குழந்தைகளை நன்கு சாப்பிட வைக்க என்ன வழிகள்?

குழந்தைகளை நன்கு சாப்பிட வைக்க என்ன வழிகள்?

அனைத்து தாய்மார்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, தங்கள் குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவதில்லை என்பது தான். வேடிக்கையாகச் சொல்வதானால் இந்த உலகில் எந்தக் குழந்தை தான் தனது தாயை இம்சை செய்யாமல் சாப்பிடுகின்றது! ஒவ்வொரு நாளும் குழந்தைகள் சாப்பிடுவதற்குள் வீடே இரண்டாகி விடுகிறது என்பது உண்மை. அதிலும் பல சமயம் என்ன செய்தும் குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவது இல்லை.

இது எதாவது ஒரு நாள் என்றால் பரவாயில்லை. ஆனால் இதுவே தொடர் கதை என்றால், பெற்றோர்கள் இதை எண்ணி அதிகம் வருத்தப்படத் தொடங்கி விடுகின்றனர். குறிப்பாகப் பெற்றோர்கள் இதனால் தங்கள் குழந்தைக்கு ஏதாவது பாதிப்போ அல்லது உடல் நலப் பிரச்சனையோ ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகின்றனர்.

குழந்தைகள் சரியாகச் சாப்பிடாமல் போனால் என்ன பிரச்சனைகள் வரும்?

குழந்தைகள் வளரும் பருவத்தில் சரியாகச் சாப்பிடவில்லை என்றால், அவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு, உடல் எடை குறைவு. இதனால் அவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியும் குறையத் தொடங்கும். மேலும் பல பிரச்சனைகளும் நாளடைவில் சத்துக் குறைபாட்டால் ஏற்படத் தொடங்கி விடும். அதனாலேயே, அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தை சரியாகச் சாப்பிடவில்லை என்றால் வருத்தப் படுகின்றனர்.

குழந்தைகளுக்குப் பசியின்மை ஏற்படக் காரணம் என்ன?

உடல் நலக்குறைவு!

பொதுவாகக் குழந்தைகளுக்கு உடலில் ஏதாவது நோய், வயிற்றில் பிரச்சனை
அல்லது வயிற்றுப் போக்கு போன்று ஏதாவது இருந்தால், குழந்தையால் சரியாக
சாப்பிட முடியாமல் போகலாம். பசியின்மை அதிகரிக்கலாம்.

மன அழுத்தம்

குறிப்பாகக் குழந்தைகளுக்கு குடும்பத்தைச் சேர்ந்த யாராவது நபர்களுடன் அல்லது
உடன் விளையாடும் நண்பர்களுடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அது
அவர்களது மனதைப் பாதித்து, பெரிய அளவில் மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடும். இதனால் சாப்பிட வேண்டும் என்கின்ற உணர்வு அவர்களுக்குக் குறைந்து
விடுகின்றது.

கவலை

வீட்டில் நீங்களோ அல்லது பள்ளியில் ஆசிரியரோ எதிர்பாராத விதமாக அவர்களைக் கண்டிக்கும் வகையில் ஏதாவது சொல்லி விட்டாலோ, அல்லது அவர்களுக்குப் பிடித்த விசயத்தைச் செய்வதற்குத் தடை விதித்தாலோ, அவர்களுக்குக் கவலை ஏற்படும். இதனால் அவர்கள் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.

சத்தான உணவு

குழந்தைகளுக்குச் சரியான சத்தான உணவு சரியான நேரத்தில் கிடைக்கவில்லை
என்றாலும், நாளடைவில் இவ்வாறான பசியின்மை பிரச்சனை ஏற்படுகின்றது.

சூழல்

ஒரு குழந்தைக்கு அவன் வளரும் பருவத்தில் சரியான சூழல் தன்னை சுற்றி
அமையவில்லை என்றாலும், அவனுக்குச் சாப்பிடும் உணர்வு குறைந்து விடும்.

மருந்து

உங்கள் குழந்தைக்கு ஏதாவது உடல் நலப் பிரச்சனைகளால் மருந்துகள்
கொடுக்கின்றீர்கள் என்றால், அவர்களுக்குப் பசியின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மலச் சிக்கல்

குழந்தைகளுக்குச் சரியாக மலம் வெளியேற வில்லை என்றாலோ அல்லது மலச்
சிக்கல் ஏற்பட்டாலோ அவர்களுக்குப் பசிக்காது. இதனால் அவர்கள் சாப்பிடுவதைக்
குறைத்துக் கொள்வார்கள்.

நொறுக்குத் தீனி

உங்கள் குழந்தைக்கு நீங்கள் அதிகம் நொறுக்குத் தீனி கொடுக்கின்றீர்கள் என்றால், பின் எப்படி அவனுக்குப் பசி ஏற்படும். நொறுக்குத் தீனி பசியின்மைக்கான முக்கிய காரணம்.

அதிகம் நீர் அருந்துவது

உங்கள் குழந்தை எப்போதும் அதிகம் நீர் மற்றும் பழச்சாறு அருந்திக் கொண்டே
இருந்தால், பசி எடுக்கும் வாய்ப்பு குறைந்து விடும்.

