மார்பக காம்பு/ நிப்பிள்  வறட்சி & புண் குணமாக வீட்டு வைத்தியம்

மார்பக காம்பு/ நிப்பிள் வறட்சி & புண் குணமாக வீட்டு வைத்தியம்

தாய்மை அடைந்த பெண்களுக்கு முதல் முறையாகக் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் அனுபவம் ஏற்படும். இந்தச் சமயத்தில் பொதுவாகவே எல்லா தாய்மார்களுக்கும் மார்பக மூலைக் காம்பு பகுதி மிருதுவான தன்மையில் இருக்கும். அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இது வெறும் சில நாட்களுக்கு மட்டுமே. அதற்குப் பின் முலைக்காம்பு பகுதியின் மிருது தன்மை குறைந்துவிடும். அந்த மாதிரியான சூழலில் தாய்ப்பால் புகட்டும் பெண்கள் படும் வேதனையை வார்த்தையால் விவரிக்க முடியாது. அந்த வலி மிகவும் கடுமையானதாக இருக்கும்.

மார்பக முலைக் காம்புகள் வறண்டு போய் புண் ஏற்பட்டுவிடும். மேலும் குழந்தைப் பால் அருந்தும் பொழுது இந்த வலி அதிகமாகும். இந்தப் பதிவில் மார்பக முலைக் காம்புகள் வறண்டு போய் புண் ஏற்பட என்ன காரணம்? என்பதைப் பற்றியும், இதற்கான எளிமையான வீட்டு வைத்திய குறிப்புகள் என்ன? என்பதைப் பற்றியும் தெளிவாகப் பார்க்கலாம்.

மார்பக காம்பில் புண்கள் ஏற்பட என்ன காரணம்?
1.குழந்தையைச் சரியான நிலையில் பிடித்து தாய்மார்கள் தாய்ப்பால் புகட்ட வேண்டும். தவறான நிலையில் குழந்தையை அணைத்து தாய்ப்பால் புகட்டும் பொழுது முலைக்காம்புகளில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

2.இதற்குக் காரணம் குழந்தையின் வாய் பகுதி தவறான நிலையில் தாயின் மார்பு பகுதியைக் கவ்வி இருப்பதுதான். இதனால் அந்தப் பகுதியில் உராய்வு ஏற்பட்டு புண்கள் வரும்.

3.இதனால் பாலூட்டும் நேரம் முழுவதுமே வலி இருந்த வண்ணம் இருக்கும்.

4.மேலும் சில குழந்தைகள் தாயின் மார்பு பகுதியை இறுக்கமாகக் கவ்வி இழுப்பார்கள். இதனால் கூட புண் ஏற்பட்டு விடும்.

5.இது தவிரக் குழந்தைப் பிறந்த பிறகு ,தாய்மார்களுக்கு மார்பகங்கள் பால் வரத்தால் சற்று பெரிதாகக் காணப்படும். இதனால் மார்பகங்களில் தோல் பகுதி சற்று விரிவடையும். இதன் மூலம் மார்பக பகுதி & முலைக்காம்புகளில் வறட்சி காணப்படும்.

6.வறண்ட பகுதிகளில் இயல்பாகவே புண் ஏற்பட்டு விடும்.|ஈரப்பதம் முற்றிலும் போய் விட்ட நிலையில் தோலில் வெடிப்புகளும், புண்களும் அதிகமாகும்.

இந்த வேதனையும், வலியும் தாய்மார்களின் பால் புகட்டும் இனிய அனுபவத்தை கசப்பானதாக மாற்றிவிடும். சில தாய்மார்கள் இதற்குப் பயந்து கொண்டு தாய்ப்பால் தருவதை நிறுத்திவிடுகின்றார்கள். இது முற்றிலும் தவறு. இதற்காக உள்ள தீர்வுகளைப் பின்பற்றி பிரச்சனையைச் சீர் செய்ய வேண்டும். தாய்ப்பாலை நிறுத்துவது வழி கிடையாது. மேலும் புண் இருக்கும்போதும் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டலாம். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது.

