தூதுவளை மருத்துவ பயன்கள் & Thoothuvalai ரசம், துவையல்!

தூதுவளை மருத்துவ பயன்கள் & Thoothuvalai ரசம், துவையல்!

தூதுவளை (Thoothuvalai) என்பது இந்தியா போன்ற வெப்ப தன்மை கொண்ட நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகை தாவர வகையாகும். சொலனம் டிரைலோபேடம் என்பது இதன் அறிவியல் பெயராகும். இந்த தாவரம் வேலி அல்லது மற்ற செடி இனங்களைப் பற்றி கொடியாக படரும். தூதுவளை கொடி மற்றும் இலை ஆகிய அனைத்து பகுதிகளிலும் முட்கள் காணப்படும். தூதுவளை ஈரமான பகுதிகளில் புதர் மாதிரி வளர்ந்து காணப்படும். தூதுவளையின் இலை கரும்பச்சை நிறத்திலும் , பழங்கள் உருண்டை வடிவத்தில் சிவந்த நிறத்திலும் காணப்படும்.இதனுடைய பூக்கள் நட்சத்திர வடிவத்தில் ஊதா நிறத்தில் அழகாகக் காணப்படும். வெள்ளை நிற பூக்கள் கொண்ட தூதுவளை ரகமும் உண்டு. இந்த தூதுவளை (Thoothuvalai) கத்தரி குடும்பத்தைச் சேர்ந்தது.

இதற்கு தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. சித்த வைத்தியத்தில் தூதுவளை என்ற சொல்லுக்குத் தனி மகத்துவம் உள்ளது. ஏனென்றால் தூதுவளை செடியின் இலை, பூ, காய், வேர் என்று அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்களை செறிவாகக் கொண்டுள்ளன. இந்தப் பதிவில் தூதுவளை மூலம் கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் என்ன என்பதைப் பற்றியும் தூதுவளை கொண்டு தயாரிக்கப்படும் சில ரெசிபிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இது குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடியது.

தூதுவளையின் மருத்துவ நன்மைகள்? (Thoothuvalai Benefits in Tamil)

சளி நீங்க:

மழை மற்றும் குளிர் காலங்களில் மனிதர்களுக்குப் பெரும் தொல்லையாக இருப்பது இந்த சளி தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளியால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்படுகின்றனர். இந்த சளியோடு அழையா விருந்தாளியாக இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு போன்ற பல்வேறு மருத்துவ கேடுகளும் தொற்றிக் கொள்கின்றன. இதற்கெல்லாம் ஒரு அற்புத தீர்வாகத் தூதுவளை உள்ளது.

தூதுவளை-Thuthuvalai கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி , இருமல், மூக்கடைப்பு , மூச்சிரைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து எளிதாகக் குணம் அடைய முடியும். சளி மட்டுமில்லை காய்ச்சலுக்கும் தூதுவளை சிறந்த மருந்து தான். மேலும் உடல் வலிமை அடையும். படிக்க: பரவும் மர்மக் காய்ச்சல்! அறிகுறிகள் என்ன?

நினைவாற்றல்

ஒரு குறிப்பிட்ட வயதில் அனைவருக்கும் ஞாபகம் மறதி ஏற்படுவது இயல்புதான் .இது போன்ற பிரச்சனைகள் வயதான காலத்தில் ஏற்படாமலிருக்கத் தூதுவளை துணைபுரிகிறது. தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால் மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும். அதைப்போல குழந்தைகளுக்குத் தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்து வர, அவர்களின் நினைவுத்திறன் அதிகமாகிப் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

இரத்த உற்பத்தி அதிகரிக்கும்

இரத்தத்திலுள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரியான அளவில் இருக்க வேண்டும். குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்கு இரத்த அணுக்களின் அளவு மிகவும் அவசியமானது. இந்த எண்ணிக்கை குறைந்தால் அவர்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரத்த சோகை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள தூதுவளை உதவுகிறது. தூதுவளை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து ,காயவைத்து , பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து மோரில் கலந்து சாப்பிட்டு வர இரத்த சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.

விஷத்தை முறிக்கும்

எதிர்பாராத விதமாக ஒருவரைத் தேள் பூரான், தேனி ,வண்டுகள் ,பூச்சிகள் போன்ற ஏதாவது ஒரு விஷ சந்து கடித்துவிட்டால் ,சம்பந்தப்பட்ட நபரைக் காப்பாற்ற தூதுவளை கைகொடுக்கும். ஏன் பாம்பு கடிக்குக் கூட தூதுவளை அருமருந்தாக உள்ளது.கடிபட்ட நபருக்கு உடனடியாக தூதுவளை இலை பொடியைத் தண்ணீரில் கலந்து சாப்பிடத் தர வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த நபருக்கு விஷ முறிவு ஏற்படும். இந்த வகையில் தூதுவளை அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும்.

ஆண்மை குறைபாடு சரியாகும்

நரம்புத் தளர்ச்சி போன்ற பாதிப்புக்கு ஆளான ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு காணப்படும். இதனால் இவர்களின் இல்லற வாழ்க்கையில் பல சிக்கல்கள் நிலவும். இப்படிப்பட்டவர்கள் தூதுவளையை உணவில் தேவையான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் வலுவடைந்து நரம்பு சம்பந்த பிரச்சனை நீங்கும். ஆக இவர்களின் ஆண்மைக் குறைபாடு தீரும்.

