பகல் நேர தூக்கம்! நல்லதா? கெட்டதா? உடல் எடை ஏறுமா?

பகல் நேர தூக்கம்! நல்லதா? கெட்டதா? உடல் எடை ஏறுமா?

தூக்கம் என்பது மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். நாம் தூங்குவதால் உடல் ஓய்வு மட்டும் பெறுதில்லை. உடலுக்கு பல்வேறு வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. ஒரு சிலருக்குக் கண்களை மூடிய உடனே தூக்கம் தழுவிக்கொள்ளும். அந்த மாதிரி நபர்கள் கொடுத்து வைத்தவர்கள் தாம்.

ஆனால் சிலருக்கு தலை கீழாகக் குட்டிக்கரணம் அடித்தாலும் தூக்கமே வராது. இவர்களில் சிலர் காலையில் தூங்குவார்கள். இப்படி காலை நேரத்தில் தூங்குவது நல்லதா? என்று விரிவாகப் பார்க்கலாம்.

தூக்கத்தில் என்ன நிலைகள் உள்ளன?

தூக்கத்தில் பல்வேறு நிலைகள் உள்ளன தெரியுமா?முதலில் தூக்கில் உள்ள நிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

NREM (Non rapid eye movement)

இது லேசான தூக்க நிலை. இதில் கண் விழி அசைவுகள் இருக்கும். இந்த நிலை தூக்கத்தின்போது சின்ன சத்தம் கேட்டால் கூட விழிப்பு ஏற்பட்டு விடும்.மூளையில் உருவாகும் அலைகள் குறையத் தொடங்கும். இதை ஒரு மந்தமான தூக்க நிலை என்று குறிப்பிடலாம்.

NREM நிலை 1

இது NREMயின் முதல் நிலையாகும். இந்த நிலை தூக்கத்தில் அவ்வளவு சீக்கிரம் விழிப்புணர்வு ஏற்படாது. இந்த நிலையில் கண் விழியின் இயக்கம் குறைந்து நின்றிருக்கும். இந்நிலையில் உடலின் வெப்பம் குறையத் தொடங்கும். இதயத்துடிப்பும் சற்று குறைந்து காணப்படும்.

NREM நிலை 2

இது NREMயின் இரண்டாம் நிலையாகும்.இது ஆழமான தூக்க நிலை என்று அழைக்கப்படுகிறது.விழிப்பு மிக அரிதாகவே ஏற்படும். மூளையில் டெல்டா அலைகள் மெதுவாக ஏற்படும்.இந்த நிலை தூக்கத்திலிருந்து ஒருவரை எழுப்புவது கடினம். இந்த நிலையில்தான் தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் பேசுவது ,பயங்கரமான கனவு காண்பது போன்ற விசயங்கள் எல்லாம் ஏற்படும்.

REM (Rapid eye movement)

இந்த நிலையைக் கனவு நிலை என்று அழைப்பார்கள். நிலைகள் 1,2 வை விட, இந்த நிலையில் மூளை அலைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கண் அசைவுகள் அதிகமாக நடக்கும் .இந்த நிலை தூக்கத்திலிருந்து ஒருவர் வெகு சீக்கிரம் விழிக்க முடியும். இந்த நிலையிலிருந்து எழும்பொழுது தடுமாற்றம் ஏற்படும் அல்லது அதிகம் தூங்கியது போன்ற உணர்வு ஏற்படும்.

காலையில் தூக்கம் வர என்னக் காரணங்கள்?

உடல் உழைப்பு குறைந்துவிட்டது

இரவில் சீக்கிரம் தூங்கி அடுத்த நாள் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுவது நம் முன்னோர்களின் வழக்கம். அதற்குப் பிறகு அவர்கள் பகல் முழுவதும் உழைத்துக் கொண்டே இருப்பர். இந்த உழைப்பின் தாக்கத்தில் இரவு வெகு சீக்கரத்திலே அயர்ந்து தூங்கிப் போவார்கள். ஆனால் இன்று அதிகமாக யாரும் உடல் உழைப்பை மேற்கொள்வது கிடையாது. நிறைய பேர்களில் வேலை உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்வது போல தான் உள்ளது. அதனால் இவர்களுக்கு இரவில் தாமதமாகவே தூக்கம் வருகிறது. இதனால் இவர்கள் காலையில் தூங்கிக் கொண்டே இருப்பர்.

சமூக வலைத்தளங்களின் தாக்கம்

இன்று ஆண்கள் ,பெண்கள் ,குழந்தைகள் என்று வயது வரம்பே இல்லாமல் அனைவரும் சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கின்றனர். சமூக வலைதளங்களில் பல்வேறு நன்மைகள் நடப்பது உண்மைதான். இருப்பினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இவையும் அது போலத்தான் . ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் சமூக வலைதளங்களுக்கு என்று வரையறுத்துப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறான ஒரு ஒழுங்கு முறை இல்லாத பொழுது இது பல்வேறு அபாயகரமான சூழல்களை விளைவிக்கின்றன என்பது உண்மை.

