பெண் கருவுறாமைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்

பெண் கருவுறாமைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்

கருவுறாமை என்றால் என்ன? (What is Female Infertility in Tamil?)

ஒரு திருமணமான தம்பதிக்கு குறிப்பிட்ட கால அளவைத் தாண்டியும் குழந்தைப் பேறு ஏற்படாத பட்சத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகிறது.அத்தகைய ஆய்வின் முடிவில் பெண்ணுக்கு குறைபாடு உள்ள சூழலில் அது பெண் கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது.

 

கருவுறாமை என்றால், பெண்களால் இயற்கையாகக் கருவுற முடியாததைக் குறிக்கும்.அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும். இது பொதுவாக 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம். இந்த கருவுறாமை பிரச்சனை ஆண் மற்றும் பெண் என்று இருபாலருக்கும், வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.

 

கருவுறாமை என்னும் பிரச்சனை இன்று பெண்களுக்கு அதிக எண்ணிக்கைகளில் ஏற்படுகிறது. பெண்களுக்குக் கருவுறாமை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எனினும் அவற்றைக் குணப்படுத்தப் பல மருத்துவ சிகிச்சைகளும் இருக்கின்றன.

 

இந்த கருவுறாமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவர் அவருக்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளன என்றால் அது மிகையில்லை.

 

ஏன் பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுகிறது? (Causes of Female Infertility in Tamil?)

சில பெண்கள் கருவுறாமல் போவதற்குப் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவைப் பின்வருமாறு,

 

 • அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கல்.
 • கர்ப்பப்பைக் குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்.
 • கருப்பை வாயில் பிரச்சனை.

 

இந்த முக்கிய காரணங்கள் மட்டுமல்லாமல், பெண்களுக்குக் கருவுறாமை ஏற்பட வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அவை என்ன என்று பார்க்கலாமா?

 

மாதவிடாய் தொந்தரவு (Irregular periods)

மாதவிடாய் ஒழுங்கற்ற காலங்களில் ஏற்படுவது கருவுறாமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.அதாவது மாதவிடாய் முன்கூட்டியே வருவது அல்லது தாமதமாக வருவது.மாதவிடாய் சமயங்களில் இடுப்பு பகுதியில் வலி அளவுக்கு அதிகமாக இருப்பதும் கருவுறாமைப் பிரச்சனையின் அறிகுறியே ஆகும்.நாள் தவறிய மாதவிடாய் பிசிஓடி பிரச்சனைக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. வலியுடன் கூடிய மாதவிடாய்,இண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்க அனேக வாய்ப்புள்ளது.ஆக உடனே மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

 

வயது (Age)

அதிக வயதாகிய பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப் பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது.ஆகக் குழந்தைப் பேறுவைத் தள்ளிப் போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் காலகட்டத்திலே குழந்தை பெற்றுக் கொள்வது பிற்கால மன உளைச்சல்களைத் தவிர்க்கும்.

 

புகைபிடித்தல்/மதுஅருந்துதல் (Smoking/Drinking alcohol)

புகைபிடிப்பதாலும் கருவுறாமைப் பிரச்சனை ஏற்படுகிறது.புகைத்தலால் உடலில் சேரும் நிகோட்டின் மற்றும் மற்ற நச்சுக்கள் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை மட்டுப்படுத்தி விடுகின்றன. அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்களுக்கும் இந்த பிரச்சனை கூடுதலாகவே காணப்படுகிறது.ஆக இத்தகைய பழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது.

 

மனஅழுத்தம் (Stress)

இன்றைய வாழ்க்கையில் பெண்கள் பலரும் வேலைக்குச் செல்கின்றனர். அதிக நேரம் கணினியின் முன்பாக அமர்ந்திருக்கும் சூழல் இருப்பதால் அவர்கள் அதிக மனச் சோர்வும் மன அழுத்தமும் அடைகின்றனர். இதனால் அவர்களின் சுரப்பிகளின் சுரப்பு அளவு சீரற்ற நிலையை அடைகிறது. இதுவும் குழந்தையின்மை பிரச்சனைக்கான வாய்ப்பைக் கூட்டுகிறது. அதனால் பெண்கள் அமைதியான மனநிலையோடு இருக்க வேண்டும்.

