வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத 12 விசயங்கள்

வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத 12 விசயங்கள்

நம் பாட்டி, அம்மா எல்லோரும் நாம் கருவுற்று இருக்கும் வேளையில்,”கர்ப்பமாக இருக்கும் போது இப்படிப் பண்ணாதே.அப்படிப் பண்ணாதே. குழந்தைக்கு ஆகாது.” என்று அடிக்கடி சொல்வார்கள். வயிற்றில் இருக்கும் குழந்தையைச் சின்ன சின்ன விசயங்கள் கூட எப்படிப் பாதிக்கும் என்று பலரும் கேட்டிருப்பீர்கள். உண்மையில், அம்மா செய்யும் பல விசயங்கள் கருவில் உள்ள குழந்தைக்கு நேரடியாகச் சென்று சேர்ந்து விடுகின்றன.அதில் குழந்தைக்குப் பிடிக்காத சில செயல்களும் இருக்கிறதாம்!   கருவில் உள்ள குழந்தைப் பற்றியும் யோசியுங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, நமக்கு நேரும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களைக் குறித்து தெரிந்து கொண்ட அளவிற்கு, கருவைப் பற்றியோ, கருவிற்குப் பிடித்த பிடிக்காத விசயங்களைப் பற்றியோ நாம் பெரிதாகச் சிந்திக்க மாட்டோம். பலர் வயிற்றில் வளரும் கருவிற்கு உணர்ச்சிகள் கிடையாது என்று கூடச் சொல்லுவார்கள்,நினைப்பார்கள். ஆனால், கருவில் உள்ள குழந்தைக்கு நம் அகப் புற உணர்வுகள் துல்லியமாகத் தெரிந்து விடுவதோடு நில்லாமல், அது மேற்கொண்டு அந்தக் குழந்தையையும் பாதிக்கவும் செய்கின்றன.இதற்கு என்ன காரணம் என்று அறிய வேண்டாமா?நம் மன நிலையில் மாற்றம் ஏற்படும்போது கூடவே நடக்கும் ஹார்மோன் மாற்றங்களே ஆகும்.  

இதோ உங்களுக்காகக் கருவில் உள்ள குழந்தைக்குப் பிடிக்காத 12 விசயங்கள்(12 things that a fetus dislikes)

அம்மாவிற்கு எப்படி சில விசயங்கள் பிடிக்காதோ, அதே போல கருவில் இருக்கும் குழந்தைக்கும் சில விசயங்கள் பிடிக்காது. அவை என்ன? இதோ உங்கள் கருவறையில் வாழும் கருவிற்கு பிடிக்காத 12 விசயங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்!  

1.அதிகமான சத்தம் அல்லது இரைச்சல்(Sounds that are too loud)

தன் அம்மா இதமான இசையைக் கேட்பதும், தகவல்களைக் கேட்பதும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். இசையென்றால் பிடிக்காது என்று யாராவது சொல்லுவார்களா என்ன? ஆனால், அந்த இசையின் தன்மை சற்று மாறினாலோ, ஒலி அதிகமானாலோ குழந்தைக்குப் பிடிக்காது. உதாரணமாகத் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் போன்ற  இடங்களில் ஒலிபெருக்கியைக் கொண்டு எழுப்பப்படும் பேரிரைச்சல், கடினமான சத்தங்களை ஏற்படுத்தும் சில வாத்திய கருவிகளின் இசை எல்லாம் குழந்தைக்குப் பிடிக்காதவை.ஏன் இன்னும் சொன்னால் இந்த இரைச்சல்கள் கருவறையில் உள்ள உயிரை அச்சத்திற்கு ஆளாக்குகிறது. ஆகவே மென்மையாகக் காதுகளை வருடும் இசை ஒலிகளையே,கருவில் வளரும் குழந்தை கவனித்து மகிழ்ச்சி கொள்கின்றது. கூடுதலாக நிம்மதியாக உறங்கவும் தொடங்கி விடுகிறது.எனவே, இனிமையான இசையைக் கொண்ட பாடல்களை அதிகமாக தாய்மை உற்ற பெண்கள் கேட்கலாம்!உங்கள் சிசுவின் ஆனந்தம் உங்களின் ஆனந்தம் அல்லவா?  

2.மனநிலைகளில் மாற்றம் (Changes in emotions)

நம் உணர்வுகள் எப்படி மாறுகிறதோ அதற்கேற்றவாறு தான் குழந்தையின் மனநிலையும் இருக்கும். “கர்ப்பமாக இருக்கின்ற பெண் அழக் கூடாது!” என்று சொல்லுவார்களே! கேள்விப்பட்டது உண்டா?அது இதன் அடிப்படையில்தான்.நம் மனநிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும், அது குழந்தையை உடனடியாக பாதித்துவிடும். நாம் சோகமாக இருப்பதோ, மனச்சோர்வில் இருப்பதோ குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்புடையது  கிடையாது.ஆகையால் சிரித்துக்கொண்டே இருங்கள்!நம் அகம் நிறைந்தால்,கருவறையில் குடி இருக்கும் குழந்தையின் மனமும் பூத்துக் குலுங்கும். உங்கள் மகிழ்ச்சிதான் குழந்தையின் மகிழ்ச்சியாகவும் எதிரொலிக்கும் என்பதை மறந்து விடவே கூடாது.  

