குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து நகரத் தொடங்கியதுமே அதனை கண்ணும் கருத்துமாக பாதுக்காக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. கொஞ்சம் தவறி கீழே விழுந்தாலும் தலையில் அடிபட்டுவிடும் அபாயம் உண்டு. பிஞ்சுக் குழந்தையின் தலையில் ஏற்படும் சிறு சிறு காயம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. நடக்கும் குழந்தை முன்புறம் விழுந்தால் தலையில் அடிப்பட வாய்ப்பு குறைவு. ஆனால், உட்கார முயற்சிக்கும்போதோ அல்லது உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நிற்க முயற்சிக்கும்போதோ பின்புறமாக விழக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். எப்போதெல்லாம் குழந்தைகள் விழுவார்கள்? தலையை மோதிக்கொள்ள வாய்ப்புகள் என்னென்ன? உள்ளிட்ட காரணிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
கீழே விழுதல்
எழுந்து நடக்க முயல தொடங்கும் எல்லா குழந்தைகளும் விழுந்து விழுந்துதான் எழுந்து நடக்கப் பழகும். இது சாதாரண நிகழ்வுதான். ஆனால், இதனால் ஏற்படும் காயங்கள், வீக்கம் உள்ளிட்ட விசயங்களை கவனித்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சையளிக்க வேண்டும். நடக்கப் பழகும்
அனைத்துக் குழந்தைகளும் கீழே விழுந்தாலும், இதுவரை எடுக்கப் பெற்ற கணக்கெடுப்பின்படி, இரண்டு முதல் மூன்று சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே தலையில் அடிபட்டுள்ளது. அவற்றில் ஒரு சதவீதம் குழந்தைகளுக்குத்தான் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், கீழே விழுவதை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தை விசயத்தில் எச்சரிக்கை முக்கியமல்லவா?
குழந்தைகள் தலையை ஏன் இடித்துக்கொள்கிறார்கள்?
உடல் வளர்ச்சியடையும்போது அனைத்துப் பாகங்களிலும் ஒரே அளவு வலுவுடன் இருக்காது. தலைப் பகுதியில் உள்ள எடையை உடல் முழுவதுமாக பேலன்ஸ் செய்யாது. அதாவது குழந்தை பிறந்ததும் தலை நடுக்கம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்போது தலையைப் பிடித்து பேலன்ஸ் செய்ய வேண்டியிருக்கும். கழுத்துப் பகுதி குழந்தையின் தலையைத் தாங்கும் அளவுக்கு வலு பெறும் வரை இதை செய்வோம் அல்லவா? இந்த வளர்ச்சி நடக்க சில குழந்தைகளுக்கு மூன்று முதல் நான்கு மாதம் வரையில் கூட எடுத்துக் கொள்ளலாம். அதனால், நடக்கும்போதோ நிற்கும்போதோகூட, கீழே விழுந்தால் தலையில் அடிப்பட்டு விடும். இந்தப் பிரச்சனை எல்லா குழந்தைகளுக்கும் இருக்காது.
எப்போதெல்லாம் தலையில் அடிபடக் கூடிய வாய்ப்பு உள்ளது?
இந்தக் காரணங்களால் விழுந்தால் எதிர்பாராதவிதமாக அடிபட வாய்ப்புள்ளது. குறிப்பாக தலையில் இதனால் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. இந்தப் பாதிப்பின் தீவிரம் என்பது குழந்தை விழும் உயரத்தின் அளவைப் பொருத்தது. அதிக உயரத்தில் இருந்து விழுந்தால், அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும்.
