வலியில்லா தடுப்பூசிகள் என்றால் என்ன?நன்மைகள் & குறைகள்

வலியில்லா தடுப்பூசிகள் என்றால் என்ன?நன்மைகள் & குறைகள்

குழந்தைகள் நோய்ப் பாதிப்பிலிருந்து தப்பி, ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தடுப்பூசிகள் முக்கியமான ஒன்றாக இருக்கின்றன. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அது ஏற்படுத்தும் காயமும் வலியும் குணமாவதற்குள் பல அவஸ்தைகளைக் குழந்தைகளும் அனுபவிக்கின்றனர். பாரம்பரியமாகப் பரவி வரும் அம்மை நோய்க்கான தடுப்பூசியில் இருந்து தற்காலத்தில் சூழலுக்கு ஏற்ப பரவும் நோய்களுக்கான தடுப்பூசிகள் வரை குழந்தைகளின் நலனுக்காக ஏராளமானவற்றை மருத்துவ உலகம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது.

 

இதன் பலனாக, பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. எல்லா தடுப்பூசியிலும் வலியும் அதன் விளைவாகக் காய்ச்சல்,

உள்ளிட்ட பிரச்சனை இருக்குமா? வலியில்லா தடுப்பூசிகள் இருக்கின்றனவா என்றால் வலியில்லா தடுப்பூசிகளும் இருக்கின்றன என்று விளக்குகிறது இந்த கட்டுரைத் தொகுப்பு. 

 

வலியில்லா தடுப்பூசிகள்

குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காகவும், வலியில்லா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக டிஏபிடி (DaPT) (Diphtheria, acellular Pertussis and Tetanus.)  என்பது வலியில்லா தடுப்பூசியாகும். இந்த ஊசியைக் குழந்தைக்குச் செலுத்தும்போது வலி அவ்வளவாக இருக்காது. பக்க விளைவுகளும் எதுவும் இருக்காது.

 

நன்மைகள்

குழந்தைகளுக்குக் செலுத்தப்படும் இவ்வகை வலியில்லா தடுப்பூசிகளில் உள்ள நன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

 

இந்த வகை தடுப்பூசிகளை, குழந்தையின் உடலில் செலுத்துமிடத்தில் காயம் ஏற்படுத்துவதோ அல்லது சிவந்து போவதோ அல்லது வேறு ஏதாவது சிரமத்தைக் கொடுப்பதோ இருக்காது. உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ அம்மை தடுப்பூசி போடப்பட்ட தழும்பு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோன்ற எந்த தடயமும் வலியில்லா தடுப்பூசிகளில் ஏற்படாது.

 

பொதுவாகத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு குழந்தைக்கு இரவில் நடுக்கம், காய்ச்சல், உடல்வலி அல்லது வேறு ஏதாவது அசௌகரியமான உணர்வு அல்லது பின்விளைவு ஏற்படும். ஆனால், இந்த வகை ஊசிகளில் அந்த சிக்கல் எதுவும் கிடையாது.

 

லேசான வீக்கமோ  ,தோல் சிவந்து போவதோ கூட இந்த வகை தடுப்பூசிகளில் ஏற்படாது. அதனால், எந்தவித தயக்கமும் இன்றி இந்தவகை வலியில்லாத தடுப்பூசிகளைத் தேர்ந்தெடுக்கலாம். இரவு நேரங்களில் குழந்தையும் நிம்மதியாகத் தூங்கும். கவலை தேவையில்லை..!

 

இந்த வகை தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?

சாதாரண தடுப்பூசிகளுக்கும் இந்த வகை தடுப்பூசிகளுக்கும் பலனில் எந்த பெரிய வேறுபாடும் இருக்காது. இந்தவகை தடுப்பூசிகள் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. 

 

மேற்குறிப்பிட்டது போல, தோல் சிவந்து போதல், அதிக வெப்பநிலைக்குக் காய்ச்சல் ஏற்படுவது போன்ற எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால், இந்தவகை தடுப்பூசி சிறந்ததாகவே பார்க்கப்படுகிறது.

