குழந்தைகள் அழகிய மலர்களைப் போன்றவர்கள். அதனாலே அவர்கள் பார்ப்பவர்கள் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்து விடுகின்றனர். அதில் பலர் அவர்களது மழலை முகங்களையும், அன்பு சுரக்கும் விழிகளையும் கண்டு மகிழ்ந்து அவர்களை தங்கள் குழந்தைகளாகவே பாவிக்கின்றனர். ஆனால் சிலர்.. செல்லவே கூசுகிறது! இந்தப் பிஞ்சுக் குழந்தைகளை காமப்பார்வையோடு பார்க்கின்றனர். அதன் உச்சக்கட்டமாகக் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகின்றனர். இந்த அபாயகரமான சூழலின் பிடியில் இருப்பது பெண் குழந்தைகள் மட்டுமல்ல! ஆண் குழந்தைகளும் தான்!
இது மாதிரியான பாதிப்புகள் எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, சில பண்புகளைக்கற்றுத்தரவேண்டும். நீங்கள் ஆண் குழந்தையை வைத்து இருந்தாலும் சரி! பெண் குழந்தையை வைத்திருந்தாலும் சரி! ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் இந்தப் பதிவை வாசித்து முழுமையான விழிப்புணர்வை அடைய வேண்டும்.
இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே ஒழியக் குறைந்தபாடில்லை. பச்சிளம் குழந்தை முதல் வளர்ந்த குழந்தைகள் வரை பலர் இந்த அத்துமீறல்களால் பெரிதும் பாதிப்படைகின்றனர். இனி பெற்றோர்கள் விழித்து உஷாராகிவிட வேண்டும். அந்த வகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று கீழே பார்க்கலாம்.
இது பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய மிக மிக முக்கியமான தகவல். குழந்தைகளுக்கு ‘குட் டச் மற்றும் பேட் டச்’ பற்றித் தெளிவாக விளக்க வேண்டும்.
குட் டச் என்பது என்ன?
இது ஒரு இதமான தொடுகை. இந்த தொடுகையின் அன்பு, பாசம், அரவணைப்பு மட்டுமே நிறைந்திருக்கும். இந்த வகை தொடுகையின் போது குழந்தைகள் பூரண பாதுகாப்பு உணர்வை மனரீதியாகப் பெறுவார்கள். இந்த வகை தொடுகையை அம்மா, அப்பா (அப்பா என்ன சொல்லித்தர வேண்டும்), தாத்தா, பாட்டி, உடன்பிறந்த சகோதரர், சகோதரி போன்றவர்கள் மூலம் கிடைக்கப் பெற முடியும். இந்த எல்லை வட்டத்தைத் தாண்டிய இரண்டாம் நிலை உறவுகளில் இருந்தும் குட் டச்சைப் பெற இயலும். உதாரணமாகப் பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா ,சித்தி ,மாமா , அத்தை போன்ற உறவுகளைக் குறிப்பிடலாம்.
அந்த மிருகம் நீங்கள் அறிந்த நபரே…..
ஆனால் ஒரு திடுக்கிடும் உண்மை என்னவென்றால் இந்த வகை பாலியல் அச்சுறுத்தலை குழந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்படுத்துவது மிகவும் நெருக்கமாக குடும்பத்தோடு தொடர்புடைய நபர்கள் தானாம். பல்வேறு புள்ளி விவரங்களும் இந்த தகவலை உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக இரண்டாம் உறவு நிலையைச் சார்ந்த ஏதாவது ஒரு நபர், நெருங்கிப் பழகும் நண்பர்களில் ஒருவர், அக்கம் பக்கத்து வீட்டைச் சார்ந்த ஏதாவது ஒரு நபர், குழந்தை செல்லும் பள்ளி அல்லது பகுதி வகுப்புகளில் தொடர்புடைய ஏதாவது ஒரு நபர் தான் அனேக பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் குற்றவாளிகளாகக் கண்டு பிடிக்கப் படுகின்றனர்.