மார்பக முலைக்காம்பு வறட்சி & புண் குணமாக வீட்டு வைத்திய குறிப்புகள்

வீட்டிலிருக்கும் எளிய பொருட்களை வைத்தே இந்தச் சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாமே.

வாருங்கள்! அவை என்ன? என்று பார்க்கலாம்.

கற்றாழை

கற்றாழையின் தோல் பகுதியை நீக்கினால் உள்ளே வளவளப்பான (ஜெல்) பகுதி காணப்படும். இந்த ஜெல் பகுதியை மார்பக காம்புகளில் தடவிக்கொள்ள வேண்டும். கற்றாழைக்கு ஈரப்பதத்தை ஏற்படுத்தும் தன்மை இயற்கையாகவே அதிக அளவு உள்ளது. இதனால் அங்கு ஏற்பட்ட வறட்சி தன்மை நிவர்த்தியாகும். கற்றாழையின் மற்றொரு சிறப்புக் குணம் புண்களை ஆற்ற உதவும் குணம். ஆக இதைத் தினமும் தடவிக் கொள்வதன் மூலம் முலைக் காம்புகளின் ஏற்பட்ட புண்கள் குணமடையும்.

வெண்ணெய

நல்ல தரமான வெண்ணெய்யை எடுத்துக் கொண்டு புண் ஏற்பட்ட பகுதியில் தடவவும். இது வெடிப்புகளை குணப்படுத்தப் பெரிதும் உதவும். மேலும் புண்கள் மூலம் ஏற்படும் வலி குறைந்து தாய்மார்களுக்குச் சற்று நிம்மதியான சூழலை ஏற்படுத்தும்.

ஐஸ் கியூப்

புண்ணான மார்பு & முலைக் காம்பு பகுதியில் வலி அதிகமாகக் காணப்படும். இதற்கு ஐஸ் கட்டி ஒத்தடம் நல்ல பலனைத் தரும். ஒரு பருத்தி துண்டின் உள்ளே சிறிதளவு ஐஸ் கட்டிகளை எடுத்துச் சுற்றிக் கொள்ளவும். இதனை சுமார் பத்து நிமிடம் வரை முலைக்காம்பு பகுதியில் வைத்து ஒத்தடம் தரவும். இதைத் தினம் மூன்று நான்கு தடவை செய்து வரவும். இது வலியிலிருந்து சற்று நிவாரணம் அடைய உதவும்.

சுத்தத்தைக் கடைப்பிடியுங்கள்

தாய்மார்களுக்கு இந்தப் பிரச்சனை வராமல் இருக்கச் சுத்தம் மிக முக்கியமானது. தரமான மற்றும் மென்மையான துணியால் உருவான உள்ளாடைகளை அணிவது நல்லது. மிதமான டிடர்ஜென்ட்களைக் கொண்டு துணிகளை அலசி எடுக்கவும். இந்த டிடர்ஜென்ட் கூட மார்பக முலைக்காம்புகளில் புண்களை ஏற்படுத்த வழி வகுக்கும். இதற்குக் காரணம் துணியில் டிடர்ஜென்ட் மூலம் தேங்கிய ரசாயனம் தான்.

தாய்ப்பாலைத் தடவுங்கள்

தாய்ப்பால் ஒரு சிறந்த மருந்தாகும். தாய்ப்பால் இயற்கையாகவே புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. கிருமித் தொற்றுகளை அளிக்கும் குணம் கொண்ட தாய்ப்பால் மார்பக காம்புகளில் உள்ள புண்கள் மற்றும் வறட்சி தன்மையைக் குணமடையப் பெரிதும் துணை புரிகிறது. தாய்மார்கள் தினம் ஐந்தாறு முறை தாய்ப்பாலை மார்பக காம்பு பகுதியில் தடவிக்கொள்ளலாம். இது மிகவும் எளிமையான மற்றும் பலனளிக்கக் கூடிய சுலபமான வழியாகும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சருமத்தை மிருது அடைய செய்யும் குணம் கொண்டது. புண் ஏற்பட்ட பகுதிகளில் தினம் மூன்று நான்கு தடவைகள் தேங்காய் எண்ணெய்யைத் தடவிக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தோலின் வறட்சி நீங்கி புண்கள் விரைவில் ஆறும். கடைகளில் கிடைக்கும் கலப்படத் தேங்காய் எண்ணெய்களைத் தவிர்க்கவும். செக்கில் ஆட்டிய தூய்மையான தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துவதன் மூலமே உரியப் பலன் கிடைக்கும் என்பதைத் தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பால் கொடுக்கும் நிலை

