உங்கள் குழந்தைக்கு நடக்கச் சொல்லித் தர 10 குறிப்புகள்

உங்கள் குழந்தைக்கு நடக்கச் சொல்லித் தர 10 குறிப்புகள்

குழந்தை வளர்ச்சியின் முக்கிய மைல்கல் (Important  milestone of a baby growth)

பிறந்த குழந்தை 2 அல்லது 3 மாதங்களிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு வளர்ச்சி நிலை மைல்கற்களை எட்டத் தொடங்கும். பெற்றோர்கள் பொதுவாக தங்கள் குழந்தையின் ஒவ்வொரு நிலைகளையும் பார்த்து இரசித்த வண்ணம் இருப்பார்கள். முதலில் குழந்தையின் தலை நேராக நிற்கத் தொடங்கும்,பின் அது குப்புறக் கவிழ்ந்து, பின் எழுந்து உட்காரத் தாெடங்கும். பின் அது மெதுவாக எதையாவது பிடித்து நிற்க முயலும். கடைசியில் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் தனது முக்கிய மைல்கல்லை எட்டிக்  குழந்தை மெல்ல நடக்கத் தொடங்கும்.ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும்.

 

நடை பழகும் போது சந்திக்கும் சவால்கள் (Challenges that occur when a kid learns to walk)

உங்கள் குழந்தை நடக்கக் கற்றுக் கொண்ட பின் அவனது துள்ளல் நடையும்,ஓட்டமும் உங்களை மிகவும் பூரிப்பு அடையச் செய்யும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் எந்த ஒரு பெற்றோர்களுக்கும் இருக்காது.

எனினும், உங்கள் குழந்தை நடக்கத் தொடங்கும் போது பல சவால்களை அவன் எதிர் கொள்கிறான்.அடிக்கடி கீழே விழுவது, சிறு காயங்கள் ஏற்படுவது,தன் இயலாமையைக் குறித்து அழுவது முதல் மேலும் பல சவால்களைச் சந்தித்தே குழந்தை சிறப்பான முறையில் நடக்கத் தொடங்கும்.இதனாலேயே நீங்கள் அவன் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.அதிக பெற்றோர்களுக்கு எப்படி தன் குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுப்பது என்று தெரியாமல் இருக்கும். மேலும் இதற்காக அவர்கள் பலரிடம் ஆலோசனை பெறுவதும், பிறரின் உதவியை நாடுவதும் என்று பல முயற்சிகளைச் செய்வார்கள்.

 

அந்த விசயத்தில் உங்களுக்கு கைகொடுக்கவே நாங்கள் இந்த தகவல்களைத் தர முன்வந்து உள்ளோம். நீங்கள் உங்கள் குழந்தை அவனது பிஞ்சு கால்களைக் கொண்டு நடக்கத் தொடங்கும் அந்த அழகை ரசிக்க மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள் தானே? உங்கள் குழந்தை நன்றாக நடை பழக கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால், நீங்கள் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

 

உங்கள் குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுக்க 10 குறிப்புகள் (10 tips to teach your child walk in Tamil)

1. உதவி இல்லாமல் உட்காரச் செய்யுங்கள் (Sit without assistance)

முதல் முயற்சியாக உங்கள் குழந்தையை எந்த ஒரு பிடிமானமும் அல்லது  சாய்மானமும் இல்லாமல் உட்காரச் செய்யுங்கள். அப்படிச் செய்வதால் உங்கள் குழந்தையின் முதுகுத் தண்டில் பலம் ஏற்படுவதோடு, குழந்தை நிலையாக இருக்க கற்றுக் கொள்ளும்.உடல் சமநிலையைக் குறித்த புரிதல் அவன் மூளையில் மெல்லப் பதியத் தொடங்கும்.மேலும் உடம்பில் உள்ள பல தசைகள் பலம் பெற்று,குழந்தை நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் கூடி வரும்.

