பசலை கீரையின் பரிசுத்தமான பயன்கள்...

பசலை கீரையின் பரிசுத்தமான பயன்கள்...

எப்போதுமே சத்தான உணவுப் பட்டியலில் முதலிடம் பிடிப்பது கீரை வகைகளாகவே இருக்கக்கூடும்.ஒவ்வொரு கீரையிலும் வெவ்வேறு விதமான சத்துக்கள் உள்ளன. அந்த வகையில் பசலை கீரை மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த பசலை கீரையில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளன. இந்த பசலை கீரை (Pasalai keerai in Tamil or Spinach) சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாகவும் இருக்கும் என்பது சிறப்பான விசயம்.’ உணவே மருந்து’ என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

அந்த வகையில் பசலை கீரை சாப்பிடுபவர்களுக்கு நீண்ட ஆயுள் கிட்டும் என்பது உண்மை. இன்று பல்வேறு விதமான ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்கள் என்று பலரும் பசலை கீரைக்கு ஒரு மிக முக்கியமான இடத்தை வழங்க தொடங்கி விட்டனர். ஆக நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது பசலை கீரையைப் பற்றியதுதான். பசலை கீரையின் எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் என்ன? என்று விளக்கமாகப் பார்க்கலாம்.

பசலை கீரை

இந்த பசலை கீரையின் தாவரப்பெயர் ஸ்பினாச்சியா ஒலிரேசியா என்பதாகும். ஆயுர்வேதத்தில் இந்த பசலை கீரையை அமிர்த வல்லாரை என்று சிறப்புப் பெயரில் குறிப்பிடுவார்கள்.இவற்றின் இலைகள் சற்று தடிமனாகவும் ,முக்கோண வடிவத்திலும் காணப்படும். இந்த பசலையிலே பல்வேறு விதமான ரகங்களும் உள்ளன. உதாரணமாகக் கொடிப்பசலை ,வெள்ளைப் பசலை ,ஆற்றுப் பசலை , கொத்துப் பசலை போன்ற வகைகளைக் குறிப்பிடலாம்.

பசலைக்கீரையின் மருத்துவ பலன்கள் என்ன?

டி எச் ஏ சத்து

மூளை வளர்ச்சிக்கும் , மூளையின்செயல்பாட்டிற்கும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் மிகவும் அவசியமானது. டி எச் ஏ சத்து எனப்படுவது ஒமேகா 3 பேட்டி ஆசிட் உட்பிரிவு தான். இன்று எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் அறிவுஜீவிகளாக இருக்க வேண்டும் என்ற பேராவல் உள்ளது. நினைவாற்றல், மூளை செல்கள் சிதைவு ஏற்படாமல் இருத்தல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு டி எச் ஏ சத்து தேவையாக உள்ளது.

இதற்காகப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாக்கெட் செய்த மாவு மாதிரியான பொருட்களை வாங்கித் தருகின்றனர். அதற்கெல்லாம் அவசியமே கிடையாது. வாரம் இரண்டு முறை பசலை கீரையைச் சேர்த்தாலே போதும் இயற்கையான வழியில் போதுமான டி.எச்.ஏ சத்து குழந்தைகளுக்குச் சென்று சேர்ந்துவிடும்.

இரும்புச்சத்து

பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று என்று அனைவரும் அறிந்ததே. இரத்த உற்பத்தியில் இருந்து முடி வளர்ச்சியை வரை பல விஷயங்களுக்கு இரும்புச்சத்து பிரதான தேவையாகும். இந்த கீரையை உணவில் அவ்வப்போது சேர்த்து வரும் பொழுது உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படவே வாய்ப்பு இருக்காது. அதிலும் ரத்தசோகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு இந்த பசலை கீரை அருமருந்தாகும். இதைத் தொடர்ச்சியாகப் பாதிப்பு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள இரத்தம் சிறப்பாக விருத்தி அடையும். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அதனாலேயே மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் ,குழந்தைகள் போன்றவர்களுக்குப் பசலை கீரையை (Pasalai keerai in Tamil or Spinach) அதிக அளவு பரிந்துரைக்கின்றனர்.

சருமம் பளபளப்பு அடையும்

பசலை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருபவர்களுக்குச் சருமம் பளபளப்பு அடையும். இதனால் அவர்களின் முகம் பிரகாசமாகக் காணப்படும்.மேலும் பசலை இலைகளைச் சாறு பிழிந்து உடலில் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவுவதன் மூலம் நல்ல பலன் கிட்டும்.மேலும் தீ காயங்கள், தழும்புகள் ,பருக்கள் உள்ள இடங்களில் இந்த சாற்றைத் தடவுவதன் மூலம் சிறந்த முறையில் நிவாரணம் பெறலாம்.

சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீரும்

இந்த பசலை கீரை சிறுநீர் கடுப்பு ,சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் தன்மை கொண்டது. மேலும் சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருந்தாலும், இந்தக் கீரை சிறுநீரைப் பெருக்கி வெளியேற்ற துணை புரியும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைக்குச் சிறந்த மருந்தாகும்.

வயிற்றுக் கோளாறு நீங்கும்

மலச்சிக்கல் ,வயிற்றுவலி உட்பட பல்வேறு விதமான வயிற்றுக் கோளாறுகளுக்கு இந்த பசலை கீரை சிறந்த மருந்தாகும்.குடலில் அடைத்து உள்ள கழிவுகளை அகற்ற உதவுகின்றது.மேலும் இந்த பசலை கீரையானது வயிற்றைக் குளிர்ச்சி அடையச் செய்கின்றது. வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதிலும் துணைபுரிகின்றது.

