நெஞ்சு சளி சரியாக எளிய பாட்டி வைத்திய குறிப்புகள்!

நெஞ்சு சளி சரியாக எளிய பாட்டி வைத்திய குறிப்புகள்!

குளிர்காலத்தில் தொற்று வியாதிகள் அதிக அளவு காணப்படும். இதற்குக் காரணம் குளிர்ந்த தட்பவெப்ப நிலையால் ஏற்படும் ஈரப்பதம் தான். பொதுவாகக் கிருமிகள் இது மாதிரியான சூழலில் அதிக நாட்கள் உயிரோடு இருக்கும் தன்மை கொண்டன. அதனாலே மழைக்காலத்தில் (மழை நீர் சேகரிப்பதன் நன்மைகள்) சளி, காய்ச்சல் போன்ற பல பிணிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி அனைவரையும் தாக்குகின்றன.

அதிலும் சாதாரண சளி என்றால் சீக்கிரம் சரியாகிவிடும். இதுவே நெஞ்சில் சளி கட்டினால் அது சரியாக நாள் படும். நெஞ்சில் சளி கட்டி இருக்கும்பொழுது குழந்தைகள் அதிக அளவு சிரமப்படுவார்கள். இந்த மார்பு சளியானது கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் அசதி போன்ற பல தொல்லைகளை அழையா விருந்தாளிகளாக அழைத்து வந்துவிடும். நெஞ்சு சளி ஏற்பட்டு இருந்தால் பொதுவாகச் சளி நிறம் பச்சை அல்லது மஞ்சள் ஆக இருக்கக்கூடும்.

நெஞ்சு சளி நீங்க சில எளிய பாட்டி வைத்தியம் & குறிப்புகள்:

இஞ்சி

இஞ்சிச் சாறு, ஆடாதொடை இலைச் சாறு மற்றும் தேன் முதலியவற்றைக் கால் ஸ்பூன் என்ற அளவில் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றாகக் கலந்து, காலை, மதியம் மற்றும் மாலை என்று மூன்று வேளைகளும் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர நெஞ்சு சளி குணமாகும்.

எலுமிச்சை பழம்

சற்று மிதமான சுடு தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை பழத்தைச் சாறு பிழிய வேண்டும். இத்தோடு கால் ஸ்பூன் அளவு தேனைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவேண்டும். இதைத் தினமும் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளைகள் அருந்தி வர வேண்டும். சிட்ரஸ் பழங்களில் அதிக அளவு விட்டமின் சி இருக்கும். இந்த சத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அந்த வகையில் இந்த வலி நெஞ்சு சளியைச் சரியாக்கப் பெரிதும் துணை புரியும்.

யூகலிப்டஸ் எண்ணெய்

தரமான கலப்படமற்ற யூகலிப்டஸ் எண்ணெய்யை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை குழந்தைகளின் மார்பு ,முதுகு ,தொண்டை போன்ற பகுதிகளில் தடவி மிதமாக மசாஜ் செய்யுங்கள். இது மார்பு சளியைக் குறைக்க உதவும்.

துளசி

துளசி கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் குணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும். ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளைப் பறித்து சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி துளசி இலைகள், சிறிதளவு பனங்கற்கண்டு தூள் முதலியவற்றைச் சேர்த்து சூடாக விடவும். பிறகு நீரை வடிகட்டி குழந்தைகளுக்குத் தரலாம். இந்த நீர் மார்பில் கட்டி உள்ள சளியை ஓட வழி வகை செய்யும். மார்பு சளிக்கு மட்டுமல்லாமல் இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல் போன்ற பல வியாதிகளுக்கு எதிராகவும் இந்த துளசி நீர் செயல்படும்.

ஓமம் நீர்

ஓமம் நீரானது தொற்று நோய்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரு சிறந்த இயற்கை மருந்து பொருளாகும். தேவையான அளவு ஓமத்தை எடுத்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். பின்னர் இந்த நீரை வடிகட்டி அருந்தி வர,மார்பு சளி விரைவில் குணமடையும். படிக்க: ஓமம் தரும் மருத்துவ நன்மைகள்.

வெங்காயம்

வெங்காயம் கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டன. சிறிய வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி பொரியுடன் கலந்து குழந்தைகளுக்குத் தரலாம். இது சற்று காரத் தன்மையாக இருக்கும். சிறிது அளவு பனை வெல்லம் தேவை என்றால் கலந்து கொள்ளலாம். இது நெஞ்சு சளியைக் கரைத்து வெளியேற வழி செய்யும்.

பனங்கற்கண்டு

குழந்தைகளுக்குப் பாலில் பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம். இதன் மூலம் நெஞ்சு சளி குணமடையும். மேலும் குழந்தைகளின் உடலில் எதிர்ப்புச் சக்தி நல்ல முறையில் வளர தொடங்கும்.

கற்பூரவல்லி இலை

பொதுவாக நெஞ்சில் சளி கட்டி இருந்தால் குழந்தைகள் இரவு நேரத்தில் தூங்க மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களால் சரியான முறையில் சுவாசிக்க முடியாது. மூச்சை இழுத்து வெளியே விடவே சிரமமாக இருக்கும். கரக் கரக் என்று சத்தம் வந்தவாறு இருக்கும். அந்த கற்பூரவல்லி இலைகளைப் பறித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் தேன் கலந்து அருந்தி வந்தால் நெஞ்சு சளி நல்ல முறையில் கட்டுப்படும். இந்த கற்பூரவல்லி இலைகள் தலை பாரம், சைனஸ் போன்ற தொல்லைகளையும் தீர்க்கும் தன்மை கொண்டன.