குறிப்பாக இளைஞர்கள் பேஸ்புக், ட்விட்டர் ,வாட்ஸ் அப் போன்றவற்றின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கின்றனர். இவர்கள் அதிகமாக நடு ராத்திரியில் தான் அலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் மிகவும் காலம் தாழ்த்தி தூங்கச் செல்கின்றனர். இவர்களின் இந்த செயல்பாடுகளால் உடல் கடுமையாக சோர்வடைகிறது. இதை இவர்கள் பொருட்படுத்துவதில்லை.சராசரியாக ஒரு மனிதனுக்குத் தினமும் 8 மணி நேர தூக்கம் நல்லது. அந்த தேவையான தூக்கம் இரவு நேரத்தில் சரியாகக் கிடைக்காததால் உடலானது தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அடுத்த நாள் காலையிலும் நேரத்தை எடுத்துக் கொள்கின்றது. இதனால் இவர்கள் காலை நேரத்தில் தூங்குகின்றனர். இவர்கள் பொழுது புலர்வதையோ,
ஓசோன் காற்றையோ அனுபவிப்பதே இல்லை என்பது வருந்தத்தக்கது.

உணவுப் பழக்கம்

இரவு நேரத்தில் சரியான அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பாதி தூக்கத்தில் பசி எடுக்காமல் இருக்கும். ஆதனால் தூக்கம் தடைப்படாமல் தொடரும். அதேபோல எண்ணெய் பண்டங்கள், சரியாக செரிக்க முடியாது உணவுகள்
போன்றவற்றை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது. இவை எல்லாம் தூக்கத்திற்கு எதிரிகள் ஆகும். இவற்றை எடுக்கும் போது இரவில் இவர்களால் சரியாகத் தூங்கா இயல முடியாமல் போகிறது. அதனால் காலையில்/பகலில் தூங்கி விடுகின்றனர்.

பகல் நேரத்தில் தூங்கலாமா? யாரெல்லாம் காலை நேரத்தில் தூங்கலாம்?

சில சூழல்களில் இருப்பவர்களுக்கு காலை நேரத் தூக்கம் தேவையாகத் தான் உள்ளது.இன்றைய வாழ்வு முறையில் அவ்வளவு மாற்றங்கள்.

ஒரு நாளில் தொடர்ச்சியாக 12 முதல் 14 மணி நேரங்கள் மூளைக்குத் தொடர்புடைய வேலை செய்பவர்கள் பகல் நேரத்தில் தூங்கி ஓய்வு எடுக்கலாம்.

அதே மாதிரி 12 முதல் 14 மணி நேரங்கள் உடல் உழைப்பை மேற்கொள்பவர்கள் பகலில் சற்று நேரம் தூங்கி ஓய்வு எடுக்கலாம்.

அதே போல இரவு நேரத்தில் பணி செய்பவர்கள் பகலில் உறங்கிக் கொள்ளலாம்.

இதேபோல தொடர்ச்சியாக வீட்டில் வேலை செய்யும் குடும்பத் தலைவிகள் சிறிது நேரம் மட்டும் காலை நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

இருப்பினும் இவர்கள் பகல் நேரத்தில் அதிகமாகத் தூங்கும் பொழுது இரவில் தூக்கம் வராமல் சிரமப்பட நேரலாம். காலையிலோ மதியமோ தூங்கினால் இரவில் தூக்கம் வராது என்பவர்கள் அந்த சமயங்களில் தூங்குவதை தவிர்ப்பது நல்லது. இதுபோக காலை முதல் மாலை வரை அலுவலக பணியில் இருப்பவர்கள், பள்ளி செல்லும் பிள்ளைகள் போன்றவர்களுக்குப் பகல் நேரங்களில் தூங்க வாய்ப்பு ஏற்படாது.

காலையில் தூங்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பகல் நேரத்தில் தொடர்ச்சியாகத் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று பார்க்கலாம்.

1.காலையில் சாப்பிடும் நேரம் தாண்டித் தூங்கிக் கொண்டிருப்பது அல்லது மதியம் முதல் மாலை வரை தூங்குவது போன்ற செய்கைகளால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு விடும்.அதனால் தேவையில்லா நோய்கள் உடலைத் தாக்கலாம்.ஆக இவற்றை தவிர்க்க வேண்டும்.

