குழந்தைக்கு மழைக்கால நோய் வராமல் தடுக்க என்ன வழிகள்?

குழந்தைக்கு மழைக்கால நோய் வராமல் தடுக்க என்ன வழிகள்?

மழைக்காலம் என்றாலே குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு அச்சம் தொற்றிக்கொள்ளும். என்னென்ன நோய் பரவுமோ… காய்ச்சல் வந்துவிடுமோ… ஜலதோஷம் வந்தால் என்ன செய்வது? வைரஸ் காய்ச்சல் வந்துவிட்டால்..? உள்ளிட்ட பல நோய்கள் குறித்த கவலையும் வந்துவிடும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் என்ன? இது போன்ற பல சந்தேகங்களும், அது சார்ந்த பயமும் உள்ள பெற்றோரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

மழைக்கால நோய்கள்

மழைக்காலம் என்றாலே நோய் பரப்பும் நுண்ணுயிரிகளுக்குக் கொண்டாட்டம்தான். அது பரவுவதற்கு ஏற்ற ஊடகமும், தட்ப வெப்ப நிலையும் இருப்பதால் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன்னாலான நோயைப் பரப்பி விடுகின்றன. சளி, காய்ச்சல், இருமல், தலைவலியில் இருந்து, தொண்டைப் புண், டெங்கு, வயிற்று வலி, பன்றிக் காய்ச்சல், உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படவும் காரணமாகி விடுகின்றன.

இவற்றில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

குட்டிஸ்க்கு மழைக்கால நோய் வராமல் தடுக்கும் டிப்ஸ்…

தூய்மையான சூழல்

உடல் தூய்மையுடன் வீட்டுத் தூய்மையும் மிகவும் அவசியம். வெளியில் சென்று வரும்போது காலில் ஒட்டிக்கொள்ளும் ஈரப்பதத்தில் இருக்கும் கிருமிகள், வீட்டில் நோய் பரப்பும் காரணிகளாகின்றன. பெரியவர்களுக்கு அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், குழந்தைகளை வெகுவாக தாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் வீடு எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். மழை காலத்தில் துணிகள் எதையும் உலர்த்த முடியாது என்பதால், முன்கூட்டியே நான்கு – ஐந்து நாள் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வீடு சுத்தம் செய்ய துணிகளையும், மிதியடிகளையும் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். தினசரி அதை மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.

அறை வெப்பநிலை

குளிர்ச்சியில் பரவும் கிருமிகள்தான் மழைக்காலங்களில் அதிகம் பரவுகின்றன. வீட்டின் வெப்பநிலை சராசரியாக இருக்க வேண்டும். ஏசி போன்ற குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தினால் அறை வெப்பநிலை சராசரிக்கும் கீழ் குறைந்து விடும். இதனால் கிருமிகளின் இனப்பெருக்கம் எளிதாகி, வீடு முழுவதும் கிருமிகள் பரவி விடும். குறிப்பாக இதனால் குழந்தைக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வீட்டு உணவுதான் சிறந்தது

மழைக்காலம் முடியும் வரை கட்டாயமாக வீட்டு உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். மழைக்காலத்தில் பல உணவகங்கள் சமையலுக்கும் பாத்திரம் கழுவுவதற்கும் மழைநீரை பயன்படுத்துகின்றன. சில இடங்களில் கழிவுநீர் பாதையில் ஏற்படும் உடைப்புகள் காரணமாகக் குடிநீரில் தண்ணீர் கலந்துவிடவும் வாய்ப்பு இருப்பதால் எந்த உணவகத்தில் எந்த மாதிரியான தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரியாது. உங்களைவிட உங்கள் குழந்தையை இது பாதிக்கும்.

தூய குடிநீரை மட்டுமே குடிக்கக் கொடுங்கள்

குழந்தைகள் குடிக்கும் நீர் காய்ச்சி வடிகட்டியதாக இருக்க வேண்டும். காய்ச்சும்போது அதிலுள்ள தாதுக்கள் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகப் பலர் அப்படியே கொடுப்பார்கள். ஆனால் அது நல்லதல்ல. குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான தாதுக்களை உணவுப் பொருட்கள் மூலம் கொடுத்துக்கொள்ளலாம்.

