உங்கள் குழந்தை பள்ளியில் தூங்கிவிடுகிறாரா?

உங்கள் குழந்தை பள்ளியில் தூங்கிவிடுகிறாரா?

படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும் என்பார்கள்! படிப்பு தான் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.ஆக நாம் நம் குழந்தைகளுக்குத் தரக் கூடிய மிகப் பெரிய சொத்து கல்விதான். அந்த வகையில் தம் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கனவாகவே உள்ளது. ஆனால் இன்று பள்ளிகளில் நிறைய குழந்தைகளால் சரியாகப் பாடத்தைக் கவனிக்க முடிவது இல்லை. மிகவும் அசதியான முகத்தோடும் மந்த நிலையோடும் அவர்கள் காணப்படுகின்றனர்.

ஒருகட்டத்தில் பாடத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் அவர்கள் தூங்கியும் விடுகின்றனர். உற்சாகமாகவும்,சுறுசுறுப்பாகவும் ஆர்வம் பொங்க பாடம் பயில வேண்டிய நேரத்தில் குழந்தைகள் இவ்வாறு நடந்து கொள்வது ஏன்?குழந்தைகள் வகுப்பறையில் பாடம் கவனிக்காமல் தூங்குவது ஏன்? இந்த பிரச்சனைக்குக் காரணம் என்ன? குழந்தைகளின் இந்த நிலைக்குத் தீர்வு என்ன? என்று அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம்.

குழந்தைகள் பள்ளியில் தூங்க என்ன காரணங்கள்?

டி எச் ஏ (DHA ) சத்துக் குறைபாடு

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு டி எச் ஏ சத்து மிகவும் முக்கியமானது. இந்த சத்து போதுமான அளவு குழந்தைகளுக்குக் கிடைக்கப்பெறும் பொழுது அவர்களின் உடலில் பல்வேறு நன்மைகள் நடக்கின்றன. குறிப்பாக இது மெலட்டோனின் ஹார்மோன் உடலில் சுரப்பதற்கு மிகவும் உதவுகின்றது. இந்த மெலட்டோனின் ஹார்மோன் தூக்கத்தை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். ஆக இந்த சத்தின் மூலம் குழந்தைகள் சிறந்த தூக்கத்தைப் பெற இயலும். மேலும் நாள் முழுதும் அவர்களால் சுறுசுறுப்பாக இயங்க முடியும். ஒருவேளை இந்த சத்து குறைபாடு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் போதிய தூக்கம் கிடைக்காது.இதனால் இவர்கள் பள்ளியில் தூங்கி விடுகின்றனர்.

குழந்தைகளுக்கு போதிய அளவு தூக்கம் இல்லை

சராசரியாகக் குழந்தைகள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரங்கள் தூங்குவது நல்லது. இது மாதிரியான பாேதிய தூக்கத்தைக் குழந்தைகள் இரவு நேரத்தில் பெறுவதன் மூலம் அடுத்த நாள் அவர்களின் மனமும் உடலும் உற்சாகமாக இருக்கும். ஆனால் இந்த சராசரியான தூக்க அளவை அவர்களின் உடல் கிடைக்கப் பெறாத பொழுது அடுத்த நாள் மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் காணப்படுவார்கள். இதன் எதிரொலியாக அவர்களால் பள்ளியில் பாடத்தை முழுமையாகக் கவனிக்க முடியாது. ஒரு கட்டத்தில் அசதியில் அயர்ந்து தூங்கி விடுவார்கள்.

மொபைல், ஐபேட் போன்ற சாதனங்கள்

இன்று எல்லோர் வீடுகளிலும் மொபைல் போன்கள் பெருகி விட்டன. பெரியவர்கள் போன்களைப் பயன்படுத்திய வண்ணமே காணப்படுகின்றனர். இதைப் பார்க்கும் குழந்தைகள் தாங்களும் போன்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். ஆக அவர்கள் நிறைய நேரம் போன்களில் வீடியோ பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் கண்கள் பெரிய அளவு பாதிக்கப்படுகின்றன. தொடர்ச்சியாகக்
கண்களுக்கு வேலை தருவதால் அவர்கள் பள்ளியில் புத்தகத்தை பார்க்கவும், கரும்பலகையைப் பார்க்கவும் சிரமப்படுகின்றனர். இதனால் கண் வலியாலும்,
களைப்பாலும் தூங்கி விடுகின்றனர்.