 

வலியுள்ள தடுப்பூசியைக் குழந்தைக்குப் போடும்போது, உடலில் சில ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். உதாரணமாக எதைச் சாப்பிட்டாலும் சாப்பிட்டவுடன் வாந்தி எடுக்கும். அதுபோல எந்த பாதிப்பும் இந்தவகை தடுப்பூசியில் இருக்காது.

 

குறைகள்

வலியற்ற தடுப்பூசிகள், குழந்தையின் உடலில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இயற்கையிலேயே குறைவான நோய் எதிர்ப்பு காரணிகளை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுகின்றன. 

 

மேலும், மற்ற தடுப்பூசிகளில் இருக்கும் மருந்துகளின் அளவைவிட, குழந்தைகளின் வலியைக் கருத்தில் கொண்டு குறைவான அளவுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகிறது.

 

இதன் காரணமாக, வலியற்ற ஊசிகள் மூலம் முதன் முறையே குழந்தைக்குத் தேவையான மருந்தைச் செலுத்த முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் சிறிது சிறிதாக மருந்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது.

 

பொதுவாக, தடுப்பூசியே உடலில் உள்ள நோய் எதிர்ப்பு காரணியான ஆண்டிபாடியின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகத்தான் போடப்படுகிறது. இந்த சூழலில், வலியற்ற தடுப்பூசிகள் மூலம் சிறிது சிறிதாகக் குழந்தைகளுக்கு மருந்தைச் செலுத்துவதன் காரணமாக, ஆண்டிபாடி உற்பத்தி தாமதப்படுகிறது. வலி தரும் ஊசியை குழந்தைக்குச் செலுத்தும்போது அதன் தூண்டுதல் காரணமாக, ஆண்டிபாடி உற்பத்தி அதிகமாகவே காணப்படுகிறது.

 

வலியற்ற தடுப்பூசிகள் என்பதை ‘வலியே இல்லாதவை’ எனக் கருதிவிட கொள்ள முடியாது. லேசான வலி இருக்கத்தான் செய்யும். அதே நேரம் மற்ற ஊசிகளைவிட மிகவும் குறைந்த அளவுக்கே வலியின்

 அளவும் விளைவும் இருக்கும். அதாவது பச்சிளம் குழந்தையால் தாங்கக் கூடிய அளவுக்கு என்று புரிந்துகொள்ளலாம். 

 

இது காய்ச்சலையும் ஏற்படுத்தும். ஆனால் பெற்றோரை அச்சப்படுத்தக்கூடிய அளவுக்கு இல்லாமல், லேசான அளவுக்கே இதனால் ஏற்படும் காய்ச்சல் இருக்கும். இதற்காகப் பயப்படத் தேவையில்லை.

 

இதன் விலை மிகவும் அதிகமானது. நடுத்தர வர்க்கப் பெற்றோரால் இந்த வகை ஊசியைக் குழந்தைக்குத் தேர்ந்தெடுக்க முடியுமா என்பது சந்தேகம். அதாவது  மற்ற ஊசிகளை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அளவுக்கு இதன் விலை அதிகமாக இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..!

 

கவனிக்க வேண்டியவை என்ன?

வலியற்ற தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்கும் முன் எதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். வலியே இருக்காது என்ற எண்ணத்தில், அதிக விலை கொடுத்து இந்த ஊசியைத் தேர்ந்தெடுத்து விட்ட பிறகு ஊசி போட்டால் குழந்தை அழுகிறது என்று வருத்தப்படக் கூடாது.

 

எல்லா ஊசியும் குழந்தைகளுக்கு வலியைத் தரும். டிபிடி (DPT) வலி தரும் தடுப்பூசிகளுள் ஒன்று. டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டுசிஸ் ஆகியவற்றுக்காகப் போடப்படுவது. இது வலி மிக்க ஊசியாகும். வலியற்ற தடுப்பூசியான டிடிஏபி (DTaP), டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் எசெல்லுலார் பெர்டுசிஸ் ஆகிய நோய்களை எதிர்க்கும் தன்மைகளைக் கொண்டது. 