 

எடை (Weight)

அதிக உடல் எடை அல்லது மிகக் குறைவான உடல் எடை என்று இரண்டு வகைகளும் கருவுறாமைக்கான காரணிகள் ஆகும். கருவுறாமை ஏற்படுதலுக்கான வாய்ப்பைக் கிட்டத்தட்ட 12 சதவீதம் இந்த எடைப் பிரச்சனை சாத்தியப்படுத்தி விடுகிறது.அதனால் பெண்கள் இயன்ற வரை எடை மேலாண்மையைக் கடைப்பிடிப்பது நல்லது. நொறுக்குத் தீனிகள் மற்றும் எண்ணெய் பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

 

நோய்த்தொற்று (Infection)

பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது.அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சாலச் சிறந்தது.

 

சுரப்பிகள் (Glands)

கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது.சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது,கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்காது. இதுவே கருவுறாமையும் ஏற்படுத்திவிடும்.இந்த பிரச்சனை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

 

கட்டி/புற்றுநோய் (Cyst/cancer)

கருப்பையில் அல்லது அது சம்பந்தப்பட்ட பகுதிகளில் கட்டி அல்லது புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது மற்றுமொரு காரணம்.கட்டிகளை அகற்றுவதன் மூலம் பிரச்சனை நிவர்த்தி அடையலாம்.

 

சத்தான உணவு (Nutritious food) 

பெண்கள் வெளி வேலை மற்றும் கூடுதலாக வீட்டையும் நிர்வகிப்பதால் தங்கள் ஆரோக்கியத்தில் எள்ளளவும் அக்கறை காட்டுவதில்லை.இதனால் சரியான சத்தான உணவுகளை அவர்கள் உட்கொள்ளாவது இல்லை. தினம் கீரை காய்கனிகளை உணவில் சேர்க்க வேண்டும்.

 

தைராய்டு பிரச்சனை (Thyroid problem) 

தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடலிலிருந்தாலும் கருவுறாமை ஏற்படும்.இதை நிவர்த்தி செய்வது கட்டாயம்.

 

கருப்பை தொற்றுநோய் (Disease in uterus)

முன்பே ஏதாவது தொற்றுநோய் கருப்பையில் ஏற்பட்டிருப்பதும் இப்பிரச்சனைக்கான காரணி. இதையும் களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

உடலுறவின் போது வலி (Pain during intercourse)

உடலுறவின் போது வலி ஏற்படுவது இந்த வகை சிக்கலுக்கான மற்றொரு அறிகுறி.

 

வீரியம் நிறைந்த மாத்திரைகள் (Powerful doses)

உடலில் ஏதாவது தீர்க்க முடியாத நோய் இருப்பது. மேலும் அதற்காக வீரியம் அதிகம் உள்ள மருந்துகளை எடுத்துக் கொள்வது.

 

மரபு வழி பிரச்சனை (Heridity problem)

பிறப்பிலேயே கருவுறாமைக்கான பிரச்சனைகள் இருப்பது.பெற்றோர்கள் வழி மரபில் கருவுறுவதில் பிரச்சனை இருக்கும் போது பிள்ளைக்கு அந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

 

கருப்பை வாய் சளி (Cervical mucus)

கருப்பை வாய் சளி தடிமனாக இருப்பது.அதனால் விந்தணு பெண்ணின் கர்ப்பபையைச் சென்று அடையத் தாமதமாகிவிடுகிறது.இதனால் விந்தணு இறந்து விடுகிறது.கருப்பை வாய் சளியின் தரத்தை அதன் நிறத்தைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். முட்டையின் வெள்ளை திரவத்தைப் போல அது இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது.

