மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

பருவமழை குறையும் காலகட்டங்களிலோ, வறட்சி ஏற்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலிலோதான், நாம் மழை நீர் சேகரிப்பு பற்றியெல்லாம் சிந்திக்கிறோம். மழை நீர் என்பது இயற்கையின் உன்னதமான கிஃப்ட் என்றே சொல்லவேண்டும். இந்த தூய நீரின் சேகரிப்பு/சேமிப்பு, பயன்கள் பற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்வது மிக மிக முக்கியமானது. அதிலும் வருங்கால சந்ததிகளான நம் குழந்தைகளுக்கு, மழை நீர் சேகரிப்பு, பயன்கள் மற்றும் அதன் அவசியத்தை நிச்சயமாக சொல்லிக்கொடுத்து வளர்க்கும்போது தான், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.  (Malai neer sekarippu in Tamil)

 

சமீப காலங்களில், பருவமழையும் கைகொடுப்பதில்லை, பக்கத்து மாநிலங்களும் தண்ணீர் தருவதில்லை. இதே நிலை தொடர்ந்தால், விவசாயம் பாதிக்கும், விலைவாசி உயரும், விவசாயம் சார்ந்தவர்களின் தற்கொலைகள் தொடரும்; என்பதெல்லாம் தாண்டி, குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கூட நீர் கிடைக்காமல் போகும் அபாய நிலைக்கு நம்மை நாமே தள்ளிக்கொண்டோம். ஆம்! இயற்கை தரும் இந்த உன்னத பரிசை நாம் மதிப்பதே கிடையாது! குடிக்கும் நீரை, கேன்களிலும், குளிக்கும் நீரை டேங்கரிலும் வாங்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த பிளாஸ்டிக் கேன் தண்ணீர், அசுத்தமான டேங்கர் நீரினால் ஏற்படும் அபாயங்களை மறந்துவிடுகிறோம். இப்பொழுதாவது மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

 

மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன?!

 

மழை பொழியும்போது, அதை வீணாகாமல் நமது தேவைக்காகவோ அல்லது நிலத்தடி நீர் உயரவோ உபயோகப்படுத்தும் முறையே மழைநீர் சேகரிப்பு ஆகும். மழை நீரை சேமிப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. உதாரணமாக, உங்கள் வீட்டின் கூரையில் மழை துளிகள் விழுகின்றன. கூரையில் விழும் மழை நீரை, குழாய் அமைப்புகள் மூலமாக வீட்டின் தரைப்பகுதிக்கு எடுத்துவர வேண்டும். வீட்டின் கூரையில் குப்பைகள், அழுக்குகள் இருக்கலாம். எனவே அந்த குப்பைகள் கலந்துவரும் நீரை வடிகட்ட வேண்டுமல்லவா?

 

ஆம்! அதற்காக வீட்டின் கீழ் பகுதியில் ஒரு வடிகட்டும் தொட்டியைக் கட்டவேண்டும். இதில், மணல், ஜல்லி கற்கள் போன்ற சிலவற்றை நிரப்புவதன் மூலமாக, மழை நீரை வடிகட்டிவிடலாம். மேலும் இந்த வடிகட்டும் தொட்டியில் இருந்து, நாம் அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தும் ‘சம்ப்’ தொட்டிக்கு இணைப்பை ஏற்படுத்தி மழை நீரை சேமிக்கலாம்.

 

தேவைக்கு அதிகமாக உள்ள மழைநீரை இதே போன்றதொரு அமைப்பின் மூலமாக, நிலத்தின் அடிப்பகுதிக்கு செல்லும்படி செய்யலாம். விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கலாம். இது போல அனைவரும் செய்யத்துவங்கினால், வெகுவிரைவில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது! ஏனெனில் நிலத்தில் பெய்யும் மழையில், 40 விழுக்காடு நீர் நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35 விழுக்காட்டிற்கும் மேலாக சும்மாவே வெயிலில் ஆவியாகுவதாகவும், 14 சதவிகிதம் மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், வெறும் 10% மட்டுமே மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

அதிலும் நகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் எல்லாம் மிக அருகருகே கட்டப்படுவதாலும், இருக்கும் திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள், தார் சாலைகள் அமைத்தும் மூடப்படுவதால், இப்பகுதிகளில் பெய்யும் மழை நீரில் 5 சதவிகிதம் கூட நிலத்தினால் உறிஞ்சப்படுவதில்லை. அப்படியே வீணாகிறது. இதனால் குறிப்பாக கடலோர நகரங்களில் நிலத்தினுள் செல்லவேண்டிய மழைநீரின் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் புகுந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறி விடுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலைகளை மழைநீர் சேமிப்பு முறைகள் மூலமாகத் தவிர்க்கலாம்.

 

மழைநீர் சேமிப்பு பயன்கள் பற்றி குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

 

மழை நீர் சேகரிப்பு பயன்கள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித்தருவது மிக மிக முக்கியம். இதனால் அவர்களின் எதிர்காலம் சிறப்படையும், குடிப்பதற்கு கூட நீரின்றித்தவிக்கும் நிலை ஏற்படாமல் பாதுகாக்கலாம். எனவே உங்கள் குட்டீஸ், தெரிந்தவர்கள் என முடிந்த அளவு மழைநீர் சேமிப்பதன் அவசியம் பற்றிப்புரிய வையுங்கள். சும்மா சொல்லிவிட்டு விட்டுவிடாமல், நீங்களும் உறுதியாகப் பின்பற்றுங்கள். குட்டீஸ்களுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

 

இயற்கையான/சுவையானது மழைநீர்!

