குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்(0 முதல் 1 வயது வரை)

குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்(0 முதல் 1 வயது வரை)

குழந்தை பிறந்ததிலிருந்து குறைந்தபட்ச வளர்ச்சியை எட்டும் வரையில், ஒவ்வொரு நாளும் ஒரு மைல் கல்தான். அசையும் தலை நிற்பதிலிருந்து… எழுந்து நடந்து ஓடும் வரையில், குழந்தையின் வளர்ச்சி நமக்கு வியப்பளிக்கும். “இப்பதான் பொறந்து கைல வாங்குன மாதிரி இருக்கு… அதுக்குள்ள நடக்க ஆரம்பிச்சிட்டா…” என வியப்பளிக்க வைக்கும் குழந்தையிடம் எப்போது என்னென்ன வளர்ச்சி நிகழ்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? பிறந்தது முதல் ஒரு வயது வரை என்னென்ன வளர்ச்சி எப்போது நிகழ்கிறது என்று விரிவாகப் பார்ப்போம்.. கர்ப்பிணியோ… தாயானவரோ…நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு இந்தக் கட்டுரை நிச்சயமாகப் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்..!

பிறந்த குழந்தை

பிறந்த குழந்தை முதலில் அழத்தொடங்கும். ஏனென்றால், தொப்புள்கொடி மூலம் சுவாசித்து வந்த குழந்தைக்கு, இயற்கையான சுவாசம் கடும் சிரமத்தைக் கொடுப்பதால்தான் குழந்தை அழுகிறது. பிறந்த குழந்தையின் தலை நிலையாக இருக்காது. பிஞ்சு கழுத்துப் பகுதி முழுமையான வளர்ச்சியடையாததால், தலை ஆடிக்கொண்டே இருக்கும். இதனால், தூக்கும்போது தலையைக் கவனமாகக் கழுத்துடன் சேர்த்துப் பிடித்துத் தூக்க வேண்டும். உடல் பாகங்கள் வளர்ச்சியடையத் தொடங்கியிருக்காது என்பதால், அதன் ஒவ்வொரு அசைவுக்கும் தாயின் உதவி தேவைப்படும்.

இரண்டாவது மாதம்

குழந்தை இரண்டாவது மாதத்தில், ஓரளவு வளர்ச்சி பெறத் தொடங்கியிருக்கும். கை – கால்களை அசைக்கத் தொடங்கும். தாயின் முடி, உடை என எது கையில் கிடைக்கிறதோ அதையெல்லாம் பிடிக்க முயற்சிக்கும். முதல் மாதம் இருந்த அளவுக்கு இரண்டாவது மாதத்தில் தலை நடுக்கம் இருக்காது. தானாகவே ஒரு நிலையில் வைக்க முயற்சிக்கும்.

பிறந்த குழந்தைக்குத்ே தூக்கம் என்பது ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை இருக்கும். இரவு நேரங்களில் சராசரியாக ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை குழந்தைகள் தூங்கும். ஆனால், இந்தத் தூக்கத்துக்கு எப்போதும் பசியில்லாமல் இருப்பது அவசியமாகும். ஒவ்வொரு சில மணி நேர இடைவெளியிலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது அவசியமானதாகும்.

மேற்குறிப்பிட்டதைப் போல, குழந்தைகள் சுவாசக்கோளாறு காரணமாக நீண்ட நேரம் அழுகின்றனர். ஆனால், அழுகைக்கு அது தவிரப் பிற காரணங்களும் இருக்கின்றன. குழந்தை இருக்கும் சூழல் அதிக வெப்பமாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ இருந்தால் அழும். அப்படி ஒன்றும் அதிக வெப்பம் இல்லையே எனச் சாதாரணமாகக் கருதிவிட வேண்டாம். அந்தப் பிஞ்சு தோல் எதையெல்லாம் தாங்க முடியாமல் இருக்கிறதோ அதையெல்லாம் அழுகை மூலமே வெளிப்படுத்தும்.

