அறுவைசிகிச்சை பிரசவம் என்றால் என்ன?இதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?சிகிச்சைக்குப் பின் எப்படி விரைந்து உடல்  முன்னேற்றம் பெறுவது?

அறுவைசிகிச்சை பிரசவம் என்றால் என்ன?இதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?சிகிச்சைக்குப் பின் எப்படி விரைந்து உடல் முன்னேற்றம் பெறுவது?

இயற்கையான முறைக்கு மாறாக சில சூழல்களில்  அறுவைசிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.அறுவைசிகிச்சை பிரசவம் பல நன்மைகளைத் தந்தாலும், இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றி இன்று பெண்கள் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.சுகப் பிரசவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதனால் ஏற்படும் பிரச்சனைகளும், உபாதைகளும் நிச்சயம் அதிகமே. அதனால் இந்த அறுவைசிகிச்சை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் அதனால் ஏற்பட உள்ள பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவது நல்லது. இதைக் குறிப்பாகக் கருவுற்றிருக்கும் தாய் புரிந்து கொள்வது மிக முக்கியம்.இந்தப் பதிவில் அறுவை சிகிச்சை பிரசவம் குறித்து ஒரு முழுமையான தகவல்களைத் தர முனைந்து உள்ளோம்.

 

அறுவைசிகிச்சை பிரசவம் என்றால் என்ன? (What is C Section in Tamil?)

கருவில் வளர்ந்து வரும் குழந்தை முழு வளர்ச்சியை எட்டியவுடன் அது தாயின் கர்ப்பப்பையிலிருந்து வெளியே வரச் சூழல் ஏற்படும்.அதற்கான அறிகுறியாகத் தாய்மார்களுக்குப் பிரசவ வலி ஏற்படும்.குழந்தை வழக்கமாகத் தாயின் பிறப்பு உறுப்பு வழியாக வெளியே வரும்.இது இயற்கையான வழி. இதையே சுகப்பிரசவம் என்பார்கள்.ஆனால் இது எல்லா பிரசவங்களிலும் சாத்தியப்படுவதில்லை.

 

புணர் புழை வாயிலாகப் பிறக்காமல் தாயின் கருப்பையிலிருந்து நேரடியாக அறுவைசிகிச்சை மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன. இதையே அறுவைசிகிச்சை பிரசவம் என்று கூறுகின்றோம்.

 

அதிக அளவில் நடைபெறும் அறுவை சிகிச்சை பிரசவம் (More number of Cesareans)

தற்போது இத்தகைய பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சுகப் பிரசவம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், அறுவைசிகிச்சை பிரசவத்தை சில சமயங்களில் கருவுற்றிருக்கும் சில தாய்மார்கள் தாங்களாகவே முன் வந்து தேர்ந்து எடுக்கின்றனர்.வேறு சமயங்களில் சிகிச்சை தரும் மருத்துவர்களால் சில மருத்துவ காரணங்களை முன்னிட்டு இந்த சிகிச்சை தேர்ந்தெடுக்கப்படுகிறது. எனினும் இதனால் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் உடல் நலமும் காக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள் ஆகும்.அதாவது தாய் அல்லது சேய்க்கு மருத்துவ அவசர உதவி வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது இந்த அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், இதனால் உடல்

ரீதியான  பல உபாதைகளும் பிரச்சனைகளும் நாளடைவில் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது

 

அறுவைசிகிச்சை பிரசவம் எப்படிச் செய்யப்படுகிறது? (Procedure of C Section in Tamil)

அறுவைசிகிச்சை பிரசவத்தின் போது முதலில் வால் பகுதி தண்டுவடம் அல்லது முதுகுத் தண்டில் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது.இந்த முறையில் தாய்க்கு முழுமையான மயக்க மருந்தும் தரப்படுகிறது. சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படுகிறது. இதனால் அந்த இடம் மரத்துப் போய் வலியை உணருவதில்லை. தாய்க்குச் சுயநினைவு இருந்தபடியே இருக்கும்.

 

இந்த அறுவைசிகிச்சை முறையில் தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதி  வெட்டப்படுகிறது. அதனால் வயிற்றுத் தசைகள் பிரிக்கப்படுகிறது. பின்னர் கருப்பையில் கீறல் போடப்படுகிறது. இதனால் கருப்பையைத் திறக்கலாம். அதன் பின் தொப்புள் தண்டு வெட்டப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப் படுகிறது.அதன் பின் கர்ப்பப்பையில் தையல் போடப்படுகிறது.இந்த அறுவைசிகிச்சை சுமார் 20 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது

 

ஏன் அறுவைசிகிச்சை பிரசவம் செய்யப் படுகிறது? (Reason for C Section)

அறுவைசிகிச்சை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்க சில காரணங்கள் இருக்கலாம்.அதைப் பற்றி சற்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

 