2.இரவு நேரம் வெகு நேரம் வரை வேலை செய்வதால் உடல் சூடு அடையும். இதனால் பல்வேறு வியாதிகளைச் சந்திக்க நேரும். குறிப்பாக கண்களும், மூளையும் தாக்கப்படும்.

3.உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் விட்டமின் டி சத்தை சூரிய ஒளியில் இருந்து கிடைக்கப்பெற இயலும். இவர்கள் காலை நேரத்தில் தூங்குவதால் இளஞ்சூரிய வெயில் உடலில் பட வாய்ப்பு ஏற்படாது. இதனால் இவர்களுக்கு விட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும். ஆக இயற்கையாக பெற இயலும் ஒரு சத்தை, காலை நேர தூக்கம் கிடைக்காமல் செய்துவிடும்.

4.தாமதமாக எழும் பொழுது தேவையில்லாத மன அழுத்தங்கள், மனக் குழப்பங்கள் ஏற்படும். ஒரு ஒழுங்கான தூக்க முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

5.காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி, யோகாசனங்கள் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் , உடலின் ஆரோக்கியம் பல மடங்கு மேம்படும். அந்த வாய்ப்பை இழக்காமல் இருக்க இரவில் சீக்கிரம் தூங்கி பகலில் நேரமாக எழுந்து கொள்வது நல்லது.

6.வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு காலையில் படுக்கவே கூடாது.இதனால் செரிமான பிரச்சனை,உடல் எடை அதிகரித்தல் போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.

மதியம் குட்டித் தூக்கம் போடலாமா?

‘மதியம் குட்டித் தூக்கம் போடலாமா?’ என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுமா? என்ற கவலையும் குழப்பமும் நிலவி வருகிறது.

உடல் உழைப்பே இல்லாமல் பகல் எல்லாம் தூங்கினால் கண்டிப்பாக உடல் நோய்க்களுக்கான களமாக மாறி விடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேவையான அளவு உழைப்பை உடல் மேற்கொண்டு விட்டது என்னும் பட்சத்தில் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம், இதனால் தவறில்லை. எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அதற்காக வெகு நேரம் தூங்க வேண்டாம். அளவுகோல் என்பது தூங்கும் விசயத்திற்கும் முக்கியமாகும்.மதிய வேளையில் ஒரு 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடம் வரை மட்டுமே தூங்குவது நல்லது. அதற்கு மேலே தூங்கினால் உடல் சோம்பேறித்தனம் கண்டுவிடும். ஒரு கட்டத்தில் இந்த மத்திய தூக்கத்திற்கு உடல் அடிமையாகி விடும்.

காலை நேரத் தூக்கத்தினால் உடல் எடை அதிகரிக்குமா?

உடல் உழைப்பு இன்றி தேவைக்கு அதிகமாகப் பகல் நேரத்தில் தூங்கும் பொழுது உடல் எடை அதிகரித்துவிடும்.இது உண்மை தான். உடல் எடை அதிகரிப்பு பல்வேறு விதமான வியாதிகள் ஏற்பட மூலக் காரணம் என்பது அனைவரும் அறிந்தது தான்.மற்றபடிச் சரியான அளவு உழைத்து தேவையான அளவு காலை தூக்கம் எடுப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு கிடையாது.

காலை நேர தூக்கம் நல்லதா?

ஒரு குறுகிய நேரம் பகலில் தூங்குபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறதாம். இந்த விசயம் ஒரு குறிப்பிட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதயம் வலு அடையும். இதனால் மாரடைப்பு நோய் வருவதற்கான சாத்தியமும் குறைந்து விடுகிறது. இதன் மூலம் பகலில் தூங்கினால் மாரடைப்பு ஏற்படும் என்னும் கருத்து சரியானது இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பகல் நேரத்தில் குறுகிய நேரம் தூக்கம் எடுத்துக் கொள்பவர்களின் மூளையின் செயல் ஆற்றல் சிறப்பாக அதிகரிக்கிறதாம். ஏனென்றால் தூங்கும் பொழுது மூளை போதிய ஓய்வு எடுத்துக்கொண்டு கொள்கிறது. எப்பொழுதுமே தூங்கி எழும் பொழுது மூளை ஒரு வித உற்சாக உணர்வினை உணரும். அதை அனைவரும் உணர்ந்திருப்போம். அதற்குக் காரணம் இதுவே.

இந்த பதிவின் மூலம் பகல் நேரத்தில் தூங்கலாமா? அப்படியே தூங்கினால் என்ன பாதிப்புகள் வரும்? பகல் நேரத்தில் தூங்குவதால் ஏதாவது நன்மைகள் உள்ளனவா? என்று அனைத்தையும் தெளிவாக அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இனி ஒழுங்கான தூக்க முறையைக் கடைபிடித்து ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.

இதையும் படிக்க : வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null