 

இவை சில நாடுகளில் தடை செய்யப்பட்டவையா?

 

வலியில்லாத தடுப்பூசிகள் தடைசெய்யப்பட்டவை என்ற வதந்தி சில பகுதிகளில் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. படித்த பெற்றோர்களே இதை நம்புகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், உலகில் சில நாடுகள் வலியில்லா தடுப்பூசிகளையே வைத்திருக்கின்றன. சாதாரண தடுப்பூசிகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் அதிகப்படியான காய்ச்சல், வறட்டு இருமல்

 

 உள்ளிட்ட காரணங்களால் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. 

 

இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமா?

புதுமண தம்பதிகளுக்கு இருக்கும் பதட்டம் போல தான் புது பெற்றோருக்கு இருக்கும் பதட்டமும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சொல்லும் ஆலோசனைகளையெல்லாம் கேட்டு ஒருவித குழப்பமான மன நிலையிலேயே இருப்பார்கள். குழந்தையைப் பார்க்க வருபவர்களும் தங்களுக்குத் தெரிந்த மருத்துவத்தைக் கூறி குழப்பி விட்டு சென்று விடுவார்கள். அப்போது எந்த தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமும் வரத்தான் செய்யும். சிலர், ‘காசப் பத்தி கவலப்படாதப்பா… வலியில்லாத ஊசியே போடு…’ என்றும். சிலர் ‘காசு இருக்குனு கன்னாபின்னானு செலவு பண்ணிடாத… நம்ம புள்ளைக்குப் போட்டதையே போடு…’ என்றும் ஆலோசனை வழங்குவார்கள்.

இரண்டில் எததை் தேர்ந்தெடுத்தாலும், ஊசி போடும்போது குழந்தை அழும் என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். முன்பே கூறியிருந்தது போல,

 

டிஏபிடி (DaPT) (Diphtheria, acellular Pertussis and Tetanus.) தடுப்பூசியும், DTP தடுப்பூசியும் ஏறத்தாழ ஒரே நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டவை.  இரண்டில், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பமிருந்தால், பெரும்பாலும் டிஏபிடி ஊசியைத் தவிர்க்கச் சொல்கிறார்கள் சில மருத்துவ ஆலோசகர்கள். குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை இருப்பதாக அறியப்பட்டால் அதற்கேற்ப வலியில்லா தடுப்பூசிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மற்றபடி சாதாரண ஊசிகளே போதுமானது.

 

எதெற்கெல்லாம் தடுப்பூசிகள்?

எந்தெந்த நோய்களைக் கருத்தில் கொண்டு தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பமும் எல்லோருக்கும் இருக்கும்.  பெரும்பாலும்

சின்னம்மை, பெரியம்மை, ஹெப்பட்டைடிஸ் ஏ மற்றும் பி, இன்ஃபுளலையன்ஸா, ரூபெல்லா, போலியோ, கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை ரோட்டா வைரஸ் உள்ளிட்ட சில நோய்களைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளைப் போடலாம். இதில் போலியோவுக்கு, நோய் எதிர்ப்பு மருந்தைச் சொட்டு மருந்து வடிவிலேயே கொடுக்கப்படுவதால், தடுப்பூசியை தவிர்த்துவிடலாம். ஒருவேளை அந்த தருணத்தில் உங்களால் குழந்தைக்குச் சொட்டு மருந்து கொடுக்க முடியாவிட்டால், தடுப்பூசியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

 

உதாரணமாக, கக்குவான் இருமலுக்கான தடுப்பூசியைக் குழந்தை பிறந்து 10 முதல் 14வது வாரத்துக்குள் போட வேண்டும். இந்த தடுப்பூசியைச் சாதாரண தடுப்பூசியாகவே செலுத்தலாம். குழந்தைக்கு ஏதாவது நரம்பியல் பிரச்சனை இருப்பதாக அறியப்பட்டால், அப்போது இந்த நோய் தடுப்பூசியை வலியில்லாத ஊசியாகச் செலுத்துவது நல்லது.

