குழந்தை முடி பொசு பொசுவென வளர என்ன செய்யலாம்? முடி வளர டிப்ஸ்!

குழந்தை முடி பொசு பொசுவென வளர என்ன செய்யலாம்? முடி வளர டிப்ஸ்!

குழந்தை முடி மிகவும் மென்மையானதாக இருக்கும் அதற்குரிய பாங்கும், பராமரிப்பும் அவசியம். எப்போதுமே பெற்றோர்கள் குழந்தையின் முடி செழிப்பாக வளர வேண்டும் என்று விரும்புவார்கள். பெற்றோர்களே! குழந்தையின் முடி நன்றாக பொசு பொசுவென அடர்த்தியாகவளர என்ன செய்யலாம் என்பதையொட்டி உங்களுக்கு 7 குறிப்புகளை வழங்கியுள்ளோம். இது முடி வளர டிப்ஸ்! இந்த டிப்ஸ் பெரியவர்களும் ஃபாலோவ் செய்யலாம்.

ஊட்டச்சத்துக்கள்

குழந்தைகளுக்கு நாம் கொடுக்கின்ற உணவுகள் மிக முக்கியமானது. உணவின் மூலமாகவே குழந்தைகளின் உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் சென்று சேர்கின்றன. அதுவும் சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவுகள் மட்டுமே குழந்தையின் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். குறிப்பாக உயிர்ச்சத்துக்கள் ஏ, பி முடியின் தரத்தை மேம்படுத்தும். பருப்புகள், பப்பாளி, கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் சத்துக்கள் உள்ளன. இது தவிர அடிக்கடி கீரை வகைகளை சூப் செய்து கொடுக்கலாம். எல்லாவற்றிற்கும் முக்கியமாகக் குழந்தைகளுக்குத் தவறாமல் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் மட்டுமே பல்வேறு விதமான ஊட்டச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

இதையும் படிங்க: மாதுளை சாப்பிடுவதால் பயன்கள் என்ன?

எண்ணெய் மசாஜ்

பல்வேறு வகையான எண்ணெய்கள் கிடைக்கின்றன. இதில் தேங்காய் எண்ணெய் குழந்தையின் முடிக்கு மிகவும் ஏற்றது. சிலர் ஆலிவ் எண்ணெய்களையும் பயன்படுத்துகின்றனர். ஆலிவ் ஆயில் சற்று கூடுதலான விலை கொண்டது. இதில் நமக்கு உகந்ததைத் தேர்வு செய்து குழந்தையின் தலைமுடிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணெய்யில் உயிர்ச்சத்து ஈ நிறைந்துள்ளது. இது குழந்தையின் முடி வளர்ச்சிக்குத் துணை புரிகின்றது. தொடர்ந்து குழந்தையின் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்து வந்தால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகச் செல்லும். இதனால் குழந்தையின் முடி ஆரோக்கியமும் செழிப்பும் அடையும். கூடுதலாக முடியின் வறட்சி நீங்கி முடிக்குத் தேவையான ஈரப்பதமும் கிடைக்கும்.

குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நல்ல பண்புகள்

ஸ்கால்ப்பை சுத்தம் ஆக்குங்கள்

குழந்தையின் முடியைச் சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். குறிப்பிட்ட நாள் இடைவெளியில் இதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பொதுவாக வாரத்தில் இரண்டு நாட்கள் தலைக்குக் குளிப்பது நல்லது. வெயில் காலம் என்றால் தலையில் அதிகமாகவே வியர்க்கும். இது குழந்தையின் தலையில் படிந்து பிசுபிசுப்பையும் அரிப்பை ஏற்படுத்தும். இதை அலட்சியமாக விடும் பட்சத்தில் பொடுகு தொல்லை வரக் கூட வாய்ப்பு உள்ளது.

அதனால் இரண்டு மூன்று நாளைக்கு ஒருமுறை முடியை அலசுங்கள். அதனால் வியர்வையால் உண்டாகும் அழுக்குகள், கிருமிகள் நீங்கும். அதே சமயம் குழந்தையின் தலை முடிக்குத் தேர்வு செய்யும் ஷாம்பிலும் கவனம் தேவை. அதிக ரசாயனம் கலக்காத தரமான ஷாம்புவை சந்தையில் வாங்கி பயன்படுத்தவும். 9-ம் மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தினமும் ஷாம்பு போட வேண்டாம். பட்டாணி அளவு ஷாம்புவே குழந்தைகளுக்கு போதுமானது.

