டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் & டெங்கு வராமல் பாதுகாப்பது எப்படி?!

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் & டெங்கு வராமல் பாதுகாப்பது எப்படி?!

டெங்கு காய்ச்சல் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் பீதி அடையத் தொடங்கி விடுவர். சின்ன குழந்தைகளைக் கூட இந்த டெங்கு காய்ச்சல் விட்டு வைப்பதில்லை. டெங்கு காய்ச்சல் பொதுவாக மழைக்காலங்களில் அதிகமாகப் பரவுகின்றது. இந்த நோய் பரவ கொசுக்கள் காரணமாக உள்ளன. நம் நாட்டில் நிலவும் சுகாதாரமற்ற சூழலே டெங்கு காய்ச்சல் (dengue kaichal) பாதிப்பு அபாயத்தை அதிக அளவு சாத்தியப்படுத்துகிறது. மக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

இங்கே நாம் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள், நோய் அறிகுறிகள், நோய்க்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் மற்றும் நோய் வராமல் பாதுகாக்க வழிகள் என்று அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம்.

 

எந்த வைரஸ் டெங்கு காய்ச்சலுக்கு காரணம்?

இந்த பெயரைக் கேட்டாலே பயப்படாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் சமீப காலமாக இந்த டெங்கு காய்ச்சல் அதிகமான அளவு தமிழகத்தில் காணப்படுகின்றது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளான பல்வேறு நபர்கள் குறிப்பாக குழந்தைகள் இறந்துள்ளனர் என்பது வேதனையான உண்மை. இந்த விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்காமல் இனியாவது நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைய வேண்டும்.

இது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். இதன் பாதிப்பு சற்று கடுமையாகவே இருக்கும். டென் 1,டென் 2,டென் 3 மற்றும் டென் 4 என்று இதில் நான்கு பிரிவுகள் உள்ளன. இந்த டெங்கு காய்ச்சலை ஒரு குறிப்பிட்ட வகை கொசுக்கள் பரப்புகின்றன.

 

ஏடிஸ் ஏஜிப்தி என்னும் டெங்கு கொசுவே காரணம்…

‘ஏடிஸ் ஏஜிப்தி'(Ades Aegypti) என்ற கொசு வகையே டெங்கு காய்ச்சலை பரப்பக் காரணமாக உள்ளது. இந்த கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உருவாகும். இந்த கொசுவின் ஆயுள் காலம் சுமார் மூன்று வாரங்களுக்கு மேலாகும். இந்த கொசுவின் தோற்றம் சற்று மாறுபட்டு இருக்கும். இதன் உடல் மற்றும் கால் பாகங்களில் வெண்ணிறப் புள்ளிகள் காணப்படும். இந்தத் தோற்றத்தை வைத்து இந்த கொசுக்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். இந்தக் கொசு பகலில் கடிக்கும் குணாதிசயம் கொண்டது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவரை இந்த கொசு கடித்து விட்டு, வேறு ஒருவரை மீண்டும் கடிக்கும் பொழுது அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் (dengue kaichal) பரவி விடுகிறது.இந்த வகையிலேயே இந்த கொசுக்கள் டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்றது.

 

டெங்கு கொசுக்கள் எப்படி உற்பத்தி ஆகின்றது?

 • சரியாக மூடப்படாத குடி நீர்த் தொட்டிகள்.
 • பழைய உடைந்து போன காரைத் தொட்டிகள்.
 • சரியான முறையில் பராமரிக்கப்படாத சாலையோர தண்ணீர்த் தொட்டிகள்.
 • திறந்தவெளிகளில் கிடக்கும் தேவையற்ற பொருட்கள், பிளாஸ்டிக் கப்கள்.
 • மொட்டை மாடிகளில் போட்டு வைக்கும் பழைய சாமான்கள்.
 • ஆட்டாங்கல், உடைந்த வாளிகள்.
 • சாலையில் உள்ள குழிகள்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்திலும் நல்ல நீர் தேங்கும்போது இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இந்த நல்ல நீரில் மட்டுமே ஏடிஸ் ஏஜிப்தி கொசுக்கள் முட்டைகளை இடுகின்றது.இந்த முட்டைகள் உருவாகி வளர்ந்து முழு நிலையை அடைய 7 முதல் 10 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. இந்த முட்டைகள் தோராயமாக ஒரு வருட காலம் வரை அழியாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்னென்ன?

