குழந்தைகளின் பிறந்தநாளன்று பரிசு வழங்க 12  அழகான யோசனைகள்!

குழந்தைகளின் பிறந்தநாளன்று பரிசு வழங்க 12 அழகான யோசனைகள்!

குழந்தைகள் பொதுவாகவே தம் பிறந்தநாள் எப்போது வரும் என்று நாட்களை எண்ணிக் கொண்டு,ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். எத்தனை பண்டிகைகள் மற்றும் விழாக்கள் வந்தாலும், ஒரு குழந்தைக்கு தன்னுடைய பிறந்தநாளைப் போல மகிழ்ச்சி தரக் கூடிய நாள் வேறு ஒன்றும் இல்லை. அதிலும் அவர்கள் பிறந்தநாள் சில நாட்களே உள்ளன என்று அவர்களுக்குத் தெரிந்து விட்டால் போதும், அவர்களைக் கையில் பிடிக்கவே முடியாது. அவர்களது ஆனந்தத்திற்கு எல்லையே இல்லாமல் போகும். இந்த எல்லை இல்லாத ஆனந்தத்திற்கு முக்கிய காரணம்,அவர்களது பெற்றோர்களிடம் இருந்து அவர்களுக்குக் கிடைக்கப் போகும் பரிசுப் பொருட்கள் கிடைக்கப் போகிறது என்ற விசயமே தான்!ஆக அவனைப் பிறந்தநாள் அன்று ஆனந்தப்படுத்த சரியான பரிசைத் தேர்ந்தெடுங்கள்.

 

ஞாபகத்தில் நிலைக்கும் பிறந்தநாள்

ஒவ்வொரு பிறந்தநாளையும் குழந்தைக்கு ஒரு அற்புத நினைவாக மாற்றும் சக்தி குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசுப் பொருட்களிலும் நிரம்பி உள்ளன.ஆக நீங்கள் அதனைச் சரியாகத் தேர்வு செய்வது மிக முக்கியம். குறிப்பாக உங்கள் குழந்தைக்கு என்ன பிடிக்கும், மேலும் பல நாட்களாக குழந்தை உங்களிடம் எதை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை எல்லாம் சரியாகப் புரிந்து கொண்டும்,நினைவு கூர்ந்தும் அதனையே அவனுக்கு ஆச்சரியமூட்டும் விதத்தில் பரிசாக அளிப்பது மிகவும் சிறப்பு.
பல பிறந்தநாள் பரிசுகள் இருந்தாலும், உங்களுக்கு உதவ இங்கே நாங்கள் சில சுவாரசியமான பிறந்தநாள் பரிசு யோசனைகளை (Birthday Gift Ideas) தர உள்ளோம். அது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

 

உங்கள் குழந்தைகளுக்கு 12 பிறந்தநாள் பரிசுப் பொருட்களான யோசனைகள் (12 birthday gifts ideas for your children)

1.பைனாகுலர் (binocular)

இது நிச்சயம் உங்கள் குழந்தைக்குப் பிடிக்கும்.உங்கள் குழந்தை எதையும் ஆராய்ந்து பார்த்து புது விசயங்களைக் கண்டு பிடிக்கும் ஆர்வம் கொண்டவன் என்றால், இந்த பரிசுப் பொருள் உங்கள் குழந்தையை உற்சாகப் படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.தொலைவில் உள்ள ஒரு பொருளை அருகில் பார்ப்பது ஒரு குழந்தைக்கு எத்தனை குதூகலமான விசயமாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்!

 

2. பொம்மைகள் செய்யும் களிமண் (clay to make toys)

உங்கள் குழந்தைக்குக் கைவினை பொருட்கள் செய்வதில் அதிகம் ஆர்வும் இருக்கிறது என்றால், இந்தப் பல நிறங்கள் கொண்ட களிமண் ஒரு அற்புத பரிசுப் பொருள் தேர்வாக இருக்கும். இது உங்கள் குழந்தையின் கைத்திறனை வளர்ப்பதோடு குழந்தையின் கற்பனை வளத்தையும் அதிகரிக்கும்.

 

3. ஆபரணங்கள் செய்யும் பொருட்கள் (Oranament making kit)

உங்களுக்குப் பெண் குழந்தையா?அப்படி என்றால் இந்த பரிசுப்பொருள் நிச்சயம் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அவளே தனக்கு விருப்பமான வடிவங்களில் வளையல்கள், காதணிகள் என்று பல நகைகளை வடிவமைத்துக் கொள்வாள். இது அவளது கற்பனை வளத்தை அதிகரிப்பதோடு அவள் கைத்திறனையும் வளர்க்க உதவும்.

 

4. உண்டியல் (Money bank)

இது சுவாரசியமான பரிசோ இல்லையோ? ஆனால் நிச்சயம் உங்கள் குழந்தைக்குச் சேமிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பொருளாக இது இருக்கும். உங்கள் குழந்தைக்குச் சிறு வயதிலிருந்தே சேமிக்கும் ஆர்வத்தை வளர்ப்பது முக்கியம். இது அவன்/அவள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து,தேவையானவற்றுக்கு மட்டுமே செலவு செய்யும் குணத்தை வளர்க்க உதவும்.இது ஒரு அர்த்தமுள்ள பரிசுப் பொருள் என்பதில் சந்தேகம் இல்லை.