தலையில் ஏற்படும் காயம்
குழந்தை கீழே விழுவதால் அதன் தலையில் ஏற்படும் காயத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
லேசான காயம்
நடக்கும்போது, ஓடும்போது விளையாடும்போது கீழே விழுந்தால், தலையில் லேசான காயம்தான் ஏற்படும். பெரும்பாலும் இதனால் நெற்றியில்தான் காயம் ஏற்படும். மேசைக்கு கீழே சென்று திடீரென எழுவதால் உச்சந்தலையில் மோதிக்கொள்வார்கள். இந்தக் காயங்கள் எல்லாம் லேசான வகை. இதனால் வீக்கம், சிராய்ப்பு போன்ற பாதிப்புகள்தான் ஏற்படும். மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், காயம் சற்று பெரிதாக இருக்கும் என்ற அச்சமோ/ அதனால் பாதிப்பு ஏற்படும் என்ற பயமோ இருந்தால், மருத்துவர் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
தீவிரமான காயம்
ரத்தம் ஒழுகும் அளவுக்கு காயம் இருந்தால் அதை தீவிரமான காயம் எனலாம். கூர்மையான பகுதியில் விழுந்து அடிபடும்போது இதுபோன்ற தீவிரமான காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாடிப் படிகளில் இருந்து கீழே விழுந்தாலோ அல்லது கடினமான பாறைகளில் மோதிக்கொண்டாலோ இந்த வகை காயம் ஏற்படலாம். இது லேசான பாதிப்பில் இருந்து நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அளவுக்கான தீவிரமான பாதிப்பு வரை ஏற்படுத்தக்கூடும்.
குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்வது சிறந்தது. வலுவற்ற தோல் மற்றும் மென்மையான தலை எலும்புகள் இருக்கும் காலகட்டத்தில் இந்த வகை காயங்களால் மோசமான பாதிப்புகள் ஏற்படும்.
என்னென்ன பாதிப்புகள்?
தலையில் அடிபடுவதால், முக்கியமாக பின்வரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இவற்றைப் பொதுவாக மூளையில் பாதிப்பு எனக் குறிப்பிடலாம்.
இந்த வகை பாதிப்புள்ள குழந்தைகளுக்குத் தீராத தலைவலி, குமட்டல், வாந்தி, குறையும் எச்சரிக்கை உணர்வு, சுயநினைவு இல்லாமை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் இதெல்லாம் அரிதினும் அரிதான பாதிப்புகள். பெரும் விபத்தில் சிக்கினால்தான் இதுபோன்ற விளைவுகளெல்லாம் ஏற்படும்.
சிகிச்சைகள்
குழந்தை தலையில் அடிபட்டதும், காயத்தின் தன்மையை உடனடியாக கவனிப்பது அவசியம். அதற்குத் தகுந்தாற்போல சிகிச்சையளிக்கலாம். லேசான காயங்களுக்கு வீட்டு வைத்தியமே போதுமானது.
லேசான வீக்கம் இருந்தால் அந்த இடத்தில், உடனடியாக ஐஸ் கட்டியை வைக்கலாம். தோலில் சிராய்ப்பு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு பேண்ட் எய்ட் போடலாம். இதுவே லேசான காயத்துக்குப் போதுமான சிகிச்சை.
ஆனால், இரவில் தூங்கும்போது குழந்தையின் நடவடிக்கையைக் கண்காணிக்க வேண்டும். வழக்கத்துக்கு மாறாக நடுக்கத்தை உணர்கிறார்களா? அல்லது அசௌகர்யமாகத் தூங்குகிறார்களா? என்பதை கவனித்தால் அந்தக் காயத்தின் தீவிரத்தை அறிய முடியும். இந்த நேரத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
மருத்துவரை எப்போது அணுகவேண்டும்?
முன்பே கூறியதைப் போல எல்லா காயத்துக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அவசியமில்லை. தீவிரமான காயம், குழந்தையின் அன்றாட நடவடிக்கையைப் பாதிக்கக் கூடிய காயங்கள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகலாம்.
தலையில் உள்ள காயத்தை மதிப்பிட்டு, அதன் தீவிரத்தை அறிய வேண்டும். குழந்தை உண்மையிலேயே வலியை உணர்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் கீழே விழும்போது யாராவது பார்த்து விட்டால் அழுவார்கள். யாரும் பார்க்கவில்லை என்றால் இயல்பாக எழுந்து கடந்து விடுவார்கள். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு குழந்தையின் வலி நிலவரத்தை அறிய வேண்டும்.
எல்லாவற்றையும் பார்த்த பிறகு, குழந்தைக்கு ஏதோ சீரியஸான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமோ அல்லது மூளை பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற பயமோ இருந்தால், சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்து விடலாம்.
குழந்தையைக் கையாளும் முறை
அடிபட்ட குழந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் எங்கேனும் மோதிக் கொண்டால், அதன் பாதிப்பு தீவிரமாக மாறலாம்.