கை – கால்களை ஆட்டும் என சொல்லியிருந்தோமல்லவா? அப்படித் தொடர்ந்து செய்வதால் உடல் அயர்ந்து போனது போல் குழந்தை உணர்ந்தாலும் அழத்தொடங்கும். தவிர உடல் நிலை சரியில்லாதது போல் உணர்ந்தாலும் அதை அழுகை மூலமே வெளிப்படுத்தும்.

கண்களைக் குழந்தை உருட்டி உருட்டிப் பார்க்கத் தொடங்கும். அருகில் இருப்பவர்களை அடையாளம் காண முயற்சிக்கும். அம்மாவையும் அப்பாவையும் நினைவில் வைத்துக்கொண்டதைப் பார்வையால் உணர்த்தும்.

பேச்சு சப்தம், கைதட்டல் உள்ளிட்ட சப்தங்களுடன், அன்பாகப் பேசுவதையும் அதட்டலுடன் பேசுவதையும் குழந்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும். தாய், தந்தை மற்றும் நெருங்கிய உறவுகளின் குரல்களை அடையாளம் கண்டுகொள்ள முயற்சிக்கும்.

தன்மீது பாசமாக இருப்பவர்கள் மீது அதிக நெருக்கத்துடன் இருக்கும். யாரெல்லாம் நெருங்கியவர்கள் என்பதை அடையாளம் கண்டுகொள்ளும்.

மூன்றாவது மாதம்

ஆடிக்கொண்டிருந்த தலை நிலையாக நிற்கத் தொடங்கும். ஜீரண உறுப்புகள் வளர்ச்சியடைவதால், தாய்ப்பால் சிறப்பாக செரிமானமடைய தொடங்கும் காலகட்டம் இது.

அசையும் பொருட்களை நோக்கி பார்வையைத் திருப்பும். தாய் தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவுகளைச் சற்று தொலைவிலேயே அடையாளம் கண்டுவிட முயற்சிக்கும்.

எல்லா உணர்வுகளையும் ஒரே மாதிரியான அழுகை மூலம் உணர்த்திக் கொண்டிருந்த குழந்தை, தூக்கம் உள்ளிட்ட சில உணர்வுகளைச் செய்கை மூலம் உணர்த்த முயற்சிக்கும். விரும்பிய செயலையோ விருப்பமற்ற செயலையோ செய்கை மூலம் உணர்த்தும்.

பசி, அலுப்பு, வியர்வை, போன்றவற்றை வெவ்வேறு விதமான அழுகை மூலம் உணர்த்த முயற்சிக்கும். நெருங்கிய உறவுகளை அடையாளம் கண்டுகொண்டால், சிரித்தோ கை கால்களை அசைத்தோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். விளையாட்டுப் பொம்மைகளையாே அல்லது வேறு எதாவது பொருளையோ அடையாளம் கண்டால், அதை எட்டிப் பிடிக்க முயற்சிக்கும்.

மகிழ்ச்சியைச் சப்தமிடுதல் மூலமும் சிரிப்பு மூலமும், நெருங்கியவர்களுடன் விளையாடுவதன் மூலமும் வெளிப்படுத்தும். கையை ஊன்ற முயற்சிக்கும். மகிழ்ச்சியை மட்டுமின்றி சோகத்தையும் வெளிப்படுத்தும். ஒவ்வொரு உணர்வையும் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.

நான்காவது மாதம்

உடல் ரீதியான வளர்ச்சி குறிப்பிட்ட அளவுக்கு எட்டியிருப்பதால், புரண்டு படுப்பது, நகர்ந்து செல்ல முயலுவது, இரண்டு கைகளையும் பயன்படுத்தி கண்ணில் படும் பொருட்களையெல்லாம் எடுக்க முயற்சிக்கும். கீழே படுத்திருக்கும்போது இரண்டு கால்களையும் பயன்படுத்தி உதைக்கும் வகையில் முன் பின் அசைக்கும். சில குழந்தைகள் புரண்டு படுக்கும்.

