கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி குறைய வழி இல்லையா? இதோ 16 சிறந்த வழிகள்...

கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி குறைய வழி இல்லையா? இதோ 16 சிறந்த வழிகள்...

கர்ப்பிணிப் பெண்களின் மனதில் ஒரு பக்கம் எப்போதுமே பிரசவ நேரத்தைக் குறித்த எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். பத்தாம் மாதத்தை நெருங்கும் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கரு, முழு வளர்ச்சியை எய்தி பூமிக்கு வரத் தயாராகி இருக்கும். ஒருநாள் திடீரென்று, இது நாள் வரை எதிர்நோக்கியிருந்த பிரசவ வலி ஏற்படத் தொடங்கும். இந்த பிரசவ வலி சாதாரண கை, கால் வலி போல கிடையாது. உயிரையே உருக்கி எடுக்கும் தாங்க முடியாத வலியாக இருக்கும். இந்த பிரசவ வலி குறைய (Pregnancy pain relief tips) என்ன செய்யலாம்?!

 

எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும், அந்தப் பெண் பிரசவ வலி ஏற்படும் நொடிகளில் மனதளவிலும் உடலளவிலும் உடைந்து நொறுங்குகிறாள். ஏன் இப்படி ஒரு பிறவி எடுத்தோம்? இதற்கு மரணமே மேல்! என்று பிரசவ அறையிலிருந்த கணங்களில் அலறாத கர்ப்பிணிப் பெண்களை விரல் விட்டுக் கூட எண்ண முடியாது! ஆனால் இதையும் தாங்கிக் கொண்டு அவள் கடந்து வருகின்றாள். என்ன காரணம்? உள்ளிருக்கும் தன் முகம் தெரியாத குழந்தைக்காகத் தான்!

 

இந்த கடுமையான பிரசவ வலி குறைய / எளிதாக எதிர்கொள்ள ஏதாவது உள்ளதா? நிறைய வழிகள் உள்ளன. ஆனால் ஒரு வேதனையான உண்மை என்னவென்றால், இன்று பல பெண்களுக்கு இந்த விழிப்புணர்வும், தகவல் அறிவும் மிகவும் குறைவாக உள்ளது.

 

பிரசவ வலி குறைய / சமாளிக்க சில டிப்ஸ்!

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தி நிச்சயமாகப் பிரசவ வலி குறைய அல்லது எளிமையாகக் கையாளலாம். அவை என்ன? என்று அறிந்து கொள்ளலாம்.

 

பயம் கூடவே கூடாது

 

பிரசவ வலி ஏற்படத் தொடங்கிய உடனே கர்ப்பிணிப் பெண்கள் மனதளவில் பயமும் பீதியும் அடைகின்றனர். இதனால் அவர்கள் உடல் இறுக்கம் அடைகின்றது. இது சீக்கிரமாக நடைபெற வேண்டிய பிரசவத்தைத் தாமதப்படுத்தி, இன்னும் வலியை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த பயம் உடலில் சுரக்க வேண்டிய பல நல்ல ஹார்மோன்களைத் தடைசெய்கின்றது.

 

இதையும் படிங்க: பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன?

 

உதாரணமாக என்டோர்பின், என்செப்பலின் போன்றவை. இந்த என்டோர்பின் நம் உடலில் ஏற்படும் வலியைப் போக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலில் சுரக்கப்படும் இயற்கையான நிவாரணியாகும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் பயம் கொள்ளக்கூடாது. இதனால் உடலில் நல்ல ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு பிரசவ வலியை இயல்பாக எதிர்கொள்ள முடியும்.

 

லமேஸ் முறை

 

இது பிரசவ வலியைச் சுலபமாகக் கையாண்டு, இயற்கையான வழியில் சுகப்பிரசவத்தை மேற்கொள்ளக் கொடுக்கப்படும் சிறந்த பயிற்சி முறையாகும். இந்த முறையில் உடற்பயிற்சி,மூச்சுப்பயிற்சி மற்றும் உடம்பை தளர்வாக வைத்துக் கொள்ளும் பயிற்சிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. இது ஒரு மிகச் சிறந்த வழியாகும்.

 

உலகில் உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த பெண்கள் இந்த முறையைக் கையாண்டு பிரசவ வலியை எளிதாக எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இம்முறை பிரசவ வலி குறைய பெரிதும் உதவியாக இருக்கும். இதைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதைச் சரியான வகையில் கர்ப்பிணிப் பெண்கள் கற்று அறிந்து கொண்டு பிரசவ வலியைச் சுலபமாக எதிர்கொள்ளலாம்.