  • சரியான நேரத்தில் தாய்க்குப் பிரசவ வலி ஏற்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை கருவில் இருக்கும் போது இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.
  • குழந்தைக்கு அவசரக் கால மருத்துவ உதவி தேவைப்படும் போது இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
  • குழந்தையின் மூளையில் அதிக திரவம் சேரும் போது இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
  • குழந்தையின் நிலை மாறி இருக்கும் போதும் இம்முறைத் தேர்ந்து எடுக்கப்படுகிறது.
  • தாய்க்கு HIV போன்று ஏதாவது நோய்த் தொற்று இருக்கும் போது குழந்தை அறுவைசிகிச்சை மூலம் பிரசவிக்கப் படுகிறது.
  • தாய்க்கு இரத்த அழுத்தம் அல்லது நீரழிவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போதும் அறுவை சிகிச்சையே ஏற்புடையது.
  • முதல் குழந்தை அறுவைசிகிச்சை மூலம் பிறந்திருந்தால் அடுத்த குழந்தைக்கும் அறுவைசிகிச்சை மூலம் பிரசவிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது
  • சில சமயங்களில் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் சமுதாயம் போன்று பல்வேறு கூறுகள் ஒரு கர்ப்பிணியின் மனதில் பிரசவத்தைக் குறித்து சில எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அதனால் அந்த பெண் பிரசவ அச்சம் கொண்டு அறுவைசிகிச்சை பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
  • சில மூடநம்பிக்கையாலும் பல வீடுகளில் இந்த சிகிச்சை முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.

 

அறுவைசிகிச்சை பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகள் (Risks in C Section Delivery)

அறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும்,

 

  • அறுவைசிகிச்சை செய்யும் போது நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • அதிக இரத்த போக்கு தாய்க்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • கர்ப்பப்பை பாதிக்கப் படும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் தாய் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
  • கால்களில் இரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • தாய் அதிக கவனத்தோடும் இருக்க வேண்டிய சூழல் இருக்கும்.
  • சுகப் பிரசவத்தில் குழந்தை உடனடியாக தாயிடம் கொடுக்கப் படுகிறது. ஆனால் அறுவைசிகிச்சை பிரசவத்தில் சற்று தாமதித்தே, ஏன் சில சூழல்களில் சில நாட்கள் கழித்தே தாயிடம் குழந்தை கொடுக்கப் படுகிறது.

 

அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவது தனி நபரின் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்து நடக்கும். எனினும், பொதுவாக இந்த முறை சிகிச்சையில் உடல் முன்னேற்றம் பெற சுகப் பிரசவத்தை விட அதிக நாட்கள் எடுக்கும்.

 

அறுவை சிகிச்சை பிரசவத்தைத் தவிர்க்க என்ன வழி?

(How to avoid C-Section?)

கருவுற்றிருக்கும் காலத்தில் தாய் கீழே உள்ள விசயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

 

  • சத்துள்ள உணவு  எடுக்க வேண்டும்.
  • எளிமையான உடற்பயிற்சி,யோகா மற்றும் வீட்டு வேலைகள் செய்தல்.
  • நாள் தவறாத நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல்.
  • மகிழ்ச்சியான மனநிலையில் இருத்தல்.
  • மிகவும் தைரியமான மனநிலையோடு  பிரசவத்திற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளுதல்.

 

இவை அனைத்தையுமே கடைப்பிடிப்பதன் மூலம் இந்த அறுவை சிகிச்சை பிரசவத்தைப் பெரிதும் தவிர்க்கலாம்.

 

விரைவாகக் குணமடையச் செய்ய வேண்டியவை (Things to do for quick recovery)

அறுவைசிகிச்சை பிரசவம் முடிந்த பிறகு தாய் தன் உடல் நலத்தின் மீது அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அப்படி எடுக்கத் தவறினால் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். குறிப்பாக,

 

  • முதல் சில வாரங்களுக்கு கனமான பொருட்களைத் தூக்குவதைத் தவிர்ப்பது நல்லது.தாய் எந்த ஒரு கனமான பொருட்களையும் தூக்கக் கூடாது.அவ்வாறு தூக்கினால் தையல் போட்ட பகுதி பாதிக்கப் படலாம். இது வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
  • அதிக அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்
  • உங்களை நீங்களே சிரமப் படுத்திக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
  • நிற்கும் போதும் நடக்கும் போதும் சௌகரியமான நிலையில் உங்களை வைத்துக் கொள்வது நல்லது
  • திடீர் என்று ஏதாவது கணமான அசைவை உடம்பில் ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகத் தும்மல் அல்லது இருமல் கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தக் கூடும்.
  • வலி நிவாரணியை அதிக வலி இருக்கும் போது எடுத்துக் கொள்வது நல்லது.
  • நிறையத் தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும் அதிக பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம்.
  • உடனுக்குடன் சிறுநீர் கழிப்பது நல்லது. முடிந்தவரை அடக்கி வைத்துக் கொள்வதோ அல்லது தள்ளிப்போடுவதோ வேண்டாம்.

 

அறுவைசிகிச்சை முறையில் பல பிரச்சனைகள் இருந்தாலும், நீங்கள் சரியான கவனிப்பு மற்றும் போதுமான ஓய்வு எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடைய வாய்ப்புகள் உள்ளன. எனினும், முடிந்த வரை சுகப் பிரசவம் நடக்க முயற்சி செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null