குழந்தை பிறக்கும்போது என்னவெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும்?

குழந்தை பிறக்கும்போது என்னவெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும்?

குடும்பத்தில் குழந்தை பிறக்கப் போகின்றது என்று தெரிந்து விட்டாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தான். மேலும் தம்பதிகள் தங்கள் குடும்பத்திற்கு வரவிருக்கும் புது வரவிற்கு என்ன வாங்குவது, எதைத் தயார் செய்து வைப்பது, எப்படி ஏற்பாடுகள் செய்வது என்றெல்லாம் மும்மரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இன்று கடைகளில் பிறக்கப் போகின்ற குழந்தைக்கு மற்றும் பிறந்த குழந்தைக்கு என்றே பல வகையிலான பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதாகவும், உங்கள் குழந்தைக்குத் தேவையானதாகவும் நீங்கள் தேர்வு செய்து வாங்க வேண்டியது முக்கியம். அதற்காகக் கடையில் கிடைப்பதை எல்லாம் வாங்கி விடக் கூடாது.

இப்படி இருக்கும் போது, உங்களுக்கு உதவிக்கரமாக இருக்க சில ஆலோசனைகள் கிடைத்தால், அது உங்கள் வேலையைச் சுலபமாக்கி விடும் என்று நம்புகின்றோம்.
பல பொருட்கள் இருந்தாலும், நீங்கள் இருக்கும் இடத்தின் தட்ப வெட்ப சீதோஷ நிலை, உங்கள் வீட்டின் அமைப்பு என்று மேலும் பல விசயங்கள் நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களைப் பற்றிய முடிவை நிர்ணயிக்கின்றன. இந்த வகையில், நீங்கள் ஒரு சில விசயங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டால் எளிதாகச் சரியான பொருட்களை உங்களுக்குப் பிறக்க இருக்கின்ற குழந்தைக்கு வாங்கி வைத்து, வரவேற்கத் தயாராகலாம்.

குழந்தை பராமரிப்பு: சில ஆலோசனைகள்

குழந்தைக்கான ஆடை

பிறந்த குழந்தைக்கு மிகவும் அதிக அளவு ஆடைகள் தேவை இல்லை என்றாலும், நீங்கள் தேர்வு செய்யும் ஆடையின் நூல் மற்றும் வகை மிகவும் முக்கியமானது. சிறு துணியாக இருந்தாலும், அது பருத்தியால் ஆனதாகவும், நல்ல காற்றோட்டம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதுவே குழந்தையின் மேனிக்கு ஏற்றது.
ஏனென்றால் பிறந்த குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும்.

டயாப்பர் /மாற்றுத் துணி

இன்றைய நவீன தாய்மார்கள், குழந்தைகளுக்கு அதிகம் டயாப்பர் மற்றும் நாப்பி பேடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அந்த அளவிற்குத் தருவதில்லை. எனினும், நீங்கள் என்றோ ஒரு நாள் முக்கியமாக வெளியே செல்லும் போது பயன் படுத்துவது பெரிதாகப் பாதிப்புகளைத் தராது என்றாலும், தினசரி தேவைக்கு டயாப்பர்களைத் தவிர்ப்பது நல்லது. மாறாக, அடர்ந்த பருத்தி துணியால் நீங்கள் வீட்டிலேயே இந்த டையாப்பர்களை செய்து விடலாம். இதனை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்து பயன் படுத்துவதோடு, உங்கள் செலவுகளும் குறையும். மேலும் உங்கள் குழந்தையும் சௌகரியமாக இருக்கும். அது மட்டுமல்லாது, உங்கள் குழந்தைக்கு இது ஒரு சுகாதாரமான வாய்ப்பாகவும் இருக்கும்.