 

நீரிழிவு நோய் (Diabetes mellitus)

இந்த நோய்ப் பாதிப்புக்கு ஆளான பெண்கள் சிலருக்கும் கருவுறாமைப் பிரச்சனை ஏற்பட்டுவிடுகிறது.

 

எந்தவகைப் பரிசோதனைகள் இந்த கருவுறாமையைக் கண்டறியச் செய்யப் படுகின்றன? (Tests for Women Infertility in Tamil)

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன.அவற்றில் சில இங்கே,

 

 • இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
 • மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப் படுகிறது.
 • லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.
 • எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.
 • ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.
 • அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.

 

இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனையைக் கண்டறிந்து உங்கள் உடலில் இருக்கும் கருவுறாமைக்கான சிக்கல்களைச் சரி செய்ய முடிகிறது.

 

பெண் கருவுறாமைக்கான சிகிச்சை (Treatment for Women Infertility)

இன்று மருத்துவத் துறையில் பல சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறும், வயது மற்றும் பல காரணிகளைக் கருத்தில் கொண்டும் தேர்ந்தெடுக்கப் படுகிறது.இங்கே சில பெண்களுக்கான கருவுறாமைக்கான சிகிச்சை முறைகள், நீங்கள் தெரிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ளன.

 

 • உடலில் உள்ள சுரப்பிகள் சரியான விகிதத்தில் சுரக்க சிகிச்சைக் கொடுக்கப்படுகிறது. இதனால் முதலில் சீரற்ற மாதவிடாய் சீர் படுத்தப் படுகிறது.
 • அண்டவிடுப்பின் செயல்பாட்டைச் சீர்படுத்துவது.
 • தேவையான சத்துக்களை உடலில் சேர்த்து கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்துவது.
 • ஏதாவது நோய்த்தொற்று இருந்தால் அதற்கான அண்டிபயோடிக்ஸ் கொடுத்து குணப்படுத்துவது.
 • தேவைப்பட்டால் சிறு அறுவைசிகிச்சை செய்து கருப்பை குழாய், கருப்பை மற்றும் அது தொடர்பான பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்வது.

 

ஐவிஎப் மற்றும் ஐயுஐ

இந்த சிகிச்சை முறைகள் மட்டுமின்றி ஐவிஎப் மற்றும் ஐயுஐ போன்ற மருத்துவச் சிகிச்சை முறையும் நடைமுறையில் உள்ளது. எனினும் இவை சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். இவற்றின் பலன்களும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஏற்றவாறே இருக்கும்.

 

நிச்சயம் குழந்தை வரம் கிட்டும் (Certainly positive result will come)

இந்த வகை பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பெண்கள் மன ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும்.அவர்களால் சரி செய்யக் கூடிய பிரச்சனைகளை எல்லாம் நம்பிக்கையான மனதோடு களைய முன்வரவேண்டும்.

 

அடுத்து மருத்துவர் நல்கும் ஆலோசனைகளை எள் முனையளவு பிசகாமல் பின்பற்ற வேண்டும். உறவுகளும்,சமூகமும் தங்கள் கண்ணோட்டங்களை மாற்றிக் கொண்டு ஏற்கனவே மருகி கொண்டிருக்கும் பெண்களின் மனம் வாடும் வகையில் பேசாது எல்லா வகையிலும் நம்பிக்கையூட்ட வேண்டும்.

 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாக மருத்துவத் துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால் கருவுறாமை குறித்த பிரச்சனைகள் எளிதாகத் தீர்க்கப்பட்டு நல்ல தீர்வுகள் பெற முடிகிறது.இது பலரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தை பெரும் வாய்ப்பை பெற்று பெண்களும் அவர்களது குடும்பத்தினர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பொறுமையோடும் தளராத மனதோடும் இருக்கும் பெண்கள் கரங்களில் நிச்சயம் விரைவில் குழந்தை தவழத் தொடங்கும் என்பது உண்மை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null