வயிற்று போக்கு சரியாக பாட்டி வைத்தியம்!

வயிற்று போக்கு சரியாக பாட்டி வைத்தியம்!

வயிற்று போக்கு தொல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டு தான் உள்ளது.வயிற்று போக்குக்கு வீட்டு வைத்திய முறைகளையே பின்பற்றித் தீர்வு காணலாம்.பொதுவாக வயிற்று போக்கு சமயத்தில் உடல் அதிக அளவு நீரை இழந்து விடும். அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் உடலில் உள்ள சத்துக்கள் விரைவாகக் குறையத் தொடங்கும்.

வயிற்றுபோக்கு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்தப் பதிவின் மூலம் வயிற்று போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள், பேதி சரியாகப் பாட்டி வைத்திய முறைகள், வயிற்று போக்கு காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் போன்றவற்றைப் பார்க்கலாம்.

சாதாரண வயிற்று போக்கு ஏற்படக் காரணங்கள்

வயிற்று போக்கு ஏற்படுவதற்கு என்னென்ன காரணங்கள் உள்ளன என்று அறிந்து கொள்வோம்.

 • பாக்டீரியா,வைரஸ் மற்றும் பாரசைட் போன்ற கிருமிகள் தொற்று.
 • தவறான உணவுப் பழக்கங்கள்.
 • அசுத்தமான குடிநீர் அருந்துவது.
 • உணவில் ஒவ்வாமை.
 • கணையம் தொடர்பான பிரச்சனை.

வயிற்று போக்கு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன?

1. அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு.

2. வயிற்றில் வலி.

3.மலத்தின் நிறத்தில் மாறுதல்.

4.மலம் சளி மாதிரி தண்ணீராக வருதல்.

5.சில சமயத்தில் மலத்தில் சிவப்பு திட்டுகளாக ரத்தம் தென்படும்.

6.வாந்தி ஏற்படுதல்

7.அளவுக்கு அதிகமான உடல் சோர்வு அல்லது அசதி.

8.காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது.

வயிற்று போக்கு சரியாகப் பாட்டி வைத்திய குறிப்புகள்

கடுகு

வயிற்றைப் பாக்டீரியா கிருமிகள் தாக்குவதால் வயிற்று போக்கு ஏற்படும். அந்த வகையில் கடுகு பாக்டீரியா கிருமிகளை அழிப்பதில் சிறப்பாகச் செயல்படும் தன்மை கொண்டது. ஒரு ஸ்பூன் அளவு கடுகை தண்ணீரில் சேர்த்துக் குடித்து வர வயிற்று போக்கு கட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாறு

வயிற்று போக்கு கட்டுப்படுத்துவதில் எலுமிச்சை பழச் சாறு பெரிய அளவில் கை கொடுக்கும். இதில் உள்ள சர்க்கரை உடல் சோர்வைக் குறைக்கும். மேலும் உடலில் நீர் இருப்பை தக்க வைக்க எலுமிச்சை பழச் சாறு உதவும்.

தயிர்

வயிற்று போக்கு சமயத்தில் தயிரைத் தவிர்த்து மற்ற பால் பொருட்களைச் சாப்பிடுவது உகந்ததல்ல. தயிர் பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது.ஆக வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் தயிர் குடிப்பதன் மூலம் நோய் குறைய வாய்ப்புள்ளது.

மாதுளை

மாதுளை வயிற்று போக்கை குணப்படுத்த உதவும். வயிற்று போக்கு ஏற்படும் சமயத்தில் பல சாறு தயாரித்து அருந்தினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளை தாேலைப் பொடியாகி தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலமும் சிறந்த வகையில் நிவாரணம் அடையலாம். படிக்க: மாதுளை நன்மைகள்

தேன்

தேன் ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சிறிதளவு தேன் மற்றும் ஏலக்காய் பொடியை வெந்நீரில் சேர்த்து தினம் 2 வேளை குடிக்க வேண்டும். இதைச் செய்யும்பொழுது வயிற்று போக்கு குணமடையும்.

இஞ்சி

எல்லோர் வீட்டிலும் இருக்கும் ஒரு எளிய பொருள் இஞ்சி ஆகும். இஞ்சியில் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படும் வேதிப்பொருள் உள்ளது. இஞ்சி தேநீர் தயாரித்துக் கொடுப்பதன் மூலம் வயிற்று போக்கை சரி செய்து கொள்ளலாம். அதிலும் காய்ந்த இஞ்சி வயிற்று போக்கிற்கு சிறந்த மருந்தாகும். இவற்றைச் சுக்கு என்று அழைப்பார்கள். நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். இந்த சுக்குப் பொடியை மோரில் கலந்து இரண்டு மூன்று தடவை குடித்தால், வயிற்று போக்கும் ஓடிவிடும்.

