ஒரு வயது குழந்தை: தினமும் தர வேண்டிய உணவுகள், அட்டவணை முறையில்!

ஒரு வயது குழந்தை: தினமும் தர வேண்டிய உணவுகள், அட்டவணை முறையில்!

பிறந்து ஆறு மாதம் ஆகிவிட்டாலே, ஒவ்வொரு தாய்க்கும் தங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான உணவைகளைத் தர வேண்டும் என்ற குழப்பம் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அதிலும் குறிப்பாக, ஒரு வயது நிரம்பியவுடன், எப்படிப்பட்ட உணவைத் தந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், புத்திசாலியாகவும் வளருவார்கள் என்ற தேடல் இன்னும் அதிகரித்து விடும். அது மட்டுமல்லாது, இந்த பருவத்தில் உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் உணவுகள் மட்டுமே, அவனது வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. அதனால், உங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகி விட்டால், அவனது உணவின் மீது சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒவ்வொருவரின் கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் வாழும் இடத்திற்குத் தகுந்தவாறு உணவு மாறுபடும். எனினும், அனைவருக்கும் ஏற்றவாறு சில பொதுவான உணவுகளை தேர்ந்தெடுத்தோ, அல்லது அவரவர் ஊர்களுக்கு ஏற்றவாறு அங்குக் கிடைக்கும் காய், பழம், தானியம் மற்றும் பருப்பு வகைகளைக் கொண்டோ உங்கள் குழந்தைக்குச் சரியான உணவைத் தரத் தொடங்கலாம். இந்த வகையில் உங்களுக்கு உதவ, ஒரு வயதுக் குழந்தைக்கான உணவுப் பட்டியல், பின் வருமாறு. மேலும் படியுங்கள்:

ஒரு வயதுக் குழந்தைக்கான தினசரி உணவு பட்டியால்

 • காலை உணவு -இட்லி / தோசை /சாம்பார் மற்றும் சட்னி வகைகள்/இடியாப்பம்/உப்புமா /கிச்சடி/வெண்பொங்கல்/சத்து மாவு கஞ்சி / கம்பு கலி / கேழ்வரகு கலி!
 • முன் பகல் -பழச்சாறு / பழங்கள்/காய்கறி சூப் / நாட்டு கோழி சூப்
 • மதியம் -பருப்பு சாதம் / சாம்பார் சாதம் / தயிர் சாதம்/காய் வகைகள் – பொரியல் / அவியல் / கூட்டு / மீன் / கோழி /ஆட்டு இறைச்சி/கீரை / மசித்த உருளைக் கிழங்கு
 • மாலை 3 மணி -பழங்கள்
 • மாலை 5 மணி -பால்/பருப்பு சூப் / தக்காளி சூப்,பழச்சாறு / ஆரோக்கியமான தீனி வகைகள்/முளைக்கட்டிய பயறு வகைகள்
 • இரவு – இட்லி / ரசம் சாதம் / தோசை / சப்பாத்தி

ஒரு வயதுக் குழந்தைக்கான உணவு தரும் போது கவனிக்க வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு நீங்கள் உணவு தரும்போது பல விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் ஒரு வயதுக் குழந்தைக்குத் தரும் பல உணவுகள் அவனுக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படும் உணவாக இருக்கக் கூடும். இந்த வகையில், நீங்கள் அதிக கவனத்தோடு, ஒரு சில விசயங்களைக் கவனித்து பின் அதனை தொடர்ந்து கொடுக்க முயற்சி செய்யலாம். அப்படி, உங்களுக்காக சில குறிப்புகள் பின் வருமாறு;

ஒரே சமயத்தில் ஒரு வகையான உணவிற்கு மேல் அதிகம் அறிமுகப்படுத்தக் கூடாது.