பிடிக்காத பாடம்

இந்த பிரச்சனை அனைவரும் அறிந்ததே! குழந்தைகளுக்குச் சொல்லித் தரும் முறையோ அல்லது சொல்லித்தரப்படும் பாடமோ பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அதில் கவனம் செல்லாது. ஒரு கட்டத்தில் அவர்கள் பாடத்தைத் தவிர்க்கத் தூங்கி விடுகின்றனர்.

Read: குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படாமல் தடுக்க, என்ன கற்றுத்தர வேண்டும்?

மன அழுத்தம்

பள்ளியிலோ அல்லது வீட்டிலோ குழந்தை இருக்கும் சூழலில் ஏதாவது மன ரீதியான பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மனதளவில் அதிக அழுத்தம் அடைவார்கள். இந்த மன அழுத்தத்தால் அவர்களுக்குக் கெட்ட கனவுகள் வர நேரம். இதனால் இரவு தூக்கக் குறைபாடு நிகழும். இதனால் கூட அவர்கள் பள்ளியில் கவனமின்றி தூங்கிவிடுவார்கள்.

பள்ளியில் குழந்தைகள் தூங்காமல் இருக்க என்ன செய்யலாம்?

1.தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து அந்த நேரத்தில் குழந்தைகளைத் தூங்கப் பழக்க வேண்டும். அதே மாதிரி காலையில் எழும் நேரமும் சரியான வழக்கத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த தூக்க ஒழுங்கு முறையை உடல் பழகும் பொழுது அது சரியான முறையில் தூக்கத்தை எடுத்துக்கொள்ளும்.

2.குழந்தை தூங்கச் செல்லும் நேரத்தில் நொறுக்குத்தீனிகள் அல்லது காப்ஃபைன் கலந்த உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.இவை தூக்கத்தைக் கெடுக்கும் உணவுகளாகும்.

3.தூங்கும் அறையை ஒழுங்காகவும்,நேர்த்தியாகவும் வைப்பது மிக அவசியம். படுக்கையைச் சீராக விரித்து தலையணைகளைச் சிறந்த முறையில் அடுக்க வேண்டும்.படுக்கை விரிவின் நிறம் கூட தூக்கத்தைத் தீர்மானிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆக மென்மையான இளநிறங்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு இனிமையான தூக்கம் கிடைக்கச் செய்யுங்கள்.

4.அதேமாதிரி தூங்கும் அறையின் சீதோஷன நிலையும் குழந்தையின் தூக்கத்தைத் தாக்கும் தன்மை கொண்டது. குளிர்காலம் என்றால் குழந்தைக்கு தேவையான போர்வைகள் மற்றும் குளிர்த் தடுப்பு ஆடைகளைத் தயாராக எடுத்து வைத்து விடவும். அதே வெயில் காலம் என்னும் பொழுது ஜன்னல்களைத் திறந்து வைத்து போதிய காற்றோட்டம் ஏற்பட வழி செய்ய வேண்டும்.

5.குழந்தைகள் தூங்கும் நேரத்தில் வீட்டில் அதிக சத்தம் ஏற்படாது வகையில் டிவி , பேச்சு சத்தங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

6.தூங்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு வயிறு முட்ட உணவு தரக்கூடாது.அளவான ஆரோக்கியமான அளவு உணவு தருவது ஏற்புடையது. இது நல்ல தூக்கத்திற்கு வழி வகை செய்யும்.

7.அதே மாதிரி குழந்தை தூங்கும் அறையில் மொபைல் போன், கணினி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது உகந்தது.

