அசத்தலான 6 குழம்பு வகைகள் ! ஆச்சரியமூட்டும் ரெசிபிகள்.....!!!

அசத்தலான 6 குழம்பு வகைகள் ! ஆச்சரியமூட்டும் ரெசிபிகள்.....!!!

தமிழ் அம்மாக்கள் குழம்பு வைப்பதில் வல்லவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆனால் எத்தனை குழம்பு வகைகள் செய்கிறார்கள் தெரியுமா? 100க்கும் மேற்பட்ட சுவையான குழம்பு வகைகளை வைத்து அசத்துகிறார்கள். 100 என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையே! அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான குழம்புகள் பெரும்பாலும் அனைவராலும் சுவைக்கப்படுகிறது.

 

ஒரே மாதிரியான குழம்பை தொடர்ந்து சாப்பிட்டு சலித்து போயிருக்கும். ஆக நாங்கள் இங்கே 6 குழம்பு வகைகளை சுவையாகவும், எளிமையாகவும் தயாரிக்கும் வழிகளைப் பகிர்ந்து உள்ளோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற சுவையான 6 குழம்பு வகைகள் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாமா?

 

சில அசத்தல் குழம்பு வகை ரெசிபிகள் இங்கே:-

 

1. சுண்டைக்காய் வற்றல் குழம்பு வகை

 

தேவையான பொருட்கள்

 

 • சுண்டைக்காய் -100 கிராம்
 • சின்ன வெங்காயம்- 30
 • பூண்டு 20 பற்கள்
 • புளி- எலுமிச்சம்பழ அளவு
 • தாளிக்கத் தேவையானவை
 • நல்லெண்ணெய் – தேவையான அளவு
 • கடுகு -1ஸ்பூன்
 • கறிவேப்பிலை -சிறிதளவு

மசாலா தயாரிக்க தேவையானவை

 • தனியா தூள் -1 ஸ்பூன்
 • மிளகாய்த் தூள் -1 ஸ்பூன்
 • சீரகத் தூள் -1/2 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
 • தேங்காய் -1 கப் துருவியது
 • உப்பு -தேவையான அளவு

 

சுண்டைக்காய் வற்றல் குழம்பு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

 

 • புளியை சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
 • சுண்டைக்காய்களின் காம்புகளை நீக்கிக் கொள்ளவும். பின் நடுவில் லேசாகக் கீறிக் கொள்ளவும்.
 • சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும்.
 • தனியாத்தூள் ,மிளகாய்த்தூள் ,சீரகத்தூள் ,மஞ்சள்தூள் மற்றும் தேங்காய் ஆகிய பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தற்போது மசாலா தயார் ஆகிவிட்டது.
 • பின் கடாயில் நல்லெண்ணையை ஊற்றி ,கடுகு ,கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
 • கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், சுண்டைக்காய்கள் மற்றும் பூண்டுகளைச் சேர்த்துக் கொள்ளவும். இவற்றை நன்கு வதக்கவும்.
 • வெங்காயம் பொன் நிறத்திற்கு மாறியவுடன் ,புளிச் சாறு அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் அளவிற்குத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
 • எண்ணெய் பிரிந்து மசால்வடை முழுவதுமாக நீங்கும் வரை கொதிக்க விடவும். குழம்பு சற்று கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்.
 • தற்போது சுவையான சுண்டைக்காய் வற்றல் குழம்பு தயார் ஆகிவிட்டது.

இதைச் சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்குச் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் ருசியான இந்த குழம்பு வகை அனைவருக்குமே பிடித்து விடும். இந்த குழம்பு வகைக்கு கசப்பில்லாத கறிசுண்டைக்காய்களைப் பயன்படுத்துவது உகந்தது.

 

2. பாசிப்பருப்பு குழம்பு

 

தேவையான பொருட்கள்

 

 • பாசிப் பருப்பு- 1 கப்
 • சின்ன வெங்காயம்- 6
 • தக்காளி -2
 • பூண்டு -7 பல்
 • மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
 • சீரகத்தூள் -1/2ஸ்பூன்
 • மிளகாய் -3
 • தேங்காய்த் துருவல்- ஒரு சிறிய கப்
 • கடுகு -1ஸ்பூன்
 • சீரகம் -1ஸ்பூன்
 • எண்ணெய் -தேவையான அளவு
 • கருவேப்பிலை -சிறிதளவு
 • உப்பு -தேவையான அளவு

 

பாசிப்பருப்பு குழம்பு செய்வது எப்படி? பார்க்கலாம்.

 • குக்கரில் பாசிப்பருப்பு ,பூண்டு ,தக்காளி மற்றும் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்க்கவும்.குக்கரை மூடி 3-4 விசில்கள் வர விடவும்.
 • கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகிய பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.
 • கடுகு பொரிந்தவுடன் ,நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 • வெங்காயம் பொன்னிறத்துக்கு மாறியவுடன் வேகவைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 • அத்தோடு மஞ்சள் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 • குழம்பு நன்றாக வெந்தவுடன், தேங்காய்த் துருவல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
 • தற்போது சுவையான பாசிப்பருப்பு குழம்பு தயாராகி விட்டது.