குளிர் கால ஆடைகள்

குளிர் காலங்களில் பொதுவாகக் குழந்தைகளுக்கு உடலைக் கதகதப்பாக வைத்துக்
கொள்ள உதவக் கூடிய ஆடைகளை அணிவது நல்லது. இந்த வகையில் கம்பிலி
துணியால் செய்த சட்டை மற்றும் சால்வை போன்ற துணிகளை நீங்கள் பயன்
படுத்த வேண்டும். இப்படிச் செய்தால், அது குழந்தையின் உடல் குளிரைத் தாங்கிக்
கொள்ளும். மேலும் குழந்தை சௌகரியமாகத் தூங்கும்.

தொட்டில்

குழந்தையை எப்போதும் படுக்கையிலேயே படுக்க வைக்க முடியாது. சில
சமயங்களில், குறிப்பாகக் குழந்தை தூங்க மறுத்து அல்லது அதிகம் அழுது,
ஆர்ப்பாட்டம் செய்து உங்களை இம்சை செய்யும் போது, தொட்டிலில் போட்டு,
தாலாட்டு பாடி குழந்தையைத் தூங்க வைக்க உங்களுக்கு ஒரு நல்ல தொட்டில்
தேவை. பலர் இதற்காகப் பருத்தி சேலை அல்லது பருத்தியால் ஆன வேறு நீளமான
துணிகளை பயன் படுத்தி தொட்டில் கட்டுவார்கள்.

ஆனால் இன்றோ பல வகைகளில் மற்றும் அளவுகளில் தொட்டில்கள் கடைகளில் கிடைக்கின்றன. குறிப்பாக மரத்திலான தொட்டில், மூங்கிலால் ஆன தொட்டில், இரும்பிலான தொட்டில் என்று பல உண்டு. இருந்தாலும், தாயின் பருத்தி சேலையில் ஆன தொட்டில் குழந்தைக்கு அதிகமான சுகம் மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தரும்
தொட்டில் கம்பிகளையும் தயார் செய்து கொள்ளுங்கள்.

துண்டுகள்

குழந்தையைப் பிடிக்க மற்றும் தூக்கி செல்ல தோதாக பெரிய துண்டுகளை வாங்கி
வைக்கவும். சற்று கெட்டியான பூந்துண்டு ஒன்றையும் தயாராக வாங்கிவிடவும். இதை குழந்தை குளித்தப் பிறகு துவட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கை உரை கால் உரைகள்

இவை நீங்கள் வாங்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான பொருட்கள். பிறந்த
குழந்தைக்கு எப்போதும் கதகதப்பான சூழல் சற்று அதிகமாகவே தேவைப்
படும். அப்படி இருந்தால் மட்டுமே, அதன் வளர்ச்சி நல்ல முறையிலும், சிறப்பாகவும்
இருக்கும். இந்த வகையில், தாய் எப்போதும் அரவணைத்து கை அல்லது மார்பு
சூட்டில் வைத்துக் கொண்டே இருக்க முடியாது. ஆக, இது போன்ற கை உரை
மற்றும் கால் உரைகளைக் குழந்தைக்கு அணிந்து விடுவதால், குழந்தை
பாதுகாப்பான உணர்வோடு இருக்க முடியும்.

கவனத்தை ஈர்க்கும் பொம்மைகள்

பிறந்த குழந்தைக்குப் பெரிதாகப் பொம்மைகளைப் பற்றித் தெரியாது என்றாலும், கொஞ்சநாட்களிலேயே அத்தகைய பொருட்களின் மீதான அதிகரிக்கத் தொடங்கும். குறிப்பாகக் கிலுகிலுப்பைப் போன்ற ஓசையை எழுப்பக் கூடிய பொம்மைகள் மற்றும் கண்களைக் கவரும் நிறங்களில் இருக்கும் அல்லது ஒளிரும் பொம்மைகள் போன்றவற்றைக் குழந்தைக்கு நீங்கள் வாங்கி வைக்கலாம். இருப்பினும், அத்தகைய பொம்மைகளைத் தேர்வு செய்வதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பொம்மைகள் எந்த காயத்தையும் ஏற்படுத்தி விடாமல், பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

