பிரசவத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் சிசேரியன் பிரசவம் முக்கியமானது. இந்த அறுவை சிகிச்சை பிரசவத்தால் நன்மை மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன. இன்று அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் என்று அனைத்தையும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆக இதனைப் பற்றின விழிப்புணர்வு கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகம் ஏற்பட வேண்டும்.
சிசேரியன் பிரசவம் இன்று பிரபலமாகிக் கொண்டே வருகிறது. சுகப் பிரசவத்திற்கு சாத்தியம் உள்ள பெண்களில் சிலர் கூட இந்த அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது வருத்தமான விஷயமாகும். வலி தெரியாமல் குழந்தை பெற்றுக் கொள்ள இந்த வகை பிரசவத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அறுவைசிகிச்சை பிரசவம் பாதுகாப்பாக இருக்கிறது என்பது உண்மை. இந்த வகை பிரசவமானது கடைசி நிமிட சூழலைக் கொண்டே குழந்தை மற்றும் தாயைக் காப்பாற்றத் தேர்ந்தெடுக்கப் படுகிறது என்பதும் உண்மை. இது ஒரு சவால் நிறைந்த பிரசவ முறையாகும். இதில் கருவுற்றிருக்கும் பெண்ணின் வயிற்றுப் பகுதி திறக்கப்பட்டு, கர்ப்பப்பை கிழிக்கப்பட்டு குழந்தை கர்ப்பப்பையில் இருந்து வெளியே எடுக்கப் படும். இதனாலேயே இது ஆபத்து நிறைந்ததாகவும் கஷ்டமானது எனவும் சொல்லப்படுகிறது.
அறுவை சிகிச்சை பிரசவத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் இன்றியமையாதவை. இந்த பிரசவ முறையைச் சரியான காரணத்திற்காகத் தேர்ந்தெடுத்து இருக்கும் பட்சத்தில் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முடியும். எனினும், ஒரு தாயால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றால், அதுவே சிறந்த வழியாகும். இங்கே சிசேரியன் பிரசவத்தின் சில குறிப்பிடத்தக்க நல்ல பலன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பிரசவத்தின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டால், இறுதி நேரத்தில் தாய் மற்றும் சேயைக் காப்பாற்ற இந்த பிரசவ முறையே சிறந்த வழியாகும். அது மாதிரியான சூழல்களில் மருத்துவர்கள் மாற்றுக்கருத்து இன்றி இந்த வகை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எதாவது மருத்துவ சிக்கல் காரணமாக அறுவை சிகிச்சைப் பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் நிலை வந்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அது மாதிரியான சூழல்களில் அறுவை சிகிச்சை பிரசவம் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.
பிறக்கும் குழந்தையை இந்த அறுவை சிகிச்சை பிரசவம் அதிர்ச்சி ஏற்பட செய்யாமல் சுலபமாகப் பிறக்க உதவும்.பிரசவம் சற்று சிக்கலான சூழலில் வயிற்றிலிருக்கும் சிசு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றது. இந்த சூழலில் சிசேரியன் பிரசவம் குழந்தையை அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற வழி வகை செய்கிறது.
இந்தப் பிரசவ முறை, நோய்த் தொற்று ஏற்படாமல் தாய் மற்றும் சேய் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க உதவும். பிரசவம் தாமதமாக ஆக, பனிக்குடம் உடைந்து விட்ட சூழலில் நோய்த் தொற்று அபாயம் உள்ளது. இந்த சூழலில்தான் அறுவை சிகிச்சை பிரசவம் கை கொடுக்கின்றது.
இதையும் படிங்க: சிசேரியன் ஏன் செய்யவேண்டும்?
பிறக்கும் குழந்தை சரியான நிலையில் இல்லாமல் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை முறை நல்ல தீர்வைத் தரும். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க இந்த பிரசவம் கை கொடுக்கும்.
இந்த முறை பிரசவத்தால் சரியாகத் திட்டமிட்டுச் சரியான நேரத்தில் குழந்தை பிறக்க வழி வகை செய்ய இயலும். மேலும் இது பெரிய சிக்கல் இல்லாமல் குழந்தை பிறக்க உதவும்.
கருவுற்றிருக்கும் தாய்க்கு ஏதாவது உடல் உபாதைகள், உதாரணமாக அதிக இரத்த கொதிப்பு அல்லது நீரிழிவு போன்று நோய் பாதிப்புகள் இருந்தால், தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க இந்தப் பிரசவ முறை சிறந்த வாய்ப்பாகும்.