 

2. ஆர்வத்தைக் கவரும் பொருட்களைக் காட்டுங்கள் (Show things to catch kid’s interest)

உங்கள் குழந்தையின் நடக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சற்று தூரத்தில் நின்றபடி ஏதாவது பொருட்களை அசைத்துக் காட்டுங்கள். இல்லாவிடில் அவன் மிகவும் விரும்பி நேசிக்கும் பொருளைச் சற்று தெலைவில் அவன் கவனத்தை ஈர்க்கும் விதமாக வைத்து விடுங்கள். அதை அவனுக்கு எடுத்துக் கொடுக்காமல் அவனே வந்து எடுத்தக் கொள்ள ஆர்வத்தைத் தூண்டுங்கள்.’எங்கே இதைப் பிடி!எங்கே அதை எடுத்து வா!’என்பது போன்ற உற்சாகமான வாசகங்களைக்  கூறுங்கள். இவ்வாறு செய்யும் போது குழந்தைக்கு அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று எதையாவது பிடித்துக் கொண்டபடியே அந்தப் பொருளை நோக்கி நடக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

 

3. நடை வண்டி தாருங்கள் (Traditional walking tool)

உங்கள் குழந்தைக்குப் பிடிமானம் கொண்ட பாரம்பரிய நடை வண்டியை வாங்கிக் கொடுங்கள்.அதை விடச் சிறந்த நடைப் பயிற்சி சாதனம் உலகில் வேறு இல்லை. அதைப் பிடித்துக் கொண்டு நடக்கும்  ஆர்வத்தைக் குழந்தைக்கு ஏற்படச் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது அவனே யாருடைய உதவியும் இன்றி நடக்கத் தொடங்குவான்

 

 

4. வெறும் காலில் நடக்க விடுங்கள் (Walk barefoot)

உங்கள் குழந்தை நடக்கத் தொடங்கும் போது அவனை வெறும் காலில் நடக்கத் தூண்டுங்கள்.காலணிகள் போன்று எதுவும் அணியாமல் நடப்பது நல்லது.பாதங்களை மறைக்கும் காலணிகளை அணிவதால், குழந்தைக்கு தன் பாதங்களின் இயக்க நிலைகளைக் கவனிக்கும் வாய்ப்பு அற்றுப் போகும்.குழந்தைகள் கண்களின் வழியே விசயங்களைக் கவனித்து கற்றுக் கொள்கிறார்கள்.அதற்கு நாம் தடை விதிக்கக் கூடாது.மேலும் வெறும் கால்களோடு நடக்கும் போது,  அவனது பாதங்களுக்கு பூமியோடு நல்ல பிடிமானம் ஏற்படுத்துவதோடு சிறப்பான முறையில் நடை பழகும் சூழல் அதிகரிக்கும். குழந்தையின் பாதங்கள் பூமியில் தொடர்பு கொள்ளும்போது உடலுக்குச் சரியான சமநிலை நூறு சதவீதம் கிட்டும்.கூடுதலாகக் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.மேலும் உடல் முழுவதும் இருக்கும் தசைகள் வேலை செய்யத் தொடங்கும்.

 

 

5. பின்னால் நின்று உதவி செய்யுங்கள் (Assist from behind)

முழுமையாக உங்கள் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடைப் பயிற்சி தராமல், அவன் பின் நின்று கொண்டு தேவைப் படும் போது மட்டுமே அவனுக்கு உதவி செய்யுங்கள். இப்படிச் செய்யும் போது அவன் சமநிலையைப் பெற முயற்சி செய்வான்.நீங்கள் அருகில் இருப்பது அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும்.தற்சார்பு நிலைக் குறித்த புரிதல் குழந்தைக்கு மேலோங்கும்.

 

 

6. ஆபத்தான பொருட்களை விளக்கி வையுங்கள் (Keep dangerous things away)

உங்கள் குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுக்கும் போது வீட்டில் ஆங்காங்கே இருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் பொருட்களை கைகளுக்கு எட்டாத் தூரத்தில் வைப்பது நல்லது.கூர்மையான பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போன்றவைகளை உயரமான இடத்தில் மாற்றி வைக்கலாம்.பெற்றோர்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையோடு இருப்பது பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் தவிர்க்கும்.

