இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் பெற்றோரா நீங்கள்? அடுத்த குழந்தைக்கு உடல் தயாராகிவிட்டதா? தைரியம் இருக்கிறதா? கருத்தரித்த பின்பு இந்த குழந்தையை எப்படிப் பார்த்துக்கொள்வது? இது போன்ற இன்னும் பல சந்தேகங்கள் இருக்கிறதா? அப்படியென்றால் இதைத் தொடர்ந்து படியுங்கள்.
இரண்டாவது குழந்தைக்குத் திட்டமிடுபவரா நீங்கள்? அப்படியானால் இந்த 15 விஷயங்களைக் கவனியுங்கள்.
பொருளாதார நிலை
இந்த நவீன உலகில் எல்லா பிரச்சனைக்கும் முதல் தீர்வு பணம்தான். முதல் குழந்தைக்கே கருத்தரித்ததிலிருந்து பிறந்து தடுப்பூசி போட்ட வரை ஏகப்பட்ட பொருட்செலவு ஏற்பட்டு இருக்கலாம். இரண்டாவது குழந்தைக்கு அதைவிட அதிகம் செலவாகும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, குழந்தை குறித்த முடிவை எடுக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் குழந்தையை வைத்துக்கொண்டு, “ஒருவேளை அவசரப்பட்டு விட்டோமோ…” என்ற எண்ணம் ஒருபோதும் வந்து விடவே கூடாது.
இடைவெளி
ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியம். அதாவது தாயின் பராமரிப்பிலிருந்து முதல் குழந்தை விடுபட்டு ஒவ்வொரு
வேலையையும் தானே செய்து கொள்ளப் பழக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் முதல் குழந்தை விளையாடுவதற்கு நண்பர்களை உருவாக்கி வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். தாய் கர்ப்பமானால் நம்மைக் கவனிப்பதில்லை என்ற எண்ணம் முதல் குழந்தைக்கு வந்து விடவே கூடாது. இல்லையென்றால், உங்கள் முதல் குழந்தையால் பிறக்கப்போகும் குழந்தைக்குப் பல சிரமங்கள் ஏற்படலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் இரண்டு வயது இடைவெளியாவது இருக்க வேண்டியது அவசியம்.
லட்சியங்களும் கனவுகளும்
இரண்டாவது குழந்தையால் லட்சியங்களும் கனவுகளும் பாதிக்கப்படலாம் என்பது நினைவில் இருக்கட்டும். முதல் குழந்தைக்காக நேரம் செலவிட்டதில் உங்கள் கனவுகளைத் துரத்திச் சென்ற பயணத்தில் எவ்வளவு பின் தங்கினீர்கள் என்பதை அறிந்து, அதை ஈடு செய்வது குறித்த திட்டமிடலுக்குப் பிறகு இரண்டாவது குழந்தையைப் பற்றி முடிவெடுங்கள். ஏனென்றால் இது ‘தடை’ என்ற உணர்வைத் தந்து விடக்கூடாது.
பெண்/ஆண் குழந்தை விருப்பம்
எந்த குழந்தை பிறந்தால் வருந்தக்கூடாது. முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் இரண்டாவது குழந்தை ஆணாகப் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும். அதே போல முதல் குழந்தை ஆணாக இருந்தால் இரண்டாவது குழந்தை பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆண் – பெண் பாலினத்தை தீர்மானிப்பது ஆண்களிடம் இருக்கும் குரோமோசோம்தான். அதனால், பெண் குழந்தை பிறந்தாலும் ஆண் குழந்தை பிறந்தாலும் ஆண்தான் காரணம் என்பதை உறவினர்களுக்கு உணர்த்தி விடுங்கள். இரண்டாவது எந்த குழந்தை பிறந்தாலும், மகிழ்ச்சியோடு ஏற்கும் பக்குவம் அவசியம்.
பெற்றோரின் வயது
தந்தையின் வயது 35க்குள் இருக்க வேண்டும். ஏனென்றால் அதுவரை உயிரணுக்களின் வலிமை அதிகமாகவும், அதன் பிறகு வலிமை குறைந்ததாகவும் மாறுகிறது. வலிமை குறைந்த உயிரணுவால் உருவாகும் கரு குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். மரபணு குறைபாட்டுடன் கூடப் பிறக்கலாம்.
தாயின் வயதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 30 வயதுக்கு மேலுள்ள பெண்கள் , தங்கள் கருப்பை கருவை தாங்கும் சக்தியுடன் இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனையின் மூலம் உறுதி செய்துவிட்டு இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த புரிதல் இல்லாமல் நேரடியாக கருத்தரிக்கும்போது கரு தங்காமல் போனால் மன உளைச்சலை ஏற்படும். அது உங்களை மட்டுமின்றி குடும்பத்தாரையும் பாதிக்கும்.
