பிரசவ வலி வரவில்லை என்றால், வலி உடனே வர என்ன செய்யவேண்டும்?

பிரசவ வலி வரவில்லை என்றால், வலி உடனே வர என்ன செய்யவேண்டும்?

பிரசவ வலி மருத்துவர் சொன்ன நேரத்தில் வரவில்லை என்றால், வலி உடனே வர கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்யவேண்டும்? சில இயற்கை & செயற்கையான வழிகளை இங்கே தந்துள்ளோம். மேலும் பல வழிகளை குறிப்பிட்டுள்ளோம், படித்துப் பயன்பெறுக!

 

பிரசவ வலி வராத போது என்ன செய்யலாம்?

 

ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையானது முழு வளர்ச்சி நிலையை எட்டியவுடன் பூமிக்கு வரத் தயாராகும். தோராயமாக 40 வாரங்கள் நிறைவுற்ற உடன் பிரசவ வலி ஏற்படும். முன்கூட்டியே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் இந்த தேதியை மருத்துவர்கள் சுலபமாகக் கணித்து கர்ப்பிணிப் பெண்களிடம் தெரிவித்திருப்பார்கள். இதையே உரியத் தேதி(due date )என்பார்கள். (பிரசவம் பற்றிய பயத்துடன் உள்ளீர்களா? பயமே வேண்டாம்.)

 

ஆனால் சில சமயம் குழந்தைகள் இந்த தேதியில் சரியாக பிறப்பதில்லை. சில வேளைகளில் சுமார் 37 வாரங்களுக்கு முன்னரே குழந்தைகள் பிறக்கவும் செய்துவிடுகின்றன. இப்படிப் பிறக்கும் குழந்தைகளைக் குறைமாத குழந்தைகள் என்று கூறுவார்கள். அதே சமயம் 42 வாரங்கள் கழித்தும் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படுவதில்லை. இதனை ஓவர் டுயூ பிரசவம் என்பார்கள்.

 

இந்த நேரத்தில் தான் பிரசவ வலி ஏற்படாத பொழுது கர்ப்பிணிப் பெண்ணும் அவளது குடும்பத்தாரும் கவலை கொள்கின்றனர். இது மாதிரி சந்தர்ப்பங்களில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறித்த தேதி கடந்துவிட்ட முதல் வாரத்தில் பொதுவாகக் குழந்தைக்கும் தாய்க்கும் எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

 

பிரசவ வலி குறித்த கெடுவைத் தாண்டி வராமல் இருந்தால் எழும் சிக்கல்கள்:

 

குறித்த தேதியைத் தாண்டி காலம் கழியும் பொழுது சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. அப்படி என்னென்ன பிரச்சினைகள் பிரசவ வலி உரிய நேரத்தில் வரலாம் இருப்பதால் வருகின்றன என்பதைப் பார்க்கலாம்.

 

 • தொப்புள் கொடியின் செயல்பாடு குறைந்து கொண்டே வரும். அது தனது வேலையைச் சரி வரச் செய்யாமல் போகலாம்.கருப்பையினுள் தொற்றுகள் தாக்கி வியாதி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • அது போக எதிர்பாராத சிக்கல் வரவும் வாய்ப்பு உள்ளது. இது மாதிரியான சமயங்களில் குழந்தை இயற்கையாகச் சுகப் பிரசவ வழியில் பிறப்பதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது.
 • ஒருவேளை மருத்துவர் குறிப்பிட்ட கால அளவை கடந்து மூன்று நான்கு வாரங்கள் தாண்டிவிட்டால் குழந்தையின் உயிருக்கே கூட ஆபத்து உள்ளது.

 

ஆக இந்த விஷயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அலட்சியமாக இருக்காமல், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

 

செயற்கையாகப் பிரசவ வலியைத் தூண்ட என்ன காரணங்கள்?

 

இந்த மாதிரி சூழலில் மருத்துவர்களே செயற்கையாக பிரசவ வலியைத் தூண்டி விடுகின்றனர்.இது பலன் அளிக்கவும் செய்கிறது என்பது பல புள்ளி விவரங்கள்
மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. இது போக மருத்துவர்களே வேறு சில குறிப்பிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டும் பிரசவ வலியைத் தூண்டிவிடுகின்றனர். அவை என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.

