குழந்தைக்கு நெபுலைசர் பாதுகாப்பானதா?

குழந்தைக்கு நெபுலைசர் பாதுகாப்பானதா?

நெபுலைசர் என்ற வார்த்தையை சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலருக்கு புதிதாக இருக்கும். சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கான அவசர சிகிச்சை உபகரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவமனையில் மட்டுமே இருந்த நெபுலைசர், தற்போது சிறிய அளவில் தயார் செய்யப்பட்டு, வீடுகள் வரை வந்துவிட்டன. சுவாசக் கோளாறு உள்ளவர்கள் அவர்களாகவே அருகில் உள்ள மருந்தகத்துக்குச் சென்று வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குவதுடன், சுவாசக்கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கும் அதைப் பரிந்துரையும் செய்கின்றனர். என்ன அது நெபுலைசர்? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? குழந்தைக்கு ஏற்றதா? அதிக விலையுடையதா? என்பதையெல்லாம் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

 

நெபுலைசர் என்றால் என்ன?

ஆஸ்துமா, சளிமூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறு பாதிப்புகளால் அவதிப்படுபவர்களுக்கு உடனடி நிவாரணியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுதான் நெபுலைசர். இதை, மூச்சு திணறல், மூக்கு அடைப்பு, நெஞ்சு இறுக்கம் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

 

இதை மூக்கில் பொருத்தி சாதாரணமாக சுவாசிக்கும்போதே, இதில் உள்ள மருந்து மூச்சுப் பாதையில் உள்ள சளியைக் கரைப்பதுடன், நேரடியாக நுரையீரலுக்குச் சென்று பாதிப்பைக் குணப்படுத்துகிறது. இந்த உடனடி செயல்திறன் காரணமாக நெபுலைசர் இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பாலும் விரும்பப்படும் ஒன்றாக மாறி வருகிறது. மூச்சுத் திணறல் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட இன்ஹெல்லரில் மாத்திரையை போட்டு, அதிக விசையுடன் உள்ளிழுப்பார்கள்.

இதில் அந்த அளவுக்கு சிரமப்படத் தேவையில்லை என்பதால் நெபுலைசர் மீது உடனடி ஈர்ப்பு வந்து விடுகிறது. தவிர நெபுலைசரை சொந்தமாக வாங்கும் செலவு என்பது மருத்துவமனையில் இதைப் பயன்படுத்துவதற்கு ஆகும் செலவை விட குறைவு! இது இதன் மீது ஈர்ப்பு ஏற்பட இன்னொரு காரணமாகும்.

 

நெபுலைசர் எங்கு கிடைக்கும்?

ஆன்லைன் வர்த்தக தளங்களில் இருந்து உள்ளூர் மருந்து கடைகள் வரை அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கும் பொருளாக மாறி வருகிறது. இதன் விலை 1500 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. குழந்தைகளை கவரும் வடிவில் இருப்பதாலும், இன்ஹெல்லர் அளவுக்கு குழந்தைகளை சிரமப்படுத்தாததாலும் நெபுலைசர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தாய்மார்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

நெபுலைசர் நல்லதா கெட்டதா?

பக்கத்து வீட்டு குழந்தைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக உங்கள் குழந்தைக்கு இதைப் பயன்படுத்தத் தொடங்கினால் அது ஆரோக்கியத்துக்கே உலை வைப்பது போல ஆகிவிடும். ஐந்து முதல் ஏழு வயது வரை உள்ள குழந்தைகளுக்கெல்லாம் தற்போது ஆஸ்துமாவும், மூச்சு திணறலும் சாதாரண ஒன்றாக மாறி வருகிறது. அவர்களுக்கு சரியான இன்ஹெல்லரும், மருந்து மாத்திரைகளையுமே பரிந்துரைக்க வேண்டும். நெபுலைசரில் உடனடி தீர்வு கிடைக்கிறது என்பதற்காக அதை தேர்ந்தெடுத்தால், அந்தப் பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காண முடியாமல் குழந்தையை நிரந்தர நோயாளியாக்கிவிடும்.  மருத்துவரின் ஆலோசனையுடன், அவர் சொல்லும் நேரங்களில் மட்டுமே நெபுலைசரைப் பயன்படுத்த வேண்டும்.

