குழந்தை பிறக்க - குழந்தையின்மையை இல்லாமல் செய்வது எப்படி?!

குழந்தை பிறக்க - குழந்தையின்மையை இல்லாமல் செய்வது எப்படி?!

திருமணமானவுடன் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி உற்ற துணை கிடைத்து விடுகின்றது. ஆனால் அத்தோடு குடும்பம் முழுமை அடைந்துவிட்டதா என்று கேட்டால், இல்லை! குழந்தை என்று ஒன்று வந்தவுடன் தான் வீடு முழுமையான நிறைவை அடைகிறது. வேறு எதனாலும் குழந்தையின் இடத்தை நிரப்ப இயலாது. குழந்தைகள் மட்டுமே உங்களைச் சுற்றிலும் கொத்துக்கொத்தாய் சந்தோஷப் பூக்களைப் பரப்புவார்கள்.

எந்தவொரு தம்பதியாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவர். காலம் கூடக் கூட தம்பதிகளுக்குப் பெற்றோர்கள் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதீதமாக வளர தொடங்கும். சிலருக்குக் குழந்தைப் பேறு உடனே வாய்த்துவிடும். ஒரு சிலருக்குத் தாமதமாகும்.

இந்தப் பதிவும் கருவுறும் வாய்ப்பை எப்படி அதிகப்படுத்திக் கொள்வது, குழந்தையின்மை என்பதையே இல்லாமல் செய்வது என்பதைப் பற்றியது தான். கீழே என்னென்ன இயற்கையான வழிகளில் கருதரிக்கும் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தெளிவாகப் பார்க்கலாம்.

கருவுறும் வாய்ப்பை எப்படி அதிகப்படுத்த?

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

கருத்தரிக்க மிக முக்கியமான தேவை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தான். போதிய சத்துக்கள் பெண்ணின் உடலில் இருந்தால் மட்டுமே கருத்தரித்தல் சாத்தியப்படும்.ஒரு கரு உடலில் உருவாக வழக்கமாக ஒரு பெண் எடுத்துக் கொள்ளும் கலோரிகளை விட சற்று கூடுதலான அளவு கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய பெண்களுக்குக் கருத்தரித்த நிகழாமல் போவதற்கு ஊட்டச்சத்து குறைபாடு தான் மிக முக்கியமான காரணமாக உள்ளது. பழங்கள் , காய்கறிகள், கீரைகள் ,பருப்பு வகைகள் ,கொட்டைகள் , பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ச்சியாக எடுப்பதன் மூலம் நிச்சயம் ஒரு பெண் எளிதாகக் கருத்தரித்து விட முடியும்.

போலிக் ஆசிட், ஜிங்க், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இரும்புச்சத்து, கால்சியம் சத்து விட்டமின் பி6 ,ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்,கோலின் ,விட்டமின் டி ,விட்டமின் சி , விட்டமின் இ ,செலினியம் போன்ற பல்வேறு சத்துக்களும் கருத்தரித்தலுக்கு மிகவும் அவசியம். சில மருத்துவர்கள் கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்களை போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள சொல்கின்றனர். இந்த சத்துகளை மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுவதன் மூலம் கூடப் பெற்றுக் கெள்ள இயலும்.

உடல் எடையைக் கருத்தில் கொள்ளுங்கள்

உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையில் பெண்கள் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான உடல் எடை மற்றும் அளவுக்குக் குறைவான உடல் எடை என்று இரண்டுமே கருத்தரித்தல் வாய்ப்பை பெரிய அளவில் தாக்கும் தன்மை கொண்டன. அதனால் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய உடல் நிறை குறியீட்டெண்(BMI) எவ்வளவு என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். உடல் நிறை குறியீட்டெண்ணிலிருந்து ஒரு பத்து சதவீத என்ற அளவில் உடல் எடை மாறுபட்டிருந்தாலும் கருவுறுவதில் பிரச்சனை எழலாம். இதனால் பெண்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் எடை சீரான அளவில் இருக்கும் பட்சத்தில் கருவுறும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.