ஐந்தாவது மாதம்

ஏறத்தாழ எல்லா குழந்தைகளுமே ஐந்தாவது மாதத்தில், புரண்டு படுத்து விடும். கை கால்களை அசைத்து நகரவும் தொடங்கும். நீச்சல் அடிப்பது போல எப்போதும் சுறுசுறுப்பாக கைகளையும் கால்களையும் அசைத்துக்கொண்டே இருக்கும். கைகளால் பிடிக்கக் கூடிய அளவுள்ள பொருட்களை எடுத்து விடும். பெயர் சொல்லிக் கூப்பிட்டால், திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நினைவில் வைத்துக்கொள்ளும். வழக்கமாகப் பார்க்கும் மனிதர்களுக்கும், புதிய மனிதர்களுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளும்.

குழந்தையிடம் பேச்சுக் கொடுப்பவர்களுக்குப் பதிலளிக்கக்கூடிய வகையிலான சப்தத்தை எழுப்பும். கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் வாயில் வைக்கத் தொடங்கும்.

ஆறாவது மாதம்

ஆறாவது மாதத்தில், இதுவரை இருந்த உடல் வளர்ச்சி இருக்காது. எடை அதிகரிக்கும் வேகமும், உடல் வளர்ச்சி வேகமும் குறைந்திருக்கும். எப்படி தகவலைப் பகிர்வது என்று குழந்தை நன்கு தெரிந்து கொள்ளும். திட உணவுகளை ஜீரண உறுப்புகள் செரிக்கத் தொடங்கி விடும். சில குழந்தைகள், பெற்றோர் உதவியின்றி எழுந்து உட்கார முயலுவார்கள். இந்தக் காலகட்டத்திலும் குழந்தைகளின் தினசரி தூக்கம் சராசரியாக ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை இருக்கும்.

ஏழாவது மாதம்

இதைப் பேசத் தொடங்கும் மாதம் என்றே சொல்லலாம்… ‘மா…’, ‘பா…’ போன்ற சப்தங்களை எழுப்புவதுடன், அழுகை, கோபம், மகிழ்ச்சி ஆகியவற்றை வெவ்வேறு சப்தங்கள் மூலம் வெளிப்படுத்தும். கைகளை ஊன்றி எழுந்து நிற்க முயற்சிக்கும். தானாகவே எழுந்து உட்கார்ந்தும் விடும். பெற்றோர் குழந்தைகளின் கைகளைப் பற்றி நிற்க வைத்தால் தள்ளாடியபடி நிற்கும். அத்துடன் சேர்த்து நடைப் பயிற்சியும் அளிக்கலாம். கண்ணாடியில், தன் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளத்தொடங்கும். ஒவ்வொரு முக உணர்வுகளை வெளிப்படுத்தித் தன்னைத் தானே பார்த்து மகிழும்.

எட்டாவது மாதம்

விளையாட்டுப் பொம்மைகளுடன் நெருக்கமாக இருக்கும். எட்டாவது மாதத்தில், முன்பு இருந்ததை விடப் பேச்சில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். ‘மா’ என்று சொல்லிய குழந்தை ’மா… மா‘ என்றும், ‘பா… பா’ என்றும் தொடர்ச்சியாகப் பேசத்தொடங்கும். நெருங்கியவர், புதியவர்களைப் பிரித்து அடையாளம் காணத்தொடங்கும். புதிய நபர்களை அச்சத்துடன் அணுகும். விரலை வாயில் வைக்கும் பழக்கமும் ஏற்படத்தொடங்கியிருக்கும். தானாக எழுந்து உட்கார்ந்து, விளையாட்டுப் பொம்மைகளைத் தேடி எடுத்து அதனுடன் பேசுவது, விளையாடுவது என விதவிதமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.

