0 - 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்...

0 - 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்...

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆதலால், அடிக்கடி சளி பிடிக்கும் தொல்லையும் இருக்கத்தான் செய்யும். இது இயல்பு என்றாலும் குழந்தைகள் படும் அவஸ்தையை நம்மால் பார்க்க முடியாது. இதோ குழந்தைகளுக்கான வீட்டு வைத்திய முறைகள். சளி பிடித்திருந்தால் (Home Remedies for cold) என்னென்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் எனப் பார்க்கலாம்.

குழந்தைகளின் சளியை நீக்கும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்

தாய்ப்பால்

0-6 மாத குழந்தைகளுக்கு உணவும் மருந்தும் தாய்ப்பால்தான். சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு என எது இருந்தாலும் தாய்ப்பாலே குழந்தைக்கு மருந்து.

தாய்ப்பாலில் ஆன்டிபாடிஸ் நிறைந்துள்ளன. கிருமி, பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை அழிக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.

முருங்கை இலை எண்ணெய்

அரை கப் சுத்தமான தேங்காய் எண்ணெயை சூடு செய்து, அதில் ஒரு கைப்பிடி முருங்கை இலைகளைப் போட்டு, இலைகள் பொரிக்கும் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இந்த எண்ணெயை குழந்தையின் தலை முடியில் தடவலாம். சளி, இருமல் இருக்கும் சமயத்தில் இந்த எண்ணெயை குழந்தையின் தலையில் தடவுங்கள். இது மிகவும் பழைமையான வீட்டு வைத்தியம்.

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வைத்தியம் இது.

கற்பூரவல்லி

karpooravalli for cold

Image Source : PDTBD

ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயில் ஒரு கற்பூரவல்லி இலையை போட்டு சூடேற்றி, அதன் சாறு எண்ணெயில் இறங்கியதும், வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த எண்ணெயை குழந்தையின் மார்பு பகுதி, முதுகு பகுதியில் தடவி லேசாக மசாஜ் செய்யலாம்.

கைக்குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை செய்யலாம்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

சீரக குடிநீர்

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, குடிநீரில் சீரகத்தை போட்டு காய்ச்சி, அதை இளஞ்சூடாக அரை டம்ளர் அளவுக்கு கொடுத்து வந்தால் சளி குறையும்.

யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய்

குழந்தையின் காதுக்கு பின்புறம், தொண்டை, நெஞ்சு பகுதி, முதுகுப் பகுதி ஆகியவற்றில் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெயை லேசாகத் தேய்த்து விடலாம்.
கைக்குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை செய்யலாம்.

ரசம் சாதம்

rasam rice for cold

Image Source : BetterButter

நம் வீட்டில் வைக்கும் ரசத்தில் மிளகு, சீரகம் சேர்க்கப்படுகிறது. சளி இருமலுக்கு ரசம் சிறந்த மருந்து. சாதத்தை கூழாக மசித்து ரசம் ஊற்றி குழந்தைக்கு ஊட்டி விடலாம். இதை 7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம்.

இதையும் படிக்க : பஞ்சமூட்டக்கஞ்சி… குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் வீட்டு மருத்துவம்…

கஷாயம்

மிளகு – 2, சீரகம் – அரை டீஸ்பூன், வெல்லம் தூள் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 1 டம்ளர். தண்ணீரில் இதைப் போட்டு காய்ச்சி 10 நிமிடங்கள் சூடேற்றி நிறுத்திவிடவும். காலை, மதியம், மாலை, இரவு என 2 டீஸ்பூன் இதைக் குழந்தைக்கு கொடுக்கலாம். சளி, இருமல் நீங்கும். 7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம்.

எண்ணெய் மசாஜ்

அரை கப் தேங்காய் எண்ணெயில், சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்து இரண்டு லேயர்கள் பிரித்தால் சின்னதாக ஒரு பாகம் இருக்கும். அதை எடுத்துக் கொண்டு தேங்காய் எண்ணெயில் போடவும்.

மேலும், அதில் 3 துளசி இலைகள், ஒரு சிட்டிகை கற்பூரம் ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெயில் போட்டு சூடேற்றி நெஞ்சு பகுதி, முதுகுப் பகுதி, அக்குள் பகுதி, கழுத்து பகுதி ஆகியவற்றில் தேய்த்து லேசாக மசாஜ் செய்ய சளி நீங்கும்.