இந்த விஷயங்களை உற்று நோக்கும் பொழுது பெற்றோர்கள் எந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குழந்தைகளை முதல் உறவுநிலை வட்டத்தைத் தாண்டி கட்டிப்பிடிப்பது ,முத்தமிடுவது போன்ற செயற்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டாம். மிக மிக நம்பகமான உறவு என்றால் விதிவிலக்கு உண்டு. மற்றபடி தாய் ,தந்தை ,தாத்தா ,பாட்டி தவிர்த்து குழந்தைகளை அணைத்து, முத்தமிடுவது கூடாது என்று உங்கள் குழந்தைகளுக்குத் தெளிவாக அறிவுறுத்துங்கள்.
பேட் டச் என்றால் என்ன?
இது ஒரு தவறான தொடுகை. இந்தத் தொடுகையில் அன்பு இருக்காது. முழுவதுமாக தவறான கண்ணோட்டம் நிறைந்திருக்கும். இந்த வகை தொடுகையைச் சற்று வளர்ந்த குழந்தை என்றால் அவன்/அவள் உள்ளுணர்வு எச்சரித்து வேற்றுமைப் படுத்திக் காட்டும். மிகவும் சிறிய குழந்தை என்றால் விபரம் தெரியாது. ஆனால் குழந்தைக்கு அந்த தொடுகை பிடிக்காது. ஒருவித அசௌகரியத்தை உணரும். அதன் உடல் மற்றும் முக அசைவுகளில் அந்த வெறுப்பு பாவனை வெளிப்படும்.
இந்த பேட் டச்சை எப்படி குழந்தைகள் அடையாளம் கண்டு பிடித்துக் கொள்வது?
குழந்தையின் உதடு, மார்பு பகுதி, வயிறு, இடுப்பு, பின்புறம்(பட்டாக்), பிறப்புறுப்பு போன்று எந்த பகுதியைத் தொட்டாலும் அது தவறான தொடுகை ஆகும். இந்த தொடுகைகள் பாலியல் ரீதியான அத்துமீறல்களைக் குறிக்கின்றன .இதையே ‘பேட் டச்’ என்று சொல்கின்றனர். குழந்தைகளிடம் இந்த உறுப்புக்களை எல்லாம் சுட்டிக்காட்டி எந்த நபரும் உன்னை இங்கே தொட அனுமதிக்கக்கூடாது என்று பொறுமையாகவும் , நிதானமாகவும் விளக்க வேண்டும். முதல் நிலை குடும்ப நபர்களை தவிர குழந்தைகளை யாரும் குளிக்க வைக்க அனுமதிக்கக் கூடாது. காயம் எதாவது அந்தரங்கப் பகுதிகளில் ஏற்பட்டிருந்தால் மருத்தவர் மற்றும் பெற்றோர்களைத் தவிர மருந்திட யாரையும் அனுமதிக்க வேண்டாம்.
குழந்தை இதற்குக் காரணம் கேட்டால், ஒரு சில விஷயங்களை நீங்கள் அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். குழந்தை கேட்கும் கேள்விகளும் அதற்கு உங்கள் பதிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு சிறிய யோசனை.
அம்மா!அப்பா! என்னை ஏன் யாரும் ‘பேட் டச்’ செய்யக் கூடாது?
மகனே!மகளே! இது உன் உடல்! உன் உடலின் எந்த பகுதியையும் யாரும் தவறாகத் தொடுவதற்கும் அல்லது உன் விருப்பத்திற்கு மாறாகத் தொடுவதற்கும் நீ எந்த சூழலிலும் அனுமதிக்கக் கூடாது. உன் உடல் உன் உரிமை! உன்னை அத்துமீறி யாராவது ‘பேட் டச்’ செய்தால்,உடனே அது பிடிக்கவில்லை என்பதை நீ உணர்த்த வேண்டும். உன் முழு எதிர்ப்பையும் காட்ட வேண்டும். உன்னை யாரும் தவறாகப் பயன்படுத்த நீ அனுமதிக்கக் கூடாது.
என்னை பேட் டச் செய்தால் நான் என்ன செய்வது?
