சூட்டு கொப்பளம் சரியாக வீட்டு வைத்தியம்!

சூட்டு கொப்பளம் சரியாக வீட்டு வைத்தியம்!

சூட்டு கொப்பளம் பெரும்பாலும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் நேரத்தில் ஏற்படுகின்றது. குறிப்பாக வெயில் காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூட்டுக் கொப்பளங்களால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். மேலும் சூட்டு கொப்பளம் தோலில் தோன்றும் போது பல்வேறு விதமான சங்கடங்களை சந்திக்க நேரிடுகின்றன. இதனால் பல அசௌகரியங்கள் உண்டாகின்றன. சூட்டுக் கொப்பளங்களைப் பற்றி மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், எப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதாகக் குணப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளவும் மேலும் படியுங்கள்;

ஏன் சூட்டு கொப்பளம் ஏற்படுகின்றது?

சூட்டு கொப்பளம் ஏற்பட சில முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், ஓரளவிற்கு ஆயினும் விழிப்புணர்வோடு இருக்க முடியும். இது ஒரு விதமான சரும நோய் தான். இது சருமத்தில் உள்ள மயிர்க்கால்கள் மற்றும் எண்ணெய் சுரப்பிகள் போன்ற பகுதிகளில் பாக்டீரியா உண்டாவதால் அதிகம் ஏற்படுகின்றது. இந்த பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் கட்டி உண்டாகி சில நாட்களில் சீல் ஏற்படும்.

சூட்டுக் கொப்பளம் பொதுவாக முகம், கழுத்து, அக்குள், தோள்கள் மற்றும் பிட்டம் ஆகிய இடங்களில் தோன்றும். இது கண்களிலும் கட்டியாகத் தோன்றும். பெரும்பாலும் இவை உடலின் பல்வேறு இடங்களில் தோன்றும். அப்படித் தோன்றினால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

சூட்டு கொப்பளம் ஏற்பட்டுள்ளதன் அறிகுறிகள்

சூட்டு கொப்பளம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது? இதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் எளிதாக அதனைக் கண்டு பிடித்து உடனடியாக சிகிச்சை செய்து கொள்ளலாம். இந்த சூட்டு கொப்பளத்தைக் குணப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட, உங்கள் அணுகுமுறையே ஒரு முக்கிய தீர்வாக இருக்கும்.

 • இந்த சூட்டுக் கொப்பளம் ஏற்பட்டால், சூட்டுக் கொப்பளம் இருக்கும் இடத்தில் சருமம் பாதிக்கப் பட்டிருக்கும்.
 • இந்த கட்டி சிவப்பாகவும், சுமார் அரை இன்ச் அளவிலும் இருக்கும்.
 • இது சிவந்து, வலி தரக்கூடியதாக இருக்கும்.
 • சில நாட்களிலேயே இந்த கட்டி இளகி ,அதிக வலியை ஏற்படுத்தும். மேலும் அளவிலும் பெரியதாகி விடும்.
 • விரைவில் அதிலிருந்து சீல் வரத் தொடங்கும்.
 • சீல் வரத் தொடங்கி விட்டால், சூட்டுக் கொப்பளம் மோசமான நிலைக்கு வந்து விட்டது என்று அறிகுறி.
 • சில சமயங்களில் வலி அதிகமாகும் போது காய்ச்சல் ஏற்படும்.

சூட்டுக் கொப்பளம் ஏற்பட்டால் என்ன செய்யக் கூடாது?

இந்த சூட்டுக் கொப்பளம் ஏற்பட்டால், அவற்றை உடைத்து விடுவதோ அல்லது கிள்ளி விடுவதோ கூடாது. அவை தானாகக் குணமடைய வேண்டும். அப்படி இல்லாமல் உடைத்து விட்டால், அது மேலும் உடலில் பரவி, அதிகமாகிவிடும் வாய்ப்புள்ளது.

சூட்டுக் கொப்பளம் எந்த இடங்களில் வரும்?

உடலில் அதிக அளவு உராய்வுகள் மற்றும் அழுத்தங்கள் ஏற்படச் சாத்தியம் உள்ள இடங்களில் இவ்வகை சூட்டுக் கொப்பளம் ஏற்படுகின்றன. முகம், அக்குள்கள், இடுப்பு, முதுகு மற்றும் பிட்டம் ஆகிய பகுதிகளில் அதிகம் ஏற்படுகின்றன. இந்த வகை சூட்டுக் கொப்பளம் அதிக வலி நிறைந்ததாகவும் எரிச்சலை உண்டாக்குவதாகவும் இருக்கின்றன.

சூட்டுக் கொப்பளம் குணமாக எவ்வளவு நேரம் தேவைப்படும்?

இவை குறைந்தது 2 நாட்கள் முதல் 3 வாரங்கள் வரை இருக்கும். இதுவே கண்களில் ஏற்பட்டால், கண் கட்டி என்று அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும், இந்த வகை சூட்டுக் கொப்பளங்களைக் குணப்படுத்த மருந்துகள் தேவை இல்லை. உங்கள் வீட்டிலேயே இருக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு குணப்படுத்தி விடலாம்.