 

நெபுலைசரின் வகைகள்

இரண்டு வகையான நெபுலைசர்கள் உள்ளன. ஒன்று ஜெட் நெபுலைசர், இன்னொன்று அல்ட்ராசானிக் நெபுலைசர்

 

பெரும்பாலான இடங்களில் ஜெட் நெபுலைசர்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதில் திட வடிவில் இருக்கும் மருந்தை போட்டால், அது வாயுவாக மாறி, சுவாச மாஸ்க் வழியே நேரடியாக நுரையீரலுக்கு சென்று விடுகிறது. இதிலிருக்கும் அளவீட்டு மாணி மூலம் அதன் அழுத்தத்தை அளவிட்டுக்கொள்ளலாம். சாதாரணமாக இதைப் பயன்படுத்தும்போது, மருத்துவர் கூறும் குறிப்பிட்ட அளவுக்கு இருக்க வேண்டும்.

 

அல்ட்ராசானிக் நெபுலைசர்கள் அதிக விலைமதிப்பு உடையவை. உயர் அதிர்வென் மீயொலிகள் மூலம் இவை இயக்கப்படுகின்றன. இது தவிர இன்னும் பல அதி நவீன வசதிகளுடன் புதுப் புது வடிவில் நெபுலைசர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

 

எப்போதெல்லாம் நெபுலைசரைப் பயன்படுத்தலாம்?

 • இன்ஹெல்லரை இழுக்கவே முடியவில்லை, மிகவும் மோசமான உடல்நிலையாக இருக்கிறது என்ற சூழலில் நெபுலைசரை பயன்படுத்த அனுமதிக்கலாம். மற்றபடி இன்ஹெல்லருக்கு பதிலாக நெபுலைசரைப் பயன்படுத்தவே கூடாது.
 • மூச்சு திணறல் ஏற்பட்டு, அதற்காக இன்ஹெல்லரை பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லை என்ற நிலையில் வேறு வழியே இல்லாத சூழலில்தான் நெபுலைசரை பயன்படுத்த வேண்டும்.
 • இன்ஹெல்லரைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் உடலில் இல்லை என்ற சூழலில் நெபுலைசரைப் பயன்படுத்தலாம்.

 

குழந்தைகளுக்கு நெபுலைசர் உகந்ததா?

நெபுலைசர் என்பதே குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டதுதான். ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்குப் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்த வயது வரம்பெல்லாம் கிடையாது. இயற்கையாக சுவாசிக்க முடியாமல் திணறும் குழந்தைகளுக்கு இன்ஹெல்லரை உபயோகிக்க முடியாத போது, நெபுலைசர் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

 

குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர். ஆஸ்துமா அல்லது மூச்சுத்திணறல் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு எப்போதாவது ஒருமுறை மட்டுமே நெபுலைசரைப் பயன்படுத்த வேண்டும்.

 

சுவாச பாதிப்போ அல்லது ஆஸ்துமாவோ உள்ள குழந்தைகளுக்குப் பொதுவாக குழந்தைகள் தூக்கத்தில் இருக்கும்போது பயன்படுத்தலாம். அல்லது உணவுக்குப் பிறகு, தூங்குவதற்கு முன் நெபுலைசரைப் பயன்படுத்தலாம்.

 

தூக்கத்தில் நெபுலைசரைப் பயன்படுத்தும்போது அதிலிருந்து எழும் சப்தம் குழந்தையின் தூக்கத்தை களைத்துவிடும். அதுபோன்ற நேரங்களில் நெபுலைசரை மொத்தமான துணியால் மூடிவிடுவது சிறந்தது. அது அதிர்வுகளை உள்வாங்கி சப்தத்தை குறைத்துவிடும்.