 

டைஃபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஒன்பதாவது மாதத்தில் போடலாம், சில தொகுப்பு தடுப்பூசிகளும் இருக்கின்றன. அதாவது இது ஒரே ஊசியில் நான்கு – ஐந்து நோக்கான எதிர்ப்புத் திறனை அளிக்கும். ஹெப்படைட்டிஸ் பி, மூளைக் காய்ச்சல், போலியோ ஆகியவற்றுடன் ட்ரிபிள் ஆண்டிஜனும் சேர்த்து ஒரே மருந்தாகக் கிடைக்கிறது.

 

பச்சிளம் குழந்தைகள் 

மட்டுமின்றி வளர்ந்த குழந்தைகளும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. வெளிநாட்டில் சென்று படிப்பவர்கள், அந்த நாட்டுத் தட்ப வெப்பநிலையால், மூளை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, ‘மெனின்கோ கோக்கல்’ எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறார்கள்.

 

பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைத் தடுக்கும் பொருட்டு, ஹெச்பிவி (ஹியூமன் பேப்பிலோமா வைரஸ்) தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறார்கள். இதை ஒன்பது வயது சிறுமி முதல் 45 வயது பெண்மணி வரை போட்டுக்கொள்ளலாம். 

 

இன்ஃபுளியன்ஸா வகை காய்ச்சல் வைரஸ்களால் ஏற்படுகிறது. இது நேரடியாக மூச்சுக் குழல் மற்றும் நுரையீரலைப் பாதிப்பதால் எளிதில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் அபாயம் உள்ளது. இது, மூளைக் காய்ச்சல், மூச்சுக் குழல் அழற்சி போன்ற தீவிரமான நோய்களையும் ஏற்படுத்துகிறது. அதனால், இதற்கான தடுப்பூசி இந்த வகை காய்ச்சல் பரவுவதற்கு முன்னதாகவே போட்டுக்கொள்வது சிறந்தது. அதாவது இலையுதிர் காலத்திலேயே குழந்தைக்கு இதற்கான தடுப்பூசியைப் போட்டு விட வேண்டும்.

 

பெரும்பாலான மருத்துவர்களின் பரிந்துரை வலி மிக்க ஊசிகளாகவே இருக்கின்றன. ஏனென்றால் அதில்தான் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக இருக்கிறது. சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் வலிப்பு உள்ளிட்ட சில பிரச்சனை இருக்கலாம். அல்லது நரம்பு மண்டலத்தில் குறைபாடு இருக்கலாம். அதுபோன்ற குழந்தைகளுக்கு மட்டுமே வலியில்லாத தடுப்பூசியை எடுத்துக்கொள்வது நல்லது. அதைவிடுத்து, வலியில்லாத ஊசிதான் வேண்டும் என்று மருத்துவரை கட்டாயப்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல.

 

குழந்தை பிறந்ததுமே குழந்தை நல மருத்துவரிடம் தேவையான ஆலோசனைகளைத் தெளிவாகப் பெற்று அதன்படி செயல்படுவது நல்லது. உதாரணமாக, குழந்தை பிறக்கும் காலத்திலிருந்து அடுத்தடுத்து நிகழும் பருவ நிலை மாற்றங்கள் மற்றும் பரவ வாய்ப்புள்ள நோய்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக டிசம்பர் மாதம் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால்… கோடைக் காலத்தில் என்னென்ன நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதோ அதையெல்லாம் கருத்தில் கொண்டு அதற்கேற்ற வரிசையில் ஊசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன்  சரியான நேரத்தில் தேவையான தடுப்பூசியை உங்கள் குழந்தைக்குச் செலுத்திவிட்டால்  ஆரோக்கிய பிரச்சனை குறித்த அச்சத்துக்கே வேலையில்லை..!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null