குதிகால் வெடிப்பு சரியாக வீட்டு வைத்திய குறிப்புகள்

குதிகால் வெடிப்பு சரியாக வீட்டு வைத்திய குறிப்புகள்

நாம் அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வெடிப்பு. குறிப்பாக பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் வீட்டு வேலைகளில் இருந்து, அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனால், குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது. இது, பெரிய அளவில், பாதிப்பு எதையும் ஏற்படுத்தாவிட்டாலும் அவ்வப்போது அதிகப்படியான ரத்தம் வெளியேறுவது, கடுமையாக வலி ஏற்படுத்துவது போன்ற பல தொந்தரவுகளைக் கொடுக்கும். இதை எப்படி எதிர்கொள்வது? எப்படி வெடிப்பு வராமல் தடுப்பது? வந்தால் என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் என்பது பற்றியெல்லாம் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு ஏற்பட பெரும்பாலும் வறட்சி காரணமாக இருக்கிறது. இது தவிர பல காரணங்கள் இருக்கின்றன. இரண்டு கால்களின் அடிப்பகுதியில் லேசாக வெடிப்பு ஏற்படும். தொடக்கத்தில் இதை கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால், அது தீவிரமாகி, ரத்தம்

வெளியேறத் தொடங்கிவிடும். பின்னர் இதனால் நடக்கவே முடியாத சூழல்கூட ஏற்படும். குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணம் நபருக்கு நபர் மாறுபடும். எல்லோருக்கும் ஒரே காரணம் என்று பொதுவாகக் கூறி விட முடியாது.

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். பாதம் வெளியில் அதிகம் தெரிவதாலும் நடக்கும்போது, அதிகம் அழுத்தத்தை சந்திப்பதாலும் வெடிப்பு ஏற்படுகிறது. மேலும், உடல் வெப்பம் கால் வழியே இறங்கும்போது பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் குறைந்து, வறட்சியாகி, வெடிப்பை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள்

குதிகால் வெடிப்பைப் பொருத்தவரை பின்வரும் அறிகுறிகள் மிகவும் முக்கியமானவை.

  • தோல் மெலிதல்
  • அரிப்பு
  • லேசான வலி
  • தோல் சிவந்துபோதல்
  • வீக்கம் ஏற்படுதல்
  • சிறு புண்

உள்ளிட்டவை முக்கியமான அறிகுறிகளாக இருந்தாலும், காலில் கவனம் செலுத்தாதவர்களால் இதை அறிய முடியாது. அவர்களுக்கு கண்களால்

பார்க்கும்போதுதான் தெரிய வரும்.

முக்கிய காரணங்கள்

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாக அதிகப்படியான தண்ணீர் பயன்பாடு, உடல் பருமன், ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ளிட்டவை இருக்கின்றன.

தண்ணீர் பயன்பாடு

நீரில் அதிக நேரம் கால்களை ஊறவைத்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதன் காரணமாக கூட, கால்களில் வெடிப்புகள் ஏற்படும். இதனால் தான் துணிதுவைக்கும் பெண்களுக்கு கால்களில் அதிகளவு குதிகால் வெடிப்புகள் ஏற்படுகிறது. துணி துவைப்பது, பாத்திரம் கழுவவது என வெகு நேரம் நீருடன் புழங்குவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த வேலையெல்லாம் செய்யாதவர்களுக்கும் வருகிறதே என நினைக்க வேண்டாம். அதிக நேரம் குளிப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படும்.

செருப்பு போடாமல் நடப்பது

சிலருக்கு, செருப்பு அணியும் பழக்கம் இருக்காது. வெறும் காலில் நடப்பதை நன்மையாகவும், சுகமாகவும் கருதுவர். காலணிகள் அணியாமல் எப்போதும் வெறும் காலில் நடந்தால், அது காலில் வறட்சியை அதிகரிப்பதுடன், எளிதாக கிருமிகளையும் காலுக்குள் அனுமதிக்கும். இதனால், கால்களில் அதிகளவு வெடிப்புகள் ஏற்படும். மேலும் இது அதிக வலியையும் ஏற்படுத்தும்.

உடல் பருமன்

உடல் எடை அதிகம் இருந்தால், கால் அதனை தாங்காது. உடல் பருமன் உள்ள பெண்கள் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும் பட்சத்தில், காலில் அழுத்தத்தை ஏற்படுத்தி பாதத்தில் வெடிப்பை ஏற்படுத்தும். சில கர்ப்பிணிகளுக்கும் உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக இந்தப் பிரச்சனை ஏற்படும்.