கழுவிவிட்டு சாப்பிடப் பழக்குங்கள்

பழங்களைக் சாப்பிடும்போது கழுவிவிட்டு சாப்பிடக் கொடுக்க வேண்டும். தானாக சாப்பிடும் குழந்தைகளுக்குப் பழங்களைத் தேய்த்துக் கழுவ பழக்கப்படுத்த வேண்டும். அல்லது அவர்களாக உங்களிடம் வந்து கழுவித் தர கேட்க சொல்லி, பழக்கப்படுத்த வேண்டும். இதனால் பழத்தின் மேற்பகுதியில் ஒட்டியிருக்கும் நுண்ணியிரிகள், கிருமிகள் பாதிப்பில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

நோய் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

குழந்தைகளுடன் உணவுப் பொருட்களை பகிர்ந்துகொள்வது பெரியவர்களுக்கு பிடிக்கும். ஆனால், நோய் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தைகளிடம் இருந்து விலகியிருப்பதே நல்லது. உங்களுக்கு சாதாரண காய்ச்சலாக இருக்கலாம். அல்லது ஜலதோஷமாக இருக்கலாம். ஆனால் அதிலிருந்து பரவும் கிருமிகள் குழந்தையை வெகுவாக பாதிக்கும். டைஃபாயிடு போன்ற மோசமான பாதிப்புகளைக்கூட ஏற்படுத்தலாம்.

பெற்றோரின் ஆரோக்கியம்

பெற்றோர் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். சிறு நோயாக இருந்தாலும் உடனடியாக அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். அது தொற்று நோயாக இருந்தால், குழந்தைக்குப் பரவிவிடும் வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகளைப் பராமரிப்பது போலவே உங்களையும் கவனமாக பராமரித்துக்கொள்ளுங்கள்.

கை கழுவுதல்

எதை எடுத்தாலும் கை கழுவும் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், அவர்கள் கையில் இருக்கும் கிருமிகள் வாய் வழியாக உள்ளே சென்று நோய் ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம். கை கழுவிவிட்டுதான் சாப்பிடும் பொருளை எடுக்க வேண்டும் என்பதில் இருந்து, ஒவ்வொரு செயலுக்கும் கை கழுவும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். இது குறிப்பாக மழைக்காலத்தில் குழந்தையைப் பாதுகாக்கும்.

மழையில் நனையக்கூடாது

குடையோ, ரெயின்கோட்டோ குழந்தையை மழையில் இருந்து பாதுகாக்கும் வகையிலான எதாவது ஒன்றை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். எந்த காரணத்துக்காகவும் குழந்தையை மழையில் நனைய விடக்கூடாது. குழந்தை நேரடியாக மழையில் நனைவது பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு முக்கிய காரணியாக மாறலாம்.

இரண்டு வேளை குளிக்க வேண்டும்

காலையும் மாலையும் குளிக்க வைக்க வேண்டும். வெளியில் சென்று வந்த உடனே குளிக்க வைத்து விடுதல் நல்லது. நீங்களும் குளித்து விடுங்கள். உடலில் நுண்ணிய கிருமிகள் இருந்தால் குளிப்பதன் மூலம் அவற்றிலிருந்து விடுதலைப் பெறலாம். குளிக்கும் நீரில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.

கொசு விரட்டிகள்

மழைக்காலம் என்பது கொசுக்களுக்கு இனப்பெருக்க காலம். ஒவ்வொரு கொசுவும் ஆயிரக்கணக்கில் முட்டைகளை வைத்து, இனத்தை பல லட்ச மடங்கு பெருக்கிக்கியிருக்கும். கொசுவே இல்லாத வீட்டில்கூட குளிர்காலத்தில் கொசுக்கள் வர வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளைக் கொசுக்களிடமிருந்து முற்றிலும் விலக்கி வைத்திருக்க வேண்டும். வீட்டைச் சுற்றி ஜன்னல்களில் கொசு வலை அடித்தல், தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றுதல், குழந்தைக்கு உடல் முழுவதும் மூடியிருக்கும் படியான உடைகளை அணிவித்தல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளைக் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கலாம். கொசுக்களிடம் இருந்து விடுதலையளிப்பதே பெரும்பாலான நோய்களில் இருந்தும் பாதுகாப்பு கொடுத்து விடும்

நகம் வெட்டுதல்

நகத்தில் சேரும் அழுக்குகள் கூட பல விதமான நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு வாயில் விரல் வைக்கும் பழக்கம் இருப்பதால், நகத்தில் இருக்கும் கிருமிகள் வாய் வழியாக செல்லும் வாய்ப்புகள் அதிகம். இதனால், நகத்தை வளர வளர வெட்டிவிடுவது, அதில் தேங்கும் அழுக்குகளை தினசரி சுத்தம் செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் குழந்தையை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.