 • கர்ப்பிணிப் பெண்ணின் வயது அதிகமாக இருக்கும் பட்சத்திலும் மருத்துவர்கள் இந்த முடிவு எடுக்கின்றனர்.
 • கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்கனவே முதல் குழந்தை பிறந்த போது இது மாதிரியான சூழல் நிலவி இருந்தாலும் மருத்துவர்கள் அதனைக் கருத்தில் கொள்கின்றனர்.
 • இது போக தாயின் எடையையும், குழந்தையின் எடையையும் மருத்துவர்கள் கணக்கில் கொள்கின்றனர்.
 • இது எல்லாவற்றையும் விட மிக முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அது கருவில் உள்ள குழந்தைக்கு எதாவது ஆபத்து அல்லது சிக்கல் இருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் தாமதிக்காமல் உடனே பிரசவ வலியைத் தூண்டி விடுகின்றனர்.
 • பனிக்குடம் கீழே இறங்கி விட்டால் குழந்தையைக் கருவறையில் வைத்திருப்பது ஆபத்து. அதனால் மருத்துவர்கள் பிரசவ வலியைத் தூண்ட முயல்வார்கள்.
 • பனிக்குடம் உடைந்து விட்டாலும் மருத்துவர்கள் இந்த அவசர நடவடிக்கை மேற் கொள்கின்றனர்.
 • கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சர்க்கரை வியாதி அல்லது ரத்த அழுத்த வியாதி இருந்தாலும் மருத்துவர்கள் பிரசவ வலியைத் தூண்ட ஆலோசனை வழங்குகின்றனர்.

பொதுவாக மருத்துவர் குறிப்பிட்ட கால அளவை கடந்து விட்டால் அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப் படுவதற்கான அபாயம் உள்ளது. இருப்பினும் பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஏற்பட வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக ஒரு கடைசி முயற்சியாக மருத்துவர்கள் பிரசவ வலியைத் தூண்ட முனைகின்றனர். பிரசவ வலியை இயற்கை மற்றும் செயற்கை வழிகளில் தூண்டிவிடலாம். அவை என்னென்ன என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 

இயற்கை வழியில் பிரசவ வலியைத் தூண்டி விட சில யோசனைகள்

 

நடைப்பயிற்சி

நடப்பதால் பிரசவ வலி தூண்டப்படுகின்றது. நடக்கும் பொழுது குழந்தையின் தலை செர்விக்ஸ் பகுதியை நோக்கி கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. இது ஒரு இயற்கையான வலி மற்றும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வழியாகும். அதற்காகக் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக நெடுநேரம் நடக்கக்கூடாது. அளவாக நடப்பதன் மூலம் பிரசவ வலியைத் தூண்டலாம்.

 

உடலுறவு

 

தாம்பத்திய உறவை வைத்துக் கொள்வதன் மூலமும் பிரசவ வலியைத் தூண்ட முடியும் என்று நம்பப்படுகிறது. இதற்குக் காரணம் ஆண் உயிரணுவில் உள்ள ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் கர்ப்பிணிப் பெண்களின் செர்விக்ஸ் பகுதியைத் தளர்ச்சி அடையச் செய்கின்றது. அது போக கூடுதலாக அவள் உடலில் சுரக்கும் ஆக்சிடோசின் ஹார்மோன் கர்ப்பப்பை சுருங்க உதவுகின்றது. இதனால் இயற்கையான வழியில் பிரசவ வலி தோன்ற வாய்ப்பு உள்ளது. மருத்துவ ரீதியாக வேறு காரணங்களினால் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் முன்கூட்டியே எச்சரித்து இருந்தால் இந்த வழியைப் பின் பற்றக் கூடாது.

 

நிப்பிள் தூண்டுதல்

 

இந்த முயற்சியை ஒரு நாளில் ஒன்று முதல் இரண்டு மணி நேரங்கள் செய்ய வேண்டும். மிகவும் கடினமான முறையில் இந்த முயற்சியை மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆக்ஸிடோசின் ஹார்மோன் பெண்களின் உடலில் சுரக்கப் படுகின்றது. இது கர்ப்பப்பை சுருங்கச் செய்வதற்கு உதவுகின்றது.இதன் மூலம் பிரசவ வலியைத் தூண்டலாம்.