 

முடிந்தவரை குழந்தைக்கு நெபுலைசரை உபயோகிக்கும்போது மடியில் படுக்க வைத்து பயன்படுத்த வேண்டும். சராசரியாக இதை 8 முதல் 10 நிமிடங்கள் வரைப் பயன்படுத்தலாம். அதற்கும் மேல் மூச்சு திணறல் குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

 

பராமரிப்பு

நெபுலைசரை தினசரி தூய்மை படுத்த வேண்டியது அவசியம். அது தவிர, ஒவ்வொரு முறை உபயோகப்படுத்திய பின்பும் மாஸ்க், உள்ளிட்ட அதன் உபகரணங்களைத் தனித்தனியே (அதில் கொடுக்கப்படிருக்கும் வழிகாட்டுதலின்படி) தூய்மை செய்ய வேண்டும். இதற்கு வினிகர், கொதிக்க வைத்த நீர், சோப்பு ஆகியவற்றை பயன்படுத்தலாம். நன்கு கழுவிய பின்பு அதில் உள்ள ஈரப்பதம் நீங்கும் வரை நன்கு உலர்த்திவிட்டுதான் மீண்டும் அதை பொருத்த வேண்டும்.

 

சிக்கல்கள் என்ன?

 • நெபுலைசர் பயன்பாட்டில் உள்ள சிக்கல்கல்கள் என எடுத்துக்கொண்டால், முதலில் இருப்பது இதன் விலைதான். மலிவான விலையில் கிடைத்தாலும் அதன் தரம் கேள்விக் குறியாக இருப்பதால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பெற்றோரால் இதை அதிக விலை கொடுத்து வாங்க முடியாது.
 • இன்ஹெல்லரை உடனடியாகப் பயன்படுத்துவதைப் போல இதைப் பயன்படுத்த முடியாது. இதற்கென சில முன் தயாரிப்புகளை செய்து, அதன் பிறகுதான் பயன்படுத்த முடியும். அதாவது இன்ஹெல்லரில் மருந்து நிரப்புவதைப் போல எளிதாக இதில் மருந்து நிரப்ப முடியாது. இதன் காரணமாக அவசர காலத்தில் இதைப் பயன்படுத்துவது கொஞ்சம் சிரமமான ஒன்றாகவே இருக்கிறது.
 • இதைப் பயன்படுத்த மின்சாரம் அல்லது கம்ப்ரஸ்டு கேஸ் தேவைப்படுவதால் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியாது.
 • இதை தூய்மை செய்வதும் பராமரிப்பதும் கொஞ்சம் சிரமமான விஷயமாகும்.

 

நிறைகள் என்னென்ன?

 • மருந்தை காற்றுடன் கலந்துவிடுவதால், இதைப் பயன்படுத்துபவர்களுக்கு உடனடித் தீர்வு கிடைக்கிறது.
 • நோய் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் உடல் வலிமையும் மாறுபடும். இன்ஹெல்லரை பயன்படுத்த ஆற்றல் இல்லாதவர்களுகு நெபுலைசர்கள் சிறந்த நிவாரணியாக விளங்குகின்றன.
 • எந்த வித மருந்தாக இருந்தாலும் அதை கரைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் உடனடி தீர்வு கொடுக்கும் வகையில் இதன் செயல்பாடு உள்ளது.
 • இதைப் பயன்படுத்தும்போது மூச்சை உள் இழுத்து பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

விளைவுகள்

இன்ஹெல்லரைப் போல அல்லாமல், நேரடியாகவே மருந்தை நுரையீரலுக்கு நெபுலைசர்கள் கொண்டு செல்வதால், இதனால் சில நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

 

அதாவது, சரியாக பராமரிக்கப்படாத நெபுலைசர் கருவி என்றால் அதில் உருவாகியிருக்கும் பாக்டீரியாக்கள் நேரடியாக மூச்சுக் குழாயைச் சென்றடைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 

மருந்தை நேரடியாக சுவாசக் குழாய்க்கு செலுத்துவதன் காரணமாக, மூச்சுப் பாதையில் தடுப்பை அகற்றி விடுகிறது. இது சளி உள்ளிட்ட எந்த விதமான தடையையும் கரைத்துவிடும் இயல்பு கொண்டது. இதன் காரணமாக நெபுலைசர் இல்லாமல் சுவாசிக்கும்போது இடையில் தேங்கும் பாக்டீரியாக்கள் கூட நேரடியாக நுரையீரலுக்குச் சென்றுவிடுகிறது.