ஒன்பதாவது மாதம்.

ஒன்பதாவது மாதத்தில், உட்காரத் தொடங்கிய குழந்தை நகரத்தொடங்குகிறது. அத்துடன், எதாவது பிடிமானங்கள் கிடைத்தால் தானே எழுந்து நிற்கவும் செய்கிறது. காலில் போதுமான பலம் இருக்கும் குழந்தைகள் இந்தக் காலகட்டத்தில் நடந்துவிடும்.

பெரிய பொருட்கள் மட்டுமின்றி, சிறு சிறு பொருட்களையும் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்திப் பிடித்துத் தூக்க முயற்சிக்கும். பூச்சிகளைப் பார்த்தால் நகர்ந்து துரத்த முயற்சிக்கும்.

தான் விளையாடிக்கொண்டிருந்த பொருள் காணாமல் போனால், அது இருக்கும் இடத்தைத் தேடி அலையத் தொடங்கும். பெற்றோரோ அல்லது யாராவது பார்த்தால், எதுவுமே செய்யாதது போல உட்கார்ந்து கொள்ளும்.

தேடிய பொருள் கிடைக்கவில்லை என்றால், அது கிடைக்காது என்பதையும் இந்தப் பருவத்தில் அதனால் உணர முடியும். பெரியவர்களின் செய்கையை உள்வாங்கி அதை அப்படியே செய்யும். பெரும்பாலும் தாயின் செய்கைகள் குழந்தைக்கு இந்தப் பருவத்தில் பழக்கப்படத் தொடங்கும்.

பிரிவை உணரும். தாயோ, தந்தையோ அல்லது குழந்தையைப் பார்த்துக்கொண்ட யாரோ ஒருவரோ, விட்டு விலகும்போது அவர்களின் பிரிவை நன்கு உணர்ந்து சோகத்தை வெளிப்படுத்தும். அவர்களைத் தன்னுடன் இருக்க வலியுறுத்தும்.

பத்தாவது மாதம்

பத்தாவது மாதத்தில், பழங்களைச் சாப்பிடக் கொடுக்கலாம். அதைச் செரிக்கும் அளவுக்கு ஜீரண மண்டலம் வளர்ச்சி அடைந்திருக்கும். உடல் வளர்ச்சியும் தொடக்க நிலை நிறைவுபெறும் நிலைக்குச் சென்றிருப்பதால், தானாகவே எழுந்து நிற்கும். எந்த பிடிமானமும் இல்லாமல் எழுந்து நிற்க முயற்சிக்கும். இதுவரை வழக்கமாக இருந்த சிரமங்களையெல்லாம் புரிந்துகொண்டு குழந்தை வலிக்கு வரும். அதன் புரிதல் திறன் அதிகமாகி இருக்கும். உதாரணமாகச் சாப்பிட வைப்பதற்கோ, குளிக்க வைப்பதற்கோ உங்கள் குழந்தை சிரமம் கொடுத்துக்கொண்டிருந்தால், அதை இனி ஆனந்தமாகச் செய்யத் தொடங்கியிருக்கும். நீங்கள் சொல்லும் பொருளை அடையாளம் காண முயற்சிக்கும். எதையாவது எடுக்கச் சொன்னால், அதை எடுக்க முயற்சிக்கும். அதன் எடை குறித்ததெல்லாம் யோசிக்காது!

நாம் கொடுக்கும் கட்டளைகளை நன்கு புரிந்துகொள்ளும். வெளியே கிளம்பும்போது ‘டாடா பைபை’ எனக் கையசைத்து விட்டுக் கிளம்பிப் பழக்கப்படுத்தினீர்கள் என்றால், அதை உடனே பிடித்துக்கொண்டு, தானே அடுத்தடுத்த முறை செய்யத்தொடங்கும். இனிமையான இசையை ஒலிக்கச் செய்தால், அதற்கேற்ப தன் உடலை அசைத்து அசைத்து ஆடும்.