 

தண்ணீர்

 

தண்ணீருக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது என்பது நாம் அறிந்தது தான். பிரசவ வலி முதல் நிலையில் இருக்கும் பொழுது, சற்று மிதமான வெந்நீரில் ஷவர் குளியல் போடலாம். இதனால் மனம் சற்று சமன்பட்டு பிரசவ வலி குறைய உதவும்.

 

இதையும் படிங்க: அறிவான குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்?

 

சற்று மிதமான வெந்நீர் நிறைந்த டப்பில் கர்ப்பிணிப் பெண்கள் அமரவும் செய்யலாம். இந்த விஷயத்தில் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதும் நல்லது.இன்று பல மருத்துவமனைகளில் இந்த வசதிகள் உள்ளன. இவ்வாறு செய்வதனால் தசைகள் சற்று தளர்வாகின்றன. கூடுதலாக பெல்விக் பகுதியிலுள்ள அழுத்தமும் குறைந்து, கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ வலியைச் சமாளிக்க முடிகின்றது.

 

சிறந்த மருத்துவர்

 

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரசவத்தில் எல்லா வகையிலும் உங்களுக்கு உதவக் கூடியவராகவும், உங்களுக்கு உற்சாகம் அளிப்பவராகவும் இருக்க வேண்டும். ஒரு சில மருத்துவர்கள் முகத்தைப் பார்த்தாலே வியாதி பறந்து விடும் என்பார்கள். இது மருத்துவரின் குணநலன்களை மறைமுகமாகக் காட்டுகிறது. நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டு அந்த மருத்துவரின் மீது உங்களுக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டாலே, கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ வலியையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு விடுவர். சுகமான வழியில் குழந்தையையும் பெற்று எடுத்துவிடுவார்.

 

உருவகம் செய்யுங்கள்

 

மனதில் உள்ள ஒவ்வொரு எண்ணங்களும் வாழ்வில் எதிரொலிக்கும் என்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்க்க வேண்டும். நிச்சயமாக என்னால் இந்த வலியைத் தாங்க முடியும், சீக்கிரமாக நான் சுகமான வழியில் குழந்தையைப் பெற்றெடுப்பேன் என்பது போன்ற தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அந்த காட்சிகளைத் தனது மனதில் உருவகப்படுத்தியும் பார்க்க வேண்டும். இது சாதாரண விஷயம் போல தோன்றும்.ஆனால் இதற்குள் அசாதாரண உண்மை ஒளிந்துள்ளது.இந்த முயற்சிகளால் கர்ப்பிணிப் பெண்களால் நிச்சயம் பிரசவ வலியைத் தாங்க முடியும்.

 

இதமான சூழல்

 

கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது நடக்கலாம். ஒரே நிலையில் உடலை வைத்திருக்காமல் வெவ்வேறு நிலைக்கு மாற்றலாம். இன்று பல மருத்துவமனைகளில் ஃபர்திங் பால் வந்துவிட்டன. கர்ப்பிணிப் பெண்கள் அதைப் பயன்படுத்துவதன் மூலம் பிரசவ வலியைச் சற்று இலகுவாக்கிக் கொள்ளலாம். இது குழந்தை தலை திருப்பி பெல்விக் பகுதி வழியே வெளியே வர உதவும். சில சமயம் சிசு தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டியதால், கர்ப்பிணிப் பெண்கள் படுக்கையிலே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. குறைந்த பட்சம் உடலசைவுகளை ஏதாவது மேற்கொள்வது நல்லது. உதாரணமாக தலையை யோசிக்கலாம் கைகளை ஆட்டலாம். சற்று மிருதுவான நாற்காலியில் அமரலாம்.

 

அலறல் வேண்டாம்

 

கர்ப்பிணிப் பெண்களின் பிரசவ வலி மிகவும் துன்பமானது தான். அதற்காக பெருங்குரலெடுத்துக் கதற வேண்டாம். இது உங்கள் தொண்டையை வறண்டு விடச் செய்வதோடு உங்களது சக்தியையும் குறைத்து விடும். அதனால் சற்று சன்னமான குரலில் முனகியே உங்கள் வலியைச் சமாளித்துக் கொள்ளுங்கள்.

 

மூச்சுப் பயிற்சி

 

பிரசவவலி உச்சக் கட்டத்தில் இருக்கும் பொழுது, சுவாசத்தைக் கவனிப்பது சற்று சிரமமானதுதான். இருப்பினும் சற்றும் முனைந்து சுவாசத்தைக் கட்டுக்குள் வையுங்கள். மூச்சை நன்றாக உள்ளிழுத்து, நிதானமாக வெளிவிடவும். உங்கள் கவனத்தை உடலின் ஒவ்வொரு பாகத்திலும் செலுத்தி, ஒவ்வொரு பகுதியையும் நிதானம் அடைய செய்யுங்கள். இது உங்கள் பிரசவ வலியைச் சற்று இலகுவாக்கும்.