 

ஒவ்வொரு முறையும் நெபுலைசரில் மருந்தை நிரப்பிவிட்டு பயன்படுத்தும்போது, அதில் மீதமாக உள்ள மருந்து அடியிலே தங்கி விடுகின்றன. அடுத்தடுத்த முறைகளில் அதிலுள்ள மருந்துகள் அதிக அளவில் சேர்ந்து அதன் செறிவின் அளவை அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாகவும் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 

பொதுவாக நெபுலைசரை தொடர்ந்து பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு மூக்கு எரிச்சல், தொண்டை வறண்டு போதல் போன்ற அசௌகர்யமான உணர்வை ஏற்படுத்துகிறது.

 

தவிர, அதன் மாஸ்க் வாய் வரை மூடியிருப்பதால், நாக்கின் சுவை உணர்வை பாதிக்கிறது. சிலருக்கு வயிற்று எரிச்சல், தலைவலி போன்ற வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுகின்றன.

 

ஒரு நாளைக்கு மருத்துவர் குறிப்பிட்ட சில முறை பயன்படுத்தினால், நெபுலைசரால் பெரும்பாலும் சிக்கலும் இல்லை. அதற்கும் மேலும் பயன்படுத்தும்போதுதான். மேற்குறிப்பிட்ட பக்கவிளைவுகள் எல்லாம் ஏற்படுகின்றன.

 

ஒருவேளை தூய்மையில்லாத உபகரணத்தை பயன்படுத்தினால், லேசாக மூச்சு வாங்குவது, மூக்கு ஒழுகுவது, இருமல் உள்ளிட்ட சில பிரச்சனைகள் ஏற்படலாம். இது விரைவில் குணமடைந்துவிடும் என்பதால் பயப்படத் தேவையில்லை.

 

நெபுலைசர் பயன்பாடு காரணமாக சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் மட்டுமின்றி வறட்டு இருமல் கூட ஏற்படும்.

 

நெபுலைசர் உபயோகப்படுத்தியும் தீவிர ஆஸ்துமாமாவுக்கான அறிகுறிகள் அதிகமாவது போல உணர்ந்தால், மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.

 

உடற்பயிற்சி, மருந்து மற்றும் மாத்திரைகள் மூலமே சுவாசப் பிரச்சனைகளைக் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும். எளிமையான தீர்வாக இருக்கிறது என்பதற்காக நெபுலைசர் எனும் தற்காலிக தீர்வை நோக்கி பயணித்துவிடக் கூடாது.

 

தீவிரமான மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாது என்ற சூழலில் மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெற்ற பிறகே அவர்கள் பரிந்துரைக்கும் நெபுலைசரை வாங்கி உபயோகப் படுத்தலாம். அதுவும், தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே. நெபுலைசர் இருந்தாலும் இன்ஹெல்லரை பயன்படுத்த பழக்குவது சிறந்தது. மேலும், நெபுலைசர் உபகரணத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டியதும் அவசியம்.

மாசடைந்த நெபுலைசர் உபகரணத்தால், குழந்தைகளுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தவிர, மேற்குறிப்பிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் உண்டு. குழந்தைக்கு ஆஸ்துமாவோ அல்லது வேறு ஏதாவது சுவாசப் பாதிப்போ இருந்தால், நீங்களாக முன்வந்து நெபுலைசரைத் தேர்ந்தெடுக்கவே கூடாது. மருத்துவர் ஆலோசனையுடன் அதற்கான சிகிச்சையை தொடங்குவதே சிறந்தது!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null