உடல் சூட்டைத் தணிக்கும்

வெயில் காலங்களில் இந்த கீரையை எடுத்துக் கொள்வது மிகவும் ஏற்றது. இந்த கீரை தாகத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. மேலும் உடல் சூட்டைக் குறைத்து உடலுக்குத் தேவையான குளிர்ச்சியைத் தரும். இதன்மூலம் வியர்க்குரு, சூட்டு கொப்புளங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கார்டியாக் கிளைக்கோசைட்

முன்னரே சொன்னது போல பசலை கீரையைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் மூலம் ஒரு நல்ல விஷயம் கண்டறியப்பட்டுள்ளது. பசலையில் நிறைந்த உள்ள சத்தான கார்டியாக் கிளைக்கோசைட் இதயம் சுருங்கி விரியும் செயல்பாட்டிற்கு மிகவும் உதவி புரியும் தன்மை கொண்டது.

படிக்க: தூதுவளை தரும் சத்துக்கள்..

மாதவிலக்கு சீராகும்

சில பெண்களுக்குச் சரியான இடைவெளியில் மாதவிலக்கு சுழற்சி ஏற்படாது. இது மாதிரியான தொல்லைகளைத் தவிக்கும் பெண்களுக்குப் பசலை கீரை சாப்பிட மிகவும் உகந்தது. பசலை கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும்.

இரத்த அழுத்தம் குறையும்

பசலைக்கீரையின் மற்றொரு சிறப்பம்சம் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க
உதவுகின்றது.

கழிவுகளை நீக்கும்

குழந்தை பெற்ற பெண்களில் வயிற்றில் கழிவுகள் தங்கி இருக்கும். இந்த கழிவுகளை அப்படியே விட்டுவிடக்கூடாது. இது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இந்த மாதிரி பெண்களுக்குப் பசலை கீரை (Pasalai keerai in Tamil or Spinach) எளிமையான வகையில் உதவுகின்றது. பசலைக் கீரையை உணவாகத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது இவர்கள் உடலில் தேங்கிய கழிவுகள் முற்றிலுமாக நீங்கும்.

தலைவலி நீங்கும்

பசலை கீரை தலைவலியைக் குணமாக்கும் தன்மை கொண்டது என்று நம்பப்படுகின்றது. இது பசலை கீரையின் மூலம் கிடைக்கும் நல்ல பலன். படிக்க: வலி இல்லாமல் இருக்க மருத்துவம்.

போலிக் சத்து நிறைந்தது

கர்ப்ப காலத்தில் பெண்களின் கருவில் வளரும் குழந்தைகளுக்கு போலிக் சத்து தேவையானது. இந்த சத்து குழந்தைகளின் மூளை மற்றும் உறுப்பு வளர்ச்சிகளுக்கு உதவுகின்றது. பசலை கீரையில் இந்த போலிக் சத்து நிறைவாக உள்ளது. ஆக கர்ப்பிணிப் பெண்கள் பசலைக்கீரையை தாராளமாக உணவில் சேர்த்து பயன் அடையலாம்.

புண் நீங்கும்

ஆசனவாயில் ஏற்படும் புண், கடுப்பு ,எரிச்சல் போன்ற தொல்லைகளைப் பசலை கீரை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

மார்பகப் புற்றுநோய் வராது

பசலை கீரை உள்ள விட்டமின் ஏ, சி, போலிக் சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது. இது போக பசலை கீரையில் நிறைவான அளவிலான பிளேவனாய்டு சத்து உள்ளது. இது புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் வேதிப் பொருளாகும். ஆக பெண்கள் சாப்பிட ஏற்ற முக்கியமான கீரை இந்த பசலை ஆகும்.

எலும்புகள் வலுவடையும்

பசலை கீரையில் நிறைந்துள்ள சுண்ணாம்புச் சத்து எலும்புகள் மற்றும் பற்களை வலிமை அடைய உதவும். வளர்ச்சி பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். பொரியலாகவோ, சூப்பாகவோ , கூட்டாகவோ சமைத்துத் தரலாம்.

எடை குறைய உதவும்

பசலை கீரையில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது. அதே சமயம் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உடல் எடை கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துபவர்கள் இந்த பசலை கீரை ஏற்ற உணவாகும்.

கண் பார்வைக்குச் சிறந்தது

பசலை கீரையில் விட்டமின் ஏ சத்து நிறைவாக உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான சத்தாகும்.

எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தியை வழங்குகின்றது. இந்த கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு நோய் தொற்று தாக்கம் குறைவாகவே இருக்கும்.

முடி வளர்ச்சி அதிகரிக்கும்

பசலை கீரையில் உள்ள விட்டமின் பி ,சி ,ஈ ,பொட்டாசியம் ,கால்சியம் ,இரும்புச் சத்து, மெக்னீசியம் முதலான சத்துக்கள் முடிவளர்ச்சிக்குத் தேவையானது. இந்த கீரையை எடுத்துக் கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முடி கொட்டுதல் காணப்படாது.

பசலை கீரையின் (Pasalai keerai in Tamil or Spinach) அசத்தலான மருத்துவ நன்மைகளை அறிந்து இருப்பீர்கள். இனி தவறாமல் வாரம் இரண்டு முறையாவது இந்த கீரையை உணவாகச் சமைத்துச் சாப்பிடுங்கள். ருசி மற்றும் ஆரோக்கியம் என்று இரண்டு விஷயங்களையும் சமமாக நிறைவு செய்யும் அற்புத கீரை தான் இந்த பசலை கீரை என்பதை மறக்க வேண்டாம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null