 

5. தோட்டக் கலைப் பொருட்கள் (Gardening kit)

உங்கள் குழந்தைக்குச் செடி வளர்ப்பது மற்றும் தோட்டம் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம் உண்டா?அல்லது நீங்கள் அந்த ஆர்வத்தைத் தூண்ட விரும்புகின்றீர்களா?அப்படியானால் விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்த ஆர்வத்தை வளர்க்கும் வகையில் தோட்டக் கலைப் பொருட்களைப் பரிசளிக்கலாம். இதனால் உங்கள் குழந்தையின் மனநிலை மேம்படும்.கூடுதலாக உடல் உழைப்பை மேற்கொள்ளச் சாத்தியம் உள்ளதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

 

6. வண்ணம் (colours)

உங்கள் குழந்தைக்குப் படம் வரைவது மற்றும் வண்ணம் தீட்டுவது போன்ற கலைத் துறையில் ஆர்வம் இருந்தால் அதனை உற்சாகப் படுத்தும் வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
வண்ணங்களின் மீது அந்த வயதில் குழந்தைகளுக்குத் தனி ஈடுபாடு இருக்கும்.இத்தகைய பரிசுப் பொருட்கள் குழந்தையின் ஆர்வத்தை அதிகரிப்பதோடு,கற்பனை வளத்தையும் அதிகரிக்கும்.

 

7. இசைக் கருவிகள் (musical instrument)

உங்கள் குழந்தைக்கு இசையில் அதிகம் ஆர்வம் இருந்தால், குழந்தைக்குப் பிடித்த இசைக் கருவிகளை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் குழந்தை இசையை வாசிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவதோடு குழந்தையின் மூளை வளர்ச்சியும் அதிகரிக்கும்.இசை மனநிலை சமன்பாட்டிற்கு ஒரு அற்புத வழிகாட்டி என்பது அனைவரும் அறிந்ததே.இசைக் கருவிகளை வாசிக்கும் குழந்தைகளுக்கு அதிகம் கோபம் வருவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.ஆக மொத்தத்தில் குழந்தையின் மனமும் சிந்தனையும் ஒருங்கிணையப்பட்டு அவன் சிறப்பாக வளர,நீங்கள் தாரளமாக இந்த பரிசுப் பொருளைத் தேர்வு செய்யலாம்.

 

8. சுவாரசியமான விளையாட்டுப் பொருட்கள் (interesting games)

உங்கள் குழந்தைக்குச் சில சுவாரசியமான விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அத்தகைய பொருட்கள் அவனது சிந்தனை, பேச்சு, ஞாபக சக்தி மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும்.

 

9. மிதி வண்டி (bicycle)

மிதிவண்டி பிடிக்காத குழந்தைகளே உலகில் இருக்க முடியாது. பிற்காலத்தில் உங்கள் குழந்தை என்ன வாகனத்தை இயக்கினாலும் அதற்கு அடித்தளம் இந்த மிதிவண்டியே! இன்று பல சுவாரசியமான மிதி வண்டிகள் கிடைக்கின்றன. உங்கள் குழந்தையை உற்சாகப் படுத்தும் வகையில் நீங்கள் அவனுக்கு மிதிவண்டியை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் தினமும் அவன் சுறுசுறுப்பான முறையில் தரமாக நேரத்தைச் செலவிடுவது மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

 

10.கைத்தொழில் பொருட்கள் (repair tools)

உங்கள் குழந்தைக்கு நீங்கள் சிறு சிறு வீட்டு பராமரிப்பு பொருட்கள் வாங்கித் தரலாம். அதனைக் கொண்டு அவன் தனது மிதிவண்டி அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது பொருட்கள் பழுதடைந்தால் அவனே அதனைச் சரி செய்து கொள்ளத் தெரிந்து கொள்ளும் வகையில் அது உதவியாக இருக்கும். இது அவனது ஆர்வத்தை வளர்ப்பதோடு அவனது மூளை வளர்ச்சியையும் அதிகரிக்கும்.அவனுக்கு ஒரு இயந்திரம் எவ்வாறு பல பொருட்களைக் கொண்டு இணைத்து உருவாக்கப்படுகின்றது என்ற அறிவுத் திறன் ஏற்படும்.இத்திறன் எதிர்காலத்தில் குழந்தைகளுக்குப் பல விசயங்களில் கைகாெடுக்கும்.

 

11.நாய்க்குட்டி(pet animal)

இது ஒரு அட்டகாசமான பரிசுப் பொருள் யோசனை! குழந்தைகளுக்கு இயல்பாகவே பிராணிகள் மீது கொள்ளைப் பிரியம் இருக்கும்.அதிலும் நாய்க்குட்டி என்றால் கேட்கவே வேண்டாம்.ஒரு அழகிய நாய்க்குட்டியை அவர்களின் பிறந்தநாளன்று அவர்களின் கைகளில் கொடுத்து, அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதைக் கண்டு ரசித்துத் தான் பாருங்களேன்.

 

12.புத்தகங்கள்(books with moral values)

நல்ல நீதிக்கதைகளைக் கொண்ட புத்தகங்களைப் பரிசுப் பொருளாகக் கொடுக்கலாம். அதனால் அவர்கள் நீதிநெறி நுணுக்கங்களை கற்றுக் கொள்ளக் கூடும். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அவர்களின் வாசிப்புத் திறன் மேம்படும். இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பு குறைந்து வருகின்றது. அதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை, வருங்காலத்தில் வாசிப்புத்திறன் அற்றவர்களாகி விட அனுமதிக்கக் கூடாது. ஆகப் பெற்றோர்கள் பிறந்தநாளன்று கதை மற்றும் அறிவு சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம்.

 

என்ன பெற்றோர்களே! இங்கே உங்களுக்காகக் கொடுக்கப்பட்ட 12 சுவாரசியமான பரிசுப் பொருட்களான யோசனைகளும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்குமே!இனி என்ன யோசனைகளை உடனே செயல்படுத்துங்கள்.பிறந்த நாளன்று உங்கள் செல்லங்களை மகிழ்ச்சியில் நனையுங்கள்.

null

null