எலும்பு வலுவடையும்

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும்.

சர்க்கரை நோய்

இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து பொருளாக உள்ளது. இந்த தலை சற்று கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.இதனைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரத் தொடங்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நல்ல பலனை அடைய முடியும்.

பித்தம் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் தீரும்

வாதம் மற்றும் பித்த பிரச்சனைகளால் பல்வேறு வியாதிகள் உடலில் ஏற்படும்.
இதற்குத் தூதுவளை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. தூதுவளை பொடியை மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கிய முன்னேற்றம் கிடைக்கும்.

செரிமானம் சிறப்படையும்

தூதுவளை செரிமான சம்பந்தமான கோளாறுகளை தீர்த்துவிடும். இது தூதுவளையின் மற்றொரு சிறப்பு. மேலும் ஜீரண சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு அவ்வப்போது துவையல் செய்து தரலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

உடலில் பல்வேறு தொற்று கிருமிகள் தாக்குவதற்கு எதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாக உள்ளது. இந்த வகையில் தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுவிடும். அதனால் பல்வேறு தொற்று வியாதிகள் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கண்களுக்கு நல்லது

தூதுவளை கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல தீர்வாகும். தூதுவளை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் தீரும். கண் வலி சரியாகி விடும். மேலும் கண் பார்வை குறைபாடுகள் நீங்கி வலிமை அடையும்.

இவ்வளவு மருத்துவ நன்மைகளைப் பயக்கும் தூதுவளையை (Thuthuvalai) அடிக்கடி சமையல் செய்து சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் கீழே தூதுவளை கொண்டு தயாரிக்கப்படும் சில ரெசிப்பிகளைப் பார்த்து பயன் அடையலாம்.

தூதுவளை ரெசிபிகள் – ரசம் & துவையல்:

தூதுவளை ரசம்

தேவையான பொருட்கள்

  • தூதுவளை – 1 கப்
  • வரமிளகாய் – 1
  • சின்ன வெங்காயம்- 6
  • தக்காளி- 1
  • பூண்டு- 6 பல்
  • மிளகு- 1 ஸ்பூன்
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • எண்ணெய்- தேவையான அளவு
  • கடுகு, கடலைப்பருப்பு ,உளுத்தம் பருப்பு, வெந்தயம்- அரைஸ்பூன்
  • மஞ்சள் தூள்- அரைஸ்பூன்
  • பெருங்காயம்- 1 சிட்டிகை
  • ரசப் பொடி- 1 ஸ்பூன்
  • புளி- எலுமிச்சை பழ அளவு
  • கறிவேப்பிலை- சிறிது
  • உப்பு- தேவையான அளவு

தூதுவளை ரசம் தயாரிப்பது எப்படி?

1. தூதுவளை இலையைச் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.

2. புளியைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின் கரைத்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.கடாயில் எண்ணெய்யை ஊற்றி தூதுவளை, பூண்டு ,வெங்காயம் ,வரமிளகாய் ,மிளகு , சீரகம் மற்றும் தக்காளி ஆகிய பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இதனை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

4.பிறகு கடாயில் எண்ணெய் விட்டுத் தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இவை வதங்கிய பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும்.

5.அனைத்தும் நன்கு வதங்கிய பின் மஞ்சள் தூள் ,பெருங்காயம் மற்றும் ரசப் பொடி சேர்க்கவும்.

6. பிறகு புளி தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளவும். இப்போது தேவையான உப்பைக் கலந்து கொள்ளவும்.

7. நுரை கூடியவுடன் ரசத்தை நிறுத்தவும்.

8. தற்போது சுவையான தூதுவளை ரசம் தயார் ஆகிவிட்டது.

9.இந்த தூதுவளை ரசம் சளி தொல்லைக்கு மிக சிறந்த நிவாரணி ஆகும்.

தூதுவளை துவையல்

தேவையான பொருட்கள்

  • தூதுவளை இலை- 1 கப்
  • வர மிளகாய்- 3
  • எண்ணெய்- தேவையான அளவு
  • புளி- நெல்லிக்காய் அளவு

தூதுவளை துவையல் செய்வது எப்படி?

1.தூதுவளை இலையைச் சுத்தப்படுத்தி ஆய்ந்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி தூதுவளை இலையைப் போட்டு நன்கு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2.பிறகு கடாயில் பெருங்காயம் ,உளுந்து ,வரமிளகாய் ,புளி சேர்த்து நன்கு வதக்கவும்.

3.இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

4.தற்போது சுவை மற்றும் ஆரோக்கியமான தூதுவளை துவையல் தயார் ஆகிவிட்டது.

இந்த பதிவின் மூலம் தூதுவளையின் பல்வேறு மருத்துவ நன்மைகளை அறிந்திருப்பீர்கள். மேலும் தூதுவளை கொண்டு தயாரிக்கப்படும் இரண்டு ரெசிபிகளையும் கற்றிருப்பீர்கள். இதை அடிக்கடி சமைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null