 

7. பிற குழந்தைகளுடன் சேர்ந்து நடக்க விடுங்கள் (Let him walk with other babies)

உங்கள் குழந்தையின் சமவயதில் இருக்கும் பிற குழந்தைகளோடு பழக விடுங்கள்.பூங்கா,கோவில் போன்ற பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.அங்கே குழந்தை தன் வயது ஒத்த பிள்ளைகள் நடப்பதைக் காணும் போது அவனுக்கு நடக்கும் ஆர்வம் மேலும் பல மடங்கு அதிகரிக்கச் செய்யும். இதனால் அவன் வேகமாகவும் திடமாகவும் நடக்கக் கற்றுக் கொள்வான். முடிந்த வரை உங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகள் என்று வாய்ப்பு கிடைக்கும் போது அவனை அவர்களுடன் சேர்ந்து விளையாட விடவும். பெற்றோர்கள் தனிப் பறவைகளாக வாழாமல் சொந்தம் சூழ இருக்க முனைவது குழந்தையின் நடைப்பழக்கத்திற்கு மட்டும் அல்ல மற்ற அனைத்து விசயத்திற்கும் சாலச் சிறந்தது.

 

8. செல்லப் பிராணிகள் (Pets at home)

பாதுகாப்பான மற்றும் உங்கள் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுத்தா விதமாகச் செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதாலும் உங்கள் குழந்தை வேகமாக நடக்கத் தொடங்குவான்.குழந்தைகள் பொதுவாகவே நாய்க் குட்டி, ஆடு,கோழி போன்ற செல்லப் பிராணிகளிடம் அன்போடு பழகுவார்கள்.நீங்கள் வீட்டில் எதையாவது ஒன்றை வளர்க்க முனையும் போது குழந்தை அதோடு ஆர்வத்தோடு பழகத் தொடங்கி,பின் விளையாடத் தொடங்குவான். இதனால் அவன் வேகமாகவும் நடக்கத் தொடங்குவான்

 

9. பரிசளித்து ஆர்வத்தை அதிகப் படுத்துங்கள் (Give gifts to encourage)

உங்கள் குழந்தைக்கு நடக்க தொடங்கும் போது அவன் ஆர்வத்தை அதிகப் படுத்தும் விதமாகப் பரிசுகள் தருவது நல்லது. மேலும் அவனை உற்சாகப் படுத்தும் விதமாக அவனைப் பாராட்டிக் கொண்டே இருப்பதும் நல்லது. இப்படிச் செய்வதால் அவன் மிகுந்த ஆர்வத்தோடு விரைவாக நடக்கத் தொடங்குவான்.

 

10.சத்தான உணவு (Nutritious food)

இது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் குழந்தையின் எலும்புகள் மெல்லியதாகவும் பலம் குறைந்தும் இருக்கும். அவன் திடமாக நடக்க அதிக சக்தி தேவை. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்குப் போதிய சத்தான உணவைத் தர வேண்டும். அப்படி செய்வதால் அவன் அதிக சக்தி மற்றும் பலம் பெற்று சுறுசுறுப்பாகவும் திடமாகவும் அதிக நேரம் சோர்வடையாமலும் நடப்பான்.ஒரு சில குழந்தைகள் நடைபழக  தாமதம் ஏற்பட இதுவே மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

பெற்றோர்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

 

இந்தக் குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்திருக்கும்.நீங்கள் நிச்சயம் இதைப் பயன்படுத்தி,உங்கள் குழந்தையை நடை பழக வையுங்கள்.இது பின் மிகவும் மிகிழ்ச்சி தரும் விசயமாகவும், என்றும் மனதில் பசுமையாக நிற்கும் நினைவுகளாகவும் மாறும்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null