உடல்நல குறைபாடு

ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு உடலில் போதுமான ஊட்டச்சத்துகள் இல்லாத நிலை ஏற்படும். இதனால்கூட குதிகால் வெடிப்பு ஏற்படும். நீரழிவு, தைராய்டு, தோல் நோய்கள் ஆகிய பாதிப்பு உள்ளவர்களுக்கு குதிகால் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயதானவர்களுக்கு உடலில் ஊட்டச்சத்து குறைவதால், குதிகால் மட்டுமின்றி பாதம் முழுவதும் வெடிப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் மிக அதிகம்.

பொருந்தாத செருப்பு

விலை குறைவான, காலுக்கு பொருந்தாத செருப்புகளை அணிவதாலும் குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது. உடல் பருமன் இல்லாதவர்களுக்கும் இது பாதத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால், குதிகால் வெடிப்பு ஏற்படும்.

குதிகால வெடிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?

1.எல்லா பிரச்சனைகளுக்கும் முதல் தீர்வு ஆரோக்கியமான உணவுகள்தான். தினசரி ஒரே உணவை எடுத்துக்கொள்ளாமல், சரிவிகிதத்தில் அனைத்து ஊட்டச்சத்துகளும், தாது உப்புக்களும், மினரல்களும் கிடைக்கும் படியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் உணவில் மிக கவனமாக இருக்க வேண்டும். வேலை பளு, மாதவிடாய் உள்ளிட்ட பல காரணங்கள் உடலை பலவீனப்படுத்திவிடும்.

2.பாத சருமத்தை மென்மையாக்க, வெடிப்பு வராமல் பராமரிக்க, பாதங்களை அவ்வப்போது வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

3.குளிக்கும்போது கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கலாம். இதனால் பழைய செல்கள் நீங்கி புதிய செல்கள் வளர்ச்சியடையும். மேலும் குளிக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளவும். மற்றவகைகளில் நீருடன் செலவிடும் நேரத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

4.பெடிகியூர், மீன் பெடிகியூர் ஆகியவற்றை செய்யலாம். அல்லது மீன் உள்ள ஏரி குளங்கள் பக்கம் சென்றால், காலை சில நிமிடங்கள் மீன்களிடம் கொடுக்கலாம். அவை காலில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை சாப்பிட்டுவிடும். இதனால், காலில் உள்ள செல்கள் புதிது புதிகாக வளர்ந்து, வறட்சி ஏற்படும் சூழலில் அதை எதிர்கொண்டு பாதிக்கப்படாமல் இருக்கும்.

5.பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீம் பயன்படுத்தலாம். இதனை கால் பாதங்களில் தடவி, 20 நிமிடங்கள் வரை ஊற வைத்தால், கால் பாதங்கள் மிருதுவாக இருக்கும்.

6.அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பதாலோ தொடர்ச்சியாக நடப்பதாலோ கால், உடல் எடை முழுவதையும் அதிக நேரம் தாங்க வேண்டியிருக்கும். இதனால் பாதத்தில் அழுத்தம் அதிகரித்து குதிகால் வெடிப்பு ஏற்படும். இதைத் தடுக்க நிற்பதையும் நடப்பதையும் முடிந்த வரை குறைத்துக்கொள்ள வேண்டும். பாதத்தின் அழுத்தத்தை உள்வாங்கும் வகையிலான ஷூ மற்றும் செருப்பு அணிவதன் மூலமும் இதனைத் தடுக்கலாம்.

7.சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு, காயம் ஏற்பட்டால் அது எளிதில் ஆறாது. நாளடைவில் பெரிதாகி அந்த பாகத்தையே வெட்டி எடுக்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம். இதனால், தினசரி காலில் வெடிப்பு ஏதும் ஏற்படுகிறதா அதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை சோதித்துக்கொள்ள வேண்டும்.

8.நிரழிவு நோயாளிகள் மீன் சிகிச்சையோ, கல்லைக் கொண்டு செல்களை நீக்குவதோ தவிர்க்க வேண்டும். கவனக்குறைவால் ஏதேனும் காயம் ஏற்பட்டுவிட்டால், அதை குணப்படுத்துவது மிகப்பெரிய தலைவலியாகி விடும். சில நேரங்களில் அதுவே கூட எமனாக ஆனாலும் ஆகலாம்.

9.உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். தினசரி அதிகப்படியான நீர் குடிப்பது, உடல் சூட்டை தணிக்கும் வகையிலான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் காலில் ஈரப்பதம் குறைவதை தடுக்க முடியும்.

