வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க 6 டிப்ஸ்

வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க 6 டிப்ஸ்

வெளி இடங்களில் பால் கொடுப்பதற்கு பல தாய்மார்கள் தயங்குகின்றனர். இந்த கூச்ச மனப்பான்மையால் அவர்கள் பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடச் செய்கின்றனர்.இது முற்றிலும் தவறான மனப்பான்மை. இந்த விஷயத்திற்குப் பயந்து கொண்டு அவர்கள் தங்கள் குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். அதுவும் தற்சமயம் சுமார் ஆறு மாத காலம் வரை தாய்ப்பாலைத் தவிர மாற்று உணவு தரக் கூடாது என்று திட்டவட்டமாகப் பரிந்துரைக்கின்றனர்.
அதற்கு உதவவே நீங்கள் வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க 6 குறிப்புகளை வழங்கியுள்ளோம்.

வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க 6 டிப்ஸ்

சௌகரியமான ஆடையை அணியுங்கள்(Wear comfortable clothes)

வெளி இடங்களில் தாய்ப்பாலூட்டும் செயல்முறையை மிகவும் எளிதாக்குவதற்குப் பல மேலாடைகள் விற்கப்படுகின்றன.அதில் மறைப்புகளுடன் கூடிய துவாரங்கள் இருக்கும்.பால் புகட்டும் போது பொத்தானை நீக்கி குழந்தையின் பசியை ஆற்றி விடலாம்.இல்லாவிடில் சற்று தளர்வான சட்டையைத் தேர்வு செய்யலாம்.அதுவும் பால் கொடுக்க சௌகரியமாக இருக்கும்.

சற்று மென்மையான பருத்தி ரக துணியை உடுத்துவது நல்லது.குழந்தை பால் அருந்தும் போது அதன் முகம் துணியின் மீது படும்.ஆகக் குழந்தைக்கு அது உறுத்தக் கூடாது.உறுத்தினால் அழுது பால் குடிக்காது.இது உங்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க 6 டிப்ஸ்

வீட்டிலே பயிற்சி செய்து கொள்ளுங்கள் (Practice at home)

வெளி இடங்களில் தாய்ப்பால் தரும் பொழுது உடலின் பாகம் வெளியே தெரிவது தான் பெரும்பாலான பெண்களுக்கு உறுத்தும் விசயமாக உள்ளது. நீங்கள் வீட்டிலேயே கண்ணாடி முன் அமர்ந்து பால் புகட்டி பயிற்சி செய்து பார்க்கலாம்.இதைப் பல கோணங்களில் அமர்ந்து செய்து பார்க்கலாம்.இதன் மூலம் உங்கள் உடலின் பாகம் முற்றிலும் மறைக்கப்படும் நிலையைக் கண்டு கொள்ளலாம். மிகவும் சரியான மற்றும் தங்களுக்கு ஏதுவான அந்தக் கோணத்தைத் தேர்வு செய்து கடைப்பிடிக்க ஆரம்பிக்கலாம்.இதனால் உங்கள் பயமும் நீங்கும்.
பொது இடம் என்ற அச்சமோ,மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற
உணர்வோ மறையும்.

வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க 6 டிப்ஸ்

நர்சிங் பேக்(Nursing pack)

தாய்மார்களுக்கு இன்னொரு நல்ல விஷயம் என்ன என்றால் தற்சமயம் சந்தையில் நர்சிங் பேக் விற்கப்படுகின்றன. எட்டு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த நர்சிங் பேக் உகந்தது. இதன் மூலம் நீங்கள் நடக்கும் பொழுது கூட உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் தர முடியும்.

இதைப் பற்றி நிறைய தாய்மார்களுக்குத் தெரிவதில்லை.இன்றைய
காலகட்டத்தில் பல வசதிகளும் வாய்ப்புகளும் வந்துவிட்டன.அதைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.வெளி இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க 6 டிப்ஸ்

நர்சிங் கவர்(Nursing cover)

இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிமையானது மற்றும் சௌகரியமானது. நீங்கள் உங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது இந்த நர்சிங் கவர் மட்டுமே போதுமானது. இது நீங்கள் தாய்ப்பால் புகட்டுவதைச் சுலபமாக்கி விடுகிறது.நர்சிங் கவரை தேர்வு செய்யும் பொழுதும் துணியின் ரகத்தைக் கருத்தில் கொள்வது சாலச் சிறந்தது. சற்று மென்மையான ரக துணி என்றால் குழந்தைக்குப் போதிய காற்றோட்டம் கிடைக்கும்.

இல்லாவிடில் போதிய காற்று கிடைக்காமல் குழந்தை சுவாசிக்கச் சிரமப்படும்.இதனால் மூச்சு முட்டவும் செய்யும்.இந்த விசயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது.நம் குழந்தையின் சௌகரியம் அவசியம்.

வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க 6 டிப்ஸ்

மன தைரியத்துடன் இருங்கள்(Be confident)

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய கவலையில் தாய் சேய் வெளியே வருவது தடைப்படக் கூடாது.இது ஒரு இயற்கையான விசயம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்குச் சங்கடப்பட்டுக் கொண்டு,குழந்தையை வெளியில் எடுத்துச் செல்லும் நேரம் பார்த்து அதாவது அதற்குப் பசிக்காத சமயத்தில் பால் புகட்டுவது தவறு. அதேசமயம் குழந்தையை வேறு யார் பொறுப்பிலாவது விட்டுச் செல்வதும் தவறு.
உங்கள் குழந்தையின் பசியைத் தீர்ப்பது உங்கள் கடமை என்பதை மறக்க வேண்டாம்.ஆக போதிய தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருங்கள்.நீங்கள் செய்வது ஒரு உயர்ந்த செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த எண்ணமே உங்களுக்கு போதிய மனத்திண்மை தந்து விடும் என்பது உறுதி.

வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க 6 டிப்ஸ்

சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள்(Choose right place)

நீங்கள் வெளியே போகும் இடங்களைச் சரியாகத் தேர்வு செய்யுங்கள். மால்ஸ்,விமான நிலையம், பல கோவில்கள்,உணவகங்கள் போன்ற முக்கிய இடங்களில் தாய்ப்பால் தருவதற்கென இடம் உள்ளது.அதனால் நீங்கள் சிரமப்படத் தேவையில்லை.நீங்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அது போன்ற இடங்களில் நீங்கள் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதைப் பார்க்கலாம்.இது உங்களுக்கு ஒரு இலகுவான சூழலை ஏற்படுத்தும்.
இன்று தாய்ப்பால் கொடுப்பது குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையே பூரண ஆரோக்கியத்துடன், மூளை வளர்ச்சியுடனும் திகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குழந்தைக்குத் தாய்ப்பால் தருவது எந்த வகையில் சாத்தியப்படாமல் இருந்துவிடக்கூடாது.ஆகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை உங்களுக்கு ஏற்ற படி சரியாகப் பயன்படுத்துவது உங்கள் பொறுப்பு.
மேலே உள்ள 6 குறிப்புகளும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இதனைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பொது இடங்களில் எளிமையாகவும் சுலபமாகவும் தாய்ப்பால் புகட்டி விடலாம்.