அடர்த்தியான முடி வளர டிப்ஸ்!

அடர்த்தியான முடி வளர டிப்ஸ்!

யாருக்குத் தான் முடியின் மீது ஆசை இருக்காது? பொதுவாக எல்லோருக்குமே அடர்த்தியான ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்குத் தான் இப்படிப்பட்ட கூந்தல் அமைகின்றது. இது மாதிரியான ஆரோக்கியமான முடி வளர்ச்சியைப் பெற சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முடியைப் பாங்காகப் பராமரிப்பதும் ஒரு வித கலைதான். இன்று பலருக்கு முடி கொட்டும் பிரச்சினை நிலவி வருகிறது. ஆரம்பத்தில் அடர்த்தியான முடி பெற்ற பலருக்கும் பின்னாளில் முடி சன்னமாகி விடுகிறது.

இந்த பிரச்சனைக்கு இந்த காலத்தில் வயது வரம்பு கிடையாது. இளைஞர்கள் , கர்ப்பிணிகள், தாய்மார்கள், ஆண்கள் என்று அனைவருக்குமே இந்த முடி கொட்டும் பிரச்சினை அதிகளவு காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பதிவில் முடி கொட்டுவதற்கான காரணம் என்ன? இந்த பிரச்சினையிலிருந்து தப்பித்து அடர்த்தியான முடியைப் பெற உதவும் டிப்ஸ் என்ன? மேலும் முடி அடர்த்தியாக உதவும் சத்துக்கள் மற்றும் அவை நிறைந்த உணவுகள் என்ன? என்று அனைத்தையும் தெளிவாகக் காணலாம்.

முடி கொட்ட காரணங்கள் என்ன?

முடி கொட்டுவதற்கு என்ன காரணங்கள் உள்ளன என்று முதலில் பார்க்கலாம்.அவற்றைத் தெரிந்து கொண்டால் மட்டுமே வேண்டியவற்றைத் தவிர்க்க இயலும்.

ஹார்மோன் சமநிலையின்மை

உடலில் ஹார்மோன்களின் அளவு சீரான அளவு இல்லாத பட்சத்தில் முடி கொட்டுதல் அதிக அளவு காணப்படும். பொதுவாக மெனோபாஸ் ,மன அழுத்தம் ,அதிகமான உடல் எடை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பல்வேறு காரணிகள் ஹார்மோன் சமநிலையின்மை வழிவகுக்கின்றன.

ஊட்டச்சத்துக் குறைபாடு

முடி கொட்டுதல் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடுதான். அன்றாட ஆரோக்கிய மற்றும் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம். இன்றைய அவசர காலத்தில் யாருமே ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. நேரமின்மை, வேலைப் பளு போன்ற பல காரணங்களால் நிதானமாகச் சமைத்துச் சாப்பிட முடிவது இல்லை. இதனால் கடையில் கிடைக்கும் கண்ட உணவுகளை வாங்கி சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தையும் பெரிய அளவில் கெடுத்துக் கொள்கின்றனர். போதிய சத்து கிடைக்காத பட்சத்தில் முடி படிப்படியாகக் கொட்டத் தொடங்கி, ஒரு கட்டத்தில் வழுக்கை விழத் தொடங்கிவிடும்.

அதிக அளவு மாசு

பெருகிவரும் மக்கள் தொகை, வாகனத்தின் அதிகரிப்பு உட்படப் பல்வேறு காரணங்களால் இன்று நம் நாட்டில் அதிக அளவு மாசு நிலவுகிறது.இந்த மாசு அல்லது அழுக்கு முடியில் படும்பொழுது முடி வளர்ச்சி பெரிய அளவில் பாதிப்பு அடையும். மேலும் முடி வெடிப்பு ஏற்பட்டு உடைந்து விழத் தொடங்கும்.

பரம்பரை பிரச்சனை

முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை ஏற்படுதல் போன்ற தொல்லைகளுக்கு மற்றொரு முக்கியமான காரணம் பரம்பரை பிரச்சினையாகும். தந்தை வழியில் அல்லது தாய் வழியில் இந்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில் ஜீன் மூலம் பிள்ளைகளுக்கும் வந்து சேரும்.

மன அழுத்தம்

முடி உதிர்தலும் மன அழுத்தமும் நேரடியாக தொடர்பு கொண்டன. கவலை , அளவுக்கதிகமான யோசனை போன்ற விஷயங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பெரிய அளவு பாதிக்கும்.

தூக்கமின்மை

உடலுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காத போதும் முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவு காணப்படும்.

தண்ணீர்

சராசரியாக ஒரு நாளுக்கு 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.போதுமான தண்ணீர் அருந்தவில்லை என்றால் முடி நிச்சயமாகக் கொட்டத் தொடங்கும்.

கீழே அடர்த்தியாக முடி வளர சில டிப்ஸ்-களைப் பார்க்கலாமா?

ஆயில் மசாஜ்

ஒரு கிண்ணியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதை அடுப்பிலேற்றி மிதமான அளவு சூடுபடுத்திக் கொள்ளவும். இதனை மிருதுவாக ஸ்கால்ப்பில் விரல்களைக் கொண்டு சுழற்சி முறையில் தேய்க்கவும். இதனை சில நிமிடங்கள் செய்யவும். இரவு முழுதும் அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் தலைக்குக் குளிக்க வேண்டும். இப்படி மசாஜ் செய்வதன் மூலம் மயிர்க் கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்வதால் சில மாதங்களிலேயே அடர்த்தியான கூந்தலைப் பெற முடியும்.