8.வீட்டில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.அதே போல அவர்கள் உற்சாகம் குன்றிக் காணப்பட்டால் ஏதாவது பிரச்சனை என்று பெற்றோர்கள் அறிய வேண்டும்.அவர்களிடம் பேசி அவர்கள் கவலையை உடனுக்குடன் போக்க வேண்டும்.குழந்தைகள் ஒரு இனிமையான மனநிலையில் இருந்தால்,அவர்களுக்கு நல்ல தூக்கம் ஏற்படும். இதனால் அவர்கள் பள்ளியில் தூங்கி வழிய மாட்டார்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு போதிய தூக்கம் கிடைக்கும்.இதன் மூலம் அவர்கள் பள்ளியில் தூங்குவது நின்று போகும்.

குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் கிடைக்க என்னென்ன உணவுகள் தரலாம்?

வாழைப்பழம்

வாழைப்பழம் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டது. இதில் நிறைந்துள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உடல் தசைகளைத் தளர்ச்சி அடைவதில் இயற்கையாகவே உதவுகின்றது. இதை சாப்பிடுவதால் குழந்தைகள் நல்ல தூக்கத்தை பெற இயலும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் அதிக அளவில் மெலட்டோனின் உள்ளது. இது தூக்கத்தை வரவழைக்க மிகவும் உதவும் தன்மை கொண்டது. ஆகக் குழந்தைகளுக்கு இந்த உணவைத் தரலாம். அவர்கள் சிறப்பாகத் தூக்கம் கிடைக்கப் பெறுவர்.

தேன்

இரவு உறங்கும் பொழுது ஒரு ஒரு ஸ்பூன் அளவு தேன் குடிப்பது நல்லது.தேன் மூளையில் உற்பத்தியாகும் ஒரிஸின் என்னும் வேதிப்பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றது. இந்த ஒரிஸின் மூளையின் விழிப்புக்கு உதவும் தன்மை கொண்டது.ஆக இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் குழந்தைக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்புகளில் நிறைந்துள்ள டிரிப்டோபான் மற்றும் மெக்னீசியம் சத்தானது தசைகளைத் தளர்ச்சி அடைய உதவும் தன்மை பெற்றன.ஆக இதைச் சாப்பிடுவதன் மூலம் குழந்தை நல்ல தூக்கத்தைப் பெற இயலும்.

உருளைக்கிழங்கு

அளவான அளவில் உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்வதன் மூலம் குழந்தைக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

கிவி பழம்

இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி ,ஈ ,செரோடோனின் மற்றும் போலேட் சத்துக்கள் உடலுக்கு தூக்கத்தைத் தரும் தன்மை கொண்டன.ஆக குழந்தைகளுக்கு இந்தப் பழம் தர உகந்தது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

தானியங்கள் ,பீன்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இவற்றைச் சாப்பிடுவதால் குழந்தைகள் நல்ல தூக்கம் பெற இயலும்.

டி எச் ஏ சத்து நிறைந்த உணவுகள்

மீன்,முட்டை ,அவகேடோ ,பசலைக் கீரை ,பாதாம் பருப்பு போன்ற பல்வேறு உணவுகளில் டி எச் ஏ சத்து நிறைந்துள்ளது.இவற்றைக் குழந்தைகளுக்குச் சீரான அளவில் உணவில் சேர்ப்பது நல்லது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து உணவுகளையும் குழந்தைகளின் அன்றாட உணவுகளில் சீரான அளவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பெற்றோர்கள் அனைத்து முயற்சிகளையும் சரியாக மேற்கொள்வதன் மூலம் குழந்தைகளிடம் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கும். அவர்கள் நல்ல தூக்கத்தைக் கிடைக்கப்பெற்று ,தினமும் பள்ளியில் உற்சாகமாகப் பாடத்தைக் கவனிக்கத் தொடங்குவார்கள். உங்கள் பிள்ளைகள் பள்ளியில் தூங்குவதையே மறந்து விடுவார்கள். படிப்பிலும் சிறந்து விளங்கி,மற்ற குழந்தைகளுக்கும் நிச்சயம் முன் மாதிரியாகி விடுவார்கள். மேலும் அவர்களின் உடல் ஆரோக்கியம் சிறந்த முறையில் மேம்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null