சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

தமிழ் பாரம்பரிய உணவுகளில் கொழுக்கட்டை மிக மிக முக்கியமானது. எளிதில் ஜீரணம் அடையக்கூடிய உணவாகவும், மிகுந்த ஆரோக்கியமாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கும் தாராளமாக தரலாம். எக்கச்சக்க சத்துக்கள் இந்த கொழுக்கட்டையில் இருப்பதாக பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும், நம் முன்னோர்கள் பல வகைகளில் கொழுக்கட்டை செய்து வந்தார்கள். சத்து மிக்கதாகவும் இருந்தது. காலப்போக்கில் அம்மாதிரியான உணவுகள் அரிதாகிவிட்டது.

ஆனால் அப்படியே விட்டுவிடாமல், இயற்கை தானியங்கள் மாதிரியான உணவுப்பொருட்கள் கொண்டு கொழுக்கட்டை செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவது மிகவும் நல்லது, ஆரோக்கியமானதும் கூட. எப்படி செய்யலாம் கொழுக்கட்டை? இதோ சில வகை கொழுக்கட்டைகள்…

கொழுக்கட்டை எப்படி செய்வது:

கம்பு கார கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

 • கம்பு மாவு – 1 கப்
 • வெங்காயம் – 1
 • கருவேப்பிலை
 • உளுத்தம்பருப்பு – 1ஸ்பூன்
 • கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
 • கடுகு – 1/2 ஸ்பூன்
 • வரமிளகாய் 1
 • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

 • முழு கம்பை வறுத்து அரைக்க வேண்டும் அல்லது கம்பு மாவை நன்றாக வறுத்து கொள்ளவேண்டும்.
 • கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு உளுத்தம் பருப்பு.
 • கடலைப்பருப்பு ஒவொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
 • பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 • வரமிளகாய், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
 • பின்பு வறுத்து வைத்த கம்பு மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும்.
 • கை பொறுக்கும் சூட்டில் சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிடிக்க வேண்டும்..
 • பிடித்த கொழுக்கட்டைகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு மாவு கொழுக்கட்டை ரெடி.
 • படிக்க: குழந்தைகளின் வீட்டு வைத்தியம்!

இனிப்பு கம்பு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

 • கம்பு மாவு – 1 கப்
 • பொடித்த வெல்லம் – 3/4 கப்
 • தேங்காய் துருவல் – 1/2 கப்
 • ஏலக்காய் – 4
 • நெய் – 2 ஸ்பூன்

செய்முறை

முழு கம்பை வறுத்து அரைக்க வேண்டும் அல்லது கம்பு மாவை நன்றாக வறுத்துக் கொள்ளவேண்டும்.

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து பாகு காச்சி வடிகட்டவும்.

மாவுக் கலவையில் ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். இதில் வெல்லப் பாகை கலந்து பிசையவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிடிக்க வேண்டும்..

பிடித்த கொழுக்கட்டைகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு மாவு கொழுக்கட்டை ரெடி.

படிக்க: குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகள் செய்ய குறிப்புகள்!

சிகப்பரிசி நட்ஸ் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

 • சிகப்பரிசி மாவு – 1 கப்
 • பொடித்த வெல்லம் – 1/4 கப்
 • பாதம் – 10
 • முந்திரி – 10
 • பிஸ்தா – 10
 • வேர்க்கடலை – 1/4 கப்
 • ஏலக்காய் – 3
 • பேரிச்சம்பழம் – 6

செய்முறை

 • சிகப்பரிசியை வறுத்து அரைக்க வேண்டும்.
 • வெல்லத்தை பொடித்து அல்லது சீவி வைத்துக்கொள்ளவும்.
 • கொடுக்கப்பட்டுள்ள பாதாம் முந்துரி பிஸ்தா நிலக்கடலை அனைத்தையும் தனித்தனியாக வறுக்க வேண்டும்.
 • வறுத்த அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸியில் பவுடர் செய்து கொள்ளவும்.
 • பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்
 • சிகப்பரிசி மாவில் ஏலக்காய்த்தூள், அரைத்த நட்ஸ் பவுடர், பேரிச்சை, வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும்..
 • சிறிது தண்ணீர் மற்றும் சூடான நெய் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிடிக்க வேண்டும்..
 • பிடித்த கொழுக்கட்டைகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான சிகப்பரிசி நட்ஸ் கொழுக்கட்டை ரெடி..

சிறுதானிய கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

 • தினை – 1/4 கப்
 • வரகு – 1/4 கப்
 • சாமை – 1/4 கப்
 • குதிரைவாலி – 1/4 கப்
 • பச்சைப்பயறு – 1/4 cup
 • வெங்காயம் – 1
 • கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
 • உப்பு
 • சாம்பார்தூள், கருவேப்பிலை

செய்முறை

 • சிறுதானியங்களை ஒன்றாக 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
 • பச்சைப்பயறு பூண்டு மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
 • சிறிது உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
 • பின்னர் மற்றோரு கடாயில் அரைத்த மாவை ஓற்றி வணக்கவும்.. சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறவும் .
 • பின்னர் வணக்கிய மாவில் பச்சைப்பயறு பூரணம் சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான சிறுதானிய கொழுக்கட்டை ரெடி.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கொழுக்கட்டைகளை செய்வது எப்படி எனப் பார்த்திருப்பீர்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இம்மாதிரியான ஆரோக்கியமான கொழுக்கட்டைகளைக் கொடுத்து அசத்துங்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null