வெங்காயம்

தேவையான அளவு சிறிய வெங்காயங்களை உரித்து வைத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த விழுதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து தலை மற்றும் முடிக்குப் பூசவும். இந்த வழியை மாதம் 1 முதல் 2 தடவைகள் பின்பற்றுவது நல்ல பலனைத் தரும். வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. இந்த சல்பர் குறிப்பாக முடி பிளவுபடுவதைத் தடுக்க துணைபுரியும். மேலும் இளநரை ஏற்படுவது தவிர்க்கப்படும். பொடுகு ,பேன் , தொல்லை ,பூஞ்சை தொற்று போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காயம் சிறந்து நிவாரணி ஆகும்.

கொத்தமல்லி

கொத்தமல்லித் தழைகளைக் கழுவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு முடியினை ஷாம்பு கொண்டு நன்கு அலசவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும். முடி கருமையாகவும், பளபளப்பாக மாறி , அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

செம்பருத்தி

ஐந்து இதழ்கள் கொண்ட சிவப்பு செம்பருத்திப் பூவை பறித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதைத் தலை முடிக்குத் தினம் தேய்த்து வரத் தலைமுடி செழிப்பாக வளர தொடங்கும். அதுபோல செம்பருத்தி இலைகளைப் பறித்து அரைத்து தலையில் தடவிக் கொள்ள வேண்டும். இதை அரைமணி நேரம் ஊறவைத்து ,பின்பு ஷாம்பு கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வர முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

கற்றாழை

கற்றாழையில் உள்ள சதைப்பிடிப்பான பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாதிரி ஜெல் மாதிரியான வழவழப்புத் தன்மை கொண்டது.இதனைத் தலை மற்றும் மயிர்க்கால்களில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்துக் கொள்ள வேண்டும். கற்றாழை தலைமுடியின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவும். முடியில் ஏற்பட்டுள்ள பிளவுகளைக் குணம் செய்யும். மேலும் தலையில் உள்ள கிருமி தொற்றுகளை அழிக்கும் தன்மை கொண்டது.

முட்டை மாஸ்க்

இந்த குறிப்பு மிகவும் பலன் தரும் ஒன்றாகும். உலக அளவில் இந்த முறை அதிக அளவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில் பச்சை முட்டையைத் தலையில் தடவிக் கொண்டு, அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பிறகு ஷாம்பு கொண்டு தலையைச் சுத்தமாக அலச வேண்டும். முட்டையில் நிறைந்துள்ள சல்ஃபர், ஜிங்க் ,இரும்புச்சத்து , செலினியம், பாஸ்பரஸ் ,அயோடின் மற்றும் அதிக அளவு புரதச்சத்து முடி வளர்ச்சிக்குத் துணை புரியும். இந்த குறிப்பைத் தொடர்ந்து பின்பற்றி வரும் பொழுது முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

தேங்காய்ப் பால்

ஒரு கப் தேங்காய்த் துருவலை அரைத்து பால் பிழிந்து வடித்து எடுத்துக் கொள்ளவும். இதை முடியின் மயிர்க்கால்களுக்குத் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊறவைத்து , பின் தலைக்குக் குளிக்க வேண்டும். இதை வாரம் ஒரு முறை என்ற அளவில் தொடர்ந்து செய்து வர முடி கருகருவென்று அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

முடியை அடர்த்தியாக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன?

முடி வளர்ச்சிக்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக அவசியம் என்று அறிந்து கொள்ளலாம்.

  • விட்டமின் ஏ
  • விட்டமின் சி
  • விட்டமின் பி
  • விட்டமின் டி
  • இரும்புச்சத்து
  • பயோட்டின்
  • புரதச்சத்து
  • ஃபேட்டி ஆசிட்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சத்துக்களும் இருந்தால் மட்டுமே முடி ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வளரும். இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதன் மூலம் முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும். ஆக முடி வளர்ச்சிக்குத் தேவையான இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. அப்படி எந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம் என்று கீழே பார்க்கலாம்.

  • பெர்ரி பழங்கள்
  • கொய்யாப்பழம்
  • கிவி பழம்
  • ஆரஞ்சுப் பழம்
  • பப்பாளி
  • ஸ்ட்ராபெரி
  • கறிவேப்பிலை
  • சர்க்கரைவள்ளிக்கிழங்கு
  • முட்டை
  • பசலைக் கீரை
  • மீன்
  • அவகேடோ
  • பாதாம் முந்திரி பருப்புகள்
  • சியா விதைகள்
  • சூரியகாந்தி விதைகள்
  • பீன்ஸ்
  • சோயா
  • இறைச்சி
  • நெல்லிக்காய்

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் பயன்படுத்தி உங்கள் முடி வளர்ச்சியை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள். ஆக உங்கள் முடி மற்றவர்கள் பார்த்து வியக்கும் வகையில் அடர்த்தியாகப் போவது உறுதி!

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null