 

இஞ்சி

 

இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமானம் மிக எளிமையான நடை பெறுகின்றது.இது ஒரு சிறந்த மலமிளக்கியாகும். இதன் மூலம் இயற்கை கழிவுகள் இலகுவாக வெளியேறும்.அதனால் கர்ப்பப்பையும் தூண்டப்படுகின்றது. இதனால் பிரசவ வலி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

 

அன்னாசிப் பழம்

 

இதில் உள்ள ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் பிரசவ வலியைத் தூண்டும் தன்மை கொண்டது என்று கூறப்படுகின்றது. அன்னாசிப்பழத்தை அளவான அளவில் கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் பிரசவ வலியை ஏற்படுத்தலாம்.

 

ஆமணக்கு எண்ணெய்

 

இதை மிகவும் சிறிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை எடுத்துக்கொள்வதாலும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ வலி தூண்டப்படும் என்று சொல்லப்படுகின்றது.

 

குளியல்

 

இதமான சுடுநீரில் குளியல் போடுவதன் மூலமும் பிரசவவலி தூண்டப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகின்றது. அதிக சூடான தண்ணீரில் குளிக்கக் கூடாது. இது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்க நேரிடலாம்.மிதமான சூடு உகந்தது.

 

ராஸ்பெர்ரி இலைகள்

 

இந்த இலைகளைக் கொண்டு டீ வைத்து அருந்துவதன் மூலம் பிரசவ வலி ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதனை 32 வாரப் பிரசவ காலத்திற்குப் பிறகு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.அதற்கு முன்பு இதை அருந்துவது உகந்தது இல்லை.

 

இதில் உள்ள பல வழிகள் மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆனது கிடையாது.
இந்த வழிகள் அனைத்தும் மேலெழுந்தவாரியாகப் பலன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. சில வழிகளைப் பின்பற்றும் முன்பு மருத்துவர்களின் உரிய ஆலோசனைகள் அவசியம் என்பதைக் கர்ப்பிணிப் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

செயற்கையான வழியில் பிரசவ வலி

 

இப்போது செயற்கையான வழியில் பிரசவ வலி எவ்வாறு தூண்டப் படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

 • ஆக்சிடோசின் அல்லது ப்ராஸ்டாகிளாண்ட் என்று ஹார்மோன்கள் ஜெல் வடிவில் கர்ப்பிணிப் பெண்ணின் செர்விக்ஸ் பகுதியில் தடவப் படுகின்றது. இதன் மூலம் பிரசவ வலி தூண்டப்படுகிறது.
 • கர்ப்பிணிப் பெண்களுக்கு மாத்திரை மூலமும் பிரசவ வலி தூண்டப்படுகின்றது.
 • கர்ப்பிணிப் பெண்ணின் கை நரம்பில் ஊசி செலுத்தப்பட்டும் பிரசவ வலி தூண்டப்படுகின்றது.

 

பின் விளைவுகள்

 

இப்படி செயற்கையான வழியில் பிரசவ வலியைத் தூண்டும் பொழுது ஏதாவது பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளனவா என்று அறிந்து கொள்ளலாம்.

ஒரு சில கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த செயற்கை வழிமுறையின் தாக்கத்தால் வாந்தி, மயக்கம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தென்படுகின்றன.

செயற்கையான பிரசவ வலி பற்றிய கர்ப்பிணிப் பெண்களின் பயம்
இந்த முறையைக் குறித்து சில கர்ப்பிணிப் பெண்கள் அச்சப்படுகின்றனர். பிரசவ வலி அளவுக்கு அதிகமாக இருக்குமோ என்று பயப்படுகின்றனர். இயற்கையாக வரும் பிரசவ வலி படிப்படியாக அதிகரிக்கும். ஆனால் இந்த முறையில் வழி சற்று இலகுவானது இல்லை தான். இருப்பினும் இந்த முறையைக் கையாண்டுள்ள பல பெண்கள் இயற்கையான வழியில் குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளனர். வலி மிகவும் கடுமையாக இருக்கும் பட்சத்தில் மருத்துவர்களின் ஆலோசனையோடு வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேலே உள்ள தகவலின் மூலம் பிரசவ வலி ஏற்படாத சமயத்தில் என்ன செய்யலாம் என்று விளக்கமாக அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null