 • நீங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தும் உணவு அவனுக்கு நல்ல ஜீரணம் ஆகின்றதா என்று கவனிக்க வேண்டும்.
 • அவன் உண்ணும் உணவு அவனுக்கு பிடித்திருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
 • புதிதாக அறிமுகப்படுத்தும் உணவு அவனுக்கு ஏதாவது உபாதைகளை உடலில் ஏற்படுத்துகின்றதா என்று கவனிக்க வேண்டும்.
 • ஒவ்வாமை ஏதாவது ஏற்படுகின்றதா என்று கவனிக்க வேண்டும். அப்படி ஏதாவது ஏற்பட்டால், உடனடியாக அந்தக் குறிப்பிட்ட உணவைத் தருவதை நிறுத்தி விட வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியல், உங்களுக்கு ஒரு யோசனையைத் தருவதற்கு மட்டுமே. எனினும், நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளையும் பெற்று அதன் படியும் உங்கள் குழந்தைக்கு மேலும் சில உணவுகளைத் தர முயற்சி செய்யலாம். இன்னும் சில குறிப்புகள்.

 • உங்கள் குழந்தைக்கு அசைவ உணவை அறிமுகப்படுத்தும் போது, சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சில குழந்தைகளுக்கு அசைவ உணவில் சிலது ஏற்றுக் கொள்ளாது. குறிப்பாக இறால், கோழி மற்றும் ஒரு சில குறிப்பிட்ட மீன் வகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். அதனால் நன்கு கவனித்து, எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே, உங்கள் குழந்தைக்கு நீங்கள் அந்த அசைவ உணவு வகையைத் தொடரலாம்.
 • முடிந்த வரை தினமும் ஏதாவது ஒரு பழ வகையை உங்கள் குழந்தை சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். இதனால், உங்கள் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து விடும்.
 • முடிந்த வரை அதிகம் துரித உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • அதிகம் எண்ணெய் கலந்த நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகக் கடைகளில் கிடைக்கும் கவர்ச்சியான மிட்டாய் ரகங்கள் மற்றும் சிப்ஸ் வகைகளை தவிர்த்து விடுவது நல்லது.

முரண்டு பிடிக்கும் குழந்தைக்கு எப்படி உணவை சாப்பிடக் கொடுப்பது?

பொதுவாக ஒரு வயதுக் குழந்தை என்று வந்து விட்டாலே, உணவு கொடுப்பது என்பது குழந்தையின் அம்மாவிற்கு ஒரு பெரிய சவாலான வேலை தான். இந்த சவாலைத் தினமும் ஒரு முறை அல்ல, ஒவ்வொரு முறையும் உணவு மற்றும் பால் கொடுக்கும் போதும் பல தாய்மார்கள் அனுபவிக்கின்றனர். அப்படி இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு புதிய உணவுப் பட்டியலை அறிமுகப்படுத்தும் போது, அவனைச் சாப்பிட ஊக்குவித்து அவன் விரும்பும் வகையில் உணவைக் கொடுப்பது சற்று கடினமே. இருப்பினும், உங்களுக்கு சில ஆலோசனைகள் தர, இங்கே சில குறிப்புகள்;

 • உங்கள் குழந்தையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவைச் சாப்பிட்டு விடும்படி கட்டாயப் படுத்தாதீர்கள். போதுமான நேரம் கொடுத்து அவன் அதை மகிழ்ச்சியோடு விரும்பி உண்ணும் வரை காத்திருங்கள்.
 • ஒரு வேளை அவன் சாப்பிட மறுத்தால், சற்று நேரம் அவகாசம் கொடுத்து, பின் மீண்டும் அடுத்த வாய் உணவைக் கொடுங்கள்.
 • முடிந்த வரை உங்கள் குழந்தையை உணவை அவன் கைகளாலேயே எடுத்துச் சாப்பிட ஊக்கவியுங்கள். இப்படிச் செய்யும் போது, அவன் தானாகச் சாப்பிட கற்றுக் கொள்வதோடு, அவனுக்குச் சாப்பிடும் ஆர்வமும் அதிகரிக்கும்.
 • அவன் சாப்பிடும் போது உணவைத் தட்டை சுற்றி கீழே சிந்தினால், விட்டு விடுங்கள். கட்டளைகள் போடாதீர்கள்.திட்டவும் செய்யாதீர்கள்.
 • விளையாடிக் கொண்டே அவன் சாப்பிட விரும்பினால், அப்படியே செய்யட்டும். எனினும், அவன் சாப்பிடுகின்றானா? என்று மட்டும் கண்காணியுங்கள்.
 • அவ்வப்போது சிறிது சிறிதாக ஏதாவது ஒன்றைச் சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருங்கள். அவன் ஒரு வேளை சாப்பிட மறுத்தால்,அவனைக் கட்டாயப் படுத்த வேண்டாம்.
 • முடிந்த வரை வெள்ளை சர்க்கரை கலந்த உணவைத் தருவதைத் தவிர்ப்பது நல்லது. மாற்றாக நாட்டு சர்க்கரை தரலாம்.
 • அவன் ஒழுங்காக சாப்பிட்டால் பரிசு அளியுங்கள்.

