குழந்தைகள் சாப்பிடும்போது, அவற்றை மென்று சாப்பிடுகின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.

கீரை வகைகள்

கீரை வகைகளில் பெரும்பாலும் உயிர்ச்சத்து மற்றும் தாது சத்துக்களே இருக்கின்றன. ஆனால், பசலை கீரை, கடுகு கீரை போன்றவற்றில் புரதம் அதிகமுள்ளது. இவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது நன்கு வேக வைத்துச் சமைத்துக் கொடுக்க வேண்டும். பச்சை இலைகளாக இருப்பின் ஜீரண கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது.

காளி ஃப்ளவர்

100 கிராம் காளி ஃபிளவரில்,2 கிராம் அளவுக்குப் புரதம் இருக்கிறது. அது தவிர தாதுகளும் உள்ளன. இதனைக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். 

தேன்

தேனில் இருக்கும் புரதத்தின் அளவு மிகக் குறைவு. 100 கிராம் தேனில் 0.3 கிராம் அளவுக்கே புரதம் அதில் இருக்கிறது. இதனால், வெறும் புரத தேவைக்காகத் தேனைச் சாப்பிடக் கொடுக்க முடியாது. இதன் சுவை குழந்தைகளை வெகுவாக ஈர்க்கும் என்பதால், மற்ற உணவுகளுடன் சேர்த்துக் கொடுக்கலாம். உதாரணமாகக் கொய்யாப் பழத்தைக் குழந்தைகள் சாப்பிட மறுத்தால், அதைத் தேனில் நனைத்துக் கொடுக்கலாம்.

அசைவம்

அசைவ உணவுகளில், குறிப்பாகக் கோழி, முட்டை, மீன் போன்றவற்றில் புரதச் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. மூன்று வயது வரை குழந்தையின் செரிமான உறுப்புகளில் போதுமான வளர்ச்சி இருக்காது. அதனால், அந்தக் காலகட்டத்தில் எளிதில் செரிமானமாகும் வகையில் சமைக்கப்பட்ட அசைவ உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

கோழி

கோழியைக் குழம்பாகவோ அல்லது பொறித்தோ கொடுக்கலாம். ஆனால், குழந்தை அதை மென்று விழுங்குகிறதா என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். சில குழந்தைகள் மெல்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டு அப்படியே விழுங்கி வயிற்று உபாதைகளால் அவதிப்படுவதைப் பார்த்திருப்போம். இந்தச் சிரமத்தைத் தடுக்க, குழந்தைகள் எளிதாகச் சப்பிடக் கூடிய பகுதிகளைக் கொடுக்கலாம். எலும்புகளைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது அவ்வளவு நல்லதல்ல. மூன்று வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம்.

முட்டை

முட்டையைப் பொருத்தவரை வேக வைத்த முட்டைதான் குழந்தைகளுக்குச் சிறந்தது. அவர்களால், சாப்பிடக்கூடிய அளவிற்கு நன்கு வேக வைத்த முட்டையைத் துண்டாக்கிக் கொடுக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு மஞ்சள் கருப் பிடிக்காது. சில குழந்தைகளுக்கு வெள்ளைக் கரு பிடிக்காது. இதனால் அவர்கள் முட்டையை ஒதுக்கிவிட வாய்ப்புள்ளது. 

அவர்களைச் சாப்பிட வைக்க முட்டையுடன் சர்க்கரை கலந்தோ தேன் கலந்தோ கொடுக்கலாம். அடிக்கடி முட்டை கொடுப்பது சிறந்தது. முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு முட்டையாவது கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

மீன்

மிகுந்த சத்து மிக்க உணவு என்றால் மீன்தான். அது எந்த வகை மீனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கு மீனைச் சாப்பிடக்கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அதில் உள்ள முள் தொண்டையிலோ நாக்கிலோ குத்திவிட்டால் மீன் என்றாலே ஒவ்வாமை என்னும் அளவுக்குக் குழந்தைகள் ஒதுக்க வாய்ப்புள்ளது. எனவே, நன்கு வேகவைக்கப்பட்ட மீனைக் குழந்தைகளுக்கு முள் நீக்கி கொடுப்பது அவர்களின் புரத தேவைக்குப் பெருமளவு உதவி புரியும்.

