குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்கிறதா?காரணங்கள் & தீர்வுகள்

குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்கிறதா?காரணங்கள் & தீர்வுகள்

குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்கள் தாய்ப்பால் தர தொடங்கி விடுவர்.தாய்ப்பால் தருவது என்பது ஒவ்வொரு அம்மாவின் முக்கிய கடமை.ஆனால் சில சமயங்களில் குழந்தை தாய்ப்பாலை குடிக்காது.இது மாதிரியான சூழல் தாய்ப்பால் கொடுக்க தொடங்கிய ஆரம்ப கட்டத்திலோ அல்லது இடைப்பட்ட கட்டத்திலோ ஏற்படலாம்.

குழந்தைகள் திடீரென்று தாய்ப்பால் குடிக்க மறுப்பார்கள். இந்த செய்கையை ஆங்கிலத்தில் ‘நர்சிங் ஸ்ட்ரைக்’ என்று அழைப்பார்கள்.இதனால் தாய்மார்கள் மிகவும் வேதனையும், குழப்பமும் அடைவார்கள். இது மாதிரியான நிலை ஒன்று இரண்டு நாட்கள் ஏற்படலாம். அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களிலும் இந்த நிலை தொடரலாம்.

குழந்தை பால் குடிக்க மறுக்கின்றது என்றால் அதற்கு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதாவது குழந்தை தாய்ப்பாலை மறுப்பதன் மூலம் தாயிற்கு எதையோ சொல்ல முற்படுகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்க பல காரணங்கள் உள்ளன. இந்தப் பதிவில் அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.மேலே வாசியுங்கள்.

குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்க என்ன காரணங்கள்?

குழந்தையின் ஆரோக்கியம்

பிறந்த குழந்தைகளுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு அல்லது வேறு சில
உடல் கோளாறு இருந்தால்,அவர்கள் தாய்ப்பால் குடிக்க மறுப்பார்கள். அதுபோக பிரசவ நேரத்தில் கொடுக்கப்படும் அனஸ்தீசியா, எபிடியூரல் போன்றவை குழந்தையையும் சேர்த்து அசதி அடைய செய்து ,தூங்க வைத்து விடும். இதனால் அவர்கள் பால் குடிக்க நாட்டம் செலுத்த மாட்டார்கள்.

சில மாதங்களான குழந்தைக்கு சளித்தொல்லை , காது வலி போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இதனால் கூட அவர்கள் தாய்ப்பால் அருந்த மறுப்பார்கள்.

பால் குடிக்கும் நிலை

தாய் குழந்தையை சரியான நிலையில் வைத்து பால் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையால் எளிதாக தாயின் மார்பில் இருந்து பாலை உறிந்து குடிக்க முடியும். தவறான நிலையில் பிடிக்கும்போது குழந்தையால் சரியாக பால் குடிக்க இயலாது. இதனால் குழந்தை அதிருப்தி அடையும். ஒருகட்டத்தில் குழந்தைக்கு பசி மிகவும் அதிகரிக்க தொடங்கும். மேலும் உடலில் பாலை உறிய போதிய சக்தி இல்லாத காரணத்தினால் , குழந்தை பால் குடிக்க மறுக்கும்.

பால் வரத்து

சில சமயங்களில் தாய்ப்பால் அதிக அளவு சுரக்கும். இதனால் குழந்தை பாலை அருந்தும் பொழுது அதிக அளவு பால் வரும். குழந்தையால் அவ்வளவு பாலையும் வேகமாக உறிந்து குடிக்க இயலாது. அதேபோல சிலசமயம் தாய்மார்களுக்கு சரியான அளவில் பால் சுரக்காது. இதனால் பசியில் உள்ள குழந்தை போதிய அளவு பால் கிடைக்காததால் அதிருப்தி அடைந்து பால் குடிக்க மறுக்கும்.

பல் முளைப்பு

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் காலம் தொடங்கிவிட்டது என்றாலும் கூடப் பால் குடிக்க மறுப்பார்கள். மேலும் வாய்ப்பகுதியில் ஏதாவது புண் ஏற்பட்டிருந்தாலும் தாய்ப்பால் குடிக்க மறுப்பார்கள்.

தடுப்பூசி

குழந்தை ஏதாவது குறிப்பிட்ட ஆரோக்கிய கோளாறுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தாலும் தாய்ப்பால் குடிக்க மறுக்க வாய்ப்புள்ளது. இது போக தடுப்பூசி ஏதாவது சமீபமாகப் போட்டு இருந்தாலும் ஒன்று இரண்டு நாட்கள் பால் அருந்த மறுப்பார்கள்.