ஈரமான முடிக்கு அதிக கவனம்

தலைக்குக் குளித்த பின் குழந்தையின் தலை முடி ஈரமாக இருக்கும். பெரும்பாலான பெற்றோர்களுக்குக் குழந்தையின் தலையை எவ்வாறு துவட்டுவது என்று தெரிவதில்லை. ஈரமான தலை முடியைத் துவட்டும் போது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மிதமான அழுத்தத்தில் முடியைத் துவட்டுங்கள். வேகமாகத் தேய்க்கக் கூடாது. அப்படிச் செய்தால் குழந்தையின் முடி உதிர நேரும். கூடுதலாகக் குழந்தை வலியால் வேதனைப்பட்டுக் கத்தி அழத் தொடங்கும். மென்மையாக ஒத்தி எடுப்பது சிறந்த முறை. இதற்கு நல்ல வெண்ணிற பருத்தி துண்டு உகந்தது.

சீப்பால் முடியை வாருவது

குழந்தையின் தலைமுடிக்கான பிரஷ் அல்லது சீப்பைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. மென்மையான பிரஷ் அல்லது சீப்பு பயன்படுத்துவது நல்லது. சீப்பின் பற்கள் கூர்மையாக இல்லாமலும் சற்று இடைவெளி விட்டதாகவும் இருந்தால் நன்றாக இருக்கும். பிரஷ் அல்லது சீப்பு மூலமாக மெதுவாக மிதமாகக் குழந்தையின் முடியை வாருங்கள். குழந்தையின் மண்டை மென்மையாக இருக்கும். அதனால் மிகவும் பலமாக சீப்பைக் கொண்டு அழுத்த வேண்டாம். அப்படிச் செய்தால் குழந்தைக்கு வலி ஏற்படும்.

படிக்க: டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

ஹேர்கட் அவசியம்

சீரான இடைவெளியில் ஹேர் கட் செய்வதால் குழந்தைகள் அழகாக இருப்பார்கள். முடி கண்களையும் காதுகளையும் மறைக்கும் வரை வெட்டாமல் இருந்துவிடக்கூடாது. அவ்வப்போது ஒழுங்கான முறையில் ஹேர்கட் செய்வதன் மூலம் முடி பிளவுகளும் ஏற்படாமல் இருக்கும். சில பெற்றோர்கள் இந்த விஷயத்தில் அசட்டையாக இருந்து விடுகின்றனர். சில குழந்தைகளுக்குக் கண்கள் அருகில் வரை முடி வளர்ந்து இருக்கும். இதனால் அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது. கண் அரிப்பு ஏற்படும்.

குழந்தைகளுக்கு இதைப் பற்றி சொல்லத் தெரியாது. இப்படி முடி வளர்ந்து தொல்லை செய்யாதிருக்க ஒழுங்கான ஹேர்கட் அவசியம். இன்று பார்லரில் பலவகையான ஹேர்கட்கள் வந்துவிட்டன. அதில் புதிது புதிதாகச் செய்து உங்கள் குழந்தையை அழகுபடுத்தி ரசிக்கலாம்.

முடிக்கு கண்டிஷனர் தேவை

இன்று சந்தையில் பல்வேறு விதமான கண்டிஷனர்கள் கிடைக்கின்றன. ஆனால் பெற்றோர்கள் அதைத் தவிர்க்கலாம். குழந்தையின் தலைமுடியைப் பாதிக்காத வகையில் பல இயற்கை கண்டிஷனர்களே உள்ளன. அது குழந்தையின் ஆரோக்கியமான தலைமுடிக்கு உகந்தது. எந்தப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. கூடுதலாகச் செலவும் மிச்சம். உதாரணமாகத் தயிர், செம்பருத்தி, முட்டை போன்ற இயற்கை கண்டிஷனர்களை குழந்தைகளின் தலை முடிக்குப் பயன்படுத்தலாம். முடி ஆரோக்கியமாகும்.

பெற்றோர்களே! இந்த ஏழு குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையின் தலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள். பெரியவர்களும் இதே மாதிரி செய்வதன் மூலமாக, முடி உதிர்தலைத் தவிர்த்து நன்றாக முடி வளர்வதை உணரலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null