உடல் வெப்பநிலை சோதனை

வீட்டில் தெர்மோமீட்டர் வைத்துக்கொண்டு தினசரி குழந்தையின் உடல் வெப்பநிலையை சோதித்துவிடுவது நல்லது. சில நேரங்களில் காய்ச்சல் ஏற்பட்டு இருந்தாலும், விட்டு விட்டு அடிக்கும் காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிவது கடினம். தினசரி குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சோதிப்பதன் மூலம், காய்ச்சல் அறிகுறி தெரிந்தாலே உடனடியாக மருத்துவரை அணுகலாம். பெரும் நோய் தொற்றுகளை இதன்மூலம் தடுக்க முடியும்.

ஆரோக்கியமான உணவுகள்

குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். கூடுமானவரை அப்போது சமைத்த உணவை அப்போதே கொடுக்கவேண்டும். காலையில் சமைத்த உணவை மதியம் கொடுப்பதோ அல்லது சமைத்து சில மணி நேரம் கழித்து கொடுப்பதோ கூடாது.

அதிக குடிநீர்

மழைக்கால குளிர் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுவது தெரியாது. அதனால், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையவது குழந்தையைத் தண்ணீர் குடிக்க வைத்துவிட வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. நீரிழப்பை தவிர்ப்பதே நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

தாய்ப்பாலில் கவனம்

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது மார்பகம் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வியர்வையோ, அதனால் உருவான கிருமிகளோ இருக்கலாம். குழந்தைக்கு இதிலிருந்துகூட நோய்த் தொற்று ஏற்படலாம்.

நெரிசல்களை தவிருங்கள்

எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்குக் குழந்தையை அழைத்துச் செல்வதை தவிருங்கள். குறிப்பாக மழைக்காலங்களில்! அங்கு வருபவர்களுக்கு இருக்கும் நோய்களின் கிருமிகள் காற்றிலோ நீரிலோ பரவும் இயல்புடையதாக இருக்கலாம். அவை குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே கூட்டம் அதிகமுள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் பொது நிகழ்ச்சிகளில் கவனம் தேவை. திருமணம் போன்ற விசேஷ நிகழ்வுகளுக்கு வரும் உறவினர்கள் குழந்தையைப் பார்த்த ஆர்வத்தில் கன்னத்தை கிள்ளி கொஞ்சுவார்கள். அவர்கள் மூலம்கூட நோய் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற கூட்டம் அதிகமுள்ள இடங்களைத் தவிர்ப்பது நல்லது.

தடுப்பூசி

குழந்தை பிறந்ததுமே மருத்துவரின் ஆலோசனையுடன் அந்தந்த பருவத்தில் போட வேண்டிய தடுப்பூசியை உரிய நேரத்தில் போட்டு விட வேண்டும்., மழைக்காலத்தில் நோய் பரப்பும் கிருமிகள் குழந்தையைத் தாக்கும்போது அதை எதிர்த்து போராடக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தைக்கு இருக்க வேண்டும். எனவே மருத்துவர் ஆலோசனையுடன் பருவகால தடுப்பூசியை உரிய நேரத்தில் போடுவது நல்லது.

குழந்தையை எப்படி வெளியே அழைத்துச் செல்லலாம்?

மழைக்காலத்தில் குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலாகிவிட்டது. கட்டாயம் அழைத்துச் சென்றே ஆகவேண்டும் என்றால், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் அழைத்துச் செல்லலாம். ரெயின் கோட், குடை, கொசு விரட்டியில் இருந்து மருந்து மாத்திரைகள் வரை அனைத்து விதமான பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். செல்லும் வழித்தடம், அங்கு அருகில் உள்ள குழந்தை நல மருத்துவர்கள் உள்ளிட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பதும் நல்லது. வழியில் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வழியில் இது சரிவராது எனத் தோன்றினால் உடனடியாக பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்புவது நல்லது. குழந்தையின் நலன் மட்டுமே முக்கியம்.

மேற்கூறியவை அனைத்தும் குழந்தையை மழைக்கால நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவிகரமாக இருக்கும். மேலும் இதில், குழந்தை பிறந்ததுமே அடுத்து வரவிருக்கும் மழைக்காலம் குறித்த புரிதலுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உரிய தடுப்பூசியைப் போட்டுவிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் அதுதான் முதல் பாதுகாப்பே!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null