கருத்தடை சாதனங்களை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும்

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் சில விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருத்தடைக்கான பல்வேறு சாதனங்களில் நீங்கள்எதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே நீங்கள் மேற்கொண்டு விட வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு எல்லாவகையிலும் அதிகரிக்கும்.

படிக்க: பிரசவம் எத்தனை வகைகள்?

கார்போஹைட்ரேட் அதிகமான உணவுகளை தவிருங்கள்

இந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ளாது இருப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்காது. அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்(PCOD) பிரச்சனை உள்ள பெண்களுக்கு இன்சுலின் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிக அளவில் காணப்படும். இவைக் கருவுறாமையைச் சாத்தியப்படுத்தும். கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரித்தலை சாத்தியப்படுத்தும் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கத் தொடங்கும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு பல சதவீதம் அதிகரிக்கும்.

நிறைய தண்ணீர் அருந்துங்கள்

போதிய அளவு தண்ணீர் அருந்துவது கருத்தரிக்கும் வாய்ப்பை சிறப்பான வகையில் அதிகரிக்கும். தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் நடக்கின்றன. தண்ணீர் சத்துக்களை ஒரு உறுப்பில் இருந்து மற்ற உறுப்புகளுக்குக் கடத்த பெரிதும் துணை புரிகின்றன. இதனால் இனப்பெருக்க உறுப்புகளும் சிறப்பாகச் செயல்படும்.

மன அழுத்தம் இன்றி அமைதியாக இருங்கள்

வேலை மற்றும் குடும்பம் சார்ந்த சிக்கல் ஏதாவது உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருந்தால் அதிலிருந்து முழுவதுமாக வெளியே வாருங்கள். அல்லது கருவுற வேண்டும் என்று விஷயத்தை எப்போது பார்த்தாலும் சிந்தித்து மனதை வருத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் உடனே அதை நிறுத்துங்கள். ஏனென்றால் நீங்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு அல்லது கருத்தரிப்பு தாமதமப்படுவதற்கு முக்கிய காரணமே மன அழுத்தம் தான்.

கருத்தரித்தல் சிறப்பாக நிகழ ஹார்மோன்களின் பங்கு அவசியம். நீங்கள் எப்போதும் மனக் கவலையோடும் சோர்வோடும் இருந்தால் இந்த ஹார்மோன்கள் சீரான அளவில் சுரக்காது. அதனால் நீங்கள் கருத்தரிப்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இதற்கு மாற்றாக நீங்கள் யோகா, தியானம் , இசை, தோட்டக்கல, புத்தகம் போன்றவற்றை முயற்சி செய்து பார்க்கலாம் மேலும் உடற்பயிற்சி நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளும் பொழுது உடலில் நல்ல ஹார்மோன்கள் சுரக்கும் இதனால் நீங்கள் கருத்தரிக்கும் சாத்தியம் அதிகமாக இருக்கும்.

செக்ஸ் பொசிஷன்

உடலுறவுக் கொள்வது எப்படி, அதிலுள்ள சில செக்ஸ் பொசிஷன்களையும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. இதுவும் கருத்தரித்து குழந்தை பெரும் வாய்ப்பை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணியாகும். ‘எல்லாம்’ தெரிந்துகொள்வது எல்லோருக்கும் நல்லது!

படிங்க: செக்ஸ் வேண்டும்! கர்ப்பம் வேண்டாம்! என்ன செய்ய?

நார்ச்சத்து அவசியம்

நார்ச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையில்லாத ஹார்மோன்கள் மற்றும் கழிவுகள் உடலில் இருந்து நீங்கி விடும். அளவான அளவு நார்ச் சத்து உடலில் சேர வழிவகை செய்வதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.ஆக இந்த முயற்சியையும் மேற்கொள்ளலாம்.

காலை உணவை எந்த காரணத்தைக் கொண்டும் தவிர்க்க வேண்டாம்

இனப்பெருக்க உறுப்புகள் சம்பந்தப்பட்டப் பிரச்சனை இருப்பவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOD) போன்ற பாதிப்பில் இருப்பவர்களுக்கு இன்சுலின் சுரக்கும் அளவுகளில் சிக்கல் இருக்கும். இவர்கள் உடலில் சுரக்கும் அதிக அளவு இன்சுலின் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து விடும்.