சுவாச பிரச்சனை

குழந்தைக்கு சுவாச கோளாறு இருந்தால் பாலை உறிந்து குடிக்க முடியாது.மூச்சு திணறல் ஏற்பட்டால் குழந்தை உடனேயே பால் குடிப்பதை நிறுத்திவிடும்.ஆக சுவாச குழாயில் உள்ள பிரச்சனையைத் தீர்ப்பது அவசியம்.

சில வகை நறுமணங்கள்

தாய் அதிக அளவு நறுமணம் வீசும் டியோடரன்ட், சென்ட் ,லோஷன் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இருந்தாலும் குழந்தை தாய்ப்பால் அருந்த மறுக்கும்.
அந்த அளவுக்கு அதிகமான வாசம் குழந்தையை பாதிக்கும். தாயிடமிருந்து இயற்கையாக எழும் வாசமும், வியர்வை நறுமணமும் குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது. இது மாதிரியான இயற்கையான நறுமணங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை தரும்.

பிரிவு

குழந்தை தாயை விட்டு சில காலம் பிரியும் சூழல் நேர்ந்திருந்தால், குழந்தை தாய்ப்பாலை சற்று மறந்து இருக்கும். மீண்டும் தாய்ப்பால் கொடுக்க தொடங்கும் போது குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்கலாம்.

தாயின் கடுமை

சில குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது அதிக சேட்டை செய்வார்கள். குறிப்பாக கடிக்கவும் செய்து விடுகிறார்கள். இது மாதிரியான சூழலில் தாய்மார்கள் குழந்தைகளை அளவுக்கதிகமாக கண்டிக்கவும், அடிக்கவும் செய்து விடுவார்கள். இதனால் குழந்தை மிகவும் பயந்து போய் விடும். அடுத்த முறை பால் அருந்த மறுக்கும்.

குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்தால் வரும் பிரச்சினைகள் என்ன?

1.குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய எதிர்ப்புச் சக்தி கிடைக்காமல் போய்விடும்.

2.தாய்ப்பாலில் பல்வேறு விதமான சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் குழந்தைக்கு போய் சேராமல் நின்றுவிடும்.

3.தாய்ப்பால் அருந்தும் பொழுது குழந்தைக்கு தாயுடன் மிக நெருக்கமான பிணைப்பு ஏற்படும். குழந்தை இதை இழக்க நேரிடும்.

குழந்தை தாய் மறுக்காமல் குடிக்க சில டிப்ஸ்

பரிசோதனை

குழந்தைக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சினை உள்ளதா என்பதை கவனியுங்கள். மருத்துவரிடம் சென்று காதுகளில் எதாவது தோற்று ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்து பாருங்கள். இது மாதிரியான எந்த வித உடல்நல கோளாறு தென்பட்டாலும் உடனே வைத்தியம் மேற்கொள்ள வேண்டும். நோயும் ,நோயினால் ஏற்பட்ட வலியும் நீங்கிய உடனே குழந்தை பழையபடி பால் குடிக்க தொடங்கி விடும்.

தாய்ப்பால் சுரப்பு

தாய்மார்களுக்கு போதிய அளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்னும் பட்சத்தில்,
சில உணவுப் பழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக முருங்கைக்கீரை, பூண்டு, சோம்பு, பனை வெல்லம் , பழங்கள் ,காய்கறிகள் போன்ற சத்தான உணவுகள் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்தும். இதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தி அதிகரித்து குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் கிடைக்கும்.

வாசனை பொருட்கள்

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் அதிக அளவு வாசம் ஏற்படுத்தும் டியோடரன்ட், லோஷன் போன்றவற்றை உபயோகிப்பதை தவிர்க்கவும். நீங்கள் உடுத்தும் உடையையும் மிகவும் அதிக அளவு வாசம் கொண்டு டிடர்ஜென்ட் அல்லது சோப்பால் அலச வேண்டாம்.சில நெடிகள் குழந்தைக்குப் பிடிக்காது.

பிணைப்பு

குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பொழுது மிகவும் மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பது அவசியம்.தாய்ப்பால் புகட்டும்போது குழந்தையின் தலையை ஆதரவாக வருடுவது ,கையை பிடித்துக் கொள்வது போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். இதன் மூலம் குழந்தைக்கு பிணைப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வு கிடைக்கும்.