கவன சிதறல்

உங்கள் குழந்தை சாப்பிடும் போது தொலைக்காட்சி அல்லது நண்பர்களுடன்
விளையாடிக் கொண்டே சாப்பிடுவது என்றிருந்தால், அவனுக்குப் பசி எடுக்காமல்,
சரியாகச் சாப்பிடவும் மாட்டான்.அதனால் இது போன்ற விசயங்களை முற்றிலுமாக
தவிர்க்க வேண்டும்.

உணவின் மீது வெறுப்பு

குழந்தைகள் சில காரணங்களால் தங்களுக்கு பிடித்தமான உணவு தட்டில் முன் இருந்தாலும், அந்த உணவின் மீது வெறுப்பைக் காட்டுவார்கள். இதனாலும் அவர்கள் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். இந்த மாதிரியான உணவின் மீதான வெறுப்புணர்வு குழந்தைகள் சரியாகச் சாப்பிடாமல் போவதற்கு முக்கிய காரணமாகும்.

எப்படி பசியின்மையைப் போக்கி உங்கள் குழந்தையை நன்கு சாப்பிட வைப்பது?

என்ன காரணங்களால் உங்கள் குழந்தை சரியாகச் சாப்பிட மாட்டான் என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம். உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி இங்கே உங்களுக்கு சில எளிய குறிப்புகள் நிச்சயம் கிடைக்கும். தற்போது, எப்படி உங்கள் குழந்தையைச் சாப்பிட வைப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

சிறிது சிறிதாகச் சாப்பிடக் கொடுக்கவும்

ஒரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட அவனைக் கட்டாயப் படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து அவனைச் சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்பாேது சிறிது சிறிதாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் அவனுக்குப் பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடுவான்.

வகை வகையாக உணவுகளை மாற்றுங்கள்

எப்போதும் ஒரே வகையான உணவைச் செய்து தராமல், அவனுக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில், வகை வகையாக உணவைத் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த விசயம் அவனை விரும்பி சாப்பிட ஊக்கப்படுத்தும்.

புது ரக உணவுகள்

ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை மட்டும் பின் பற்றி தினமும் சமைக்காமல், உங்கள் குழந்தைக்காக, அவ்வப்போது புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து சமைத்து தாருங்கள். இது அவனை நன்கு சாப்பிட ஊக்கவிக்கும். மேலும் அவனே உங்களிடம் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவான்.

கட்டாயப் படுத்தாதீர்கள்

உங்கள் குழந்தைக்கு பிடிக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, அவனை
சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவனுக்கு உணவின்
மீது வெறுப்பை உண்டாக்கலாம். ஒருவித அன்பான அணுகுமுறையைக்
கடைப்பிடியுங்கள்.

உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்

உங்கள் குழந்தைக்குப் புரியும்படி, அவன் சாப்பிடும் உணவு எவ்வளவு சத்துக்கள்
நிறைந்தவை,ஆரோக்கியமாக வாழ எவ்வளவு முக்கியமானவை என்று விளக்கிச்
சொல்லுங்கள். உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள்.
இதனால் அவனுக்கு உணவின் மீது மரியாதை வரும். அதனால் அவன் சரியாகச்
சாப்பிடுவான்.

கவனச் சிதறலைக் குறைக்கவும்

எவை எல்லாம் உங்கள் குழந்தை சாப்பிடும் போது அவனது கவனத்தை
ஈர்க்கின்றதோ, அவற்றை எல்லாம் அகற்றி விடுங்கள். அவன் சாப்பிடும் போது,
உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள். இது அவன் சரியாக சாப்பிட
உதவும்.

பானங்கள்

எப்போதும் பானங்களை உணவோடு கொடுக்காமல், அவன் சாப்பிட்ட பின்னரே கொடுக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவான். படிக்க: அம்மா எடை குறைய

சாப்பிடும் நேரத்திற்குத் தானாக வர வழக்கப் படுத்துங்கள்

உங்கள் குழந்தை தினமும் சாப்பிடும் நேரத்திற்குச் சரியாகத் தானாக வந்து அமரும் படி அவனைச் சிறு வயதிலிருந்தே பழக்கப் படுத்துங்கள். இப்படிச் செய்வதால்,
அவனுக்கு அந்த நேரம் வந்து விட்டாலே தானாகப் பசி எடுக்கத் தொடங்கி விடும்.
அதனால் நன்கு சாப்பிடுவான்.

காலை உணவைக் கட்டாயப்படுத்துங்கள்

உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்கிறான் என்றால், பொதுவாகக் காலை நேரங்களில் சரியாகச் சாப்பிட மாட்டான். இதற்கு நேரமின்மை, அவசரம் என்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், எந்த ஒரு சூழலிலும் காலை உணவைத் தவிர்க்காமல் அவனை முழுமையாகச் சாப்பிட வைத்துப் பழக்குங்கள். இது மிக முக்கியமான ஒன்று.

இந்த குறிப்புகள் நிச்சயம் உங்கள் குழந்தைக்கு நன்கு பசி எடுத்துச் சரியான நேரத்திற்கு முழுமையான உணவைச் சாப்பிடச் செய்ய உதவும் என்று நம்புகின்றோம். மேலும், உணவில் பருப்பு, தயிர், நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரை வகைகள், முளைக் கட்டிய பயிர் வகைகள் என்று சமமாக அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு உணவை அவனுக்குத் தர முயற்சி செய்யுங்கள். இது அவன் ஆரோக்கியமாக வளர உதவும்.

இதையும் படிக்க : வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null