கைக்குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை செய்யலாம்.

இஞ்சி – தேன்

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வீட்டு வைத்தியம். துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், அதனுடன் தேன் கலந்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு குழந்தைக்கு கொடுக்கலாம்.

லெமன் – தேன்

இளஞ்சூடான தண்ணீரில் எலுமிச்சை பாதி பழத்தைப் பிழிந்து கொள்ளவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, அரை டம்ளர் அளவுக்கு கொடுக்கலாம். இது ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வைத்தியம்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 15 உணவுகள் 

சூப்

9 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் தக்காளி சூப், காய்கறி சூப், சிக்கன் சூப் வைத்துக் கொடுக்க சளி குறையும்.

இஞ்சி காபி

ginger tea for cold

Image Source : Aroma Inbox

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

  • தண்ணீர் – 1 கப்
  • இஞ்சி துண்டு – 2
  • துளசி – 2
  • ஏலக்காய் – 1
  • மிளகு – 3
  • கிராம்பு – 2
  • வெல்லம் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீரில் இவை எல்லாவற்றையும் போட்டு காய்ச்சவும். முக்கால் டம்ளர் அளவு சுண்டியதும், வடிகட்டி இளஞ்சூடாக குழந்தைக்கு கொடுக்கலாம்.

சளி, இருமல் இரண்டையும் விரட்டும்.

சுக்கு காபி

  • சுக்கு – 1 துண்டு
  • துளசி – 7 இலைகள்
  • மிளகு – 2
  • தண்ணீர் – 1 கப்
  • கருப்பட்டி – தேவைக்கு ஏற்ப

சுக்கையும் மிளகையும் பொடித்துக் கொள்ளுங்கள்.

தண்ணீரில் கருப்பட்டி போட்டு காய்ச்சுங்கள். பின்னர் அதில் பொடித்து வைத்த சுக்கு, மிளகு சேர்க்கவும். 2 நிமிடங்கள் கழித்து துளசி இலைகளையும் சேர்க்கவும்.

நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, வடிகட்டி, இளஞ்சூடாக குழந்தைக்கு தரலாம்.

இதையும் படிக்க : குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் 15 உணவுகள் 

பட்டை – தேன்

8 மாத குழந்தைகளுக்கான வைத்தியம். ஒரு டீஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்க சளி நீங்கும்.

நெய் – மிளகு

ghee for babies cold

Image Source : Conscious lifestyle mag

ஒரு டீஸ்பூன் காய்ச்சிய நெய்யில் – ஒரு சிட்டிகை மிளகு தூள் போட்டு, அதைக் குழந்தைக்கு கொடுக்கலாம். 7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம்.

சுக்கு – திப்பிலி மிக்ஸ்

சுக்குவும் திப்பிலியும் தனி தனியாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இது இரண்டையும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து தேன் அல்லது கருப்பட்டி தூளுடன் கலந்து குழந்தைக்கு ஊட்டிவிடவும்.

சளி வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

யாருக்காவது சளி பிடித்திருந்தால், குழந்தையை அவர்களிடமிருந்து தள்ளி வைத்துப் பாதுகாக்கவும்.

எப்போது குழந்தையை தூக்கினாலும் கொஞ்சினாலும் உணவு ஊட்டினாலும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்கவும். குழந்தையிடம் செல்பவர்கள் சுத்தத்தை பராமரிப்பது முக்கியம்.

குழந்தை முட்டி போடுவது, ஓடுவது, தவழுவது என இருந்தால், கைகளே கீழே வைத்துவிட்டு வாயில் கை வைத்தால் உடனே கவனித்து கையை வாயிலிருந்து எடுத்துவிடுங்கள். தரையை சுத்தமாக வைத்திருங்கள்.

ஸ்பான்ஞ் பொம்மைகளை தூசு, அழுக்கில்லாமல் சுத்தமாக பராமரியுங்கள். குழந்தைகளின் பொம்மைகளை அவசியம் கழுவுங்கள்.

அதிக கூட்டம் இருக்கும் இடங்களுக்கு, குழந்தைகளை அழைத்து செல்லாதீர்கள்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null