மூளை அதிர்ச்சிக்கு உள்ளான குழந்தைகளைக் முழுமையாகக் குணமடையும் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் அடிக்கடி மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டியிருக்கும். அதற்கு மேலும் மருத்துவர் ஆலோசனையைக் கவனமாக பின்பற்றவும் வேண்டும். சிறிய கவனக் குறைவும் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான பணிகளைக் கவனிக்க வேண்டும். தாமதப்படுத்தாமல் மருத்துவர் ஆலோசனையுடன் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சையைச் செய்து விடுவது நல்லது.
காயமின்றி எப்படி கவனமாகப் பார்த்துக்கொள்வது?
குழந்தைகள் விழுவதற்கான காரணங்களாக முதலில் கூறப்பட்டவை நினைவு இருக்கலாம். அதாவது தலையின் எடையை உடல் பேலன்ஸ் செய்யாததால், உடனடியாக கீழே விழுந்து விடக்கூடும். இந்தச் சிக்கலை தவிர்க்க உடலுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும்.
கைபிடித்து நடக்கக் கற்றுத் தரும்போது முன்னெச்சரிக்கை உணர்வையும் கற்றுத்தருவது நல்லது. மாடியில் ஏறும்போது எப்படி கவனமாக மெதுவாக ஏறுவது? தாழ்வான பகுதியில் நடக்கும்போது தவழ்ந்து கொண்டு செல்வது எப்படி? ஓடும்போது உடலை பேலன்ஸ் செய்வது எப்படி? தடுக்கி விழுந்தால் எப்படி சுதாரித்து எழுவது? என்பதெல்லாம் பழக்கப் படுத்த வேண்டும்.
வீடு கட்டும்போதே தரையில் இருந்து மூன்று அடி உயரத்திற்கு மரப் பலகைகளை சுவற்றில் பொருத்திவிடுவது நல்லது. தெரியாமல் சுவற்றில் இடித்துக்கொண்டாலும் லேசான காயம்தான் ஏற்படும்.
குழந்தைகள் ஒரு அறையை விட்டு வெளியேறாத வகையில் சிறிய ரக கதவுகளை பொருத்துவது நல்லது. மேலும் அக்கதவின் மீது குழந்தை ஏறி இறங்காதபடியும் அதன் அமைப்பு இருக்க வேண்டும். எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாதவர்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
குழந்தை ஏறி விளையாடக்கூடிய பொருட்களைத் தவிர்த்து விடுவது நல்லது. நகரும் படிக்கட்டுகள், ஏணி உள்ளிட்டவற்றை குழந்தைகள் எளிதாக கையாளாதாக வகையில் வைக்க வேண்டும்.
தண்ணீர், எண்ணெய் உள்ளிட்ட திரவங்களைக் குழந்தைகளுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். இவை கீழே சிந்தி விட்டால் உடனடியாக சுத்தம் செய்து விடுவதும் அவசியம்.
விளையாட்டுக்காக உயரமான இடத்தில் உட்கார வைத்துவிட்டு மறதியில் வேறு இடத்துக்கு நகரக் கூடாது. குழந்தைகள் அங்கிருந்து கீழே இறங்க முயற்சித்து விழுந்துவிடும் அபாயம் உண்டு.
நடைவண்டியில் நடை பழக பழக்கப்படுத்தும்போது பெற்றோர் மேற்பார்வையுடன் நடக்க பழக்க வேண்டும். தானாக முன் வந்து நடைவண்டியை எடுத்துக்கொண்டு நடக்கும்போது தடுமாறி விழ வாய்ப்புள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு என்பது கொஞ்சம் கவனமாக இருந்தால், மிகவும் எளிதானதுதான். ஆனால் கவனக்குறைவு காரணமாக பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த புரிதல் அடைந்திருப்பீர்கள். லேசான காயத்தில் இருந்து தீவிரமான காயம் வரை குழந்தையைக் கையாளுவது எப்படி என்பதும் புரிந்திருக்கும். எந்த சந்தேகம் என்றாலும் மருத்துவரை நாடி தெளிவு பெறுவது நல்லது. குழந்தைகளின் குழந்தைப் பருவ பாதுகாப்புதான் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஆரோக்கியத்தையே தீர்மானிக்கப் போகிறது என்ற அக்கறை பெற்றோர்களுக்கு அவசியம்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null