3.மூன்றாம் கர்ப்பகாலத்தில் உடலுறவு (Sex during the third trimester)

தனது மூன்றாம் கர்ப்பகாலத்தில் அம்மா உடலுறவு வைத்துக் கொள்வது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.எனவே அது குழந்தைக்குப் பிடிக்காது. இது குழந்தையைக் கோபப்படுத்தவோ, வருத்தமாக்கவோ கூட செய்துவிடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், உடலுறவில் ஈடுபடும்போது அம்மாவின் வயிற்றுச் சதைகள் இறுக்கமாகி விடுகின்றன. ஏற்கெனவே குழந்தை முழு வளர்ச்சி அடைந்துவிட்டதால், அதற்கு வயிற்றில்  இடம் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் சதை இறுக்கமானால், இடம் மிகவும் குறைந்துவிடும். எனவே, குழந்தைக்கு இது பிடிக்கவே சாத்தியம் கிடையாது.  

4.மேடு பள்ளங்களில் பயணம் (Bumpy Rides)

ஒரு மேடு பள்ளமான சாலையில்  செல்லும்போது அது நமக்கே எவ்வளவு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது? அப்போது கருவில் உள்ள குழந்தைக்கு அது எவ்வளவு  இடைஞ்சலாக இருக்கும்? குழந்தை அங்கும் இங்கும் குலுங்குவதால்,அது மிகவும் அசௌகரியமாக உணரும். எனவே அம்மாக்களே! சிறிது நாட்களுக்கு நல்ல சாலைகளில் மட்டும் பயணம் செய்யுங்கள்.இது உங்கள் குழந்தைக்காகவே!  

5.படுக்கையில் புரண்டு கொண்டே இருப்பது (Tossing on the bed)

குழந்தை வளர வளர, அம்மாக்களுக்குப் படுப்பது மிகவும் சிரமமாகிவிடும். சரியாகப் படுத்து உறங்குவதற்குள் விடிந்தே போய்விடும். புரண்டு புரண்டு படுத்துச் சிரமப்படுவார்கள்.தாய் படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க, குழந்தையும் வயிற்றில் உருண்டு கொண்டே இருக்கும்! அங்கும் இங்கும் திரும்பிப் படுக்கும் போதெல்லாம், குழந்தையும் இடம் மாறுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.இது குழந்தைக்குப் பிடிக்காத ஒரு முக்கியமான செயல் ஆகும். வாகனத்தில் குலுங்குவது எப்படியோ அதேபோலத் தான் இதுவும். பகலில் நன்றாக வேலை பார்த்துவிட்டு, இரவில் படுத்ததும் தூங்கிவிடுவது மாதிரி பார்த்துக் கொண்டால், தாய்க்கும் சேய்க்கும் பரம திருப்தியாக இருக்கும்!  

6.வயிறு வலிக்க சிரித்தல் (Laughter till the stomach hurts):

சிரிப்பு அனைத்துப் பிரச்சனைகளுக்குமானச் சிறந்த மருந்து. அதிகமாக, வயிறு வலிக்க வலிக்க சிரிப்பது, நமக்கு நல்லது என்றாலும், குழந்தைக்குப் பிடிப்பது இல்லை. மேற்சொன்ன அதே காரணம்தான் இதற்கும் பொருந்தும். நாம் சிரிக்கும் போது, வயிறு உள்ளேயும் வெளியிலும் போய் வரும். இது குழந்தையின் உணர்வை பாதிப்பதோடு, அசைவுகளிலும் இடைஞ்சலை ஏற்படுத்தும். யாருக்கு தான் குலுங்கிக் கொண்டே இருப்பது பிடிக்கும்?கருவில் உள்ள குழந்தை மட்டும் என்ன விதி விலக்கா?ஆனால் சில நேரங்களில் மேலும் கீழுமாக உருளுவதைக் குழந்தைகள் விரும்பி விளையாடுவதும் நடக்கிறது.  

7.வயிற்றைக் குத்திப் பார்ப்பது (Poking the stomach):

குழந்தையின் அசைவுகளும், வெளியில் தெரியும் கால்களின் தடமும் பார்ப்பதற்குக் கொள்ளை அழகாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வப்போது, நம் தொடுதல்களையும் குழந்தை விரும்பும். ஆனால், குழந்தை இடம் மாற வேண்டும் என்பதற்காகவோ, சும்மா விளையாட்டிற்காகவோ வயிற்றில் விரலை வைத்து அழுத்துவது, குத்திப் பார்ப்பது குழந்தைக்கு எரிச்சலூட்டும். சில நேரம் விளையாடுவதற்காக, அங்கும் இங்கும் இடம் மாறிக் கொண்டு இருக்கும். சில நேரம்,வேறு காரணங்களுக்காகவும் அசைவுகளில் மாற்றம் தெரியும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.  