பதினொன்றாவது மாதம்

இந்தக் காலகட்டத்தில், கையில் எதாவது பொருட்களைப் பிடித்து எழுந்து நடக்க முயற்சிக்கும். சில குழந்தைகள் தானாகவே எழுந்து நிற்க முயற்சிக்கும். ஆனால் பெரும்பாலான குழந்தைகளால் இந்தப் பருவத்தில் நிற்கவோ நடக்கவோ முடியாது. உடல் முழுமையான வளர்ச்சி பெற்றிருக்காததால், ஏதேனும் பிடிமானத்தின் உதவியுடனோ பெற்றோரின் உதவியுடனோ மட்டுமே அதனால் நிற்க முடியும். ஜீரண மண்டலம் வளர்ச்சியடைந்திருப்பதால், எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிடத்தொடங்கும். ஆனால், அதைக் காலை மற்றும் மதிய உணவாகக் கொடுப்பதே சிறந்தது. ஏனென்றால் பகலில் விளையாடுவதால் அவை செரிமானமாக எளிதாக இருக்கும்.

பன்னிரண்டாவது மாதம்

ஒரு வயதில், பிறந்தபோது இருந்த மூளையின் அளவு இரண்டு மடங்காக வளர்ச்சி பெற்றிருக்கும். அப்போது தானாகவே எழுந்து நிற்கத் தொடங்கியிருக்கும். ஒன்றிரண்டு அடிகள் முன் எடுத்து வைக்க முயற்சிக்கும். சாதாரணமாக நடக்க முடியாது. நிறையக் குழந்தைகள் சராசரியாக 14வது மாதத்தில்தான் தானாகவே நடக்கத் தொடங்குகின்றன. கை தட்டுதல் மூலம் சப்தம் எழுப்பினாலோ, அல்லது கையசைத்தாலோ மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். பெற்றோரின் கவனத்தை ஈர்க்க, ‘மா…மா’ என்றோ அல்லது ஏதாவது சப்தம் எழுப்பியோ கவனத்தை ஈர்க்கும். கவனம் விலகினால், மீண்டும் ஈர்க்க முயற்சிக்கும். ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைக்க முயற்சிக்கும். உதாரணமாகப் பெரியவர்கள் காபி குடிப்பதைப் பார்த்துப் பழகிய குழந்தை, விளையாட்டுப் பொருட்களில் கப் அண்டு சாசர் இருந்தால், அதை எடுத்து அவர்களைப் போலவே குடிக்க முயன்று, மீண்டும் சரியாகச் சாசரில் வைக்கும்.

மற்ற உணவுகளைச் சாப்பிட்டாலும், ஒரு வயது வரை எந்த காரணத்துக்காகவும் தாய்ப்பாலை நிறுத்தவே கூடாது. வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்துமே தாய்ப்பாலிலிருந்துதான் கிடைக்கின்றன. அதனால் மட்டுமே நோய்ப் பாதிப்பிலிருந்து தப்பி, குழந்தை பாதுகாப்பாக வளர்கிறது.

இதெல்லாம் உங்கள் குழந்தை அந்தந்த காலகட்டத்தில் செய்யவில்லையென்றால், பயப்படத்தேவையில்லை. குழந்தையின் இயல்புக்கு ஏற்றபடி அதன் வளர்ச்சியும் மாறுபடலாம். அதையும் மீறி உங்களுக்குத் தொடர் சந்தேகம் இருக்கின்றதென்றால், குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுங்கள். வளர்ச்சி தாமதமான குழந்தைகள் பல வளர்ந்த பிறகு உச்சக்கட்ட சாதனைகளைச் செய்துள்ளன. குழந்தைப் பருவத்தில் பேச்சே வராமல் இருந்த பலர் உலகம் போற்றும் பேச்சாளர்களாகி இருக்கின்றனர். எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. சில வளர்ச்சி நிலைகள் மாறலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null