இந்தப் பிரசவ முறையில் சில நன்மைகள் இருப்பது போல் சில தீமைகளும் அசௌகரியங்களும் இருக்கின்றன. நீங்கள் இந்த சிசேரியன் பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் முன், அதைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. இங்கே நீங்கள் அறுவைசிகிச்சை பிரசவத்தின் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சுகப் பிரசவத்தை ஒப்பிடும் போது இந்தப் பிரசவ முறையால் சில மோசமான உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகள் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஏற்படக்கூடும். இந்த வகை பிரசவத்தை மேற்கொண்ட பெண்கள் உடல் ஆரோக்கியத்தை திரும்பிப் பெற, சற்று காலம் எடுக்கின்றது. கூடுதலாக முதுகு வலி, நோய்த் தொற்று, உடல்எடைஅதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஆக இந்த வகை பிரசவம் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் கொண்டது என்பது மட்டும் உண்மை.
குழந்தை சரியான நேரத்தில் அல்லாமல், குறித்த பிரசவ காலத்திற்கு முன்னரே வெளியே வந்து விடுவதால், சுவாச பிரச்சனை மற்றும் முழுமையாக வளர்ச்சி அடையாது இருத்தல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் சாத்தியம் உள்ளன. அதனால் குழந்தையின் ஆரோக்கியம் கெட வாய்ப்பு உள்ளது.
குழந்தை பிறந்தவுடன் சில சமயம் தாயிடம் கொடுக்கமாட்டார்கள். சில சமயம் அறுவை சிகிச்சை மூலமாகப் பிறக்கும் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கின்றனர். இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கலாம். குறிப்பாகக் குழந்தை மிகவும் எடை குறைவாக இருப்பது முக்கிய காரணியாகும். குழந்தையைச் சிறிது நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து அதன் உடல் நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்த பின்னரே தாயிடம் கொடுப்பார்கள்.
குழந்தை எடை குறைவோடு பிறக்கக்கூடும். சராசரி எடையை விடக் குறைந்த எடையோடு பிறக்கும் போது சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். முழுமையாக வளர்ச்சி பெறாமல் குழந்தை பிறப்பதால் இறப்பதற்கான அபாயமும் உள்ளது. மேலும் இப்படிப் பிறக்கும் குழந்தைகள் வளர வளர எடை குறைபாட்டால் அவதிப் படக்கூடும்.
இந்தப் பிரச்சனைகள் மட்டுமல்லாமல், குழந்தை பெற்ற பெண் சுகப் பிரசவமான பெண்ணோடு ஒப்பிடும் போது விரைவாகத் தன்னுடைய இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியாது. அந்த பெண்ணுக்குக் குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருட காலம் உடல் ஆரோக்கியம் அடையத் தேவைப்படும். அதுவரையிலும் பிறரின் உதவி தேவைப் படும். அவள் எந்தக் கடினமான வேலைகளையும் செய்யக் கூடாது. குறிப்பாக, படிக்கட்டுகள் ஏறுவது, வாகனம் ஓட்டுவது, அதிக நேரம் நடப்பது, கனமான பொருட்களைத் தூக்குவது என்று எந்தக் கடின வேலைகளையும் செய்ய முடியாது. ஆனால் சுகப் பிரசவம் பெற்ற பெண்கள் விரைவாகத் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதோடு குறுகிய காலத்திலேயே அடுத்த குழந்தைக்கும் திட்டமிடலாம்.
மேலும் முதல் குழந்தை அறுவைசிகிச்சை பிரசவத்தால் பிறந்தால் அடுத்த குழந்தையும் அப்படியே பிறக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே உள்ளது. எனினும் இதன் விகிதம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
அறுவைசிகிச்சை செய்யக் கொடுக்கப்படும் மருந்தால் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதனால் தாய்ப்பால் கொடுப்பதிலும் சில சமயம் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆனால் எல்லோருக்கும் இப்படி நடப்பது இல்லை. மருத்துவர்களின் ஆலோசனையோடு விரைவில் பிரச்சனையைச் சீர் செய்து கொள்ளலாம்.
இந்த சிசேரியன் பிரசவத்தில் பல நல்ல பலன்கள் இருந்தாலும் அதே நேரத்தில் சில தீமைகளும் ஏற்பட சாத்தியம் உள்ளத. இதனைப் பற்றின விழிப்புணர்வு ஏற்பட்டால் சுகப் பிரசவமோ அல்லது அறுவை சிகிச்சை பிரசவமோ, எது உகந்தது? என்று கர்ப்பிணிப் பெண்களே மருத்துவரின் ஆலோசனையோடு முடிவு செய்து கொள்ளலாம். ஆக சிசேரியன் பிரசவத்தின் மூலம் ஏற்படும் பல்வேறு நன்மைகளையும் தீமைகளையும் நன்கு அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null