வீட்டிலிருந்தபடியே முகம் மற்றும் உடலில் வளரும் தேவையற்ற முடிகளை எளிதாக அகற்றுவது எப்படி ?

வீட்டிலிருந்தபடியே முகம் மற்றும் உடலில் வளரும் தேவையற்ற முடிகளை எளிதாக அகற்றுவது எப்படி ?

இன்று நிறைய பெண்களுக்கு, முகத்திலும் உடலில் சில இடங்களிலும் தேவையற்ற ரோமங்கள் வளருகின்றன.இதற்கு உடலில் ஏற்படும் பல சுரப்பிகளின் மாற்றங்களும், மரபு மற்றும் உணவுப் பழக்கங்களும் காரணம் என்று கூறலாம். மேலும் உடலில் தைராய்டு போன்ற பிரச்சனை இருந்தாலும் இத்தகைய தேவையற்ற ரோமங்கள் வளர வாய்ப்பு உள்ளது.

 

பெண்கள் ஆண்டாண்டு காலமாக முகத்தில் மஞ்சள், சந்தனம், வெட்டிவேர், கற்றாழை, எலுமிச்சை என்று பல மூலிகைகளை  முகத்திலும், உடலிலும் தினமும் தேய்த்துக் குளித்து தங்கள் சரும அழகைப் பாதுகாத்து வந்தனர். இதில் குறிப்பாக மஞ்சள் தேவையற்ற ரோமங்களை நீக்கவே பயன்படுத்தப்பட்டது. இதனால், இயற்கையாகவே தேவையற்ற ரோமங்கள் வளருவது குறைவாகவும், முற்றிலும் இல்லாமலும் இருந்தது. ஆனால் இன்று பெண்கள், அவற்றைப் புறக்கணித்துவிட்டனர். இதற்கு அவர்களது வாழ்க்கைச் சூழல் ஒரு காரணம் என்று கூறலாம். எனினும், அத்தகைய ரோமங்கள் முக அழகைக் குறைப்பதோடு, அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையையும் சில நேரங்களில் உண்டாகி விடுகின்றது. இதனால் அவர்கள் மக்கள் கூடும் இடங்கள் அல்லது அலுவலகம் போன்ற சூழல்களில் சிறு சங்கடத்தோடே பிறரிடம் பழகுகின்றனர்.

 

இந்த தேவையற்ற ரோமங்களை எளிதாக நீக்கி விடலாம். இதற்கு இயற்கையாகவும் அல்லது வேறு சிகிச்சை முறையிலும் வழிகள் உள்ளன.அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமா? மேலும் படியுங்கள்.

 

முகம் மற்றும் உடலில் வளரும் தேவையற்ற ரோமங்களை வீட்டிலிருந்து அகற்ற சில எளிய வழிகள்(Easy ways to remove hair from home using simple methods or Hair Removal Tips)

 

அதிகம் செலவு செய்யாமல், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நீங்கள் சுலபமான வழியில் முகம் மற்றும் உடலில் வளரும் தேவையற்ற ரோமங்களை அகற்றி விடலாம். இதற்கு நீங்கள் உங்கள் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களே போதுமானது. நீங்கள் தொடர்ந்து  பின் வரும் குறிப்புகளைச் செய்து வந்தால், நல்ல மாற்றம் ஏற்படுவதைக் காணலாம். தேவையற்ற ரோமங்களை அகற்ற உங்களுக்காக இங்கே சில எளிய மற்றும் பலனளிக்கும் குறிப்புகள்:

 

பப்பாளி (Papaya)

முகம் மற்றும் உடலில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற, பப்பாளி ஒரு நல்ல தீர்வாக இருக்கின்றது. மேலும் இது முகத்தைப் பொலிவாகவும், நல்ல நிறத்தோடும் வைத்துக் கொள்ள உதவுகின்றது. எப்படி பப்பாளியை முகத்தில் இருக்கும் ரோமங்களை அகற்றப் பயன்படுத்துவது என்று இங்கே பார்க்கலாம்.

 1. 2 தேக்கரண்டி பப்பாளிப் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 2. 1/2  தேக்கரண்டி மஞ்சள் தூளை இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
 3. சிறிது தயிர் எடுத்துக் கொண்டு அதனுடன் பப்பாளி மற்றும் மஞ்சளைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
 4. இப்போது முகத்தில் இந்த கலவையைத் தடவி, மிருதுவாக மசாஜ் செய்து சிறிது நேரம் விட்டு விடவும்.
 5. 20 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

 

கடலை மாவு ஃபேஷ் பாக் (Gram flour face pack)

கடலை மாவு எல்லோர் சமையல் அறைகளிலும் இருக்கும். இது சமையலுக்கு மட்டும் அல்லாமல் பல வகையில் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வகையில், கடலை மாவு முகம் மற்றும் உடலில்  இருக்கும் ரோமங்களை அகற்றவும் உதவுகின்றது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி பலன் பெற இங்கே சில குறிப்புகள்.

 

 1. ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிது கடலை மாவு எடுத்துக் கொள்ளவும்.
 2. இதனுடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளவும்
 3. இதனுடன் சிறிது பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
 4. இந்த கலவையை முகத்தில் தேய்த்து, மிருதுவாக மசாஜ் செய்து அப்படியே 20 நிமிடங்கள் விட்டுவிடவும்.
 5. பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விடவும்.
 6. இது உங்கள் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவும்.