 

அக்குபஞ்சர்

 

இது சீனர்களின் பாரம்பரிய முறை. உடலின் குறிப்பிட்ட சிறப்புப் புள்ளியில் ஊசியைக் கொண்டு குத்தப்படுகின்றது. இதனால் வலியைப் போக்கும் ஹார்மோன்கள் உடலில் சுரக்கத் தூண்டப்படுகின்றன. இது ஒரு இயற்கையான முறை தான். இதில் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மருத்துவர்களின் ஆலோசனையோடு, இத்துறையில் முறையான அங்கீகாரம் கொண்ட நபரின் உதவியை நாடலாம்.

 

அம்மா/தோழிகளிடம் கேட்டு அறிதல்

 

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் அம்மாவிடம் அல்லது நம்பிக்கைக்குரிய தோழிகளிடம் பிரசவத்தை எப்படி எதிர்கொள்வது என்று கேட்டு அறிந்து கொள்ளலாம். அவர்கள் தரும் அறிவுரைகளும் நுணுக்கங்களும் பிரசவ நேரத்தில் மிகவும் கை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கேட்பதன் மூலம் நமக்குத் தெரியாத விஷயம் தெரிய நேரிடலாம். கர்ப்பிணிப் பெண்கள் இந்த எளிய வழியைப் பின்பற்றிப் பிரசவ நேரத்தில் பலன் அடையலாம்.

 

இசை

 

மனதை அமைதிப்படுத்தும் வழிகளில் இசைக்கு முதலிடம் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ அறையில் மென்மையான பாடல்களைக் கேட்கலாம். அல்லது நீர் கொட்டுவது, புல்லாங்குழல் ஓசை போன்றவற்றைக் கேட்கலாம். மனதை அமைதிப்படுத்தி பிரசவ வலியை எதிர்கொள்ளத் துணைபுரியும்.

 

கணவனின் துணை

 

பிரசவ காலத்தில் கர்ப்பிணிப்பெண்ணுக்குக் கணவனின் துணை மிகவும் அவசியம். கணவனின் அருகாமையும் அன்பான பார்வையும் ஊக்க வார்த்தைகளும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மனதில் விவரிக்க முடியாத மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அவர்களின் கை பாதங்களைத் தேய்த்து அவர்களை நிதானப்படுத்த உதவலாம்.

 

கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் பி

 

இந்த சத்துக்கள் பிரசவ வலியை எதிர்கொள்ள உதவுகிறது. பொதுவாகப் பிரசவ வலியின் போது பெண்கள் உணவு அருந்த விரும்புவதில்லை. எனினும் தேவைப்படும் பொழுது இந்த சத்துக்கள் நிறைந்து ஆகாரத்தை எடுக்கலாம்.

 

ஒத்தடம்

 

வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் ஒத்தடம் கொடுப்பதனால் சற்று இதமாக உணரலாம். வயிற்றுப் பகுதியைத் தவிர்த்து தொடை இடுப்பு போன்ற பகுதிகளுக்கு ஒத்தடம் தருவது நல்லது. இதுவும் வலியைச் சமாளிக்க உதவும்.

 

நடைப்பயிற்சி மற்றும் எளிய யோகா பயிற்சி

 

பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் போதிய நடைப்பயிற்சியும் எளிய யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டு இருந்தால் விரைந்து சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் பிரசவ நேரத்தில் வலியைச் சீக்கிரம் கடந்துவிடலாம்.பிரசவம் சிக்கலின்றி நடக்க முழு வாய்ப்புள்ளது.

 

சத்து நிறைந்த உணவுகள்

 

கர்ப்பகாலத்தில் பெண்கள் போதிய ஊட்டச்சத்து நிறைந்த ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சத்துக்கள் கர்ப்பிணியின் உடலில் சேர்ந்திருக்கும் பொழுது,பிரசவ நேரத்தில் பெரிய வகையில் உதவும். பிரசவ வலி எதிர்கொள்ள உடல் வலிமையும் இன்றியமையாதது.

 

இந்த குறிப்புகளை எல்லாம் சரிவரப் பயன்படுத்தி பிரசவ நேரத்தில் ஏற்படும் பிரசவ வலியைச் சுலபமாக எதிர்கொள்ளுங்கள்.

 

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null