சிகிச்சை முறை

குதிகால் வெடிப்பைப் பொறுத்தவரை தொடக்க நிலையிலேயே சிகிச்சையளிக்கத் தொங்குவது நல்லது. வெடிப்பு அதிகமாகி அதிக அளவில் ரத்தம் வெளியேறத் தொடங்கினால், அதை குணப்படுத்துவது கடினம். அதாவது, ஒரு கையில் காயம் என்றல், குணமாகும் வரை இன்னொரு கையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், கால் எந்த நிலையில் இருந்தாலும் அதைப் பயன்படுத்தி நடந்துதான் ஆக வேண்டும். இதனால், அழுத்தத்தை சந்திக்கவேண்டியிருப்பதால், குதிகால் வெடிப்பு உடனடியாக குணமடையாது.

பப்பாளி பழம்

குதிகால் வெடிப்பு ஏற்பட்டவர்கள், பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகும்.

மருதாணி

கைகளுக்கு மருதாணி வைப்பது போல, கால்களுக்கும் மருதாணி வைக்கலாம். அல்லது மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.

உப்பு மற்றும் எலுமிச்சை

குதிகால் வெடிப்பு மறைய கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.

அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் குளிக்கப் பயன்படுத்தப்படும் நாரைக் கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். குதிகால் வெடிப்பும் படிப்படியாக குணமாகும்.

உடற்பயிற்சி

உடல் எடை அதிகமுள்ளவர்கள், உடற்பயிற்சி மற்றும் உணவு முறை மூலம் உடல் எடையை குறைக்க வேண்டும். சிறிது துரம் நடந்தாலே உங்கள் கால் வலிக்கிறது என்றால், உடல் எடையை கால் தாங்கவில்லை என்று அர்த்தம். உடனடியாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். காலில் அழுத்தம் ஏற்படுத்தாத அளவுக்கு உடல் எடையை பராமரிப்பது சிறந்தது.

காலுறை

கடைகளில், சிலிக்கான் ஜெல் காலுறை கிடைக்கிறது. இதை வாங்கி அணிவதன் மூலமும் குதிகால் வெடிப்பை குணப்படுத்தலாம்.

கிரீம்

அயில்ன்மெண்ட்களைப் பயன்படுத்தலாம். வெவ்வேறு மருந்து நிறுவனங்கள் இதற்கான பிரத்யேக ஆயில்ன்மெண்ட்களை தயாரிக்கின்றன. இவற்றை தடவிவிட்டு இதற்கான ஷூக்களை அணிந்துகொள்ளலாம். காலை இது பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

இயற்கை மருந்துகள்

ஆயில்ன்மெண்ட்களைத் தவிர இயற்கையான பொருட்களையும் தடவலாம்.

அவற்றில் சில,

  • வினிகர்
  • ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்
  • வாழைப்பழம்
  • பாராஃபின் மெழுகு

இவற்றை குதிகால் வெடிப்பு குணமாகும் வரை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரலாம். விரைவில் பலன் தெரியும்.

தேங்காய் எண்ணெய்யை

தேங்காய் எண்ணெய்யை தினசரி காலில் தடவி உலர வைப்பதன் மூலம் காலில் ஈரப்பதத்தை அதிகரிக்க முடியும். மேலும் காலில் தேங்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும்.

தேன்

தேனில், இயற்கையாகவே வெடிப்பை குணப்படுத்தக்கூடிய அனைத்து குணங்களும் இருக்கிறது. நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய பண்பும் தேனுக்கு இருக்கிறது. இதை காலில் தடவி வந்தால், குதிகால் வெடிப்பு குணமாகும். இரவில் தடவிவிட்டு தூங்குபவர்கள் என்றால், காலை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள், ஒன்று போய் இன்னொன்று வந்ததாக எறும்பு ஏறிவிடப் போகிறது.

ஜெல்

குதிகால் வெடிப்புக்கு, ஆரம்ப நிலையிலேயே பெட்ரோலியம் ஜெல் பயன்படுத்தலாம். இது கால்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும், இதனால் பழைய செல்கள் அழிந்து, குதிகால் வெடிப்பும் குணமாகிவிடும்.

குதிகால் வெடிப்பை வந்த பின் காப்போம் என அலட்சியமாக விட்டு விடாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருமுன் காப்போம் என இருப்பது சிறந்தது. ஏனென்றால் காலில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதற்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்க முடியாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null