வெந்தயம்

நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியில் எளிதாகக் கிடைக்கும் ஒரு பொருள் தான் வெந்தயம். ஆனால் இந்த வெந்தயம் சாதாரணமானது கிடையாது. வயிற்று சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் மகத்துவமான பொருளாகும். இந்த வெந்தயம் பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் குணம் கொண்டது. இரண்டு ஸ்பூன் அளவு வெந்தய பொடியைத் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.இந்த குறிப்பைப் பயன்படுத்துவதன் மூலம் வயிற்று போக்கை சரி செய்து கொள்ளலாம்.

ஓமம்

ஓமம் சித்த மருத்துவத்தில் பெயர் பெற்ற ஒன்றாகும். தண்ணீரில் ஓமத்தைச் சேர்த்துக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த ஓம நீரை அடிக்கடி பருகி வர வயிற்று போக்கு கட்டுக்குள் வரும். ஓமம் தரும் நன்மைகள்.

வசம்பு

வசம்பை நெருப்பில் வாட்டிக் கொள்ளவும்.அதன் சாம்பல் பொடியைச் சேகரித்து எடுத்து வைக்கவும்.இந்த வசம்பு பொடியைத் தேனில் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது வயிற்று போக்கு குணமடையும்.

கொய்யா இலை

கொய்யா இலையைப் பறித்துக் கழுவிக் கொள்ள வேண்டும். இவற்றைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை அருந்தி வர வயிற்றுப் போக்கு நிவாரணம் அடையும்.

விளாம் பொடி

விளாம் பொடியை தேனில் குழைத்து குழந்தைகளுக்குச் சாப்பிட உகந்தது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குணமடைய உதவும்.

இளநீர்

வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடலின் நீர் அளவு அதிக அளவு குறைந்திருக்கும். இந்த சமயத்தில் இளநீரைத் தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.உடலின் நீர் இருப்பு தக்க வைக்கப்படும்.உடலுக்குத் தேவையான தெம்பு கிடைக்கப் பெறும். வயிற்று போக்கு கட்டுப்படும்.

கசகசா

வீட்டுச் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் ஒரு பொருள் தான் கசகசா.இந்த கசகசாவைப் பொடியாக அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்று போக்கு குணமடையும். கசகசா வயிற்றுக்குக் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சீரகம்

ஒரு கப் அளவு சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதனைப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை என்ற கணக்கில் கால் கப் மோரில் கலந்து பருகவேண்டும். இப்படிச் செய்வதால் வயிற்று போக்கு நிவர்த்தி அடையும்.

வேப்பம் இலை

நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வசம்பை வாங்கிக் கொள்ளவும். இதை நெருப்பில் வாட்டி நன்கு சுடவும். வேப்பம் இலையைப் பறித்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் மோரில் கலந்து பருகி வர, வயிற்று போக்கு குணமடையும்.

அவரை இலை

அவரை இலை சாற்றைத் தயிருடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்று போக்கு குணமடையும்.

மிளகு

மிளகு கிருமிகளை அழக்கும் குணம் கொண்டது.மிளகை பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதனை மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று போக்கு கட்டுப்படும்.

வயிற்று போக்கு சமயத்தில் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?

 • அரிசிக் கஞ்சி அல்லது வேறு ஏதாவது கஞ்சி வகைகள்
 • பிரட்
 • குழைவாகப் பிசைந்த வெறும் சாதம்
 • ரசம் சாப்பாடு
 • தயிர் சாப்பாடு
 • அதிக அளவு தண்ணீர்

வயிற்று போக்கு சமயத்தில் எந்தெந்த உணவுகளை எடுக்கக் கூடாது?

1.பால் பொருட்கள்

2.காரமான உணவு வகைகள்

3.எண்ணெய் நிறைந்த உணவு பதார்த்தங்கள்.

4.அசைவ உணவு வகைகள்

5.காபின் கலந்த உணவுகள்

6.முட்டைக்கோஸ்

7.காலிபிளவர்

8.ஆல்கஹால்

9.கார்பொனேட் கலந்த குளிர்பானங்கள்

10.பெர்ரிஸ்

11.பாக்கெட் செய்த உணவுகள்

போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்று போக்கு சரியான உடனே என்ன செய்ய வேண்டும்?

 • சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • தினமும் தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
 • சில நாட்கள் ஓய்வில் இருப்பது அவசியம்.

பொதுவாக வயிற்று போக்கு அதிக அளவு ஏற்பட்டிருந்த உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது. ஆகா அதனைப் பரிசோதித்து ஆரோக்கியத்தைச் சிறப்பான வகையில் மேம்படுத்திக் கொள்வது அவசியம்.

இந்தப் பதிவின் மூலம் வயிற்று போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள், வயிற்று போக்கு சரியாகப் பாட்டி வைத்திய முறைகள், வயிற்று போக்கு காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள், சரியான பிறகு செய்ய வேண்டியவை என்று அனைத்து விஷயங்களையும் தெளிவாக அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null