 

எலுமிச்சை பழம், தேன் மற்றும் சர்க்கரை (Lemon, honey and sugar)

சர்க்கரை மற்றும் எலுமிச்சைப் பழம், முகம் மற்றும் தேவையற்ற இடங்களில்  இருக்கும் ரோமங்களை அகற்ற ஒரு நல்ல தீர்வாக இருக்கின்றன. இந்த ஃபேஷ் பேக்கை நீங்கள் எளிதாக வீட்டில் செய்து விடலாம். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

 1. சர்க்கரை மற்றும் எலுமிச்சை பழ சாற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
 2. இதனுடன் தேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 3. இதனைச் சூடு செய்து ஒரு பசை போலச் செய்யவும்.
 4. இதனுடன் சிறிது தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
 5. இந்த கலவை ஆறிய பின் உங்கள் முகத்தைக் கழுவி விட்டு நன்கு ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும்.
 6. அதன் பின் இதை ரோமங்கள் இருக்கும் இடத்தில் பூசி விடவும்.
 7. சிறிது நேரம் கழித்து மெதுவாக எடுத்து விடவும்.

 

முட்டை மாஸ்க் (Egg mask)

இந்த மாஸ்கை நீங்கள் முட்டையின் வெள்ளைக் கரு கொண்டு செய்யலாம். இது மிக எளிதான ஒன்று. மேலும் நல்ல பலன்களையும் தரும். இது உறுதியாகத் தேவையற்ற ரோமங்களை அகற்ற உதவும். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

 1. முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது சோள மாவு மற்றும் சிறிது சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.
 2. அனைத்தையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கிளறவும்.
 3. இந்த மாஸ்கை முகத்தில் தடவி சிறிது நேரம் விட்டுவிடவும்.
 4. அது காய்ந்த பின், மெதுவாகச் சருமத்தின் மீது இருக்கும் படிவத்தை எடுக்கவும்.
 5. தேவையற்ற ரோமங்கள் வெளி வருவதை நீங்கள் பார்க்கலாம்.

 

பன்னீர் மற்றும் படிகாரம் (Rose water and alum)

இது மற்றுமொரு பலன் தரக்கூடிய முறையாக இருக்கும். இதை நீங்கள் வீட்டிலிருந்தே முயற்சி செய்து பார்க்கலாம். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

 

 1. ஒரு கிண்ணத்தில் சிறிது படிகாரத் தூளை எடுத்துக் கொள்ளவும்.
 2. இதனுடன் சிறிது பன்னீரைச் சேர்த்துக் கொள்ளவும்.
 3. இதனை நன்கு கலந்து ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் வைக்கவும்.
 4. குறிப்பாக ரோமங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இதனை அதிகம் வைக்கவும்
 5. இது காய்ந்த பின், மீண்டும் ஒரு முறை இதைப்  பஞ்சால் நனைத்து முகத்தில் வைக்கவும்
 6. சிறிது நேரம் கழித்துக் காய்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விடவும்
 7. இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

 

வெங்காயம் மற்றும் துளசி(Onion and tulsi)

இது முகத்திற்கு நல்ல பொலிவைத் தருவதோடு, பருக்கள் மற்றும் தழும்புகள் இருந்தாலும் அகற்றி விடும். மேலும் தேவையற்ற ரோமங்களை எளிதாக அகற்ற உதவும். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்;

 

 1. சிறிது துளசி இலைகளை எடுத்துக் கொள்ளவும்.
 2. ஒரு சிறிய வெங்காயம் எடுத்துக் கொள்ளவும்.
 3. இரண்டையும் நன்கு அரைத்து பசை போலச் செய்யவும்.
 4. இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடம் வரை விட்டு விடவும்.
 5. பின் காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி விடவும்.

 

இந்த வீட்டுக் குறிப்புகள் மட்டுமல்லாமல் மேலும் பல சிகிச்சை முறைகளும் உடலில் தேவையில்லா இடங்களில் இருக்கும் ரோமத்தை அகற்ற உள்ளன. அவை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உங்களுக்குப் பலனளிக்கும். அவற்றில் சில,

 

வேக்ஸிங்

இதற்கென பிரத்தியேகமாகக் கடைகளில் பொருட்கள் கிடைக்கின்றன.

 

டுவீசிங்

இது ரோமங்களைப் பிடுங்கி விடும் முறை. இதனை வீட்டிலிருந்தும் நீங்கள் செய்யலாம்.

 

சவரம் செய்வது

பெண்களுக்கென்று பிரத்தியேகமாக முகத்தில் இருக்கும் ரோமங்களை அகற்றச் சவர பொருட்கள் உள்ளன. அதனைப் பயன் படுத்தி இதனை எளிதாகச் செய்யலாம்.

 

த்ரெட்டிங்

இது நூல் கொண்டு முகத்தில் இருக்கும் ரோமங்களை அகற்றும் முறை. இதில் சிறிது வலி இருந்தாலும், ரோமங்களை அகற்றி விடலாம். எனினும், இது தற்காலிக தீர்வே

 

லேசர் சிகிச்சை

இந்த சிகிச்சை முறை உங்கள் உடலில் தேவையில்லா இடங்களில் இருக்கும் ரோமங்களை நிரந்தரமாக அகற்ற உதவும். எனினும் இது சற்று விலை உயர்ந்த சிகிச்சை ஆகும். இது நிரந்தரமாக உடலில் தேவையில்லா இடங்களில் ரோமங்கள் வளருவதை தடை செய்யும்.

 

மேலே கூறப்பட்டுள்ள எந்த முறையையும் நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கலாம். இவை நிச்சயம் உங்களுக்கு எதிர் பார்த்த பலனைத் தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null