மிளகு

காய்கறி, கீரை அல்லது சிக்கன் சூப் தயாரிக்கும் பொழுது அதில் போதிய அளவு மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும். சிக்கன் சூப் நெஞ்சு சளிக்குச் சிறந்த நிவாரணம் தரும்.

கற்பூரம்

தேவையான அளவு தேங்காய் எண்ணெய்யை அடுப்பில் ஏற்றிக் காய்ச்சவேண்டும். இத்தோடு மிகவும் பொடியாக நறுக்கி வைத்த கற்பூரவல்லி இலை, துளசி இலை மற்றும் வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு சிறிதளவு கற்பூரத்தை நசுக்கி உள்ளே போட வேண்டும். மிதமான சூட்டிற்கு வந்த பிறகு இந்த எண்ணெய்யைக் குழந்தையின் நெஞ்சு பகுதி, முதுகு பகுதி, தொண்டை பகுதி ,நெற்றி பகுதி, மூக்கு பகுதி போன்றவற்றில் பூசி விட வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது ஒன்றிரண்டு நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் மார்பு சளியில் இருந்து எளிதாக விடுபட இது ஒரு சிறந்த வழியாகும்.
இது வழிவழியாக வரும் ஒரு சிறந்த பாட்டி வைத்திய முறை ஆகும்.

தேன்

நெஞ்சு சளி அதிகமாக இருக்கும் பட்சத்தில் இரவு தூங்க செல்லும் முன்பு ஒரு ஸ்பூன் அளவு தேனைச் சாப்பிடலாம். இதன்மூலம் இருமல் வராமல் தடுக்கப்படும். தேன் நெஞ்சு சளிக்கு எதிராகச் செயல்படும்.

ரசம்

தூதுவளை தலை அல்லது ஆடாதொடை இலை முதலியவற்றைக் கொண்டு மிளகு சேர்த்து ரசம் தயாரித்துச் சாப்பிடலாம். உணவே மருந்து என்பார்கள். அந்த வகையில் இந்த மூலிகை இலைகளைக் கொண்டு தயாரித்த ரசம் சளிக்கு எதிராகப் போராடும் குணம் கொண்டது.

மஞ்சள்

சற்று மிதமான சூட்டில் இருக்கும் பாலில் சிறிது அளவு மஞ்சளைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தப் பாலை அருந்திவர மார்பு சளி சீக்கிரம் குணமடையும்.

பூண்டு

வாணலியில் ஒரு ஸ்பூன் என்ற அளவில் நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும். இத்தோடு ஐந்தாறு பூண்டுப் பற்களைச் சேர்த்து வதக்க வேண்டும். இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் மார்பு சளி குணமடையும்.

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். கருஞ்சீரகம் மிகவும் மகத்துவமான மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். இந்த கருஞ்சீரகம் மார்பு சளியை விரட்டத் துணை புரியும்.

நாட்டுக்கோழி முட்டை

முட்டையில் நிறைவான அளவு பல சத்துக்கள் உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையைக் கூட்டும். ஆக மிளகு சேர்த்து இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் மார்பு சளி விரைவில் குணமடையும்.

அசைவ உணவுகள்

பொதுவாகவே அசைவ உணவுகளில் தேவையான அளவு காரம் இருக்கும்.இந்த காரத்தன்மை கிருமிகளை அழிக்கத் துணை புரியும் என்ற கருத்து உள்ளது. ஆகக் கோழி ,ஆடு போன்ற இறைச்சி வகைகளைச் சாப்பிடலாம்.

ஆளி விதைகள்

சிறிதளவு ஆளி விதைகளைத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். இத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகலாம். இது மார்பு சளியைக் குணமாக்க உதவும்.

திப்பிலி

சிறிதளவு மிளகு, திப்பிலி ,பனங்கற்கண்டு மற்றும் கடுக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை அரை ஸ்பூன் என்ற அளவில் காலை ,மதியம் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் குழந்தைகளுக்குச் சாப்பிடத் தர வேண்டும். இது மார்புச்சளி குணமடைய உதவும்.

சுக்கு டீ

சுக்கை தட்டி போட்டு டீ தயாரித்துக் குடித்தால் மார்புச்சளி நீங்கும். இந்த முறையைப் பெரியவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பதிவின் மூலம் மார்புச்சளி அல்லது நெஞ்சு சளியை விரட்ட உதவும் அற்புதமான வீட்டு வைத்திய குறிப்புகளை அறிந்திருப்பீர்கள். மழைக்காலம் மற்றும் பனிக்காலங்களில் உங்கள் வீட்டுக் குழந்தைகள் மார்புச் சளியால் அவதிப்படும் நேரத்தில் இந்த குறிப்புகளில் உங்களுக்குச் சுலபமானவற்றைத் தேர்வு செய்து பயன்படுத்தி பலன் அடையுங்கள். சளி போன்ற பிணிகளுக்கு அதிகளவில் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதல்ல. இவ்வாறு சாப்பிடும்போது உடலில் எதிர்ப்புச் சக்தி ஏற்படாமல் போய்விட வாய்ப்புள்ளது. அந்த வகையில் வீட்டிலேயே கிடைக்கும் எளிமையான மூலிகைப் பொருட்களைக் கொண்டே சளித்தொல்லையை விரட்டி விடலாம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null