இந்த குழம்பு வகை மிகவும் ஆரோக்கியமானது.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கான சத்தான உணவுகள் செய்ய..

 

3. வெண்டைக்காய் மோர் குழம்பு

 

தேவையான பொருட்கள்

 • மோர் -2 கப்
 • வெண்டைக்காய் -6 (நறுக்கியது)
 • மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
 • உப்பு -தேவையான அளவு

 

வறுத்து அரைக்கத் தேவையானவை

 • சீரகம் -1 டீஸ்பூன்
 • கடலைப்பருப்பு -1ஸ்பூன்
 • வர மிளகாய் -2
 • தேங்காய் -சிறிய கப்
 • தாளிக்கத் தேவையானவை
 • கடலெண்ணய் -தேவையான அளவு
 • கடுகு -1 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை -சிறிதளவு
 • எண்ணெய் -தேவையான அளவு
 • பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

 

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி? பார்க்கலாம்:

 • வறுத்து அரைக்கத் தேவையானவை பகுதியில் உள்ள பொருட்களைக் கடாயில் போட்டு வறுக்கவும்.
 • மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வறுக்கவும்.
 • வறுபட்டபின் சூடு ஆற விடவும்.
 • பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • தற்போது கடாயை ஏற்றி ,சூடானவுடன் எண்ணெய் ஊற்றவும். இதில் வெண்டைக்காய்களைப் போடவும்.
 • வெண்டைக்காயின் பிசுபிசுப்பு நீங்கும் வரை வதக்கி ,பின் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • பின் கடாயில் எண்ணெய் ஊற்றி ,கடுகு ,கருவேப்பிலை ,பெருங்காயத் தூள் போட்டுத் தாளிக்கவும். கடுகு பொரிந்தவுடன் மோரை ஊற்றிக் கொள்ளவும்.
 • இத்தோடு அரைத்து வைத்துள்ள விழுது,மஞ்சள் தூள் ,தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கிளறவும்.
 • வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய்களைச் சேர்த்துக் கொள்ளவும். குழம்பு கொதித்தவுடன் இறக்கவும்.
 • சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார் ஆகிவிட்டது.

இந்த குழம்பு வகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ருசித்துச் சாப்பிட ஏற்றது.

 

4. தக்காளி குழம்பு

 • தேவையான பொருட்கள்
 • தக்காளி -5
 • பூண்டு -4 பல்
 • பச்சை மிளகாய் -2
 • சீரகத்தூள் -1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் -1/2டீஸ்பூன்
 • பெரிய வெங்காயம் -2 (நறுக்கியது)
 • கொத்தமல்லி தழை -சிறிதளவு
 • உப்பு -தேவையான அளவு
 • தாளிக்கத் தேவையானவை
 • எண்ணெய் -தேவையான அளவு
 • கடுகு -1 ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்
 • கருவேப்பிலை -தேவையான அளவு

 

தக்காளி குழம்பு செய்வது எப்படி? பார்க்கலாம்.

 • தக்காளிப் பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய்யை ஊற்றிக் கடுகு ,உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
 • கடுகு பொரிந்ததும் வெங்காயம்,பச்சை மிளகாய் ,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
 • வெங்காயம் பொன்னிறத்தில் போல் மாறிய உடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியாத்தூள் ஆகிய பொருட்களைச் சேர்க்கவும்.
 • இத்தோடு அரைத்து வைத்துள்ள தக்காளியையும் சேர்த்துக் கொள்ளவும்.
 • பின் தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 • எண்ணெய் பிரிந்தவுடன், அடுப்பை அணைக்கவும்.
 • கொத்துமல்லி தழைகளைத் தூவிவிடவும்.
 • மணக்க மணக்கச் சுவையான தக்காளி குழம்பு தயார்.

இந்த குழம்பு வகை செய்வது மிகவும் எளிமையானது. இந்த குழம்பு அவசர நேரத்தில் கைகொடுக்கும். இது சாதம் , இட்லி , தோசை, சப்பாத்தி போன்ற அனைத்துக்குமே ஏற்ற சைட் டிஷ் .

 

5. பருப்பு உருண்டை குழம்பு

 

தேவையான பொருட்கள்

 • சின்ன வெங்காயம் -10
 • தக்காளி -2
 • தேங்காய் துருவல் -1/4 கப்
 • மிளகாய்த் தூள் -1 ஸ்பூன்
 • மல்லித் தூள் -1 ஸ்பூன்
 • பூண்டு -5 பல்
 • புளி -நெல்லிக்காய் அளவு
 • உப்பு -தேவையான அளவு

 

தாளிக்க

 • எண்ணெய் -தேவையான அளவு
 • கடுகு -1 டீஸ்பூன்
 • வெந்தயம் -1/4 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை -சிறிதளவு
 • சோம்பு -1/4 டீஸ்பூன்

 