மழைநீர் ஒரு இயற்கையின் வரம். இது இயற்கையாகக் கிடைப்பது மட்டுமின்றி, சுவையானது, சத்தானது. என்னதான் நாம் சுத்திகரிக்கப்பட்ட நீரை கேன்களில் வாங்கினாலும், அது மழைநீரின் சுத்தத்திற்கு ஈடாகாது என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். மழைநீரில் எந்த அசுத்தங்களும் இல்லாமல் தெள்ளத் தெளிவாகவும், எந்த சிரமமும் இன்றி எளிதில் கிடைப்பதை சேகரித்து பயன் பெறமுடியும் என்பதை உணர்த்தவேண்டும்.

 

வீட்டின் தேவை நிறைவடையும்

மழை நீர் கிடைக்கும்போது அதனை சேகரித்து சேமித்து வைத்தால், சில மாதங்களுக்குத் தேவையான வீட்டின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். மீண்டும் மழை வந்தால் மீண்டும் சேமிக்கலாம்! அதிக அளவில் சேமிக்க வாய்ப்பு இல்லாதவர்கள், குறைந்த அளவில் சில நாட்களை சமாளிக்கும் அளவேனும் சேகரிக்கலாம். மழைநீர் ஒன்றும் கெட்டுப்போகாது, எனவே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பாதுகாப்பாக வைத்துப் பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கு புரியும்படி பெரியவர்கள் சொல்லி வளர்க்க வேண்டும்.

 

ஆரோக்கியம் அதிகரிக்கும்

மழைநீர் மிக மிக சுத்தமானது. இதில் பல்வேறு மினரல்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நமக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு பயன்கள் தருகின்றது. இதை சேகரித்து வைத்துப் பயன்படுத்தினால், பல்வேறு உடல் உபாதைகளையும் தவிர்க்கலாம். மேலும், கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்டதாக சொல்லப்படும் நீரோ, வீடுகளில் பயன்படுத்தும் ஃபில்ட்டர் மூலமாகக் கிடைக்கும் நீரோ, பல்வேறு நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கியம் அதிகரிக்கவும், வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் மழை நீர் சேகரிப்பு செய்து, அதைப் பயன்படுத்த குழந்தைகளுக்கு நாம் தான் கற்றுத்தர வேண்டும்.

இதையும் படிங்க: தைராய்ட் குணப்படுத்தும் வழிகள்!

 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்

தேவைக்கு அதிகமாக உள்ள மழை நீரை வீணாக்காமல், நிலத்திற்குள் செல்லுமாறு அமைப்புகளை ஏற்படுத்தினாலே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். இதை ஒருசிலர் மட்டும் செய்தால் போதாது, அனைவரும் பின்பற்றவேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். ஒவ்வொரு வீட்டின் கூரையில் இருந்து வீணாகும் மழை நீரை நிலத்திற்குள் செல்லும்படி அமைப்புகளை உருவாக்க கற்றுத்தரவேண்டும். விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகளுக்கு, பண்ணைக்குட்டை அமைப்பது போன்ற முறைகளை கற்றுத்தரவேண்டும்.

 

விவசாயம் சார்ந்த பலன்கள்

அனைவரும் மழை நீர் சேகரிக்க ஆரம்பித்தால், நிலத்தடி நீர் தானாகவே ‘ஜிவ்’வென்று உயரும். நீரின் கடினத்தன்மை நீங்கும். பல வருடங்களுக்கு முன்பிருந்தது போல, கிணற்றில் நீர் ஊரும். அந்த நீரையே குடிப்பதற்கும் பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் மட்டம் உயருவதால், விவசாயம் சிறப்படையும், நல்ல பலன்கள் கிடைக்கும், விவசாயம் சார்ந்த தற்கொலைகள் தடுக்கப்படும். மேலும், அழிவின் விளிம்பில் இருக்கும் இயற்கை விவசாயம் மீண்டும் உயிர்ப்பெரும். விவசாயம் மேம்பட்டால், நமக்கு தரமான உணவு வகைகள், காய்கறிகள் கிடைப்பதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இதையெல்லாம் குழந்தையிலிருந்தே சொல்லி வளர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: குழந்தை வளர்ப்பில் பெண்கள் செய்யும் தவறுகள்?

 

செலவு மிச்சம்!

மழைநீர் சேகரிப்பு செய்வதால் கிடைக்கும் முதன்மைப் பலனே செலவை மிச்சப்படுத்துவது தான். குடிக்கும் நீருக்கும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் நீருக்கும், விவசாய தேவைகளுக்காகவும் பல வழிகளில் செலவுகள் செய்கிறோம். மேலும், இது நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், தேவையில்லாத மருதத்துவ செலவுகளும் மிச்சம் தானே! இதையும் குட்டீஸ்க்கு புரியும்படி சொல்லலாம்.

 

ஆகவே மழை நீர் சேகரிப்பு & பயன்கள் அனைத்தையும் பார்த்துவிட்டோம். நீங்களும் பின்பற்றி, உங்கள் குழந்தைகளுக்கும் கட்டாயம் சொல்லிக்கொடுங்கள். மேலும் ஏதாவது பயன்கள் விடுபட்டிருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

 

மழை வரும்போது மழைநீரை சேகரிப்போம். நம் வாரிசுகளுக்கும் சொல்லித்தருவோம். உருவாக்குவோம் வளமான எதிர்காலத்தை! நீங்களும் மாற்றத்தை உருவாக்க விரும்பினால், நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள். மற்றவர்களின் குழந்தைகளையும் சமுதாய அக்கறையுடன் வளர்க்க நாமும் உதவலாம் அல்லவா?

 

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null