 • கடுமையான காய்ச்சல்
 • தாங்க முடியாத உடல்வலி மற்றும் வயிற்று வலி
 • கண்ணுக்குப் பின்புறம் வலி
 • மூட்டு வலி
 • தொடர்ச்சியான வாந்தி
 • அதிகமான உடல் சோர்வு
 • உடலில் அரிப்பு
 • சிவப்பு புள்ளிகள் தோன்றுவது
 • தாங்க முடியாத எலும்பு வலி

முதலிய இவை அனைத்தும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள்.

சாதாரண காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகிவிடும் அதைத் தாண்டியும் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. உடனே மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?

என்.எஸ் 1 ஆன்டிஜென் பரிசோதனை

இந்த சோதனையின் மூலம் நோயாளியின் ரத்தத்தில் டெங்கு கிருமிகளுக்கான ஆன்டிஜென் இருக்கிறதா என்று கண்டறிய முடியும். இந்த பரிசோதனை முடிவு ஒரு மணி நேரத்தில் கிடைக்கும்.

டெங்கு ஐ.ஜி.ம் மற்றும் ஐ.ஜி.ஜி

இந்த பரிசோதனையின் மூலம் உடலில் ஆன்டிபாடிஸ் உள்ளதா என்று கண்டறிந்து கொள்ள முடியும்.

எலிசா பரிசோதனை

இந்த பரிசோதனையின் மூலமும் உடலின் ஆன்டிபாடி இருப்பு கண்டு பிடிக்கப்படுகிறது. இது சற்று அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். அதனால் செலவு சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் 90% நோய் இருப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.

ரத்த அணுக்கள் பரிசோதனை

டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நோயாளிகளின் உடலில் ரத்த வெள்ளை அணுக்கள் குறைவாக இருக்கும். இந்தப் பரிசோதனையின் மூலம் அந்த அளவினை உறுதி செய்து கொள்ள முடியும்.

ஹெமட்டோகிரிட் பரிசோதனை

இந்த ஹெமட்டோகிரிட்(Haematocrit) பரிசோதனையின் மூலம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அளவை கண்டறிந்து நோயை உறுதி செய்து கொள்ள முடியும்.

தட்டணுக்கள்(பிளேட்லட்ஸ்) பரிசோதனை

சராசரியாக மனித உடலில் 3 லட்சம் தட்டணுக்கள் இருக்கும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த தட்டணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும். அதாவது சுமார் 20 ஆயிரத்துக்கும் கீழ் அந்த அளவு குறைந்துவிடும்.

 

டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பின் என்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?

டெங்குக்கு (dengue kaichal) என்று தனியாக மாத்திரைகள் கிடையாது. இருப்பினும் காய்ச்சலுக்காக பாராசிட்டமால் மற்றும் உடல் வலி மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. காய்ச்சலின் அளவு படிப்படியாகக் குறையும் வரை மருத்துவரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். போதிய பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.

 

டெங்கு காய்ச்சலின் அபாய கட்டம் என்ன?

டெங்கு சாக் சின்ட்ரோம்

ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சலால், டெங்கு சாக் சின்ட்ரோம் ஏற்படுகின்றது. அதாவது இந்தக் காய்ச்சல் ஏற்பட்டவருக்குத் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறையும். இந்த சமயத்தில் நுரையீரல் பகுதியில் நீர் தேங்கத் தொடங்கும். இதையே ‘டெங்கு சாக் சின்ட்ரோம்’ என்று அழைக்கிறோம். இந்தக் கட்டத்தில் இருக்கும்பொழுது நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

ரத்தக் கசிவு நோய்

இது போக ஒரு சிலருக்கு ரத்தக் கசிவு நோய் ஏற்படுகின்றது. இந்த நிலை சற்று ஆபத்தானது தான். இவர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் கலந்த நீரை டிரிப்ஸ் மூலம் உடலில் ஏற்ற வேண்டும்.

 

டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

 • குறைந்தபட்சம் மூன்று ஐந்து நாட்களாக ஓய்வில் இருக்க வேண்டும்.
 • நீர்ச்சத்து நிறைந்த ஆதாரங்களைத் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். இதற்காக அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் கஞ்சி போன்றவற்றை அருந்தலாம்.
 • நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை
  மேற்கொள்ளலாம்.