8.அம்மா குரலின் ஒலி அளவு

குழந்தைக்கு தாயின் குரல் மிகவும் பரிட்சயமானது.அதே சமயம் மிகவும் பிடித்தமானது.அதற்கு செவிப்புலன் வந்தது முதல் கேட்ட முதல் குரல் உங்களுடையது தான். எப்போது எல்லாம் உங்கள் குரல் அதன் செவிகளில் விழுகிறதோ, அப்போதெல்லாம் அது கருவறையில் மிகவும் பாதுகாப்பாக உணரும்.அப்படி இருக்க அதை மறந்து நீங்கள் யாரிடமாவது வாதிட்டாலோ,கடுமையான குரலில் சண்டையிட்டாலோ அது அச்சம் கொள்ளும்.குழந்தைக்கு இந்த செயல் சுத்தமாகப் பிடிக்காது.அதனால் இயன்றவரை தேவையில்லா வாதத்தை தவிர்த்து, இனிமையான குரலோடே எல்லோரிடமும் பேசிப் பழகுங்கள்.நீங்கள் கர்ப்ப காலத்தில் இதை ஒரு உறுதியான பழக்கமாகக் கடைப்பிடித்தால், எதிர்காலத்தில் உங்கள் குழந்தை மகிழ்ச்சியான மனநிலையோடே எப்போதும் இருக்க வாய்ப்புள்ளது.  

9.காரமான உணவுகள்

தாய் உண்ணும் உணவுகளை கருவில் வளரும் குழந்தையும் சுவைக்கத் தொடங்கிவிடும்.இது நிறைய தாய்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் குழந்தை முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே சுவைகள் பற்றி உணர்ந்து கொள்கின்றது என்பது அழகான ஆச்சரியம். ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைக்கு அது பிடிப்பதில்லை.ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.  

10.சூடான தண்ணீர் தொட்டியில் குளிப்பது

தாய் சுடுநீர் நிரம்பிய தண்ணீர் தொட்டியில் மூழ்கிக் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் அதன் வெப்பநிலை புற சூழ்நிலையோடு சற்று கூடிக் காணப்படும்.அதனால் அது கருவில் உள்ள குழந்தையைச் சிரமத்திற்கு ஆளாக்கும்.  

11.அதிக வெளிச்சம் வயிற்றில் பட செய்வது

குழந்தையின் கண்களுக்கு பார்க்கும் திறன் ஏற்கனவே வந்திருக்கும். ஆனால் குழந்தை வளரும் கருவறை இருள் சூழ்ந்த நிலையிலே இருக்கும். அதனால் குழந்தை இருட்டிற்கு பழக்கப்பட்டிருக்கும்.ஆக வயிற்றின் அருகே அதிகமான வெளிச்சம் படச் செய்யும்போது, குழந்தைக்குக் கண்கள் கூசச் செய்யும்.அதனால் இந்த செய்கை கருவில் வளரும் குழந்தைக்குப் பிடிக்கவே பிடிக்காது.  

12.தாய் சாப்பிடாமல் இருப்பது

கருவில் உள்ள குழந்தை தாயையே  எல்லா வகையிலும் சார்ந்து இருக்கும். குறிப்பாக உணவு விசயத்தில்!குழந்தையின்  ஆரோக்கிய வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்து தேவைப்பாட்டுக்கும் தாய் எடுத்துக் கொள்ளும் உணவுகளே முக்கிய  பங்கு வகிக்கின்றன.கருவில் வளரும் குழந்தைக்குப் பசி எடுக்கும். தாய் உணவு எடுக்காத பட்சத்தில் குழந்தை மிகவும் சிரமத்திற்கு ஆளாகி தன் எதிர்ப்பை உதைத்து காட்டும். ஆக, தாய் வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிடாவிடில்   குழந்தை பசியால் தாக்கப்பட்டு அதிருப்தி கொள்ளும். ஆக இந்த செய்கையைத் தாய் நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.   கருவில் வளரும் குழந்தைக்காக ஒரு தாய் தன் வாழ்க்கையில் எத்தனையோ அர்ப்பணிப்புகளை செய்ய  தயாராக உள்ளாள் என்பது நிச்சயம் மிகையில்லை. இந்த சில விசயங்களைக் கவனத்தில் வைத்துக் கொண்டால்,ஒரு தாய் தன் குழந்தைக்கு எந்தவொரு பிரச்சனையும், இடைஞ்சலும் இல்லாமல் மேலும் அதை மகிழ்ச்சியாக இருக்கச் செய்யலாம். எப்போதுமே இப்படி இருக்க முடியாவிட்டாலும், முடிந்தளவு கவனமாக இருக்க முயலலாம். அம்மாவும் குழந்தையும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் நம் நோக்கம்!   ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null