எப்போது மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்வது?

சூட்டுக் கொப்பளம் ஏற்பட்டு அதன் தாக்கம் அதிகரிக்கும் போது, நீங்கள் நிச்சயம் மருத்துவ உதவி பெற வேண்டும். ஆனால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. நீங்கள் சரியான நேரத்தில் மருத்துவரை அணுக வேண்டும் என்பதற்கு சில அறிகுறிகள் இங்கே,

 • உங்களுக்குக் காய்ச்சல் வரத் தொடங்கியதும் மருத்துவரை அணுக வேண்டும்.
 • கட்டி பெரிதாகத் தொடங்கியதும் மருத்துவரை அணுக வேண்டும்.
 • சருமம் அதிக அளவு சிவந்து போனாலும் ,கட்டி பெரியதாகத் தொடங்கினாலும் உடனே கவனிக்க வேண்டும்.
 • கட்டி வெகு நாட்கள் கரையாமல் அல்லது உடையாமல் அப்படியே இருந்து விட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
 • உங்களுக்கு நீரழிவு நோய் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால், மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும்.

பெரும்பாலும் கட்டிகளுக்கு உடனடியாக மருத்துவ அவசர சிகிச்சை தேவை இல்லை. எனினும், நீங்கள் அதிகம் பலவீனமாக இருந்தால், மருத்துவரின் உதவி தேவை.

சூட்டுக் கொப்பளத்தை குணமாக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டு இருந்தால், பின் வரும் வீட்டுக் குறிப்புகளைப் பின்பற்றலாம்.

சுடு தண்ணீர் ஒத்தடம்

சூட்டுக் கட்டிகளுக்கு ஒரு நல்ல வீட்டு வைத்தியம் சுடு தண்ணீர் ஒத்தடம்.தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஒரு கனமான பருத்தி துணியில் நனைத்து, நீரைப் பிழிந்து சூடாகக் கட்டி இருக்கும் இடத்தின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கவும். இப்படி ஒரு நாளைக்கு மூன்று முறை என்று ஒரு வாரத்திற்குச் செய்து வந்தால், இந்த சூட்டுக் கட்டிகள் கரைவதை நீங்கள் காணலாம். அப்படிச் செய்யும் போது கட்டிகள் கரையத் தொடங்கினால், அந்த இடத்தை நன்கு சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

தேயிலை மர எண்ணெய்

இந்த தேயிலை மர எண்ணெய்க்கு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. இது உங்களுக்கு இருக்கும் பாக்டீரியா நோய் தொற்றை எளிதில் போக்கி விட உதவும். மேலும் பிற சரும பிரச்சனைகளையும் இது போக்க உதவும். சில துளி தேயிலை மர எண்ணெய்யைத் தேங்காய் எண்ணெய்யோடு சேர்த்து, பாதிக்கப் பட்ட இடங்களில் ஒரு பஞ்சால் நனைத்து வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு மூன்று முறையாவது செய்து வந்தால், விரைவில் குணமடைந்து விடும்.

மஞ்சள் தூள்

இது எளிதாக அனைவரது வீடுகளிலும் கிடைக்கும் பொருளாகும். மஞ்சளுக்கு பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது. மஞ்சளைச் சிறிது நீரில் குழைத்துப் பாதிக்கப் பட்டுள்ள இடத்தில் பூசவும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கட்டி உடைந்து குணமாகி விடும். இந்த மஞ்சள் தூளுடன், சிறிது இஞ்சியை அரைத்துச் சேர்த்துத் தடவினால் விரைவில் குணமாகி விடும்.

விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய்

இவை இரண்டையும் அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கட்டி இருக்கும் இடத்தில் தொடர்ந்து தேய்த்துக் கொண்டு வந்தால், கட்டி விரைவில் உடைந்து சரியாகி விடும். இது ஒரு நல்ல இயற்கையான தீர்வும் கூட.

வேப்பம் இலை

நீங்கள் வேப்பம் இலைகளைச் சிறிது பறித்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து, கட்டி இருக்கும் இடத்தில் பூசவும். இப்படித் தேய்த்து வந்தால், சூட்டுக் கொப்பளம் விரைவாகக் குணமடையும்.

கல் உப்பு

இது மற்றுமொரு சிறந்த நிவாரணி ஆகும். சிறிது கல் உப்பைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால், கல் உப்பை நன்கு தூள் ஆகி, சிறிது தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் கலந்து நன்கு குழைத்து, கட்டி இருக்கும் இடத்தில் தடவி வந்தால், இந்த கட்டி விரைவில் குணமடைந்து விடும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகள் மட்டும் அல்லாது, நீங்கள் மேலும் சில விசயங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். எப்போதும் கொப்பளம் ஏற்பட்டுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை, சூட்டுக் கொப்பளம் ஏற்பட்டுள்ள இடத்திற்குப் பாதிப்பு உண்டாகும்படி அமருவதோ, படுப்பதோ கூடாது. இப்படிப் பாதுகாப்புடன் நடந்து கொண்டால், விரைவில் சூட்டுக்கட்டி குணமடைந்துவிடும்.

இதையும் படிக்க : வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null