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது குழந்தையின் வாய் , நிப்பிள் பகுதியை முழுவதுமாக கவ்வி உள்ளதா என்பதைச் சரி பார்க்கவும். உங்கள் கையைக் குழந்தையின் தலை பகுதியில் வைத்து , அவன்/அவள் இடம் நகராத வகையில் பற்றிக் கொள்ளவும். தாய்ப்பால் புகட்டும் பொழுது குழந்தையைத் தொட்டில் நிலையில் பிடித்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இதுவே சிறந்த நிலையாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்பட்டால் குழந்தையின் தலைப் பகுதிக்கு உரியப் பிடிமானத்தைத் தரத் தலையணையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காற்றோட்டம் அவசியம்

மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியும்போது போதிய காற்றோட்டம் கிடைக்காது. பால் புகட்டும் தாய்மார்கள் சற்று தளர்வான ஆடைகளை உடுத்துவது நல்லது. இதன் மூலம் உடல் பகுதிகளுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்கும். ஆகப் புண்களும் விரைவில் ஆறும்.

ஆலிவ் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யை போலவே ஆலிவ் எண்ணெய்யும் புண்களை ஆற்ற உதவும். ஆலிவ் எண்ணெய்யை உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு விரல்களைக் கொண்டு மார்பக முலைக்காம்புகளில் மசாஜ் செய்ய வேண்டும். இது நல்ல பலனைத் தரும்.

துளசி இலைகள்

தேவையான அளவு துளசி இலைகளைப் பறித்து சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை நிப்பிள் பகுதியில் தடவிக் கொள்ளவும். இதைத் தொடர்ந்து தினமும் செய்து வரவும். துளசி இலையை மார்பக காம்புகளில் ஏற்பட்ட வறட்சியையும் புண்களையும் குணப்படுத்தும் சிறப்புத் தன்மைப் பெற்றது.

விட்டமின் சி

குழந்தைப் பேறு அடைந்த தாய்மார்கள் விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இது சருமத்தில் ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய உதவும். ஆரஞ்சு பழங்கள் ,எலுமிச்சை பழம் , கிவி ,கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி, பசலைக்கீரை, தக்காளிப் பழங்கள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முட்டைகோஸ், பூக்கோசு, திராட்சைப் பழம் போன்ற உணவுகளில் நிறைவான அளவு விட்டமின் சி உள்ளது. பாலூட்டும் தாய்மார்கள் இந்த உணவுகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவரை அணுகவும்

சாதாரண அளவில் இருக்கும்பட்சத்தில் மேலே சொன்ன வீட்டுக்குறிப்புகள் பயனளிக்கும். அதே சமயம் புண்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது சிறந்தது. அவர் பரிந்துரைக்கும் களிம்புகளைத் தடவி வர வேண்டும். கூடுதலாக மற்ற ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதே தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டும். பால் தருவதற்கு முன் நிப்பிள் பகுதியைச் சுத்தப்படுத்திக் கொள்வது மிகவும் உகந்தது.

மேலே சொன்ன வீட்டு வைத்திய குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயன்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம். வலியும் வேதனையும் இன்றி, தாய்ப்பால் புகட்டுவது

ஒரு சுகமான பயணமாக எல்லா தாய்மார்களுக்கும் இருக்கட்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null