படுக்கை

குழந்தைக்குத் தூங்க நல்ல சௌகரியமான படுக்கைத் தேவை. குறிப்பாகப் பிறந்த
குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிப்பார்கள். அதனைக் கருத்தில்
கொண்டு, எளிதாகத் துவைத்து சுத்தம் செய்ய ஏற்ற படுக்கையை உங்கள்
குழந்தைக்கு வாங்க வேண்டும். அதே சமயம் அந்த படுக்கை காற்றோட்டமானதாக
இருக்க வேண்டும். அதாவது பருத்தி போன்ற இயற்கையான பஞ்சால் ஆன
படுக்கையாக இருக்க வேண்டும்.படுக்கை மிருதுவாக இருப்பது அவசியம். இது
குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கொசுவலை

இன்று கொசுக்களின் தொல்லை அதிகமாகவே காணப்படுக்கின்றது. ஆக பிறந்த குழந்தைகள் கூட டெங்கு,மலேரியா போன்ற நோய்களுக்கு ஆளாகுகின்றனர்.
இதை எல்லாம் தவிர்க்க ஒரு நல்ல கொசுவலையை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

சங்கு

இது உங்கள் குழந்தைக்குப் பால் கொடுக்க மற்றும் மருந்து கொடுக்க உதவும். இது பல உலோக வகைகளில் கிடைக்கின்றது. குறிப்பாக வெள்ளி, வெண்கலம், பித்தளை, ஈயம் என்று பல வகைகளிலும், பல அளவுகளிலும் கிடைக்கின்றன. இதனை நீங்கள் கட்டாயம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

குளியல் பொடி

இன்று ஷாம்பூ, சோப்பு என்று பல இரசாயனம் கலந்த குளியல் பொருட்கள் வந்து விட்டாலும், நம் பாரம்பரியமான குளியல் பொடியும், தலைக்கு தேய்க்கும் பொடியும் சிறந்தது. இதை எப்படி தயாரிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு அறிந்து தயார் செய்து கொள்ளுங்கள். அல்லது இன்று பல நாட்டு மருந்துக் கடைகளிலும் குளியல் பொடி விற்கப்படுகின்றன. அதில் தரமானதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய்

முடிந்த வரை, ரசாயனம் கலந்த, கவர்ச்சியான பொருட்களையோ,கீரிம்களையோ குழந்தைகளுக்குப் பயன் படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சருமத்திற்குக் கூடத் தேங்காய் பூசிக் கொள்ளலாம். இதற்குச் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய்யை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இசை தட்டு

குழந்தை சில சமயங்களில் என்ன செய்தும் தூங்காது. அதற்கு தயாராக சுகமான பாடல்கள் கொண்ட குறுந்தகட்டு ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள். இதை ஓட செய்தால் குழந்தை கண் சொருகி தூங்கிவிடும்.

இதர பொருட்கள்

மேலே கொடுக்கப் பட்ட பொருட்கள் மட்டுமல்லாது, மேலும் சில பொருட்களை
நீங்கள் கட்டாயமாக உங்கள் பிறக்கப் போகும் குழந்தைக்கு வாங்கி தயாராக
வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், பேபி தெர்மோமீட்டர், நக வெட்டி,
வீட்டில் தயாரித்த விளக்கெண்ணெய் கண் மை, அடர்த்தியான பருத்தி போர்வை, இளவம் பஞ்சால் ஆன தலையணை என்று மேலும் பல.

பிறந்த குழந்தையைப் பராமரிப்பது என்பது ஒரு மிகப் பெரிய சவாலான வேலைதான். இதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால் வேறு என்ன வேண்டும். தாயும் சேயும் ஆரோக்கியத்தோடும், சௌகரியமாகவும் இருக்க வேண்டியது முக்கியம். அதிலும் குறிப்பாகப் பிறந்த குழந்தைக்கு நீங்கள் தேவையான அனைத்துப் பொருட்களையும் கைவசம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். அதனால் சூழலை இலகுவாக சமாளிக்க முடியும்.

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.0

null

null