இந்த குறிப்புகள் அனைத்தையும் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், குறிப்பாகத் தாத்தா, பாட்டி போன்றவர்கள், உங்களுக்கு மேலும் ஏதாவது குறிப்பிடத்தக்க உணவைக் குழந்தைக்குக் கொடுக்கச் சொல்லி ஆலோசனை தந்தால், அதனை நீங்கள் மறவாமல் முயற்சி செய்வது நல்லது. இந்த வகையான பாரம்பரிய உணவுகள், தற்போதைய உணவை விடச் சத்துக்கள் நிறைந்துள்ளதாக இருக்கும். மேலும் அவை ருசியாகவும் இருக்கும். அதனால் அத்தகைய பாரம்பரிய உணவுகளையும் உங்கள் குழந்தையின் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இப்போது 1 வயதுக் குழந்தைக்குத் தர சில ஆரோக்கியமான ரெசிபிகளைப் பார்க்கலாம்..

வெஜிடபிள் ஊத்தப்பம்

தேவையானவை

 • தோசை மாவு- 1/2 கிலோ
 • கேரட்,முட்டைகோஸ், பீட்ரூட் துருவல்- 1கப்
 • எண்ணெய்- தேவையான அளவு
 • உப்பு- தேவையான அளவு
 • குடைமிளகாய்- 1

செய்முறை

1.கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

2.பின்னர் ஏற்கனவே துருவி வைத்துள்ள கேரட்,முட்டைகோஸ் ,பீட் ரூட்,நறுக்கிய குடைமிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

3.இதனை மாவுடன் கலந்து சிறிய தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.

4.குழந்தைகள் விரும்பி சாப்பிட ஏற்ற ஊத்தாப்பம் தயார்.

பொட்டுக்கடலை உருண்டை

 • பொட்டுக்கடலை- 1/4 கிலோ
 • வெல்லம்- 250கிராம்
 • ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

செய்முறை

1.வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளவும்.

2.பிறகு இதனைத் தண்ணீரில் கரைத்து, நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின் பாகு பதத்திற்குக் காய்ச்சவும்.

3.இதில் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறி சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

4.சுவையான பொட்டுக்கடலை உருண்டை தயார்.

ராகி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

 • ராகி மாவு -250 கிராம்
 • வெல்லம் -150 கிராம்
 • ஏலக்காய்த்தூள் -சிறிதளவு
 • தேங்காய்த் துருவல் -1கப்

செய்முறை

1.வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளவும். பின் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டவும்.

2.பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் ராகி மாவைச் சேர்க்கவும்.
கட்டி விழாமல் மாவை நன்கு கலக்கவும்.

3.இத்தோடு வெல்லத் தண்ணீர் ,தேங்காய்த் துருவல் ,ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு கிளறி கெட்டியானதும் இறக்கவும்.

4.நன்றாகப் பிசைந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து வேக விடவும்.

5.ஆரோக்கியமான ராகிக் கொழுக்கட்டை தயார் ஆகிவிட்டது.

இந்த பதிவு நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null