உருண்டை தயாரிக்கத் தேவையானவை

 

 • கடலைப்பருப்பு -1 கப்
 • வர மிளகாய் -3
 • கறிவேப்பிலை -ஒரு கொத்து
 • பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
 • பெரிய வெங்காயம் -3
 • சோம்பு -1 டீஸ்பூன்
 • உப்பு -தேவையான அளவு

 

செய்முறை

 • சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயங்களைப் பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும்.
 • கடலைப்பருப்பைத் தண்ணீரில் கழிந்து ,சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
 • பிறகு தண்ணீரை வடித்துக் கொண்டு, கடலைப்பருப்புடன் வர மிளகாய், கறிவேப்பிலை ,பெருங்காயம் ,சோம்பு மற்றும் உப்பு ஆகிய பொருட்களைச் சேர்த்துக் கொள்ளவும்.
 • இவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் விழுதாக அரைத்தால் உருண்டை வராது.
 • ஏற்கனவே அறிந்து வைத்துள்ள பெரிய வெங்காயத்தை இந்த மாவுடன் கலந்து உருண்டை பிடிக்கவும்.
 • வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும். அதில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 • பின் தக்காளி சேர்த்து ,பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதை ஆற விடவும்.
 • பின் இத்தோடு சோம்பு மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
 • இந்த விழுதில் புளித் தண்ணீரைக் கலந்து கொள்ளவும்.
 • கடாயில் தற்போது நல்லெண்ணெய் ஊற்றவும் ,கடுகு ,வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
 • கடுகு பொரிந்தவுடன் பூண்டு, மீதமுள்ள வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
 • இத்தோடு மிளகாய்த் தூள் ,தனியா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பின் குழம்பைக் கொதிக்கவிடவும்.
 • எண்ணெய் பிரிந்து வந்தவுடன், தீயைச் சற்று குறைக்கவும். பிறகு தயார் செய்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும்.
 • பிறகு தயார் செய்துள்ள மசாலா விழுதைச் சேர்க்கவும். உருண்டைகளை லேசாகத் திருப்பி விடவும்.
 • சில நிமிடங்களில் உருண்டைகள் வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். குழம்பில் கொத்தமல்லித்தழையைத் தூவிக் கொள்ளவும்.
 • சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.

இந்த குழம்பு வகை செட்டிநாடு பக்கம் மிகவும் பிரபலமானது. நாவில் உமிழ் நீரை தூண்டும் ருசியையும், வாசத்தையும் கொண்டது.

 

6. பச்சை பயறு குழம்பு

 

தேவையான பொருட்கள்

 • பச்சை பயிறு -1 கப்
 • சாம்பார் தூள் -1 டேபிள்ஸ்பூன்
 • மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
 • தக்காளி -1
 • சின்ன வெங்காயம் -10
 • பூண்டு -4 பல்
 • புளி -ஒரு எலுமிச்சை அளவு
 • உப்பு -தேவையான அளவு

தாளிக்கத் தேவையானவை

 

 • எண்ணெய் -தேவையான அளவு
 • கடுகு -1 டீஸ்பூன்
 • வெந்தயம் -1 டீஸ்பூன்
 • பெருங்காயத்தூள் -1 சிட்டிகை
 • உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
 • கறிவேப்பிலை -தேவையான அளவு

 

பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

 

 • பச்சைப் பயிரைத் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து ஊறவைக்கவும்.
  ( சுமார் 5 மணி நேரங்கள்)
 • குக்கரை அடுப்பிலேற்றி ,முன்னரே ஊற வைத்திருந்த பச்சை பயிரைச் சேர்க்கவும்.
 • இத்தோடு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஒரு இரண்டு மூன்று விசில்கள் வர விடவும்.
 • புளியைத் தண்ணீரில் முன்னரே ஊற வைத்து,புளித் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு ,வெந்தயம் ,கறிவேப்பிலை ,பெருங்காயத்தூள் ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
 • கடுகு பொரிந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் ,தக்காளி,பூண்டு முதலிய பொருட்களைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
 • பச்சை வாசம் அடங்கியவுடன், புளித்தண்ணீர் ,சாம்பார் தூள் ,மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 • எல்லாவற்றையும் நன்கு கலக்கி வேக விடவும்.
 • பின் அதோடு வேக வைத்துள்ள பச்சை பயிரை மத்தில் கடைந்து பிறகு சேர்க்கவும்.
 • பின் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு ,அடுப்பை அணைக்கவும்.
 • தற்போது ருசியான பச்சை பயிறு குழம்பு தயார்.
 • இதைச் சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த குழம்பு வகை மிகவும் சத்தான உணவும் கூட!

 

என்ன அசத்தலான 6 குழம்பு வகைகள் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா? இனி இந்த குழம்பு வகைகளை தயாரித்து குடும்பத்தோடு சுவைத்து மகிழுங்கள்!

 

இதையும் படிங்க: ஹோம்மேட் ஹெல்த் மிக்ஸ் பவுடர் செய்வது எப்படி?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null