உடனே நீ, தொடாதே…! என்று கூச்சலிட வேண்டும். பிறகு அந்த இடத்தை விட்டு உடனே அகன்று ஓடிவிட வேண்டும். அதன் பிறகு மிக முக்கியமாக நடந்த இந்த விஷயத்தைப் பற்றியும் ,அந்த நபர் யார் என்பதையும் எங்களிடம் சொல்ல வேண்டும். ஒரு வேளை நாங்கள் அந்த இடத்தில் இல்லை என்றால் நம்பகமான வேறு ஒருவரிடம் சொல்லிவிட வேண்டும். உதாரணமாகத் தாத்தா, பாட்டி , ஆசிரியர் என்று வைத்துக் கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளைச் சிறுவயது முதலே தைரியமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு பல்வேறு ஊக்கக் கதைகள் மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் செய்திகளையும் அடிக்கடி சொல்லித்தாருங்கள். பிறர் கண்களைப் பார்த்து பேசிப் பழக சொல்லுங்கள். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாமல் போராடும் மனோபாவத்தை வளர்த்து விடுங்கள். இந்த வளர்ப்பு முறை கூட உங்கள் குழந்தையின் பாதுகாப்பு கவசமாக அமைந்துவிடும்.
ஒரு மனிதனுக்குத் தன்னை விடச் சிறந்த காவல் வேறு எதுவும் இருக்க முடியாது. நீங்கள் என்னதான் உங்கள் குழந்தைக்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் பல வகையில் கண்கொத்தி பாம்பாக இருந்து பார்த்துக் கொண்டாலும், நீங்கள் இல்லாத சூழலில் குழந்தைக்கு ஆபத்து வரலாம். அந்த சமயத்தில் உங்கள் குழந்தை யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
அது எப்படிச் சாத்தியப்படும்? அதற்கும் உங்கள் முயற்சியே முக்கியம். இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை ஓவியம், இசை என்று பல வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர். இவற்றையெல்லாம் விட முக்கியமானது தற்காப்புக் கலை. கராத்தே, ஜூடோ, சிலம்பம் போன்ற பயிற்சிகளை உங்கள் குழந்தைகள் கற்க உதவுங்கள். எந்த சூழலிலும் கயவர்கள் உங்கள் குழந்தையினை நெருங்க இயலாது.
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடக்க முக்கியமான காரணங்கள் பின் வருமாறு.
இந்த அறியாமைகள் எல்லாவற்றையும் சாதகமாகப் பயன்படுத்தும் சில மிருகங்கள், இந்த வகையில் குழந்தைகளை எளிதாக நெருங்கி விடுகின்றனர். பின் அவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுக்கின்றனர். ஆகக் குழந்தைகளிடம் அந்நியர்கள் கொடுக்கும் எந்த பொருளையும் வாங்க வேண்டாம் என்று எச்சரிக்க வேண்டும். மேலும் யார் கூப்பிட்டாலும் உறுதியாக தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
வீடு சார்ந்த இடத்தில் குழந்தைக்கு எந்த அநீதியும் நிகழாமல் பாதுகாப்பது பெற்றோர்களாகிய உங்கள் பொறுப்பு. அதே சமயத்தில் குழந்தைகள் எந்தெந்த இடத்திற்குத் தனியாகச் செல்கின்றார்களோ அங்கு எல்லாம் நம்பகத்துக்குரிய குறிப்பிட்ட நபரின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பள்ளி என்றால் ஒரு குறிப்பிட்ட சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்யலாம். சிறப்பு வகுப்புகளுக்குச் அனுப்பும் பொழுது அங்கு ஒரு சரியான நபரின் தொடர்பைப் பெற்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களோடு அவ்வப்போது அலைபேசியில் உரையாடி குழந்தையை கவனித்துக் கொள்ளச் சொல்லுங்கள். இது மாதிரியான சின்ன சின்ன எச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பெரிய பிரச்சினைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அவர்கள் தங்கள் பிரச்சனையைச் சூசகமாக வெளிப்படுத்துவார்கள். நேரடியாகச் சொல்லத் தயங்குவார்கள்.உதாரணமாகப் படம் வரைந்து வெளிப்படுத்துவார்கள். இல்லை வேறு ஏதாவது குறிப்புத் தெரியும்.
இந்த விழிப்புணர்வு கட்டுரை பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். நம் கண்மணிகளை நாம்தான் கண் போலப் பார்த்துக் கொள்ள வேண்டும். உயிருக்கு மேலான நம் குழந்தைகளின் வாழ்வு வளமாக இருக்க நாம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கு ஆரோக்கியம், வளர்ச்சி, எடை அதிகரிப்பு, எனர்ஜி தரும் உணவுகள்…
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null