உடல்நிலை
உங்கள் உடல் நிலையும் மிகவும் முக்கியம். முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்திருந்தால், உடல்நிலை சற்று மோசமாகிவிடும். அடுத்த குழந்தைக்கு உடனடியாக உடல் ஒத்துழைக்காது. பிரசவமும் சிக்கலானதாகி விடும். இதனால் குழந்தை பெற்றுக்கொள்ளும் சக்தி உடலில் இருக்கிறதா? எத்தனை ஆண்டு இடைவெளி அவசியம்? என்னென்ன பிரச்சனைகள் உருவாகும் என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்து முழு சோதனைக்குப் பிறகு கருத்தரிப்பது நல்லது.
மன வலிமை
வலிமையான மன நிலை மிகவும் அவசியம். சாதாரண வாழ்க்கைக்கும் உங்களது கர்ப்ப கால வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். உணவு முறை, நடை, தூக்கம் என ஒவ்வொரு செயலும் குழந்தைக்காகப் பார்த்துப் பார்த்து செயல்பட்டு இருந்திருப்பீர்கள். இதனால், இன்னொரு குழந்தை வேண்டவே வேண்டாம் என்ற எண்ணம் உருவாகியிருக்கும். இந்த மன நிலையில், கருத்தரித்தால் இடையிலேயே தேவையில்லா எண்ணம்கூட எழ வாய்ப்பிருக்கிறது. அதனால், முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது இருந்த மன வலிமையை விட இரண்டாவது குழந்தைக்கு அதிக மன வலிமை இருக்க வேண்டும். அந்த மன வலிமை வந்த பிறகே திட்டமிட வேண்டும்.
கணவன் மனைவி இடையேயான புரிதல்
உங்கள் கணவருக்கு இரண்டாவது குழந்தை குறித்த புரிதல் ஏற்படுத்த வேண்டும். முதல் குழந்தையை ஆர்வத்தில், பாசத்தில் நீங்களே உங்கள் முழு பொறுப்பில் சுமந்து பெற்றெடுத்திருக்கலாம். ஆனால் இரண்டாவது குழந்தைக்கு அப்படி இருக்க முடியாது. முதல் குழந்தைக்குச் சாப்பாடு
கொடுப்பது, குளிக்க வைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே கணவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சமைப்பது , வீட்டைப் பராமரிப்பது போன்ற பணிகளையும் கணவருடன் பகிர்ந்துகொள்வது நல்லது. நீங்கள் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பவராக இருக்கலாம். உங்கள் கணவர் மட்டுமே பணிக்குச் செல்பவராகவும் இருக்கலாம். ஆனால் இது அலுவலக வேலை சம்பந்தப்பட்டதல்ல. பிறந்த மற்றும் பிறக்கப்போகும் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது நல்லது.
முதல் குழந்தை பள்ளி சென்ற பிறகு இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்வது நல்லது. ஏனென்றால் பள்ளியில் முதல் குழந்தைக்குக் கிடைக்கும் நண்பர்கள் தாயின் பிரிவை மறக்க வைப்பார்கள். மேலும் இரண்டாவது குழந்தையைப் பராமரிக்க போதுமான நேர அவகாசமும் கிடைக்கும். மேலும் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியே கூடுதல் அக்கறை செலுத்தியும் பார்த்துக்கொள்ள முடியும்.
முதல் குழந்தைக்கு எதிர்பார்ப்பை ஊட்டுதல்
முதல் குழந்தைக்கு இரண்டாவது குழந்தையின் மீதான எதிர்பார்ப்பும் பாசமும் ஏற்படச் செய்ய வேண்டும். இரண்டாவது குழந்தை கருவில் இருக்கும்போதே முதல் குழந்தைக்கு அதன் மீதான எதிர்பார்ப்பை ஊட்டி வளர்க்க வேண்டும். அதாவது, உங்களுக்கு அம்மா ஆவது எப்படி சந்தோஷமோ அதேபோல உங்கள் முதல் குழந்தை அண்ணனாகவோ அக்காவாகவோ ஆவதும் சந்தோஷம்தான். இதை முதலில் புரிய வைக்க வேண்டும். இதனால், முதல் குழந்தைக்கு ஏற்படும் பெரும் உளவியல் சிக்கல் தவிர்க்கப்படுவதுடன் முதல் குழந்தையே இரண்டாவது குழந்தையின் பராமரிப்பில் உதவவும் தயாராகிவிடும்.
உடல் எடை
முதல் குழந்தை கருவில் வளரும்போது உங்கள் எடையும் சேர்ந்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கும். சுமார் பத்து முதல் பதினாறு கிலோ வரை கூட உடல் எடை அதிகரித்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு உடற்பயிற்சி மூலம் மீண்டும் பழைய அளவுக்கே குறைத்து விடுவது நல்லது. மீண்டும் கருத்தரித்து குழந்தை வளரும்போது உடல் எடை மேலும் அதிகரிக்கும் என்பதால், எடை குறைப்பு
l மிகவும் அவசியம். இல்லையென்றால் ‘ரொம்ப குண்டாகிட்டமோ’ என்ற எண்ணம் இரண்டாவது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கலாம்.