 

டெங்கு காய்ச்சலுக்கு என்று தடுப்பூசி இருக்கின்றதா?

‘டெங்வாக்ஸியா’ என்னும் தடுப்பூசி உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கப் படுறது. இது சில நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் டெங்கு காய்ச்சலுக்கு (dengue kaichal) என்று எந்த தடுப்பூசியும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

 

டெங்கு வராமல் பாதுகாப்பது எப்படி?

மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்கவும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு நோய் தாக்கம் ஏற்படாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை பார்க்கலாமா?

 • இருக்கும் இடங்களைச் சுத்தமாக வைக்க வேண்டும்.
 • தண்ணீர் தொட்டிகளை சீராக மூடி வைக்க வேண்டும்.
 • தண்ணீர் தொட்டியை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
 • மழைநீர் எதிலும் தேங்காத படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தேங்கும் பட்சத்தில் நீரை அகற்றி அப்புறப்படுத்தி விட வேண்டும்.
 • கற்றாழையை அரைத்து தண்ணீரில் கலந்து கொள்ளவும். பின் அந்த நீரை வீட்டின் அனைத்துப் பகுதிகளில் தெளித்து விடலாம். குறிப்பாக செடிகள் அண்டிக்கிடக்கும் பகுதிகளில் தெளிக்கவும்.
 • கொசு வலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • ரசாயனம் கலக்காத மூலிகை கொசுவர்த்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • தினம் நிலவேம்பு கஷாயத்தை அருந்தலாம்.
 • மிகவும் சிறிய குழந்தைகள் என்றால் கைகால்களுக்கு வேப்ப எண்ணெயை தடவி விடலாம். இதனால் அவர்களை கொசு அண்டாமல் இருக்கும்.
 • வீட்டில் இருக்கும் அனைத்து ஜன்னல்களுக்கும் கொசு வலைகளை அடிப்பது நல்லது.
 • சுத்தத்தைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு
  சிறுவயதிலேயே ஏற்படுத்தி விடுவது நல்லது.
 • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளைக் குழந்தைகளுக்குத் தர வேண்டும்.
 • நிலவேம்பு கஷாயத்தை அருந்தி பலனடையலாம்

 

டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கஷாயத்தில் யாரெல்லாம் அருந்தலாம்?

 • நிலவேம்பு கஷாயத்தை அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி சிறப்பாக அதிகரிக்கும்.
 • இந்த நிலவேம்பு கஷாயத்தை ஒரு வயதுக்கு மேற்பட்ட அனைவருமே குடிக்கலாம்.
 • இந்த கஷாயத்தை தயாரித்த மூன்று மணி நேரத்திற்குள் அருந்தி விட வேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும்.
 • கர்ப்பிணிப் பெண்கள் நிலவேம்பு கஷாயத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலவேம்பு கஷாயத்தைச் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • சாதாரணமானவர்கள் தினம் ஒரு முறை இதை அருந்தலாம். டெங்கு பாதிப்புக்கு ஆளானவர்கள் தினம் மூன்று வேளையும் நிலவேம்பு கஷாயத்தை அருந்துவது உகந்தது.

 

ஒரு முறை டெங்கு காய்ச்சல் தாக்கியவர்களுக்கு மறுபடியும் டெங்கு ஏற்பட வாய்ப்பு உண்டா?

ஆமாம்! வாய்ப்புள்ளது. ஏனென்றால் டெங்கு வைரஸ் நான்கு வகைகளாக உள்ளன. அதனால் மீண்டும் தாக்கும் வாய்ப்பு உள்ளது. இரண்டாம் முறை பாதிப்பு ஏற்பட்டால் நோய் தாக்கம் இன்னுமே அதிகமாக இருக்கும். அதனால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்களின் மூலம் டெங்கு காய்ச்சல் பற்றித் தெளிவாக அறிந்து, விழிப்புணர்வு பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறோம். எந்த நோயாக இருந்தாலும் வரும் முன் காத்துக் கொள்வது சிறந்தது. அந்த வகையில் இந்த டெங்கு காய்ச்சல் நமக்கோ நம் குழந்தைகளுக்கோ வராமல் பாதுகாப்போம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null