மார்பக புற்றுநோய் அறிகுறிகள் & தடுக்கும் வழிகள்

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் & தடுக்கும் வழிகள்

மார்பக புற்றுநோய் என்னும் ஒரு வகை புற்று நோய் பெண்களை மட்டுமே அதிக அளவு தாக்கும் நோயாகும். மார்பக புற்றுநோய் தான் பெண்களை குறிவைக்கும் புற்றுநோய் வகைகளிலேயே மிகவும் அதிக அளவு விழுக்காடு பெற்றது. ஆனால் இந்த மார்பக புற்று நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்வு பெண்களுக்கு இருப்பதில்லை. அதனாலே ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக அளவில் கொண்டாடப்படுகின்றது.

உலக அளவில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கு எடுக்கப்பட்டது. இந்தியா, இதன் முடிவின்படி ,மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. 30 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை இந்த மார்பக புற்று நோய் அதிக அளவில் குறி வைக்கிறது. இந்தப் பதிவில் மார்பகப் புற்றுநோய் பற்றி விரிவாகப் பார்க்கலாம். மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன? நோய் வராமல் தடுக்க வழிகள் என்ன? இந்நோய்க்கு என்ன சிகிச்சைகள் உள்ளன? என்று அனைத்தையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மார்பக புற்றுநோய் வர காரணங்கள்

மார்பக புற்றுநோய் ஏற்பட பல விதமான காரணங்கள் உள்ளன. அவை என்ன?

 • அதிக அளவு உடல் எடை
 • உயர் ரத்த அழுத்தம்
 • மது மற்றும் புகை போன்ற தீய பழக்கம்
 • சர்க்கரை வியாதி
 • துரித உணவுப் பழக்கங்கள்
 • கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள்
 • வாழ்க்கை முறை மாற்றங்கள்
 • பெண்கள் மிகவும் சிறிய வயதிலேயே பூப்படைந்து விடுவது
 • மிகவும் காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொள்ளுதல்
 • நீண்ட கால குழந்தையின்மை பிரச்சனை
 • குறிப்பிட்ட பிரச்சனைக்காக எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் சிகிச்சைகள்
 • செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முயலுதல்
 • மரபு வழி காரணங்கள்
 • மெனோபாஸ் தாமதபடுதல்
 • உடலுழைப்பு இல்லாமல் இருத்தல்

போன்றவை மார்பக புற்று நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.

மார்பக புற்றுநோய் உயிரை தாக்குமா?

ஆம். மார்பக புற்றுநோய் உயிரைத் தாக்கும். இந்தியாவில் நோய் தாக்கத்திற்கு ஆளான இரண்டு பெண்களில் ஒருவர் இறந்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம் நோயை ஆரம்ப நிலையில் கண்டு கொள்ளாமல் இருந்து விடுதல் ஆகும். முற்றிய நிலையிலேயே இந்த நோய் பெருபான்மை பட்சத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் இந்தியாவில் அதிக அளவு உயிரிழப்புகள் காணப்படுகின்றன. இது மிகவும் வருந்தக்க விசயம்.

சுய மார்பக பரிசோதனை

ஒவ்வொரு பெண்ணுக்கும் ‘சுய மார்பக பரிசோதனை’ பற்றிய முழுமையான விழிப்புணர்வு அவசியம். 25 வயதை தாண்டிய ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். இந்தச் சோதனையைத் தவறாமல் அவர்கள் மாதம் ஒருமுறை செய்து பார்க்க வேண்டும். அப்பொழுது மட்டுமே மார்பக புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து களைய முடியும்.

ஸ்டெப் 1

மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் 10 நாட்களுக்குள், கண்ணாடி முன்பு நின்று இரண்டு மார்பகங்களுக்கு இடையே வித்தியாசம் காணப்படுகிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும். மாதவிலக்கு நின்ற பெண்கள் ஒரு குறிப்பிட்ட தேதியைத் தெரிவு செய்து பரிசோதனை மேற்கொள்ளலாம்.

ஸ்டெப் 2

கை விரல்களைக் கொண்டு மார்பகங்களை அழுத்தியும், தேய்த்தும் சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மார்பகங்களை மட்டுமன்றி அக்குள் பகுதிகளையும் சோதனை செய்யவும்.

ஸ்டெப் 3

மார்பில் கட்டி, வீக்கம், அளவுக்கதிகமான சுருக்கம், ரத்த கசிவு ,புண், வலி போன்ற எந்த ஒரு விஷயம் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மேலே குறிப்பிட்ட ஆறு அறிகுறிகளில் எது காணப்பட்டாலும் மார்பக புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மேமோகிராம்

இது ஒரு வகை எக்ஸ்ரே பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனையின் முடிவில் மார்பகத்தில் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளதா? மற்றும் கால்சியம் அளவில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளதா? என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விட முடியும்.