அசைவம் சாப்பிடாதவர்கள் சைவ உணவுகளிலிருந்தே போதுமான புரதங்களை எடுத்துக்கொள்ளலாம்.

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸில் அதிக அளவு புரதம் இருக்கிறது. பீன்ஸ் விதைகளை வேக வைத்தோ அல்லது கடைகளில் ‘மீல் மேக்கர்’ என விற்பனை செய்யப்படுவதை உணவுடன் https://tamil.babydestination.com/6-months-babies-food-chart-in-tamil சேர்த்துக் கொடுத்தோ குழந்தைகளின் உடலில் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யலாம். 

தயிர் மற்றும் நெய்

தினசரி பால் குடிக்கச் செய்வது மட்டுமின்றி தயிர் மற்றும் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் உடலுக்குத் தேவையான புரதத்தைப் பெற முடியும். தயிர் அதிக குளிர்ச்சி என்பதால், தவிர்க்க நினைப்பவர்கள் அதற்குப் பதிலாக நெய்யை உணவில் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு எண்ணெய்க்குப் பதிலாக, நெய்யைப் பயன்படுத்திச் சமையல் செய்வது, சாப்பாட்டுடன் நெய் சேர்த்துக் கொடுப்பது இப்படியாக வெவ்வேறு வழிகளைப் பின்பற்றி குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தைக் கொடுக்கலாம்.

பாலாடைக் கட்டி (சீஸ்)

கடைகளில் பதப்படுத்தப்பட்ட பாலாடைக் கட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை சேண்ட்விச் அல்லது ஸ்பிரிங் ரோல் போன்ற அதிகம் விரும்பத்தக்க உணவு வகையுடன் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். உதாரணமாக, முட்டை பொரியலுடன் இதைச் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம். அதில் உள்ள புரதம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உபயோகமாக இருக்கும். 

கோதுமை பிரட்

சாதாரண பிரட்டை விட, கோதுமை பிரட் தான் குழந்தைகளுக்குச் சிறந்த உணவாகும். சரியான உணவைக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும்போது, கோதுமை பிரட் கொடுக்கலாம். வெறும் பிரட்டையோ அல்லது ரோஸ்ட் செய்தோ கொடுக்கலாம். இரண்டு துண்டு கோதுமை பிரட்டில் 7 கிராம் புரதம் இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட உணவு வகைகளை சில குழந்தைகள் விரும்பாமல் இருக்கலாம். அவர்களுக்குத் தயிரின் சுவையோ அல்லது அசைவ சுவையோ ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதுபோன்ற நேரங்களில் புதிது புதிதாக உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும். உதாரணமாகத் தயிர் பிடிக்காத குழந்தைகளுக்குத் தயிருடன் சர்க்கரை மற்றும் பிற பழங்களைச் சேர்த்துக் கொடுப்பது, முந்திரி பிடிக்காத குழந்தைகளுக்கு முந்திரி அல்வா செய்து கொடுப்பது இப்படியாகக் குழந்தைகளுக்குப் புரதத்தைக் கொண்டு சேர்க்கும் வழிகளை மாற்ற வேண்டும். 

இவை தவிர, புரதங்களுக்காகப் பல பொடிகள் விsற்கப்படுகின்றன. அவற்றை உடற்பயிற்சி செய்பவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அதில் அதிகப்படியான புரதம் இருக்கும். உடற்பயிற்சி மூலம் கலோரிகளை எரிக்கக்கூடிய நபர்களுக்கானது அது. மற்றபடி குழந்தைகளுக்கு அதைக் கொடுக்கக்கூடாது. மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே இதுபோன்ற பொடிகளின் பக்கம் கவனம் செலுத்தவேண்டும். உணவுப் பொருட்களில் தேவையான அளவுக்கு மட்டுமே புரதம் இருக்கும். பொடிகளில் அதிகம் இருக்கும் என்பதால், தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அதிக புரதம் ஆபத்தானது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null