சரியான நிலை

குழந்தை சரியான நிலையில் பற்றி பால் கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். மருத்துவர்கள் அல்லது அனுபவம் வாய்ந்த மூத்தப் பெண்களிடம் ஆலோசனைப் பெறலாம்.இதனால் குழந்தை சவுகரியமான சூழலில் பால் அருந்த முடியும். அதேபோல குழந்தை பால் அருந்த பொழுது கைகால் போன்றவற்றை அசைத்தால் அதைத் தடுக்க முற்பட வேண்டாம்.

விளையாட விடுங்கள்

குழந்தைக்கு சரியான முறையில் செரிமானம் நடக்கவில்லை என்றாலும் பால் குடிக்க மறுப்பார்கள். குழந்தைக்கு பால் புகட்டிய உடனே படுத்து வைக்கக்கூடாது.சிறிது நேரம் விளையாட விட வேண்டும். வெளியே தோட்டத்திற்கு சிறிதுநேரம் அழைத்துச்சென்று வெளி காற்றையும் ,சூரிய ஒளியையும் குழந்தைக்கு கிடைக்க செய்யலாம்.ஜீரணம் சிறப்பாக நடைபெற்று இருக்கும்.இதன்மூலம் அவர்களுக்கு போதிய அளவு பசி எடுக்கும்.சீராக பால் அருந்த தொடங்குவார்கள்.

புறச் சூழல்கள்

குழந்தைக்கு பால் கொடுக்கப்படும் அறை அமைதியான சூழலில் இருக்க வேண்டும். அளவுக்கதிகமான வெளிச்சம் , காதுகளை கூச வைக்கும் இரைச்சல் போன்ற விஷயங்கள் கூட குழந்தையின் மனநிலை பாதித்து,தாய்ப்பால் அருந்த விடாமல் செய்துவிடும்.குழந்தையின் உணர்வுக்கும்,புறச் சூழல்களுக்கும் பெரிய தொடர்பு உள்ளது என்பதை தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வாமை

குழந்தைக்கு பால் ஒவ்வாமை உள்ளதா என்பதையும் தாய்மார்கள் உன்னிப்பாக கவனித்து புரிந்து கொள்ள வேண்டும். சில குழந்தைகளுக்கு பாலின் மீது ஒவ்வாமை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை

தினமும் பால் கொடுக்கும் நேரத்தில் ஒரு இனிமையான இசையை ஓட விடுங்கள். இந்த விசயம் குழந்தைக்கு எந்த நேரத்தில் பால் அருந்த வேண்டும் என்பதை உணர்ந்த கொள்ள உதவும். மேலும் தாய்ப்பால் அருந்தம் நேரம் இனிமையான சூழலாக குழந்தைக்கு மாறி விடும்.சரியான இடைவெளியில், இந்த பழக்கத்தை கடைபிடித்து,அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்த தாய்பாலை குழந்தைகளுக்கு தவறாமல் கிடைக்க துணை புரியுங்கள்.

தாய்மார்களின் உறுதி

குழந்தை ஒரு சில தினங்கள் தாய்ப்பால் அருந்த வில்லை என்பதற்காக உடனே தாய்ப்பாலை நிறுத்தும் எண்ணத்திற்கு தாய்மார்கள் வரக்கூடாது. பல தாய்மார்கள் மனம் தளர்ந்து விடுகின்றனர். குழந்தை தாய்ப்பால் அருந்தாமல் இருக்க சில நியாயமான காரணங்கள் இருக்கும் என்பதை தற்போது உணர்ந்து இருப்பீர்கள். ஆக அந்த காரணத்தை சரி செய்வது மட்டுமே தீர்வாக அமையும்.

மற்றபடி தாய்ப்பாலை நிறுத்துவது சிறந்த வழி கிடையாது. அதனால் ஒவ்வொரு அம்மாவும் எண்ணிலடங்கா சத்துக்களைக் கொண்ட தாய்ப்பாலை தங்கள் குழந்தைகளுக்கு தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த மன உறுதி எந்த சூழ்நிலையும் மாற்றும் வலிமை கொண்டது என்பதை மறக்கக்கூடாது.குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகே தாய்ப்பால் தருவதை நிறுத்த வேண்டும்.

இந்த பதிவின் மூலம் குழந்தை தாய்ப்பால் மறுப்பதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மேலும் தாய்மார்கள் இந்த பிரச்சனைக்கு எந்த வழியில் எல்லாம் தீர்வு காணலாம் என்பதை பற்றியும் உணர்ந்திருப்பீர்கள். உலகத்தில் உள்ள உணவுகளில் சிறந்த உணவு தாய்ப்பால்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் எந்த சூழ்நிலையிலும் அம்மாக்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை நிறுத்தக்கூடாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null