மார்பக புற்று நோய் வருவதற்கு முன்பே ,சாத்தியக் கூறுகளை சிறப்பாக கண்டறிந்து வராமல் தடுக்க உதவவும் இந்தப் பரிசோதனை வழிவகை செய்கிறது. இது இந்தப் பரிசோதனையின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

 • இதன் முடிவுகள் 85 சதவீதம் துல்லியமானது என்பது இன்னொரு சிறப்பம்சம்.
 • இந்தக் குறிப்பிட்ட பரிசோதனையின் மூலம் 1 சென்டிமீட்டர் அளவிற்கு குறைவான கட்டிகளைக் கூடக் கண்டுபிடித்து விட முடியும்.
 • ஆனால் இந்தப் பரிசோதனையை அதிக அளவு வலி நிறைந்தது ஆகும்.
 • இந்தப் பரிசோதனை முடிய 40 நிமிடங்கள் அளவு தேவைப்படும்.
 • வலியைப் பொருட்படுத்தாமல், இந்தப் பரிசோதனையைப் பெண்கள் எடுத்துக் கொள்வது அவசியம்.
 • 40 வயதுக்கு மேற்பட்டப் பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்த மேமோகிராம் பரிசோதனை மேற்கொள்வது மிக அவசியம்.

மார்பக புற்றுநோய்க்கு என்ன சிகிச்சை?

ஒருவேளை பரிசோதனையின் முடிவில் மார்பக புற்றுநோய் உள்ளது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் உடனே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உடனே இறுதிக்கட்ட பரிசோதனையை செய்ய வேண்டியது கட்டாயம். பயாப்சியில் சந்தேகம் முழுமையாக தீர்க்கப்பட்டு விடும்.

மார்பக புற்றுநோயின் நிலைகள் மற்றும் தீவிரத்தைக் கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

அறுவை சிகிச்சை, ரேடியேஷன் சிகிச்சை, கீமோதெரபி போன்றவை வழங்கப்படுகின்றன.

மார்பகத்தில் கட்டி என்றாலே புற்று நோயா?

இல்லை. மார்பக கட்டிகள் அனைத்தும் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு இல்லை.

இருப்பினும் மார்பகத்தில் கட்டி தென்பட்டால் உடனடியாக புற்று்நோய் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

மார்பக புற்று நோயிலிருந்து மீள முடியுமா?

மார்பகப் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் மனம் தளரக்கூடாது. மற்ற பல நோய்களைப் போல மார்பக புற்று நோயைக் குணப்படுத்த முடியும். ஆனால் அதற்கு தொடர் சிகிச்சை மிகவும் அவசியம்.

எந்த ஒரு வியாதியையும் குணப்படுத்த சிகிச்சை மட்டும் போதாது. அதிலும் மார்பக புற்று நோயில் இருந்து மீள அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை அவசியம்.

இந்த நோயிலிருந்து நான் மீண்டு வருவேன் என்று சம்பந்தப்பட்ட பெண் உறுதியாக நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை மட்டுமே அந்தப் பெண்ணை நோயிலிருந்து முழுமையாக காப்பாற்றும் சக்தி பெற்றது.

மார்பக புற்று நோயால் பாதிப்படைந்த பெண்களை சமூகம் ஒதுக்கி வைத்தல் கூடாது. சமூகத்தின் தவறான நடவடிக்கைகளாலும், பேச்சுக்களாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மன உளைச்சலும், விரக்தியும் அடைய வாய்ப்புள்ளது. அதனால் சமூகம் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் நடந்து கொள்வது இன்றியமையாதது.

சிகிச்சையின் போது கடைப்பிடிக்க வேண்டிய விசயங்கள் என்ன?

கீமோதெரப்பி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்று பார்க்கலாம்.

1.உணவுகளை மூன்று வேளைகளுக்குப் பதிலாக 6 வேளை பிரித்து உண்ணலாம்.

2.திட உணவுகளை எடுத்துக்கொள்ள பிரியம் இல்லாத நேரங்களில் பழச்சாறுகள், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

3.தேவையான அளவு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பசி ஏற்படும்.

4.கொழுப்புச் சத்து குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உகந்தது.

5.சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6.இனிப்பு பொருட்களைத் தவிர்த்து விடுவது நல்லது.

7.துரித உணவுகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.

மார்பக புற்று நோய் வராமல் தடுக்க சில டிப்ஸ்

1.வைட்டமின் டி & ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

2.நார்ச்சத்து நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், பீன்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

3.பழங்களில் பெர்ரிஸ் மற்றும் பீச் உகந்தது.

4.பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் சாப்பிட ஏற்றது. இது மார்பக புற்று நோயைக் குணப்படுத்த உதவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

5.வைட்டமின் டி சத்து நிறைந்த முட்டை, மீன் போன்றவற்றை சாப்பிடலாம். மாலை வெயிலில் சிறிது நேரம் நடப்பதன் மூலம் இயற்கையாகவே வைட்டமின் டி-யைப் பெற இயலும்.

6.கிரின் டி புற்று நோய்க்கு எதிராக செயல்பட உதவுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மார்பக புற்று நோயிலிருந்து மீண்டு வர உதவுகிறது.

7.மஞ்சள் ஒரு மகத்துவமான குணம் கொண்ட மருந்து பொருள். நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை இயற்கையிலேயே மஞ்சளில் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, மார்பக புற்று செல்கள் வராமல் கட்டுப்படுத்தப்படுகின்றது.

8.சீரான உடல் எடையோடு இருப்பது நல்லது. தினம் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். போதிய உடல் உழைப்பு உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதிவின் மூலம் மார்பக புற்று நோய் பற்றிய தெளிவான விழிப்புணர்வுகளைப் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் உடலை எந்த விதமான நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெண்ணும் தன் உடலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null