முதல் குழந்தையைத் தயார் செய்தல்
இரண்டாவது குழந்தை கருத் தரிப்பதற்குள் முதல் குழந்தை உட்காருவதற்கான இடத்தை உருவாக்குவது தாயாகிய உங்கள் பிரதான கடமை. மடியிலேயே உட்கார்ந்து பழக்கப்பட்ட குழந்தையைத் திடீரென வயிற்றில் குழந்தை இருக்கிறது என்பதற்காகக் கீழே உட்காரச் சொன்னால் தான் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதுடன், மன உளைச்சலுக்கும் உள்ளாகும். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.
இரண்டாவது குழந்தை பராமரிப்பு என்பது முதல் குழந்தையை பொறாமைப்பட வைக்கத்தான் செய்யும். அதற்காக, எப்போதும் பாசமாகத்தான் இருக்கிறோம் என்பதை முன்கூட்டியே உணர்த்திவிட வேண்டும். அதாவது முதல் குழந்தையிடம் சில விஷயங்களை ரகசியமாகச் சொல்வது, கதைகள் சொல்வது,”இந்த கதையை நீ தான் பாப்பாவுக்கு சொல்லணும் ஞாபகமா கேட்டுக்க” எனக் கதை மீதும் அடுத்துப் பிறக்கப்போகும் குழந்தையின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்துவது, உள்ளிட்ட செயல்களின் மூலம் இரண்டாவது குழந்தையின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டலாம். இது பாசத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
குழந்தைக்குச் சொல்லத் தேர்ந்தெடுக்கும் கதைகளில் கவனமாக இருக்க வேண்டும். எந்த விதத்திலும் அண்ணன் – தம்பி சண்டை போன்ற கதைகளைச் சொல்லிவிடக்கூடாது. நமக்கு அடுத்துப் பிறக்கப்போகும் குழந்தை நம்மிடம் சண்டையிடப்போகிறது என்ற எண்ணம் வந்துவிட அனுமதிக்கவே கூடாது.
முதல் குழந்தையின் புரிதல் திறன்
இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள தேர்ந்தெடுக்கும் இடைவெளி கால அளவு மிக முக்கியம். அதாவது முதல் குழந்தை பிறந்து இரண்டாவது வயதில் அடுத்த குழந்தையைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்றால், வளர்க்கும்போது பெரிய அளவில் உளவியல் சிக்கல் எதுவும் இருக்காது. ஆனால், முதல் குழந்தை பள்ளிக்குச் சென்ற பிறகு இரண்டாவது குழந்தை என்றால் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். முக்கியமாக “பாப்பா எப்படி வந்துச்சி?” என்ற கேள்விக்கு நீங்கள் விளையாட்டாக “காக்கா தூக்கிட்டு வந்துச்சி” எனக்கூறும் பதில் நாளை சிக்கலாக மாறலாம். “நான்தான் அசல், உன்ன காக்கா கொண்டாந்து போட்டுச்சி” எனத் தம்பியிடமோ தங்கையிடமோ சண்டையிடலாம். இந்த சிக்கலையெல்லாம் எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள் என்பதைக் கவனத்தில் வைத்து இரண்டாவது குழந்தை குறித்த முடிவை எடுக்க வேண்டும்.
முதல் குழந்தையுடன் நட்பு
இரண்டாவது குழந்தை பிறந்து நீங்கள் மருத்துவமனையிலிருந்தால், தினசரி முதல் குழந்தையைப் பார்ப்பதை நிறுத்தக் கூடாது. கணவர் நன்றாகப் பார்த்துக்கொள்பவராக இருந்தாலும், திடீரென குழந்தை தன் தாயிடமிருந்து ஒரு இடைவெளியை உணர்ந்துவிட வாய்ப்புள்ளது. அதனால், முதல் குழந்தையையும் அதற்குத் தேவையான பொருட்களையும் எடுத்துச் சென்று அவ்வப்போது மருத்துவமனையில் தாயுடன் தங்க வைத்துக்கொள்வது நல்லது. அப்போது சிறு சிறு உதவிகளை முதல் குழந்தை மூலம் செய்ய வைத்து… நீ அண்ணன்… நீ அக்கா என அழுந்த மனதில் பதிய வைக்க வேண்டும்.
மருத்துவ ஆலோசனை
தயங்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். குடும்பத்தின் நிலை, கணவரின் மன நிலை, முதல் குழந்தையின் நிலை என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துக்கூறி அதன் பிறகு இரண்டாவது குழந்தை குறித்துத் திட்டமிடலாம். இடைவெளி வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்திய கருத்தடை
மாத்திரைகள் உள்ளிட்டவற்றால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதைப் பற்றியும் விளக்கம் கேட்பதுடன் உடல் பரிசோதனையும் செய்துகொண்டு தெளிவு பெற வேண்டும். உளவியல் சிக்கலுக்கு மன நல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.
என்னது இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா என்று மலைக்க வேண்டாம், தெளிவான திட்டமிடலும் சரியான புரிதலும் இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. நம் முன்னோர்களெல்லாம் ஏழு – எட்டு குழந்தைகளைப் பெற்று எந்த சிக்கலும் இல்லாமல் வளர்த்து ஆளாக்கியிருப்பார்கள். உங்களுக்கு இரண்டாவது குழந்தைதானே. பயம் தேவையே இல்லை. நல்ல முடிவைத் தேர்ந்து எடுங்கள்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null