இந்த ஹார்மோன் மாதவிடாய் சுழற்சியைத் தாக்கும் தன்மை கொண்டது. அதனால் இவர்கள் நிச்சயமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உணவின் மூலம் கிடைக்கும் கலோரிகள் இன்சுலின் அளவை குறைக்க உதவும்.மேலும் இதனால் அண்டவிடுப்பில் உள்ள சிக்கல்கள் சீர் அடையும். இதனால் இவர்கள் கருத்தரிக்கும் சாத்தியம் அதிகரிக்கும்.

கருமுட்டை வெளிப்படும் காலம்

ஒரு பெண்ணின் கருப்பையில் கருமுட்டை உருவாகி வெளிப்படும் காலத்தை அண்ட விடுபடல்(Ovulation) என்று அழைப்பார்கள். இது ஒரு மிக முக்கிய காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிக்கும் சாத்தியங்களையும் பல மடங்கு அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தைச் சரியாகக் கணித்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மாதவிடாய் சுழற்சி ஏற்படும் நாட்களைக் கொண்டே இதை அறிய இயலும். இதற்கென்று தற்சமயம் நிறைய மென்பொருள்கள் கூட உள்ளன. அதை வைத்து அந்த குறிப்பிட்ட காலத்தை அறிந்துகொள்ளலாம். ஆனால் இதையே மனரீதியான சுமையாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. எந்த அளவிற்கு மனதில் அழுத்தம் இல்லாமல் செயல்படுகிறோமோ அந்த அளவிற்குத் தான் குழந்தை பாக்கியம் தடை இல்லாமல் கூடும் என்பதை தம்பதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

மது மற்றும் புகை பிடித்தல் கூடவே கூடாது

மது மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் கருத்தரித்தல் நிகழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை இரண்டுமே ஹார்மோன் அளவுகளைத் தாக்கும் அபாயம் கொண்டன. உங்கள் வீட்டில் மழலைச் செல்வம் வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்து விட்டால் மது மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் இருப்பவர்கள், இவற்றை கட்டாயமாக நிறுத்தி விடுங்கள். அப்பொழுதுதான் உங்கள் உடலில் ஆரோக்கியமாக ஹார்மோன்கள் சுரக்கும். இதன் வாயிலாகக் கருத்தரிக்கும் சாத்தியங்களை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இளம் சூரிய வெளிச்சம் ஏற்றது

ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களுமே இளம் வெய்யிலில் சற்று நேரம் நிற்பது நல்லது. இவ்வாறு செய்வதால் அவர்களின் உடலில் இயற்கையாகவே விட்டமின் டி உற்பத்தி ஆகி விடும். இந்த விட்டமின்-டி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஹார்மோன்களான ப்ரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளை நெறிப்படுத்துகிறது. இதில் ப்ரோஜெஸ்ட்ரோன் மாதவிலக்கை கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன் ஆகும். ஈஸ்ட்ரோஜன் கருத்தரித்தல் நிகழ உதவும் ஹார்மோன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக விட்டமின்-டி சத்து கருத்தரித்தல் நிகழ உதவ மிக முக்கியமான ஒன்றாகும். இதை தம்பதிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

கேஃபைன் மற்றும் சூடு தன்மை கொண்ட உணவுகள் கூடாது

கேஃபைன் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காபியில் கேஃபைன் இருப்பதால் அதை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அதுபோல அதிக சூடு தன்மை வாய்ந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிக சூடு தன்மையான உணவுகள் கரு வளர்ச்சியைத் தாக்கும் தன்மை கொண்டன. அதனாலும் கருத்தரித்தல் தாமதமாகலாம். இதைத் தவிர்க்க இந்த மாதிரி உணவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. படிக்க: உடல் சூட்டை தணிக்க

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றி தம்பதிகள் கருத்தரிக்கும் வாய்ப்பை எல்லா வகையிலும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தம்பதிகள் எதிர்பார்த்து காத்திருந்து குழந்தை பேற்றை விரைவாக அடைந்து மகிழ்ச்சியாக வாழலாம்.

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null